Aug 26, 2006

காற்றில் சிக்குண்ட சருகு

ஹங்கேரிய மொழிப்படங்கள் குறித்தான பரிச்சயம் எனக்கிருந்ததில்லை. நல்ல வெளிநாட்டுப் படங்களைப் பார்ப்பது அந்த நாட்டின் இலக்கியங்களைப் படிப்பதற்கு சமமானது என எழுத்தாளர் எஸ்.வி.ராமகிருஷ்ணன் சொல்வார். 'ஹைதராபாத் பிலிம் கிளப்' இந்தியாவில் செயல்படும் ஒத்த வகையான அமைப்புகளுல் முக்கியமானது மட்டுமல்லாது செயலூக்கம் மிக்கது.அங்கு ஹங்கேரியப் படங்கள் திரையிடப்படுகின்றன என்பதனை அறிந்த போது குறுகுறுப்பான ஆர்வம் தொற்றிக் கொண்டது. அவை ஆழமான கதையமைவுடன் காமம் நிறைந்த படங்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

'த மிடாஸ் டச்'(The Midas Touch/Eldorado) மற்றும் 'மை ட்வென்டியத் செஞ்சுரி'(My twentieth century) என இரண்டு படங்கள் அடுத்தடுத்த நாட்களில். இந்தப் படங்கள் உருவாக்கிய அதிர்ச்சி இன்னமும் கைகள் வரை ஊடுருவிக் கிடக்கின்றன. வெவேறு தளங்களில் பயணிக்கும் இந்தப் படங்கள், மனித வாழ்வின் முகங்களற்ற வினாக்களையும், நுண் கூறுகளையும் தொகுப்பாய்வு(Analysis) செய்வதாக அமைந்திருந்தது, உணரப்பட்ட அதிர்ச்சிக்கு மூலமாக இருக்கக் கூடும். பார்வையாளன் தனக்குள் உண்டாக்கப்படும் நடுக்கத்தினை தவிர்க்க முயலாமல் ஏற்றுக்கொள்ளும் போது அவனால் வேறுபட்ட உலகங்களை உள்வாங்கிக் கொள்ள முடிகிறது.

*
கிரேக்கத்தில் நிலவும் நம்பிக்கையான, அரசன் மிடாஸ் (King Midas) தான் தொடும் பொருட்கள் யாவற்றையும் தங்கமாக மாற்றிவிடும் ஆற்றல் பெற்றிருந்தான் என்பதனை இழையாகக் கொண்டு கெழ பெரெமெனி(Geza Beremenyi)யால் உருவாக்கப்பட்ட படம் 'த மிடாஸ் டச்'. இரண்டாம் உலகப்போரின் முடிவிலிருந்து, ஹங்கேரிய எழுச்சி நடந்த 1956 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் கதை நிகழ்கிறது. ஹங்கேரிய தலைநகரான புடபெஸ்ட்(Budapest)ல், உபயோகப்படுத்திய பொருட்களை விற்கும் சந்தையொன்றுதான் கதைக்களம்.

சந்தையில் கள்ளப் பொருட்களை விற்கும் மொனோரி(Monori) எப்படியாவது சந்தையின் கட்டுப்பாட்டினை தனது கைகளுக்குள் கொண்டுவர காரியமாற்றுகிறார். காகிதங்களில் அச்சடிக்கப்படும் பணத்தின் மீதான நம்பிக்கையற்று, தங்கமாக சேமித்து வைக்கிறார். சில வருடங்களுக்கு முன்பாக வீட்டிலிருந்து வெளியேறிவிட்ட மகள், தன் கணவன் மற்றும் குழந்தையுடன் திரும்பி வருகிறாள். தனக்கு பேரன் கிடைத்த மகிழ்ச்சியில் மகளின் மீதான கோபத்தை மறந்து தெருக்களில் உரத்த இசையோடும், மிகுந்த போதையோடும் ஆடி மகிழ்கிறார்.

