May 27, 2006

'பச்சை'யில்லாமல் எழுதியிருக்கிறேன்.

ஞானக்கூத்தன் கவிதைகள் - வேறுபட்ட உலகம். அவரின் அனைத்துக் கவிதைகளும் எனக்கு அறிமுகமில்லை. ஆனால் தெரிந்த கவிதைகள் யாவுமே பிடித்த கவிதைகள்தான்.

ஞானக்கூத்தனிடம் ஒரு வினா : "தமிழ் கவிதைகள் உலகிற்கு தங்களின் கவிதை இயக்கம் என்ன செய்திருக்கிறது?" அதற்கான பதில் : "எனக்குப் பிடித்த கவிதைகள் வருகிறது என்றாலே என் இயக்கம் ஏதேனும் ஒன்று செய்திருக்கிறது என்று பொருள்தானே".

இதன் பின்புலம் தெரியாமல் பார்ப்பது, இது பொருளற்ற பதிலாகத் தெரியக்கூடும். ஆனால் ஞானக்கூத்தன் தமிழின் நவீன கவிதைகளின் முன்னோடி. தமிழில் நவீன கவிதைகள் தனக்கென இடம் பிடிக்கக் காரணமாக இருந்தவர்களில் மிக முக்கியமானவர். எனவே அவரது கவிதை இயக்கம் இல்லை எனில், தமிழில் நவீன கவிதையின் முகம் மாறியிருந்திருக்கக் கூடும்.

எல்லோருமே பார்த்திருக்கக் கூடிய விஷயங்களை வேறு கோணத்தில் பார்ப்பது கவிதையின் சிறப்பு. அந்தக் கலை ஞானக் கூத்தனிடம் சிறப்பாக தென்படுகிறது. இந்தப் பார்வையில் நவீன கவிதையின் மற்ற முன்னோடிகளைக் காட்டிலும் ஞானக்கூத்தன் ஒரு படி முன்னேயிருக்கிறார் எனச் சொல்வேன்.

(1)
காலம் கடந்துண்ணும் எதிர்மனைப் பார்ப்பான்
எச்சிற் களையைத் தெருவில் எறிந்தான்.
ஆள் நடவாத தெருவில் இரண்டு
நாய்கள் அதற்குத் தாக்கிக் கொண்டன
ஊர் துயில் குரைத்து நாய்கள் குரைக்கவும்
அயல் தெரு நாய்களும் ஆங்காங்கு குரைத்தன
நகர நாய்கள் குரைப்பது கருதிச்
சிற்றூர் நாய்களும் சேர்ந்து குரைத்தன
நஞ்சை புஞ்சை வயல்களைத் தாவிக்
குரைச்சலின் குரைச்சலைக் கேட்டு
வேற்றுர் நாய்களும் குரைக்கத் தொடங்கின
சங்கிலித் தொடராகக் குரைக்கும் நாய்களில்
கடைசி நாயை மறித்துக்
காரணம் கேட்டால் என்னத்தைக் கூறும்?


இந்தக் கவிதைக்கு விளக்கம் எதுவும் தேவையில்லை என்றே தோன்றுகிறது. நாயின் குரைச்சலைக் நோக்கும் அதன் பார்வையை கவனிக்கும் போது அதன் அழகு புரிகிறது.

இதே போன்று இன்னொரு கவிதை. காக்கையை எத்தனை முறை பார்த்திருப்போம்?. காக்கை குறித்தான நினைவுகள் யாவற்றையும் சில கணங்கள் திருப்பிக் கொண்டு வந்துவிட்டு இந்தக் கவிதையைப் படிக்கும் போது வியக்க நேரிடுகிறது.

