Oct 9, 2006

கொங்கு தேசத்துச் சொலவடைகள்

இவற்றைப் பழமொழிகள் என்னும் வட்டத்துக்குள் கொண்டுவர முடியும் என நான் நினைக்கவில்லை. இச்சொலவடைகள் பெரும்பாலானவை ஏதேனும் ஒரு நாட்டுப்புறக் கதையின் எச்சமாக தொக்கி நிற்கின்றன. முதலில் கதைகள் அழிந்துவிட மிச்சமான வாக்கியங்கள் மட்டுமே 'பட்டிக் காட்டு' ஆட்களோடு புழங்கித் திரிகின்றன.


1. அறுக்கமாட்டாதவன் இடுப்பைச் சுத்தி அம்பதெட்டு அருவாளு.

2. பழைய குருடி கதவத் தெறடின்னு.
தவறாக நடந்து மாற்றி நன்றாக செய்துவிட்டு, மீண்டும் தவறாக்கும் போது "பழைய குருடி
கதவத் தெறடிங்குற கதை ஆயிருச்சு"என்று சொல்வார்கள்.

3. மொசப் புடிக்கிற நாய் மூஞ்சிய பார்த்தா தெரியாதா?

4. நான் புடிச்ச மொசலுக்கு மூணு காலுங்காத.

5. நாய்க்கு பேரு முத்துமாலை.
பொருத்தமில்லாத ஒன்று என்றால் எள்ளலாக "நாய்க்கு பேரு முத்துமாலையாமா"
என்பார்கள்.

6. செத்தவன் கையில வெத்தல பாக்கு கொடுத்த மாதிரி

7. ஆனதுக்கு சொன்னா அறிவுண்டு நெனவுண்டு. ஆகாவழிக்குச் சொன்னா இல்லிடத்தையும்
தோத்துட்டுப் போக வேண்டியதுதான்.
அறிவுரை கூட உருப்பட வாய்ப்பிருப்பவனுக்குத்தான் கொடுக்க வேண்டும்.

8. ஆடமாட்டாதவன் நெலம் கோணைன்னு சொன்ன கணக்கா இருக்குது.
கோணை - கோணல்

9. நாயக் குளிப்பாட்டி நடுவூட்டுல வெச்சாலும் நாக்கத் தொங்கக் போட்டுட்டு
இட்டாரிக்குத்தான் போகும்.

10. கெழவன் கோமணம் கட்டுன மாதிரி

11. அழுதழுது பெத்தாலும் அவதான் பெக்கோணும்.
பெக்கோணும் - குழந்தை பெறுதல்.

12. பொழப்பு கெட்ட நாசுவன் பொண்டாட்டி தலைய செரச்சானாம்.

13. பொழக்கிற புள்ளைய பேல உட்டு பார்த்தா தெரியாதா?

14. எல்லோரும் சிரிச்சாங்கன்னு பூனை பொடக்காலில போயி சிரிச்சுதாம்.

15. மொளச்சு மூணு எலை உடுல.
வயதில் சின்னவர்கள் ஏதேனும் பிடிக்காத காரியத்தைச் செய்யும் போது உபயோகிப்பது.

16. எங்கயோ போற மாரியாத்தா எம் மேல வந்து ஏறாத்தாங்குற கதையா

17. நட்டாத்துக்கு போனாலும் நாய்க்குச் சலக்குத் தண்ணிதான்.
நடு ஆற்றுக்குச் சென்றாலும் நாய் 'சலக் சலக்' என்று நக்கித்தான் குடிக்கும்.
என்னதான் புகழ், பணம் கிடைத்தாலும் அவனவன் அவனவன் தகுதிக்கு ஏற்பதான்
நடப்பார்கள்.

18. புது வட்டலக் கண்டா நாய் எட்டு வட்டல் தண்ணி குடிக்குமாம்.
வட்டல் - தட்டம்.

12 எதிர் சப்தங்கள்:

Sivabalan said...

நல்லா தொகுத்துள்ளீர்கள்.

நன்றி

வெற்றி said...

மணிகண்டன்,
நல்ல பதிவு.
கீழுள்ளவை ஈழத்தில் எனது ஊரிலும் புழக்கத்தில் உண்டு.

1. பழைய குருடி கதவைத் திறவடி.

2.முயல் பிடிக்கிற நாயை மூஞ்சேலை தெரியும்.

3. நான் பிடிச்ச முயலுக்கு மூண்டு காலெண்டாதை

4. அழுதாலும் பிள்ளை அவள்தானே பெற வேணும்.

5. முளைச்சு மூண்டு இலை விடேலை.

கிட்டத்தட்ட இதுமாதிரி இன்னுமொன்று சொல்வார்கள்.

முந்தநாள் பெய்த மழைக்கு நேற்று முளைச்ச காளானைப் போல

Chellamuthu Kuppusamy said...

அருமை.. எனக்குப் பிடித்தது..
//எல்லோரும் சிரிச்சாங்கன்னு பூனை பொடக்காலில போயி சிரிச்சுதாம்.//

இராம்/Raam said...

மணி,

நல்லா இருக்கு இந்தப் பதிவு. வாழ்த்துக்கள்...!!!

Viji said...

