Sep 14, 2017

கொங்குச் சொலவடைகள்

நம்ம ஊர் சொலவடைகள் என்றொரு வாட்ஸப் குழுமம் இருக்கிறது. உருப்படியான குழுமங்களில் ஒன்று. கொங்குப்புறத்துச் சொலவடைகளை நினைவுக்கு வரும் போதெல்லாம் பதிவிடுகிறார்கள். முன்பொரு முறை குழுமத்தை விட்டுத் தெரியாத்தனமாக வெளியேறி ஏகப்பட்ட சொலவடைகளை இழந்துவிட்டேன். அதே போலத்தான் குழுமத்தை நிர்வகிக்கும் முரளியும் ஏமாந்து போனார். அவ்வப்பொழுது தொகுத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தில் ஒரு பதிவாகச் சேகரித்து வைக்கிறேன்.

அம்மா அமத்தாவிடமெல்லாம் நினைவில் இருப்பதையெல்லாம் சொல்லுங்கள் என்று கேட்டாலும் அவர்களிடமிருந்து எதுவும் வருவதில்லை. ஆனால் இயல்பாகப் பேசிக் கொண்டிருக்கும் போது நிறையச் சொல்கிறார்கள். இந்தத் தலைமுறை ஆட்களில் சொலவடைகளுடன் பேசுகிறவர்களைப் பார்ப்பதே அரிதாக இருக்கிறது. அடுத்த தலைமுறையில் சொலவடைகள் என்பதே இல்லாமல் போய்விடக் கூடும்.

1) காச்சுறவ காச்சுனா, கழுதமல்லக்கூட ரசம்பானாங் கொமரன் (கழுதமல்லு- கழுதையின் சிறுநீர்)

2) பேண்டவன விட்டுப் போட்டு பீய வெட்டுற தறுதல!

3) கரிவித்த காசு கருத்துப் போகுமா? நாய்வித்த காசு கொலைக்குமா?? இல்ல, வேப்பெண்ண வித்த காசு கசந்துதான் போகுமா?

4) கணக்கன் பொண்டாட்டி காதுல கடுக்கன் போட்ருக்கான்னு சொல்லி, காரியக்காரன் பொண்டாட்டி காத வெடுக்குன்னு அத்துகிட்டாளம்...

5) ஆனமேல போறவங்கிட்ட சுண்ணாம்பு கேக்குறாமாரி  (ஆன- யானை)

6) கடல் வத்தி மீன் புடிக்கிறதுக்குள்ளார கொடல் வத்தி மீன் செத்திருமாட்ருக்கூ?

7) சுக்குக்கு மிஞ்சுன மருந்துமில்ல... சுப்ரமணியனுக்கு மிஞ்சுன கடவுளுமில்ல.

8) பாடிப்பாடி குத்துனாலும் பதரு அரிசியாயிருமா?

9) பாம்பு திங்கற ஊருக்குப்போனாலும் நடுத்துண்டு நம்புளுக்குங்கோணும் (நம்புளுக்கு - நமக்கு)

10) செக்குக்கும் நாய்த்தலைக்கும் செரியாப்பொருந்துன மாதிரி...

11) நரிக்கு நாட்டாமை குடுத்தா, கெடைக்கு ஒரு ஆடு கேக்குமாம்..  

12) கறையானுக்கு றக்க மொளச்சா, பறந்து பறந்தேதான் சாவும்

13) ஒரு மொழ  நாய்க்கு ஒன்ற மொழ வாலு என்னத்துக்கு

14) ஒலைக்கிற நாயும் வேட்டைக்காகாது. அனத்துற ஆம்பளையும் பண்ணையத்துக்காவாது. (அனத்துற - அனர்த்திக் கொண்டிருக்கும்)

15) நாலு வீட்டு கண்ணாலம். நாய்க்கு அங்கிட்டு ஓட்டம் இங்கிட்டு ஓட்டம்.

16) மொசப் புடிக்கிற நாய, மூஞ்சியப் பார்த்தா தெரியாதா? (மொச- முயல்)

17) நக்குற நாயிக்கு செக்குன்னு தெரியுமா? செவலிங்கம்னு தெரியுமா?

