May 27, 2006

ஈழத்தமிழா நீ வேறு வழி பார்!

ஈழப் பிரச்சினை எப்போதுமே ஒரு தேசத்தின் உள்விவகாரமாகவே உலகச் சமுதாயத்திற்குப் தெரிவது வேதனை. தெரியப்பட வைக்கிறது.

மிதிபடும் தமிழனின் குரல்வளைச் சத்தம் திறமையாக நசுக்கப்படுகிறது. தனது சகோதரன் தாக்கப்படும் போதும், சகோதரி கொடுமைப்படுத்தப்படும் போதும் தடுக்க முயல்பவனின் கர ஒலி மட்டுமே இந்த சமுதாயத்திற்கு துப்பாக்கி சத்தமாகப்படுகிறது. வலுத்தவனுக்கு வகுக்கப் படும் சட்டம், இளைத்தவனுக்கு வேறு வடிவம் பெறுகிறது. உரக்கக் கத்துபவன் நல்லவன் ஆகிறான். தாக்கியும் விட்டு ஊளையிடுபவன் அப்பாவி ஆகிறான்.

இந்தியாவில் நடக்கும் 'ஈழ அரசியல்' வெந்த புண்ணில் வேலினை பாய்ச்சுதல் மட்டுமில்லை-பெட்ரோல் விட்டு நெருப்பூட்டும் செயல்.

ஈழம் பிரிந்தால், தமிழகம் பிரியுமாம். மடத்தனத்தின் முனை மழுங்கிய இந்தக் கூற்று, கூரானதாகவே காட்டப்படுகிறது. இரண்டு பகுதிகளின் அரசியல் சூழலையும் எப்படி ஒப்பிடுகிறார்கள் என்பதுதான் புரியாத விஷயம்.

தமிழகத்தில் எந்தத் தமிழன் தாக்கப் படுகிறான். அவனது உரிமைக்கு என்ன பங்கம் வந்து விட்டது? எந்தக் காரணத்தைக் கரத்தில் எடுத்து தனித் தேசம் கேட்பான்? டெல்லியின் அரசியல் 'வித்தகர்களுக்கும்', அதிகாரவர்க்கத்தின் 'சாண்க்கியர்களு'க்கும்தான் வெளிச்சம்.

டெல்லியின் ஏ.சி அறையில் அமர்ந்து அரசியல் செய்யும் 'ஹைடெக்' அரசியல்வாதிக்கு, ஈழத்தமிழன் சிந்தும் குருதியின் வாசம் எப்படித் தெரியும்?

தலைநகரில் உண்ணாவிரதம் இருக்கும் 'மேதா பட்கர்' தெரியுமே தவிர, பனிக்காற்று குளிரும் என எண்ணி, பாலீத்தின் பையால் முகம் மறைக்க, மூச்சடைத்து இறந்து போன பிள்ளைக்கு நடுக்கடலில் ஈமச் சடங்கு செய்யும் தமிழச்சியின் ஓங்காரம் எப்படி செவியில் விழும்?

அமீர்கான் படம் வெளியாவது தடுக்கப் பட்டால் அது செய்தி - ஊடகங்களுக்கு . நடுக்கடலில் ஜலசமாதியாகும் குடும்பம் மீனுக்கு இரை என்பதனைத் தவிர வேறென்ன இருக்கிறது.

அர்ஜூன் சிங்கின் கொடும்பாவி எரிய- அதைத் தடுப்பதனை விட்டு விட்டு எவனின் வயிரெறிந்தால் எமக்கென்ன?

இரான் பற்றி பேசினால் அமெரிக்கா ஊற்றும் எண்ணெய்ப் பிச்சை. உன்னைப் பற்றி பேசினால்?

பாலஸ்தீனத்தில் போனால் மனித உயிர். அடச்சீ! இலங்கையில் போனால் வெறும் மயிர்.

அழுடா தமிழா! அழு! தொண்டை வற்றி இரத்தம் தெறிக்கும் வரை அழு! அடுத்தவன் அடிப்பான் வாங்கிக் கொள்! உன் வம்சம் சாம்பலாகும் வரை பொறுமை காத்தால் என் சமூகம் முடிவெடுக்கும். நீ பொறுமையானவன், நல்லவன் என்று.