(2)
காக்கையை எனக்குத் தெரியும்
யாருக்குத்தான் தெரியாது? ஆனால்
இந்தக் காக்கையை எனக்குத் தெரியாது
எனக்கு நேரே எதோ என்னிடம்
பேச வந்தாற் போலப் பரபரப்பில்
அமர்ந்திருக்கும் இந்தக் காக்கை
ஊரில் எனது குடும்பதினருக்குப்
பழக்கமுள்ள காக்கை ஒன்று
எங்கள் வீட்டு சிறிய கரண்டியை
எடுத்துச் சென்று பெரிய கரண்டியைப்
பதிலாய் ஒரு நாள் முற்றத்தில் போட்டதாம்
இந்தக் காக்கை என்ன செய்யுமோ?
காலும்,உடம்பும்,கழுத்தின் நிறமும்....
அதற்கு நவீன உலகம் பழகிவிட்டது.
காக்கையின் மூக்கில் மெல்லிய இரும்புக்
கம்பிகள் அடிக்கடி கண்ணில் படுகின்றன.
நாற்பது வயதில் மூன்று தடவைகள்
சிறகால் அடித்த அவற்றையே என்னால்
அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை
மீண்டும் ஒருமுறை இந்தக் காக்கை
எனக்கு நேரே வந்தமர்ந்தால்
தெரிந்து கொள்ள முடியுமோ என்னால்?
முடியும் என்பது சந்தேகந்தான்
ஏனெனில் காக்கையை யாரும்
முழுதாய்ப் பார்த்து முடிப்பதில்லையே.


இந்தக் கவிதையில் நமது நெருக்கடியான வாழ்க்கை முறை வெளிப்பட்டுவிடுகிறது. நமக்கு இருக்கும் பணிகளுக்கிடையில் இயற்கையினை ரசிப்பதற்கான நேரம் அருகிப் போயிருக்கிறது. இருக்கும் நேரமும் விஞ்ஞானத்தின் பிடியில் சிக்குண்டிருக்கிறது. கடைசி இரண்டு வரிகளில் அவசர வாழ்க்கையின் கோலத்தை வேறொரு கோணத்தில் இயல்பாகச் சொல்லி விட முடிகிறது கவிஞரால்.

இந்தக் கவிதையில் மெல்லிய நகைச்சுவை ஒன்றையும் என்னால் உணர முடிகிறது. அந்தக் காக்கை ஏன் சிறு கரண்டியை எடுத்துச் செல்ல வேண்டும்? நேரடியாக பெரியதைப் போட்டிருக்கலாம் அல்லவா? அல்லது நமக்குத் தெரிந்தவர்களின் வீட்டிலேயே திருடிவிட்டோமே என யோசித்திருக்குமோ?

காகிதத்தில் கிறுக்கிக் கிறுக்கி, தாடியை சொறிந்து கொண்டிருப்பவர்களுக்கும் சேர்த்து கவிதை என்பது பற்றி பின்வரும் கவிதையில் சொல்கிறார்.
(3)
சிந்தனை
தெளிவு
சிக்கனம்
ஆனந்தம்
கவிதை.


அவ்வளவுதான் கவிதை. அதற்கு மேல் வேறொன்றுமில்லை.

(சிறு குறிப்பு: ஒரிரு வருடங்களுக்கு முன்பாக சென்னைப் புத்தக் கண்காட்சியில், இவர்தான் ஞானக்கூத்தன் என்று தெரியாமல், வழக்கம் போலவே 'ஓவராக'ப் பேசி வாங்கிக் கட்டிக் கொண்டேன்.)

7 எதிர் சப்தங்கள்:

Chellamuthu Kuppusamy said...

அனைத்தும் இரசிக்கும் படி தான் உள்ளன. மிகவும் வசீகரித்தது

//சிந்தனை
தெளிவு
சிக்கனம்
ஆனந்தம்
கவிதை.//

என் போன்றவர்களுக்கு நல்ல கவிதைகளையும், கவிஞர்களையும் அடையாளம் காட்டும் செயல் தெரொடரட்டும்.

-குப்புசாமி செல்லமுத்து

பொன்ஸ்~~Poorna said...

எனக்கு அந்த முதல் கவிதை.. நாய் பற்றியது பிடித்திருந்தது.

//மீண்டும் ஒருமுறை இந்தக் காக்கை
எனக்கு நேரே வந்தமர்ந்தால்
தெரிந்து கொள்ள முடியுமோ என்னால்?
முடியும் என்பது சந்தேகந்தான்
ஏனெனில் காக்கையை யாரும்
முழுதாய்ப் பார்த்து முடிப்பதில்லையே.
//
திருட்டுக் காக்கையைப் பற்றி முதலில் கூறியதால், அது போல் திருட்டுத் தனம், விஷமத்தனம் நிறைந்த மனிதர்கள் பற்றியதாகக் கூட இருக்கலாம்.. ஏற்கனவே ஒருமுறை அடிபட்டு, தவறான மனிதர்களிடம் இழப்புகளைச் சந்தித்திருந்தாலும், மீண்டுமொருமுறை பார்க்கும் போதும் அதே போன்ற மனிதர்களை அடையாளம் தெரியாமல் போய்விடுகிறது.. நேரமின்மை என்பதை விட அப்படி அடையாளம் தெரியும் கூர்மையான பார்வை இல்லை..