18) நாட்டாம ஊட்டு நாயி சந்தனக்கட்டிலு ஏறுதேன்னு வண்ணான் ஊட்டு நாய் வெள்ளாவில ஏறுச்சாம்!

19) சாமத்துல கத்துதாம் நாயி... அத என்னான்னு கேட்டுச்சாம் பேயி...

20) குருட்டுப் பூனை விட்டத்தில் பாஞ்ச மாதிரி

21) கடப்பாரையே காத்துல பறக்குது, எச்ச எல எந்த மூல?

22) குத்துக்கல்ல்லுக்கு என்ன வெயிலா மழயா?

23) போரோட திங்கற மாட்டுக்கு பொறுக்கிப்போட்டா பத்துமா?

24) சொப்பனத்துல கண்ட அரிசி, சோத்துக்கு ஆகுமா?

25) வெங்கலப்பூட்ட ஒடச்சு வெளக்கமாத்த திருடுன கதயா..

26) கல்லோட எடருனாலும் கணக்கனோட எடறக்கூடாது...

27) புண்ணுக்கு மருந்து கட்டலாம்.. புடிவாதத்துக்கு மருந்து கட்ட முடியுமா??

28) விஷங்கொடுத்தும் கொல்லலாம்...வெல்லங் கொடுத்தும் கொல்லலாம்

29) பண்ணாடி படியில ஏய்ச்சா,ஆளு நடையில ஏய்க்குற காலமிதாமா!!

30) வெறும் புருக்கு வெளக்கெண்ணய்க்கு கேடு

31) சுந்தரி புருஷன் எதுல போனாண்டி? சோளத்தரிசில ஓட்டை போட்டு அதுல போனாண்டி...

32) கொடுக்கிறதையும் கொடுத்துட்டு குருட்டுத் தேவுடியாகிட்ட போன கணக்கா...   


Adults only தொகுப்பு ஒன்றும் தயார் செய்யலாம். அதைத் தனியாகப் பதிகிறேன்.

‘நம்ம ஊர் சொலவடைகள்’ குழும உறுப்பினர்களுக்கு நன்றி உரித்தாகுக. குறிப்பாக பழமைபேசிக்கும், முரளிக்கும். அவர்கள்தான் பெரும்பாலான சொலவடைகளைப் பதிவு செய்தவர்கள். இணைப்பில் இதே குழுமத்தில் பதிவிடப்பட்ட சொலவடைகளின் முந்தைய தொகுப்பு இருக்கிறது.

Mar 30, 2008

நடக்க மாட்டாதவன் சித்தப்பன் வூட்டுல பொண்ணு கட்டுன மாதிரி

கொங்கு நாட்டுச் சொலவடைகள்-I

இந்தச் சொலவடைகள் கொங்குப் பகுதியில் என் அமத்தா தலைமுறையால் இயல்பாக உபயோகப்படுத்தப்பட்டு அடுத்த தலைமுறையில் அருகிப் போனவற்றில் சில.

தற்சமயம் இருபத்தைந்து என்னால் பதிவு செய்ய முடிந்தது. உங்களுக்கு தெரியுமெனில் பதிவு செய்யவும்.

இவற்றில் இருக்கும் இரட்டை அர்த்தங்களை உங்களால் பட்டியலிட முடிந்தாலும் நல்லது.