தன் மருமகனுக்கு தங்கத்தை வாரிக்கொடுத்து சொந்தமாக வீடு வாங்கச் சொல்லும் மொனோரியை தடுக்கும் மகள், தனது கணவன் தங்கத்திற்கு தகுதியற்றவன் எனவும், தங்கத்தோடு அவன் ஓடிவிடக்கூடும் எனவும் எச்சரிக்கை செய்கிறாள். மொனோரி தங்கம் கொடுத்ததே அவனை இங்கிருந்து விரட்ட வேண்டும் என்பதற்காகத்தான் என்று மொனொரியின் மனைவி, தனது மகளிடம் காரணம் சொல்கிறாள். தந்தையுடன் ஏற்படும் தொடர்ந்த பிரச்சினைகளினூடாக, பிறிதொரு நாளில் மகளும் வீட்டை விட்டு வெளியேறுகிறாள். இந்தக் காலகட்டத்தில் பேரன் 'டிப்தீரியா' நோய் தாக்குதலுக்கு உள்ளாகிறான். பேரதிர்வுறும் மொனோரியின் மனைவி கடவுளை தவிர வேறு கதி இல்லை என நம்பத் தொடங்குகிறாள். கடவுளையும், தனது மனைவியையும் தொடர்ச்சியாக- கேள்விகளுக்கும், பரிகாசத்திற்கும் உள்ளாக்கும் மொனோரி தனது தங்கத்தால் பேரனைக் காக்க முடியும் என நம்புகிறார்.
பிணவறைக்கு எடுத்து செல்லப் பட்டவனை மீட்க, மருத்துவருக்கு தங்கத்தைக் கொடுத்து, குறிக்கோளில் வெற்றியும் பெறுகிறார்.

சந்தை வீழ்ச்சியுறத் தொடங்கும் சமயம், தங்கங்கள் யாவும் அரசிடம் சமர்பிக்கப் பட வேண்டும் என உத்தரவு வருகிறது. இந்தத் தருணத்தில் வீட்டிற்கு வரும் மொனோரியின் மகள் தான் வேறொரு பொறுப்பானவனை திருமணம் செய்து கொண்டதாக சொல்கிறாள். தன் மகன் தன்னிடம் இருப்பதுதான் நல்லது என்பதால் தன்னிடம் ஒப்படைக்கப் பட வேண்டும் என மொனோரியை வலியுறுத்துகிறாள். அப்படியில்லாத பட்சத்தில், தங்கத்தின் இருப்பு குறித்து அரசிடம் காட்டிக் கொடுக்கப் போவதாக மிரட்டுகிறாள். இந்தச் சூழலிலும் தங்கம் வெல்கிறது. பேரனை மகளிடம் ஒப்படைக்க சம்மதிக்கிறார்.

ரஷ்யப் படை ஹங்கேரியின் நகரங்களுக்குள் நுழைகிறது. தன் மகளின் குடும்பத்தைக் காக்கச் செல்லும் மொனோரியால் தன் பேரனை மட்டும் மீட்க முடிகிறது. நகரத்தினை விட்டு வெளியேற வேண்டும் என்பதற்காக பிணங்களைச் சுமந்து செல்லும் செஞ்சிலுவைச் சங்கத்தின் வாகனத்தில் பயணிக்கிறார். வதைக்கத் துவங்கும் குடல்வால் நோய்க்கு சிகிச்சை பெற நுழையும் மருத்துவமனையின் கதவுகள் யாவும் பூட்டப் படுகின்றன. போரில் காயமுற்றவர்களுக்கு மட்டுமே சிகிச்சையளிக்கப் படுகிறது. தோளில் சுமந்து திரியும் தங்கப் பையுடன் ஒவ்வொரு அறைக் கதவாகத் தட்டுகிறார். சோர்ந்து மூலையில் முடங்கும் நிலையில், மருத்துவர்களை அழைத்து வரச் சென்ற பேரனும் தோல்வியுடன் திரும்புகிறான். தங்கத்துடன் சரிந்து விழுகிறார் மொனோரி.