இந்தத் தலைப்புக்கு என்ன காரணம்?

Vaa.Manikandan said...

நன்றி குப்புசாமி,பொன்ஸ்.

தலைப்புக்கு பெரிய ரகசியம் இல்லை. முன்பு கல்யாண்ஜியின் கவிதை பற்றி எழுதிய பதிவில் நண்பர் ஒருவர் 'சான்றிதழ்'(A or U or U/A) கொடுத்து பதிவை எழுதுவும் என்றார். அதுதான்! ;)

கார்திக்வேலு said...

மணி ,
இந்தக் கவிதைகளை பொருத்தவரை நீங்கள் வேறு ஒரு தளத்தில் இருந்து
அணுகி இருப்பதாய் உணர்கிறேன்.

நாய் கவிதை நாய்களைப் பற்றி எழுதப்படுவதன்று , இது தமிழ்மணம் படிப்பவர்கள்
அறியாத ஒன்றல்ல இது :-)

//காலம் கடந்துண்ணும் எதிர்மனைப் பார்ப்பான்//
//ஆள் நடவாத தெருவில் //
//நகர நாய்கள் குரைப்பது கருதிச்//

போன்ற வரிகளின் மூலம் இது ஒரு political statement ஜ குறிப்பதாகக் கொள்ளலாம்.


காக்கை கவிதையில் பொன்ஸ்சின் புரிதலே என் புரிதலும் கூட.

//நாற்பது வயதில் மூன்று தடவைகள்
சிறகால் அடித்த அவற்றையே என்னால்
அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை//

இந்த வரிகள் கண்டிப்பாக காகங்களைப் பற்றியது இல்லை என்றெ கூறுவேன் :-)

//ஏற்கனவே ஒருமுறை அடிபட்டு, தவறான மனிதர்களிடம் இழப்புகளைச் சந்தித்திருந்தாலும், மீண்டுமொருமுறை பார்க்கும் போதும் அதே போன்ற மனிதர்களை அடையாளம் தெரியாமல் போய்விடுகிறது.. நேரமின்மை என்பதை விட அப்படி அடையாளம் தெரியும் கூர்மையான பார்வை இல்லை..//

பாம்பின் காலறிய பாம்பாய் இருந்தால் தான் ஆகும் போல ...

//சிந்தனை
தெளிவு
சிக்கனம்
ஆனந்தம்
கவிதை.//

இதை சற்றே வேறு மாதிரி எழுதியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.
இதில் கவிதையும் ஆனந்தமும் இடம் மாறி அமைந்திருக்கலாம்.
(இது கருத்து ரீதியான வேறுபாடே கவிதை ரீதியானது அல்ல)But its his poem anyway.

மூன்று கவிதைகள் நன்றாக இருந்தாலும் , அனுமானிக்கக் கூடியதாய் இருக்கிறது
அந்த "ஆஹா" நிகழ்வு எற்படவில்லை என்பதே என் கருத்து.

Muthu said...

மணி,

காகத்தை பற்றிய கவிதை சூப்பர்...வரிவரியாக பிரித்து மேய நேரம் இல்லைஇப்போது என்றாலும் பலவித உணர்வுகளை தூண்டுவதில் இது வெற்றி பெறுகிறது..

வெற்றி said...

மணிகண்டன்,
அருமையான பதிவு. நீண்ட நாட்களுக்குப் பின் நல்ல தரமான கவிதை விமர்சனப் பதிவை வாசிக்க முடிந்தது. இப்படி இன்னும் பல நல்ல பதிவுகளை தருவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்
வெற்றி

Vaa.Manikandan said...

வழக்கம் போலவே உங்களுக்கு ஒரு நன்றி கார்திக்வேலு.

முத்து, வெற்றி நன்றி. கவிதைகளை ரசிப்பவர்கள் என் பதிவிற்கு வருகிறார்கள் என்னும் போது....சந்தோஷம்...சந்தோஷம்