1. ஆளை நம்புனா அத்துவானம்;மகனை நம்புனா மத்தியானம்
2. சோத்துக்கு இருந்தா பாப்பான்- சொன்ன படியெல்லாம் கேட்பான்.
3. வெண்ணெய் உருண்டு வரையில தாளி உடைஞ்ச கதையாட்டம்.
4. நடக்க மாட்டாதவன் சித்தப்பன் வூட்டுல பொண்ணு கட்டுன மாதிரி
5. ஆறடி நீட்டம்ன்னு ஆட்டம் போட்டானாமா;அவுத்துப் பாத்தா வேப்பிலையாமா
6. நாடறிஞ்ச பாப்பானுக்கு பூணூல் ஒரு கேடா?
7. சோறு முத்துனா சோமாரம்; அரிசி முத்துனா அமாவாசை
8. சுப்பி கிட்ட இருக்குது சூட்சுமம்; சுண்ணாம்பு கிட்ட இருக்குதாமா வேஷம்
9. பிலுக்குதா பிலுக்குதாம் பித்தளை; காசுக்கு ரெண்டு கத்தாழை
10. பண்ணாடி படியில் ஏய்ச்சா,ஆளு நடையில ஏய்க்குறான்
11. உங்கற நாளுல ஊருக்குப் போயி; திங்குற நாளுல தேருக்குப் போன கதை
12. அரைக்காசுக்கு பரதேசம் போகதடா
13. சொம்பும் போச்சுடா கோயிந்தா
14. சுந்தரிக்கு வாக்கப்பட்டவன் எதுல போறாண்டி; சோள அரிசியில பொத்தல் பண்ணி அதுல போறாண்டி
15. வாழமாட்டாதவன் வவானி மேல போறானாம்மா; பொழக்கமாட்டாதவன் பொதன்கெழம சந்தை மேல போறானாமா
16. பொழச்சது பொத்தியாம்பாளையம்; வாழ்ந்தது வள்ளியாம்பாளையம்
17. வெட்டிலைன்னா எங்ககப்பன் பட்டிலன்னு
18. ஏந்தி ஏந்தி வளத்துனாலும் இளையகுடி புள்ள; தாங்கி தாங்கி வளத்துனாலும் தங்கச்சி புள்ள
19. முள்ளிக்கா சோத்துக்கு மூலை ஒண்டி நிக்குறது; கள்ளிக்கா சோத்துக்கு கதவ ஒண்டி நிக்குறது.
20. வாழ்ந்தவன் கெட்டா வல்லி ஓட்டுக்கு ஆக மாட்டான்; பொழச்சவன் கெட்டா பொரி ஓட்டுக்கு ஆவ மாட்டான்
21. பந்தியில உட்காராதீன்னு சொன்னா எலைல ஓட்டைன்னானாமா
22. பருப்பு பதம் கெட்டதாமா; பண்ணாடி சீர் கெட்டதாமா
23. பங்காளி வூட்டுல தீ புடிச்சா குந்தாணி எடுத்து தண்ணி ஊத்து.
24. விடிய விடிய வேங்காத்தா; விடிஞ்சு எந்திரிச்சு தூங்காத்தா.
25. கடஞ்சு எடுத்த பாலுல கொடஞ்சு எடுத்த வெண்ணெய்.

Dec 13, 2006

கரட்டடிபாளையம்

கரடு(சிறு குன்று)+அடி+பாளையம். வெள்ளிமலைக் கரடுக்கு கீழாக இருக்கும் ஊர். வெள்ளிமலைக் கரடு இப்பொழுது கோபி கலைக் கல்லூரி ஆகிவிட்டது.

ஒரு ஊர் பட்டணமாகவும் இல்லாமல், பட்டிக்காடாகவும் இல்லாமலிருப்பது சுகானுபவம். என் ஊர் அப்படித்தான். கோபியிலிருந்து சத்தியமங்கலம் நோக்கி வந்தால் கிராமப்புறத்தின் எல்லை எங்கள் ஊரிலிருந்து ஆரம்பிக்கும்.

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

மாரியாத்தா கோயில் மட்டும் ஏழு இருக்கு. ஒவ்வொரு சாதி/பகுதிக்கும் ஒவ்வொன்று என. மழை வேண்டிய அவசியமே இல்லை. பவானி ஆற்றின் பாசனத்தை வைத்துதான் ஊரின் பொழப்பு ஓடுகிறது. மழை தேவையில்லாத ஊருக்குள் எதற்கு ஏழு மாரியாத்தா என்று தெரியவில்லை.

அந்தக் காலத்தில் ஆண்டு முழுவதும் சேர்த்த காசை எப்படி செலவழிப்பது எனத் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் இவர்கள் கம்பம் வெட்டி வருவதாகச் சொல்லி வருடம் தவறாமல் ஏழு மரத்தை வெட்டுகிறார்கள். இருக்கட்டுமே. எவ்வளவு சந்தோஷம் அந்த ஏழு நாட்களும்? மரத்திற்கா பஞ்சம்?