*
"அது காந்தம். தொடாதே, உன்னை இழுத்துவிடும்" என 1880 ஆம் ஆண்டு தாமஸ் ஆல்வா எடிஸனின் மின்விளக்கு குறித்தான விளக்கம் அமெரிக்காவின் மென்லோ பூங்காவில் நடக்கிறது என்பதாக 'மை ட்வென்டியத் செஞ்சுரி' படம் தொடங்குகிறது. அதே தினத்தில் ஹங்கேரியின் புடபெஸ்ட் ல் இரட்டைப் பெண் குழந்தைகள் பிறக்கின்றன. டோரா,லில்லி எனப் பெயரிடப் படுகிறார்கள். வறுமையின் பிடியிலிருந்து தங்களை மீட்டுக் கொள்வதற்காக பனி பெய்யும் முன்னிரவொன்றில் தீப்பெட்டி விற்றுக் கொண்டிருக்கும் சகோதரிகளை இரு வேறு
குழுக்கள் கடத்திப் போகின்றன.

கதை இருபதாண்டுகள் முன்னோக்கி 1900 க்கு நகர்கிறது. சகோதரிகள் ஒரே தொடரூர்தியில் வேறு வேறு பெட்டிகளில் பயணம் செய்கிறார்கள். டோரா வசதியான குடும்பத்தில் வளர்ந்திருக்கிறாள். லில்லி அரசையும், ஆட்சியாளர்களையும் எதிர்க்கும் புரட்சியாளராக வளர்ந்திருக்கிறாள். 'Z' என்பவரின் வழிகாட்டுதலின் பேரில், உள்துறை அமைச்சரின் மீது குண்டெறிந்து கொலை செய்வதற்காக பயணிக்கிறாள். டோரா ஆண்களின் மீதும், பாலுறவின் மீதும் மிகுந்த பேராசை கொண்டவளாக இருக்கிறாள். 'Z' ஐ எதேச்சையாக பார்க்கும் டோரா அவனின் மீது காமுற்று அவனது அறைக்கு செல்கிறாள். பின்னிரவில் வரும் 'Z', டோராவை, லில்லி என நினைத்து உறவு கொள்கிறான். அமைச்சரைக் கொல்லும் இலக்கில் தோல்வியுறும் லில்லி, தப்பிச் செல்வதற்காக மறைவிடம் தேடி அலைகிறாள். சகோதரிகள் இருவரும் சந்திக்கிறார்கள். இருவரும் தாங்கள் தீப்பெட்டி விற்ற இடத்திற்கு வருகிறார்கள்.

*
இல்டிகோ என்யெடி(Ildiko Eyedi) என்னும் பெண் இயக்குனரின் முதல் திரைப்படம் இது. கோர்வையான திரைக்கதையற்று காட்சிகளின் தொகுப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. நியூ ஜெர்ஸி, புடபெஸ்ட் என பல இடங்களுக்கும் நகரும் கதையமைவில், 'Surrealsitic' எனப்படும் வேறுபட்ட அல்லது முரணான காட்சிகள் படம் முழுவதும் பிணைக்கப்பட்டு விரவிக் கிடக்கின்றன. தான் மிருக்காட்சி சாலைக்கு வந்த கதையை சிம்பன்ஸி கூறுவது உதாரணம்.

விசித்திரமான 'Z'ன் பாத்திரப்படைப்பு, குண்டு வைக்க வரும் லில்லியின் வாழ்க்கைச் சூழல் போன்றவை எல்லாம் சிதறிக் கிடக்கும் காட்சியமைப்புகள். ஆனால் பார்வையாளனால் கதையின் நகர்வினை தொடர முடிவது, இயக்குனரின் சாமர்த்தியம். ஒரு ஆராய்ச்சியாளர் பாலுறவில் ஆண்-பெண் உளவியலை விவரிக்கும் போதும், ஆண் பெண் குறிகளின் அளவுகளை கரும்பலகையில் வரையும் போதும், கலாச்சார கட்டமைப்பில் சிக்குண்டிருக்கும் ஹங்கேரியப் பெண்களால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. அதே காலகட்டத்தில் வாழும் டோராவின் பாலுறவு சார்ந்த இச்சைகள், ஆண்கள் மீதான அவளின் கட்டுப்பாடற்ற மோகம் படம் முழுவதும் நீண்டு கிடக்கின்றன. ஒருங்கிணைக்கப் பட்ட தார்மீகமின்றி நகரும் படம் முழுவதும் அரசியல், விஞ்ஞானம், காமம் ஆகியவற்றின் மாற்றங்களையும், உண்மைக் கூறுகளையும், தனது கதையின் துணுக்குகளாக அமைத்திருக்கிறார் இயக்குனர். டோரா, லில்லி ஆகிய இரண்டு பாத்திரங்களிலும் டொரொத செக்டா(Dorotha Segda) நடித்திருக்கிறார்.