அது வரை அழு!உன் சகோதரியையும், தாயினையும் தாரை வார்த்து அழு! உடன் பிறந்தவன் பொசுங்கிப் போக, நீ செத்துச் சுண்ணாம்பாகும் வரை அழு. அழுதழுதே பிணமானால் கடலினுள் விழு. மீன் அரித்து தின்னட்டும். எங்களுக்கு எங்கள் பணிதான் முக்கியம்.

உனக்காக இங்கே ஒருவன் கண்­ணீர்த்துளியொன்றை அடுத்தவனுக்கு தெரியாமல் சிந்தினால்- தீர்மானிப்போம். அவன் துரோகியென்று.

19 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

தேவை இல்லாத பிரச்சினைகளில் ஈடுபடாதே!

Anonymous said...

இன உணர்வா?

Vaa.Manikandan said...

எதற்காக இந்தக் கேள்வி எனத் தெரியவில்லை. மனிதத் தன்மையை நினைத்துதான் எழுதினேன். நீங்கள் இன உணர்வா எனக் கேட்டால், இல்லை என்று சொல்லவில்லை. இன உணர்வுடையவன் என்பது பெருமைப் படத்தக்கதுதானே?

Chellamuthu Kuppusamy said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

அழுத்தமான வரிகள். நன்றிகள் சகோதரா.

Anonymous said...

Manikandan Anna

Ennkalukuuha Allumm ORU nalla tamilaha Ithayam

God bless you

EElavan

Vaa.Manikandan said...

அதிரடி. முழுவதுமாக என்னாலும் வைகோவை நம்ப முடியவில்லை. ஓரத்தில் ஏதேனும் ஒரு நம்பிக்கை அவர் குறித்து இருப்பினும் சந்தர்ப்பவாதியோ என்னும் பயமும் இருக்கத்தான் செய்கிறது.

குப்புசாமி,சதயம் நன்றி.

பெயர் குறிப்பிடாமல் கருத்து எழுதியவர்களை மதிக்கிறேன்.

ஈழவா, உனது வரிகள் எளிமையானவை. ஆனால் தீடீரென்று ஆழமான வெறுமையை நெஞ்சுக்குழிக்குள் உண்டாக்குகிறது. உனது வரிகளில் இருக்கும் எனது பெயரின் இடத்தில் தனது பெயரை இட்டுப் படிக்கும் யாராலும், ஒரு கண்ணீர்த் துளியின் பிசுபிசுப்பை உணரமுடியும். சகோதரா! விடிவு பிறக்கும். நம்பிக்கையுடன் இருப்போம்.

வெற்றி said...

மன ஆறுதல் தரும் பதிவு. மதிப்பிற்குரிய கலைஞர் தமிழகத்தின் ஆட்சிப்பொறுப்பில் மட்டுமல்ல மத்திய அரசிலும் செல்வாக்குள்ளவராக திகழ்கிறார். அவரிடம் இருந்து என் போன்ற அப்பாவி ஈழத்தமிழர்கள் எதிர்பார்ப்பது ஏராளம். ஈழத்தமிழர் விடயத்தை கலைஞர் எப்படிக் கையாள்கிறார் என காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

//ஈழம் பிரிந்தால், தமிழகம் பிரியுமாம். மடத்தனத்தின் முனை மழுங்கிய இந்தக் கூற்று, கூரானதாகவே காட்டப்படுகிறது. இரண்டு பகுதிகளின் அரசியல் சூழலையும் எப்படி ஒப்பிடுகிறார்கள் என்பதுதான் புரியாத விஷயம். //