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

வயலில் நெல், மஞ்சள் அல்லது வாழை பயிரிடுவார்கள். எருமை மாடு மேய்க்க ஆட்கள் இருப்பார்கள். ஊரில் கவுண்டர்கள் அதிகம். இப்பொழுது இங்கும் Floating Population வந்து ஊர் பிய்ந்து தொங்க ஆரம்பிக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்னர் கவுண்டர்கள் என்றால் படு ஜம்பப் பேர்வழியாக இருப்பார்கள். இரட்டை மாட்டு வண்டி, வேலைக்காரன், பண்ணையத்தாளு, சமையல்காரன் என.

ஒரீரு வருடங்களுக்கு முன்னர், பவானி கண்ட வறட்சியில் அரண்டு போன கவுண்டர்களின் வாரிசுகள் தாங்களே மாடு ஓட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.

நரம்பு கட்டி கவுண்டர்கள், வன்னியர், தாழ்த்தப்பட்டோர் என ஊருக்குள் கலந்து இருக்கிறார்கள்.

அட இந்த புராணம் எல்லாம் எதுக்குங்க? படத்தைப் பாருங்க! எப்படி நம்ம ஊரு? எனக்கே பெருமையா இருக்குங்க. :)

இந்தப்படங்கள் எல்லாமே கரட்டடிபாளையம் மட்டும்தான்.

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

நண்பர் பிரதீப் அனுப்பினார்.

Nov 22, 2006

கொங்குச் சொற்கள்: நான்காம் பட்டியல்

கொங்கு நாட்டு மொழிவழக்கின் நான்காவது பட்டியல் இது. சொற்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.

இந்த வாரம் ஊருக்குச் செல்கிறேன். கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களுக்குப் பிறகு. :) சேகரித்து வர இயலும் என எண்ணுகிறேன். 'சேகரித்து' என்பதனைக் காட்டிலும் 'நினைவு படுத்திக் கொண்டு வருதல்' என்பது சரியாக இருக்கும்.

நான் பேசிய சொற்கள், என்னிடம் புழங்கிய மொழியை தொலைத்துக் கொண்டிருக்கிறேன். மீட்டெடுக்க வேண்டும்.

1. மொனவாத - முணுமுணுக்காத

2. மூஞ்சு போச்சு - தீர்ந்து விட்டது.

3. சாடை பேசுறான் - மறைமுகமாக தாக்கிப் பேசுகிறான்
நமக்கு புரியற மாதிரி சொல்லணும்னா உள்குத்து :)

4. மம்மானையா - மென்மேலும்

5. இண்டம் புடிச்சவன் - கஞ்சன்

6. பொங்கான் பொசுக்கான் - வலிமையற்று
அவனே பாவம்! பொங்கான் பொசுக்கான்னு இருக்குறான். அவனப் போயி ஏண்டா நோண்டுற?

7. மொன்னை - முனை மழுங்கியது/ ரோசம் இல்லாதவன்.

8. சுளுவா - சுலபமாக

9. வெட்ருப்பு - கடுகடுப்பு
அந்தப் பொம்பள ரொம்ப வெட்ருப்பானவ. பார்த்துப் பேசிட்டு வா.

10. சிலுவாடு - சிறு சேமிப்பு
உங்க அமத்தா பூ வித்த காச சிலுவாடு சேத்தியே ஒரு வெள்ளாடு வாங்கிருச்சு.

11. தலைக்கு வாத்துடு - தலையோடு சேர்த்துக் குளி

12. மேலுக்கு வாத்துட்டு வா - உடம்புக்கு மட்டும் குளிச்சுட்டு வா.
டேய் நோம்பி நாளும் அதுவுமா என்னடா மேலுக்கு மட்டும் வாத்துட்டு வந்து நிக்குற? போயி தலைக்கு வாத்துட்டு வா.

13. மாதாரி - சக்கிலி.

14. வெறுமானம் - அமாவாசைக்கும் மூன்றாம் பிறைக்கும் இடைப்பட்ட நாள்.
வெறும் வானம்.
அமாவாசையை, நெறஞ்ச அமாவாசை என்று குறிப்பிடுவார்கள். வெறுமானம் அன்று எந்த காரியமும் செய்யமாட்டார்கள்.

