Aug 26, 2006

எனக்கு பிடித்த என் கவிதைகள்

எனது இக்கவிதைகளில் சில ஏற்கனவே இப்பதிவில் இடம்பெற்றிருப்பினும் மீள்பதிவு செய்கிறேன்.

**********************

நகர்ந்து கொண்டிருக்கிறது
மங்கலான அடர்த்தியான நிழல்
எனக்கு முன்பாகவும்
நீளம் குறைந்து காலடியில்
பதுங்கியும்.
பின்புறமாகவும் நீள்கிறது.
நடுங்காமல், நேர்த்தியாக.
நிழல் எந்தப் பக்கமெனினும்
சரளைக் கற்களினூடே புதையும் பாதங்களின்
ஒலி மட்டும் ஒரே திசையில்.


ஏப்ரல்'2006 உயிர்மை.
*************************************

தன் நாவுகளால்
என் கண்ணீரையும்
அசைவற்ற விழிகளில்
நிர்வாணத்தின்
நெளிவுகளையும்
பதிவு செய்திருக்கிறது
-இந்தச் சுவர்.

இப்போது
படிமமாக்குகிறது.
சுண்ணாம்பினை
உதிர்த்து,
தனக்கான ஓவியங்களை


அக்டோபர்'2005 காலச்சுவடு
*********************************************

கண்ணாடி பதித்த
ஓட்டின் வழியே
நகர்ந்து கொண்டிருக்கும்
இந்த வெய்யிலின்
ஒளியில்
நனைந்து
கொண்டிருக்கிறேன்
உருவமற்ற
உணர்ச்சியில் வழியும்
வியர்வையில்


அக்டோபர்'2005 காலச்சுவடு
*****************************


இன்று -
குளிக்கும் போதும்
வலது காலின் பெருவிரலில்
ஒரு கல் தடுக்கிய நொடியும்
உன்னை நினைக்கவில்லை.

நினைத்ததை விட
நினைக்காத நேரத்தை
சொல்வது
எளிதெனக்கு.


ஜூலை' 2006 உன்னதம்
****************************

நிசப்தம்
விரவிக்கிடக்கும்
இந்த
இரவின் விளிம்பில்
சொற்கள்
உன் விரல்களின் நுனியிலிருந்து
உதிரத் தொடங்குகின்றன


காலச்சுவடு
*****************************

நிலாக் கிழவியை இழுத்துச் செல்வதற்காக யோசிக்கிறேன்.
கீழே இறக்குவது சுலபமில்லை. கூனி
விழுந்து இடுப்பை முறித்துக் கொள்வாள்.
நான் திண்டில் அமர,
சாக்கடை நீரில் மிதக்கிறாள்.
துப்பும் எச்சிலிலும், நகரும் கொசுவிலும்
கலங்கிக் கொண்டு.
சுடும் வடையின் எண்ணெய்ப் புகை நிலவினைச்
சூழும் போது நிலாவோடு சேர்ந்து நகர ஆரம்பித்துவிடுகிறாள்.
மெதுவாக உடன் நகர்ந்து வீட்டு வாசலில்
சேர்த்து விட்டேன்.

அக்காவின் குழந்தையை வெளியே கூட்டிவரும்போத
தம்பி சொன்னான்.

"நிலாக் கிழவியை வீதி நுனிச்
சாக்கடையிலிருந்து கூட்டி வருகிறேன்".



உயிர்மை
*********************8

11 எதிர் சப்தங்கள்:

labdab said...

//சரளைக் கற்களினூடே புதையும் பாதங்களின்
ஒலி மட்டும் ஒரே திசையில்//


//நினைத்ததை விட
நினைக்காத நேரத்தை
சொல்வது
எளிதெனக்கு//


அலங்காரம் அதிகமற்ற வார்த்தைகளில்
அழகான வரிகள் !!

ச.சங்கர் said...

ஏங்க...தலைப்பு கொஞ்சம் உதைக்குதே...எனக்கு பிடித்த என் கவிதைகள்....அப்படீன்னா மீதி உங்கள் கவிதைகள் உங்களுக்கு பிடிக்காதா ? உங்களுக்கே பிடிக்காதுன்னா அப்புறம் ஏன் அதை கவிதை அப்படீன்னு எங்களை படிக்க சொல்றீங்க :)))(சும்மா தமாஷ்) தலைப்பு "எனக்கு மிகவும் பிடித்த என் கவிதைகள் " அப்படீன்னு இருக்கணுமுன்றது என் எண்ணம்...சரியா ?