எனக்கும் இதுதான் புரியவில்லை. அரசியல்துறையில் பட்டம் பெற்று, பல அரசியல் நகர்வுகளை உன்னிப்பாக அவதானித்து வரும் வட இந்திய நண்பர் ஒருவரை அண்மையில் Boston[பொஸ்ரன்] நகரில் சந்தித்து ஈழப்பிரச்சனை பற்றி கருத்துப்பரிமாறிக் கொண்டபோது, அந்த நண்பர் சொன்னார், "இந்தியா ஒரு போதும் தமிழீழம் எனும் தனி நாட்டை ஆதரிக்காது, காரணம் தனித்தமிழீழம் அமைந்தால், ஈழத்தமிழருக்கும் தமிழகத்தமிழருக்குமான உறவு இன்னும் நெருக்கமாகும். மொழி, கலாச்சாரத்தில் மட்டுமல்ல பொருளாதாரத்துறையிலும் நெருக்கம் உண்டாகும். அத்துடன் புலம் பெயர்ந்து வாழும் பல இலட்சம் ஈழத்தமிழர்களும், ஈழத்தில் வசிக்கும் ஈழத்தமிழர்களும் உல்லாசப்பயணிகளாக தமிழகம் வருவர். அதன் மூலமும் தமிழகத்தின் பொருளாதாரம் உயரும். அந்த நிலையில் தமிழகத்தில் தமிழ் மொழி உணர்வு, தமிழ்த்தேசியவாதம் வலுப்பெறும், அதனால் தமிழகம் இன்னுமொரு காஷ்மீராக மாற இந்திய நடுவன் அரசு விரும்பாது."

இப்படித்தான் உண்மையிலேயே இந்திய நடுவன் அரசு நினைக்குமாயின் அது வீணான, அடிப்படையற்ற, ஆதாரமில்லாத சந்தேகம் என்பதே என் கருத்து.

ஸ்ரீ சரவணகுமார் said...

நண்பர்களே எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எந்த அரசியல்வாதியையும் நம்ப வேண்டாம். தன்மானத்தை அடகு வைத்த வைகோ, தமிழர்களுக்காக குரல் கொடுக்க பயப்படும் கலைஞர், தமிழரே அல்லாத ஜெ இவர்களை நம்பி என்னவாகப் போகிறது. நாம் நமக்குள்ளேயே சபதமேற்போம். நம்மைச்சுற்றி இருப்பவர்களுக்கு ஈழத்தமிழர்களின் நிலையை புரிய வைப்போம். காலம் கனியும் நாமும் வெல்வொம்

Vaa.Manikandan said...

அனானி,
எது தேவை இல்லாத பிரச்ச்cஇனை என்று தெரியவில்லை. இதுஎனக்கு மிக முக்கியமான பிரச்சினையாகப் படுகிறது.

நன்றி வெற்றி,sreesharan.

Anonymous said...

சதயம் சொன்னது: //மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான ஒரு நிலையை எடுக்குமென நினைப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதற்குச் சமம்.ஏனெனில் அவர்களின் இழப்பு அத்தகையது//
நீங்கள் சொல்லும் அந்த இழப்பை விட அதிக இழப்பு ஈழத்தவருக்கே (அவர்களின் நடவடிக்கையினால்). இன்னமும் புளித்துப்போன இழப்பு குறித்து பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.

ஈழபாரதி said...

வாழ்த்துக்கள் சகோதரனே, எமக்காக ஒரு இதயம்.

அருண்மொழி said...

//மதிப்பிற்குரிய கலைஞர் தமிழகத்தின் ஆட்சிப்பொறுப்பில் மட்டுமல்ல மத்திய அரசிலும் செல்வாக்குள்ளவராக திகழ்கிறார். அவரிடம் இருந்து என் போன்ற அப்பாவி ஈழத்தமிழர்கள் எதிர்பார்ப்பது ஏராளம். ஈழத்தமிழர் விடயத்தை கலைஞர் எப்படிக் கையாள்கிறார் என காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.//

இந்த விஷயத்தில் கலைஞரிடம் இருந்து எதையும் எதிர்பார்க்க முடியாது.