15. புண்ணியார்ச்சனை - புதுமனை புகுவிழா

16. கருப்பு - கருமாதி

17. அடப்பு - இறந்த நேரத்தை ஜோஸியர்களிடம் கொடுத்துப் பார்ப்பார்கள். சில குறிப்பிட்ட நேரத்தில் இறந்திருந்தால், சில தினங்களுக்கு அடப்பு வைக்க வேண்டும் என்று சொல்வார். அந்த நாட்களுக்கு தொடர்ச்சியாக விளக்கு எரிந்து கொண்டிருக்கும். மனைவி இருந்தால் வெளியே வராமல் வீட்டிலேயே அடைந்து இருப்பார். இன்னு ம் பல சடங்குகளும் இருக்கும்.

18. ஒளப்பிக்காத - குழப்பிக்காத.
கண்ட கண்டதுக்கெல்லாம் மனசப் போட்டு ஒளப்பிக்காத. நடக்குற போது பாத்துக்கலாம்.

19. மதுக்கான் - சுறுசுறுப்பற்றவன்

20. சோப்பலாங்கி - சோம்பேறி/ சுணங்கி இருப்பவன்

21. நோக்காடு - நோய்
அவனுக்கென்ன நோக்காடோ தெரியலை. இன்னைக்கு வரக் காணோம்.

22. கதுமை - கூர்மை
கத்தி பயங்கரக் கதுமை.

23. கட்டுச்சோறு - புளி சாதம், எலுமிச்சை சாதம் போன்ற வகையறா.
பெண் கர்ப்பமாக இருக்கும் போது ஐந்து அல்லது ஏழு வகையான சோறு செய்து விருந்து(வளை காப்பு) நடக்கும். அவ்விருந்தின் பெயரே கட்டுச் சோத்து விருந்துதான்.

24. பலகாரம் - பெயரில் காரம் மட்டும் இருந்தாலும் பலவகையான இனிப்பும், காரமும் கலந்த கலவை.

25. ஒடக்கா - ஓணான்

26. தவுட்டு பலாக்கா - சீதாப்பழம்

27. அழுகுவண்ணாங்குருவி - மைனா
அழகு வண்ணக் குருவி தான் அழுகுவண்ணாங்குருவி ஆகிவிட்டது என்று யாரோ சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

28. தோப்பட்டை - பெரியது
உன்ர சட்டை என்னடா தோப்பட்டையாட்ட இருக்குது? கெழவன் சட்டை போட்ட மாதிரி.

29. சால் - தண்ணீர் பிடித்து வைக்கும் பாத்திரம். அண்டா மாதிரியும் இல்லாமல், குடத்தை விட சற்றே பெரியதாக இருக்கும்.

30. நாளாண்ணிக்கு - நாளை மறுநாள்.

31. சோமாரம் - திங்கட்கிழமை.

32. வாதிக்காத - வதைக்காதே.

Oct 16, 2006

கொங்கு நாட்டுச் சொற்கள் - மூன்றாம் பாகம்

சொற்கள் ஊற்றினை போல சுரந்து கொண்டுதான் இருக்கின்றன. யோசிப்பதற்கான நேரமும் மனநிலையும்தான் வருவதில்லை. பின்னூட்டங்கள் வாயிலாகவும், தனி மின்னஞ்சல் மூலமாகவும் இப்பதிவினை குறிப்பிடும் நண்பர்களின் பங்களிப்பு தொடர்ந்து உற்சாகமூட்டுவதாக இருக்கின்றது.

இந்தச் சொற்களில் பெரும்பாலானவை என் ஆயாவிடமிருந்து நான் கற்றுக் கொண்டவை. நான் பார்த்த, பார்க்கப் போகும் மனிதர்களுல், ஆயாதான் இந்தச் சொற்களை இறுதியாக பயன்படுத்தியவரோ என்ற பதட்டமும் ஒட்டிக் கொள்கிறது. கிழவி தன்னோடு சேர்த்து புதைத்துக் கொண்டதோ என்ற சந்தேகமும் வருகிறது.

இன்னமும் என் மண்ணில் புழங்கிக் கொண்டுதான் இருக்கும் என்றாலும், எனக்கு இவற்றோடான அறிமுகம் அருகிக் கொண்டே வருவதும் இப்படி எண்ணக் காரணமாக இருக்கலாம்.

முத்து(தமிழினி) சில சொற்களைத் தந்து அடுத்த பட்டியலில் இணைத்துக் கொள் என்று சொன்னார். அவையும் இணைக்கப் பட்டிருக்கின்றன.