*
இரண்டு படங்களும் வேறு தளம், வேறு கதையமைவு. இருப்பினும் மெல்லிய நூலொன்றின் மூலமாக இணைக்கப் பட்டிருப்பதனை உணர முடிகிறது. இரண்டு கதைகளிலும் மனித மனதின் ஆசைகளையும், அவற்றினை புற-அக வாழ்வில் வெளிக்காட்டும் முறைகள், அதனால் விழையும் சிக்கல்கள் ஆகியவற்றின் மூலமாக தொடர்புபடுத்தப் படுகின்றன. தனிமனித ஆசை, சமூகம் குறித்தான விருப்பம், அதனில் நுழைக்கப்பட வேண்டிய மற்றங்கள் குறித்த வேட்கை போன்றவற்றினை நிறைவேற்ற வேண்டி மனித மனம் எதனையும் செய்யத் தயாராகி நிற்கிறது.

மொனோரி தனது தங்கத்தின் மீதான வெறி காரணமாக எதிர்ப்படும் எந்த விதமான விளைவுகளையும் சந்திக்க முற்படுகிறான். வேட்கை தாண்டிய வெறி, உளவியல் சிக்கல் என்பதனை உணர முடியாதவனாக, அவனுள் ஆசை வளர்ந்து கொண்டே இருக்கிறது. அதன் விளைவாக அவன் பெறும் பலன், ஆயிரம் வினாக்களை தொடுக்கிறது.

மற்றொரு படம், இரண்டு சகோதரிகளின் ஆசையினை அடிப்படையாகக் கொண்டது. டோராவின் ஆசை தன் உடல் குறித்தான விருப்பம், ஆண்களின் மீதான மோகம் என சுயம் சார்ந்தது. லில்லி, சமுக மற்றும் அரசியல் அவலங்களை தீவிரவாதத்தால் தகர்க்க முடியும் என வெடிகுண்டு சுமந்து திரிகிறாள்.மனிதனை இயக்கும் கருவியாக ஆசை மட்டுமே நிலை பெறுகிறது.

ஒரு வேட்கையை இலட்சியமாகக் கொண்டு மனிதன் ஓடிக் கொண்டே இருக்கிறான். உலகின் மற்ற கூறுகளை கவனிக்கக் கூட விருப்பமின்றி. இறுதிப் புள்ளியாக வைத்திருக்கும் இலட்சியத்தை தொடும் கணம் வரை அவனது புறக்கணிப்புகளால் ஏற்படும் இழப்புகள் கணக்கிலடங்காமல் கிடக்கின்றன. தளத்தின் வெளியே நின்று பார்க்கும் போது உண்டாகும் அதிர்வுகளை ஏற்றுக் கொள்ள மனம் தயாரில்லை. யோசிக்கக் கூட இயலாத மனம் அலைந்து கொண்டிருக்கிறது. சூறாவளிக் காற்றில் சிக்குண்ட இலைச் சருகு ஒன்றினைப் போல்.

4 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

யோவ் நட்சத்திரம்...
நல்லா இருக்கு. இதுக்கு எல்லாம் எவன் பின்னூட்டம் போடுவான்? சூடா எழுது...

Anonymous said...

Good perspective view mani

குழலி / Kuzhali said...

நல்ல பதிவு படங்களை பற்றிய அறிமுகத்திற்கு நன்றி, பார்க்க முயற்சிக்கின்றேன்....

நன்றி

பொன்ஸ்~~Poorna said...

முதல் படத்தைப் பற்றிய அறிமுகம் நன்றாக இருந்தது.

இரண்டாவது படம், அத்தனை தெளிவில்லை என்று தோன்றுகிறது..