1. ஏற்கனவே ஒரு முறை அவர் ஆட்சி இதன் காரணமாக அகற்றப்பட்டு இருக்கிறது.
2. ஊடகங்கள் "அம்மாவை" தீவிரவாதிகளை அடியோடு அழிப்பவர் என்றும், கலைஞர் அப்படி இல்லை என்று சொல்லி வருபவை.
3. மத்தியிலும் ஆட்சி பொறுப்பில் இருக்கிறார்கள்.

தமிழனாக இருக்கும் காரணத்தால் எங்களால் கண்ணீர்தான் வடிக்க முடியும். இந்த நிலைக்காக நான் பெருவெட்கம் அடைகிறேன்.

Chellamuthu Kuppusamy said...

'இந்தியா வந்து உதவாவிடில் அமெரிக்க இராணுவம் துணை கொண்டு போரில் ஈடுபடுவோம்' என ஜெயவர்த்தனா காய் நகர்த்தியதால், வேறு வழியின்றி இந்திய அமைதிப்படை அனுப்பப்பட்டதாக எங்கோ படித்த்ததாய் நினைவு. நமது பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகள் காலூன்றக்கூடாதென்ற எண்ணம் அன்றைய காங்கிரஸ் அரசு எடுத்த முடிவிற்குக் காரணமாக இருந்திருக்கலாம். அமைதிப்படை வந்த பின் 'நீயே பார்த்துக்கொள்' என தந்திரமாக மீண்டும் விலகிக் கொண்ட சிங்கள இராணுவமும், அரசும் இந்திய அரச படைகளையும், தமிழ்ப் போராட்ட இயக்கத்தையும் மோதவிட்டதாக அறிகிறோம். வென்றது இலங்கை அரசின் தந்திரம். அதில் காயப்பட்டது அப்பாவி மக்கள் தான்.

வெற்றி said...

//சிங்கள இராணுவமும், அரசும் இந்திய அரச படைகளையும், தமிழ்ப் போராட்ட இயக்கத்தையும் மோதவிட்டதாக அறிகிறோம். வென்றது இலங்கை அரசின் தந்திரம். அதில் காயப்பட்டது அப்பாவி மக்கள் தான்.//

குப்புசாமி செல்லமுத்து, நான் உங்களின் கருத்தோடு உடன்படுகிறேன். J.R. ஜெயவர்த்தனாவை இலங்கையில் "நரி" என்று சொல்வார்கள். காரணம் அவர் அரசியல் தந்திரங்களில் மிகவும் கெட்டிக்காரார். J.R.ஜெயவர்த்தனாவின் அரசியல்தந்திரத்திற்கு இந்திய அரசு தோற்றுவிட்டது என்பது உண்மை. இதை இலங்கையில் கடமையில் ஈடுபட்டிருந்த பல இந்தியத் தளபதிகளே சொல்லியிருக்கிறார்கள்.
இந்திய அரசை தமது தந்திரவலைக்குள் வீழ்த்தியதை இலங்கையின் அன்றைய தேசிய பாதுகாப்பு மந்திரி லலித் அத்துலத்முதலி ஓர் உட்டத்தில் இப்படி பெருமையாகக் கூறினார்:
"If victory was to be achieved, it could not be done by uniting all opposing forces but by dividing them and creating dissension among them... Sri Lankan Kings never opposed the entirety of India. When there was conflict with the Pandyans, they sought the aid of the Cholas and acted against the Pandyans. When the Pandyans and Cholas combined, they sought the aid of Kalinga. Sinhala Kings had that high intelligence and knowlwdge of statecraft"
[National Security Minister Lalith Athulathmudali ]

தமிழர்களைக் கொல்வதற்கு தான் இந்தியப்படையை தந்திரமாக அழைத்து வந்ததை அன்றைய சனாதிபதி J.R.ஜெயவர்த்தனா இப்படிச் சொன்னார்:
"...The violence in the North was also stopped by the Indian Peace Keeping Force.(Though the fighting went on) no Sinhalese, no Sinhalese soldiers were killed
only the Indian soldiers and the LTTE(were killed). Yes, (I had to invite a foreign army to do this on our sovereign soil)...I was doing what so many Sinhala Kings had done in the past in similar circumstances."
(ex President J.R.Jayawardene , Interview with Mervyn de Silva, Lanka Guardian, July 15, 1990)

Vaa.Manikandan said...