1. வங்கு - பொந்து, சந்து

2. கம்மனாட்டி - முட்டாள், மடையன்

3. உருமாளை - தலைப்பாகை

4. சிம்மாடு - தலைப்பாகை.
தலைப்பாகையில் இருந்து சற்று வேறுபட்டது. ஏதேனும் பொருளை தலையில் சுமக்கும்
போது நழுவி விடாமல் இருப்பதற்காக துணியைச் சுற்றி வைப்பது.

5. கருப்பு - கருமாதி(ஈமச்சடங்கு)

6. அவுசாரி - விபச்சாரி

7. கட்டுக்கொலை - தன் சாதியைச் சார்ந்த நிகழ்வுகளில் பங்கு பெறும் மற்ற சாதிகள்.
உதாரணமாக, கவுண்டர் இனத்தைச் சார்ந்தவர்கள் நாவிதர்கள், குயவர்கள்
போன்றவர்களை கட்டுக்கொலைக்காரர்கள் என்பார்கள்.
தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்தவர்கள்(சக்கிலியர், பறையர்) இந்தக் கட்டுக்
கொலைக்காரர்கள் என்ற சொல்லுக்குள் வரமாட்டார்கள்.

8. ஓரியாட்டம் -சண்டை
சொற்றொடர்: அவிய பங்காளிகளுக்குள்ள எப்பவுமே ஓரியாட்டம்தான்.

9. மிஞ்சி - மெட்டி

10. பொல்லி - பொய்.

11. அக்கட்ட - அந்தப் பக்கம்.
அடுப்புக்கிட்ட நிக்காத. தீ மூஞ்சிலையே அடிக்குது. அக்கட்ட போடா.

12. இக்கட்ட - இந்தப் பக்கம்.
இந்த வேச காலத்துல அக்கட்ட இக்கட்ட நகர முடியல.

13. வேச காலம் - கோடை காலம்

14. ராவுடி - டார்ச்சர்
அந்தப் பையன் செம ராவுடி புடிச்சவன்.

15. ராங்கு - தவறாக நடத்தல்.
ஏண்டா போலீஸ்காரங்கிட்ட ராங்கு பண்ணுனா அப்பாம என்ன முத்தமா கொடுப்பான்?

16. அப்பு - அறை.
அவள ஓங்கி ஒரு அப்பு அப்புடா. மொகற கட்ட பேந்து போற மாதிரி.

17. மொகற கட்ட - முகம்

18. செம்புலிகுட்டி - செம்மறியாட்டுக்குட்டி

19. அக்கப்போரு - அட்டகாசம்
இந்த பிலாக் எழுதறவிய அக்கப்போரு தாங்க முடியலைடா. :)

20. பொடனி - தலையின் பின்புறம்

21. முசுவு - கவனமாக/ குறிக்கோளுடன்
குடுத்த வேலைய ஒரே முசுவுல செஞ்சு முடிச்சாதான் உங்கப்பனுக்கு தூக்கமே வரும்.

22. வல்லம் - மூன்று அல்லது நாலு படி அளப்பதற்கான அளவை. (கிட்டத்தட்ட 3.5
கிலோகிராம் வரும்)

23. அலும்பு - அலம்பல்.

24. அரமாலும் - ரொம்பவும்
அரமாலும் அலும்பு பண்ணுறாடா அவ.

25. திலுப்பாமாரி - மேனா மினுக்கி

26. அட்டாரி - பரண்.

27. புழுதண்ணி - இரவில் மீதியான சோற்றில் நீர் ஊற்றி வைப்பார்கள். விடிந்த பின் அந்த
நீர் புழுதண்ணி.

28. மக்காநாளு - அடுத்த நாள்

29. சீராட்டு - கோபம்.
கட்டிக் கொடுத்து மூணுமாசம் கூட ஆகுல. அதுக்குள்ள புள்ள சீராடிட்டு வந்துடுச்சு.