-Good collections
//ஆனதுக்கு சொன்னா அறிவுண்டு நெனவுண்டு. ஆகாவழிக்குச் சொன்னா இல்லிடத்தையும்
தோத்துட்டுப் போக வேண்டியதுதான்.//

- இந்த பழமொழிக்கு பின்னாடி ஒரு நல்ல கதை எருக்குங்க,
ஒரு நாள் நல்லா மழை பேஞ்சுது, அப்ப ஒரு குரங்கு மழைல நனைஞ்சு நடுங்கிட்ட்டே மரக்கிளைல உக்காந்தது. அந்த மரத்துல ஒரு தூக்கனாங் குருவி கூடு கட்டி இருந்தது, அது கம்முனு உள்ள குளுருக்கு இதமா இருக்கறத விட்டுட்டு குரங்க பாத்து "என்ன பாரு கொரங்கே நல்ல கூடா கட்டி மழைல நனையாம இருக்கன், உனக்கு கை கால் இருந்தும் இப்படி நனைய வேண்டி இருக்குதே " ஒரு அறிவுறை சொல்லுச்சு. அப்ப அந்த கொரங்குக்கு கோவம் வந்து "அடே சின்னப் பயலே எனக்கா புத்தி சொல்ற இப்ப பார்னு சொல்லி அந்த குருவி கூட்ட பிச்சு எறிஞ்சுது. குருவி மழைல நனைஞ்சுட்டே சொல்லிச்சு --"ஆனதுக்கு சொன்னா அறிவுண்டு நெனவுண்டு. ஆகாவழிக்குச் சொன்னா இல்லிடத்தையும்
தோத்துட்டுப் போக வேண்டியதுதான்"

Pavals said...

நல்ல தொகுப்பு..

கொஞ்சம் தாமசமா வந்துட்டனோ? :)
அவசரமா நம்ம பங்குக்கு..

"எள்ளுதான் எண்ணைக்கு காயுதுன்னா, எலிபுழுக்கை எதுக்கு காயுது"

"ஆசை இருக்குதாம் தாசில் பண்ண, அதிர்ஷ்ட்டம் இருக்குதாம் கழுத மேய்க்க"

"துணை கண்ட நாயி சிதம்பரம் போயி சேராது"

"மேயுற மாட்டை நக்கற மாடு கெடுத்த கதையா"


"கிடக்கறதெல்லாம் கிடக்கட்டும்னு கிழவிய தூக்கி நடுமனையில வச்சானாம்"

Anonymous said...

யோவ்! பங்காளி நல்லா இருக்கு!

Vaa.Manikandan said...

நன்றி சிவபாலன்.

வெற்றி நேத்து பேஞ்ச மழைல இன்னைக்கு மொளச்ச காளாணாட்ட இருந்துட்டு...என்று எங்கள் ஊரிலும் சொல்வார்கள்.

நன்றி குப்ஸ்.

அந்த சொலவடையை தமிழினி முத்து மின்னஞ்சலில் நினைவூட்டினார். :)

நன்றி ராம்.

விஜி,

நான் கிட்டத்தட்ட மற்ற எல்லாவற்றிற்கும் கதை இருக்கும் என நம்புகிறேன். உங்களுக்கு வேறு எதாவது தெரியுமா? ஊருக்குச் சென்றால் கண்டுபிடிக்க இயலுமாவென பார்க்கிறேன். தங்களுக்குத் தெரியும் பட்சத்தில் சொல்லுமங்கள்.

நன்றி ராசா. நீங்க தாமசம் எல்லாம் இல்லை. :)

நன்றி பங்காளி

Anonymous said...

அன்பு மணி,
கீழ்வரும் இணையப் பக்கத்தில் ஏராள பழமொழிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது. முதல் பழமொழி விளக்கத்தை திரு.வெற்றிவேல் தொடங்கிவைக்க மற்றவற்றை நண்பர் லக்கி ஷாஜஹான் எழுதியிருக்கிறார்.

http://www.riyadhtamilsangam.com/EK/Arinthathu_1.htm

(Pls ignore my previous comment as I forgot to give the link)

மாசிலா said...

அருமை அருமை.
அனைத்தும் அருமை.
நாமும் இதைப்போன்ற 'அடைமொழி' அல்லது 'சொல்வடை'களை தொடர்ந்து உபயோகித்து மறுபடியும் புழக்கத்திற்கு கொண்டுவர முயற்சிக்க வேண்டும்.

//ஆடமாட்டாதவன் நெலம் கோணைன்னு சொன்ன கணக்கா இருக்குது//
"ஆடத்தெரியாத கூத்தியாலுக்கு, கூடஞ்செரியில்லன்னு சொன்னாலாம்." இப்படியும் உண்டு.

"ஆடற மாட்ட ஆடி கறக்கனும்,
பாடற மாட்ட பாடி கறக்கனும்"

அ. பசுபதி (தேவமைந்தன்) said...

இன்னும் பல தொகுக்க உங்களால் முடியும்.- தேவமைந்தன்

Unknown said...

Super 1) ஆடத் தெரியாத தேவடியா வாசல் கோணைன்னாளாம் 2) மொசப் புடிக்கிற நாயயை மூஞ்சியைப் பார்த்தாத் தெரியாதா ? எ??? என்பனவே சரி.