//நீங்கள் சொல்லும் அந்த இழப்பை விட அதிக இழப்பு ஈழத்தவருக்கே (அவர்களின் நடவடிக்கையினால்). இன்னமும் புளித்துப்போன இழப்பு குறித்து பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.//

விண்ணானம், உங்களின் கருத்துடன் நானும் ஒத்துப் போகிறேன். எனினும் தனக்கு சம்பந்தமுடையவன், மற்றொருவனால் பாதிக்கப்படும் போது-அவன் குற்றவாளியென்றாலும் அவனுக்கு ஆதரவாகவும், அதற்கு காரணமானவனை எதிர்ப்பதும் மனித இயல்பு. இந்த வகையில் காங்கிரஸ்-க்கான பாதிப்பு புளித்துப் போனது என்றாலும் பெரியதுதான். இதனை சதயம் அவர்கள் தெரிவித்திருப்பார் எனக் கருதுகிறேன்.

தங்களின் வாழ்த்துக்கு நன்றி ஈழபாரதி. இது எங்களின் கடமை என உறுதியாக நம்புகிறேன்.

//இந்த நிலைக்காக நான் பெருவெட்கம் அடைகிறேன்.//

இதற்கான பதில் என்னிடம் இல்லை. ஆனால் பதில் சொல்ல முடியாத நிலைக்கு ஆளானதற்கு நாங்கள்தான் வெட்கப்பட வேண்டும். நீங்கள் இல்லை.

சிங்களர்களின் 'அறிவுத்திறம்' மிக பிரசித்தம். அவர்களின் தந்திரத்தைக் கூட புரிந்து கொள்ளவில்லை என்பது இந்திய அரசிற்கு அவமானம் இல்லை? தலை குனிய வேண்டும். ஏமாந்த இந்திய அரசு அதற்கு எடுத்த பதில் நடவடிக்கை என்ன? அல்லது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? அதுதான் வினா.

Muthu said...

மணி,

தமிழன் என்ற வார்த்தையே வேப்பங்காயாய் சில தமிழர்களுக்கே இருக்கும்போது நீங்கள் என்னதான் கத்தினாலும் கண்டுக்கொள்ள மாட்டார்கள்.உருப்படியான விவாதங்களுக்கு பதில் வராது.
மட்டையடியாக இரண்டு வார்த்தைகள் வரும்.(தனிநாடு கேட்கிறாயா இன்ன பிற)


இந்த கட்டுரை அருமையாக எழுதப்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியனும் புலிகளை தடை செய்துள்ள சூழ்நிலையில் பிரச்சினை தீவிரமடைகிறது.

Vaa.Manikandan said...

//தமிழன் என்ற வார்த்தையே வேப்பங்காயாய் சில தமிழர்களுக்கே இருக்கும்போது நீங்கள் என்னதான் கத்தினாலும் கண்டுக்கொள்ள மாட்டார்கள்.//

எல்லோரும் வரவில்லை என்றாலும், ஓரிருவராவது பங்குபெறும் போது மகிழ்ச்சிதான். நன்றி முத்து.

Anonymous said...

Thank you for expressing your support for us Anna( or Akka)

we do really appreciate your comments whilst most of the tamil web blog writers trying to undermine our struggle for freedom.

Is it really wrong to fight the Sinhala government who kills our peole.

i am Sri lankan Tamil living in the UK having left the country to save our lives. I had personal experience with the Sinhala atrocities committed against our people.

i was 12 years when sri lankan army raped and killed my cousin and my great aunt and uncle at the time i was staying with them fortunately i was at the neighbouring house and the neighbours took me with the help of the Tiger cadres. after this i never went back to my village.

is it any wonder I hate the sinhala govt and support the Tamil Struggle in Sri Lanka.

i do not understand why most of the Tamil web blog writers do not say anything about the cold blooded murders carried out by the Sri Lankan Govt forces and some of their para military people

once again thanks for being understanding and stating you view

nadpudan

Vaanathy