ஈழபாரதி said...

நிலாக் கிழவியை இழுத்துச் செல்வதற்காக யோசிக்கிறேன்.
கீழே இறக்குவது சுலபமில்லை. கூனி
விழுந்து இடுப்பை முறித்துக் கொள்வாள்.
நான் திண்டில் அமர,
சாக்கடை நீரில் மிதக்கிறாள்.
துப்பும் எச்சிலிலும், நகரும் கொசுவிலும்
கலங்கிக் கொண்டு.
சுடும் வடையின் எண்ணெய்ப் புகை நிலவினைச்
சூழும் போது நிலாவோடு சேர்ந்து நகர ஆரம்பித்துவிடுகிறாள்.
மெதுவாக உடன் நகர்ந்து வீட்டு வாசலில்
சேர்த்து விட்டேன்.

அக்காவின் குழந்தையை வெளியே கூட்டிவரும்போத
தம்பி சொன்னான்.

"நிலாக் கிழவியை வீதி நுனிச்
சாக்கடையிலிருந்து கூட்டி வருகிறேன்".

எனக்கு மிகவும் பிடித்த கவிதை:-)
இந்தக்கவிதை நன்றாக வ்ந்திருக்கிறது ரசித்தேன்.

முபாரக் said...

நல்லாருக்கு எல்லாக் கவிதைகளும். ஆனாலும் இன்னும் வாசித்து அனுபவிக்கும் அளவுக்கு கிறுக்கு தலைக்கு ஏறல :)

//நினைத்ததை விட
நினைக்காத நேரத்தை
சொல்வது
எளிதெனக்கு//

ரொம்ப நல்லாருக்கு!

//சொற்கள்
உன் விரல்களின் நுனியிலிருந்து
உதிரத் தொடங்குகின்றன//

:) அழகான அனுபவம்.

சொற்பொழிவா ஆயிடாம பாத்துக்கய்யா ராசா!

சினேகபூர்வம்
முபாரக்

மஞ்சூர் ராசா said...

பிடித்த வரிகள்:
இப்போது
படிமமாக்குகிறது.
சுண்ணாம்பினை
உதிர்த்து,
தனக்கான ஓவியங்களை


இந்த வெய்யிலின்
ஒளியில்
நனைந்து
கொண்டிருக்கிறேன்

ஒரு கல் தடுக்கிய நொடியில் - என வரவேண்டுமோ? சந்தேகம்!

நினைத்ததை விட
நினைக்காத நேரத்தை
சொல்வது
எளிதெனக்கு - நச்

இரவின் விளிம்பில் - இரவின் முடிவில் நிசப்தத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு, அல்லது அமைதியாக உட்கார்ந்துக்கொண்டு இருக்கையில் விரல்களின் மூலம் ஆயிரம் விசயங்கள் பேசப்படுகின்றன. இந்த உணர்வு வார்த்தைகளால் சொல்ல முடியாதது, அனுபவிக்கும் போது தான் தெரியும்.

இரவின் விளிம்பு - மிக அழகான சொற் சேர்க்கை.
மிக பிடித்த வரிகள்.


நிலாக் கிழவி - வித்தியாசமான கோணம்.

வாழ்த்துக்கள்.

இன்னும் நிறைய எதிர்ப்பார்க்கிறோம்.

பாராட்டுக்கள்.

மஞ்சூர் ராசா said...

பிடித்த வரிகள்:
இப்போது
படிமமாக்குகிறது.
சுண்ணாம்பினை
உதிர்த்து,
தனக்கான ஓவியங்களை


இந்த வெய்யிலின்
ஒளியில்
நனைந்து
கொண்டிருக்கிறேன்

ஒரு கல் தடுக்கிய நொடியில் - என வரவேண்டுமோ? சந்தேகம்!