30. அன்னாடும்- தினமும்

31. பால்டாயில் - பாலிடால் என்ற விவசாய பூச்சிக் கொல்லி.
யார் விஷம் குடித்தாலும் இதைத்தான் சொல்லுவார்கள்

32. ஒரு ஒலவு(உழவு) மல - ('ழ'கர உச்சரிப்பு இருக்காது)மழை பெய்யும் அளவை
குறிப்பது.
ஆட்டுக்கல் அல்லது உரலில் இருக்கும் குழி நிரம்பினால் ஒரு உழவிற்குத்
தேவையான அளவு மழை பெய்திருக்கிறது என்று அனுமானம் செய்து கொள்வார்கள்.

33.அகராதி புடிச்சவன் - விதண்டாவாதம்/குறும்பு பிடித்தவன்.

34. தாரை - பாதை
எறும்பு தாரை- எறும்பு ஊர்ந்த பாதை.

Oct 9, 2006

கொங்கு தேசத்துச் சொலவடைகள்

இவற்றைப் பழமொழிகள் என்னும் வட்டத்துக்குள் கொண்டுவர முடியும் என நான் நினைக்கவில்லை. இச்சொலவடைகள் பெரும்பாலானவை ஏதேனும் ஒரு நாட்டுப்புறக் கதையின் எச்சமாக தொக்கி நிற்கின்றன. முதலில் கதைகள் அழிந்துவிட மிச்சமான வாக்கியங்கள் மட்டுமே 'பட்டிக் காட்டு' ஆட்களோடு புழங்கித் திரிகின்றன.


1. அறுக்கமாட்டாதவன் இடுப்பைச் சுத்தி அம்பதெட்டு அருவாளு.

2. பழைய குருடி கதவத் தெறடின்னு.
தவறாக நடந்து மாற்றி நன்றாக செய்துவிட்டு, மீண்டும் தவறாக்கும் போது "பழைய குருடி
கதவத் தெறடிங்குற கதை ஆயிருச்சு"என்று சொல்வார்கள்.

3. மொசப் புடிக்கிற நாய் மூஞ்சிய பார்த்தா தெரியாதா?

4. நான் புடிச்ச மொசலுக்கு மூணு காலுங்காத.

5. நாய்க்கு பேரு முத்துமாலை.
பொருத்தமில்லாத ஒன்று என்றால் எள்ளலாக "நாய்க்கு பேரு முத்துமாலையாமா"
என்பார்கள்.

6. செத்தவன் கையில வெத்தல பாக்கு கொடுத்த மாதிரி

7. ஆனதுக்கு சொன்னா அறிவுண்டு நெனவுண்டு. ஆகாவழிக்குச் சொன்னா இல்லிடத்தையும்
தோத்துட்டுப் போக வேண்டியதுதான்.
அறிவுரை கூட உருப்பட வாய்ப்பிருப்பவனுக்குத்தான் கொடுக்க வேண்டும்.

8. ஆடமாட்டாதவன் நெலம் கோணைன்னு சொன்ன கணக்கா இருக்குது.
கோணை - கோணல்

9. நாயக் குளிப்பாட்டி நடுவூட்டுல வெச்சாலும் நாக்கத் தொங்கக் போட்டுட்டு
இட்டாரிக்குத்தான் போகும்.

10. கெழவன் கோமணம் கட்டுன மாதிரி

11. அழுதழுது பெத்தாலும் அவதான் பெக்கோணும்.
பெக்கோணும் - குழந்தை பெறுதல்.

12. பொழப்பு கெட்ட நாசுவன் பொண்டாட்டி தலைய செரச்சானாம்.

13. பொழக்கிற புள்ளைய பேல உட்டு பார்த்தா தெரியாதா?

14. எல்லோரும் சிரிச்சாங்கன்னு பூனை பொடக்காலில போயி சிரிச்சுதாம்.

15. மொளச்சு மூணு எலை உடுல.
வயதில் சின்னவர்கள் ஏதேனும் பிடிக்காத காரியத்தைச் செய்யும் போது உபயோகிப்பது.

16. எங்கயோ போற மாரியாத்தா எம் மேல வந்து ஏறாத்தாங்குற கதையா

17. நட்டாத்துக்கு போனாலும் நாய்க்குச் சலக்குத் தண்ணிதான்.
நடு ஆற்றுக்குச் சென்றாலும் நாய் 'சலக் சலக்' என்று நக்கித்தான் குடிக்கும்.
என்னதான் புகழ், பணம் கிடைத்தாலும் அவனவன் அவனவன் தகுதிக்கு ஏற்பதான்
நடப்பார்கள்.