நினைத்ததை விட
நினைக்காத நேரத்தை
சொல்வது
எளிதெனக்கு - நச்

இரவின் விளிம்பில் - இரவின் முடிவில் நிசப்தத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு, அல்லது அமைதியாக உட்கார்ந்துக்கொண்டு இருக்கையில் விரல்களின் மூலம் ஆயிரம் விசயங்கள் பேசப்படுகின்றன. இந்த உணர்வு வார்த்தைகளால் சொல்ல முடியாதது, அனுபவிக்கும் போது தான் தெரியும்.

இரவின் விளிம்பு - மிக அழகான சொற் சேர்க்கை.
மிக பிடித்த வரிகள்.


நிலாக் கிழவி - வித்தியாசமான கோணம்.

வாழ்த்துக்கள்.

இன்னும் நிறைய எதிர்ப்பார்க்கிறோம்.

பாராட்டுக்கள்.

Vaa.Manikandan said...

சங்கர்...
அப்படி நினைக்கிறீர்களா? என்னிடம் இருக்கும் கவிதைகளின் எண்ணிக்கை மிகக் குறைவு. எனவே மிகப் பிடித்தவை என்றால் இவற்றில் ஒன்று அல்லது இரண்டு தேறலாம்.

அதைவிட இன்னொரு விஷயம் படிங்கன்னு சொல்லியெல்லாம் நச்சரிக்கறதில்லீங்க! நான் எழுதி இருக்கேன். படிக்கலாம்னு தோணினா படிங்க. அப்படி சொல்றதுதான் வழக்கம். :)

நன்றி ஈழபாரதி. இக்கவிதை நான் கடைசியாக எழுதிய சில கவிதைகளுல் ஒன்று. எனக்கும் இது கொஞ்சம் அதிகமாகவே பிடிக்கும். :)

நன்றி முபாரக். நீங்கள் என்னைத் தொலைபேசியில் அழைத்து தங்கள் கருத்துக்களைச் சொல்லவேண்டும் என்ற அவசியமே இல்லை. இருப்பினும் தொடர்பு கொண்டீர்கள். ஏதோ ஒரு புள்ளியில் நீங்களும் நானும் சற்று ஒத்துப் போகிறோம் அல்லவா? அந்த மகிழ்ச்சிதான். வேறொன்றுமில்லை.

மஞ்சூர், ஒரு கல் தடுக்கிய நொடியும் சரியாகத்தானே இருக்கிறது? தவறா எனத் தெரியவில்லை.

கார்திக்வேலு said...

மணி,
கவிதை பலருக்கு (கவிதை எழுதியவரையும் சேர்த்து )எவ்வாறு பலவேறு காரணங்களால் பிடித்துப்போகிறது என்பது எளிதில் அறுதியிட முடியாத, மிகவும் சுவாரசியமான விஷயம்...:-)
-----------
நிசப்தம் பிடித்திருக்கிறது .
[நிழல் ..கடைசி இரண்டு வரிகளை மாற்றி அமைத்திருந்தால் ..இன்னும்
அழுத்தமாக இருந்திருக்கும்]

பொன்ஸ்~~Poorna said...

//
நிசப்தம்
விரவிக்கிடக்கும்
இந்த
இரவின் விளிம்பில்
சொற்கள்
உன் விரல்களின் நுனியிலிருந்து
உதிரத் தொடங்குகின்றன
//

மணி, இது இரவாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை அல்லவா? மற்றபடி இந்தக் கவிதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது..

கார்த்திக் பிரபு said...

nalla irukyya ..thodrungal ungal kavdhiagali...valthukkal

சாத்தான் said...

"மங்கலான, அடர்த்தியான நிழல்
நகர்ந்துகொண்டிருக்கிறது
எனக்கு முன்பாகவும்
நீளம் குறைந்து காலடியில்
பதுங்கியும்.
நடுங்காமல், நேர்த்தியாகப்
பின்புறமாகவும் நீள்கிறது.
நிழல் எந்தப் பக்கமெனினும்
சரளைக் கற்களில் புதையும் பாதங்களின்
ஒலி மட்டும் ஒரே திசையில்."

வீதிக்கு முனைதான் உண்டு. நுனி இல்லை. வீதி முனைச் சாக்கடை என்றால் ஒலிப் பிரச்சினையும் இருக்காது. என்ன நாஞ்சொல்றது?