18. புது வட்டலக் கண்டா நாய் எட்டு வட்டல் தண்ணி குடிக்குமாம்.
வட்டல் - தட்டம்.

Oct 3, 2006

கொங்கு வட்டார வழக்கு - II

கடந்த பதிவில், கொங்கு வட்டார வழக்கில் உள்ள சில சொற்களைப் பதிவு செய்தால், அதைப் போல இரண்டு மடங்கு சொற்களை நண்பர்கள் கொடுத்தார்கள். உற்சாகத்தில் மேலும் யோசிக்க ஆரம்பித்தால் என் ஊரை விட்டு வெளிவந்த இந்த ஆறு வருடத்தில் பல சொற்கள் என்னை விட்டு வெளியே சென்றிருக்கின்றன. சில சொற்களின் உபயோகம் மிகக் குறைந்திருக்கிறது.

நாகரீகம் என்று கருதி என் முன்னோர் கொடுத்தவற்றை அழித்து வந்திருக்கிறேன். இன்னமும் என் நினைவில் இருக்கும் மிச்ச மீதி சொற்களை எல்லாம் ஏதாவதொரு இடத்தில் பதிவு செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கிறது.

நண்பர் ஒருவரிடம் சொன்னதற்கு, கொங்கு வட்டார சொற்களை மதுரை, சென்னையை சார்ந்தவர்கள் படித்தால் என்ன வரப்போகிறது என்றார். அவரின் இந்த வினாவுக்கு என்னிடம் சரியான பதிலில்லை. இந்த கேள்வி என் வேகத்தை குறைக்கிறதோ என்று தோன்றுகிறது.

செய்வதைச் செய்யலாம்.

1.மோனக்காரர் - விவசாயத்தொழிலுக்கு கூலி ஆட்களை அழைத்து வருபவர். கிட்டத்தட்ட மேஸ்திரி போல்.

2. பண்ணையத்தாளு - ஒரு வருடத்திற்கு இவ்வளவு பணம் என்று பேசி முடிவு செய்திருப்பார்கள். அந்த ஆள் அந்த வருடம் முழுவதும் அந்த விவசாயியிடம் பணியாற்ற வேண்டும். எனக்குத் தெரிந்தே பத்து வருடங்களுக்கு முன்பு வரை கூட ஒரு விவசாயியிடம் ஒரு ஆள் தன் வாழ்வின் கடைசிக் கட்டம் வரை இருப்பார். இப்பொழுது இது மிக அரிதாகிக் கொண்டிருக்கிறது.

3. முறைமைக்காரன் - முறைக்கு சொந்தக் காரன்
உதாரணமாக், மாரியம்மன் கோவிலில் மாவிளக்கு பூஜையின் போது கிடாவெட்டும் உரிமை ஒருவருக்கு கொடுக்கப்பட்டால் அவர் அந்த நிகழ்வின் முறைமைக்காரர்.

4. தண்ணிவாக்கி - வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சுபவர். வயல்களின் உரிமையாளர்கள் கூடி, நீர் பாய்ச்சவென ஒருவரை நியமித்திருப்பர். அவர்தான் சரிசமமாக, கவனமாக தண்ணீர் பாய்ச்சுவார். ஒவ்வொரு போகமும் முடிந்த பின் குறிப்பிட்ட பொதி நெல் வாங்கிக் கொள்வார்.

5. பொதி - மூன்று அல்லது நான்கு மூட்டை நெல் ஒரு பொதி எனப்படும்.

6. கருக்காய் - குறையுள்ள நெல்மணிகள்.

7. கொறத்திக் குஞ்சு - இளம் தவளை. (தலைப்பிரட்டை)
நீர் நிலைகளில் கிட்டத்தட்ட மீன் குஞ்சு போல் இருக்கும். எளிதில் சிக்கிவிடுமாகையால் சிறுவர்கள் இதனைப்பிடித்து வைத்து மீன் என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

8. ஒறட்டாங்கை - இடது கை. வலது கையை, சோத்தாங்கை என்பார்கள்.

9. ரோட்டா - நீர்க் குடுவை (டம்ளர்) (Lota என்னும் ஆங்கிலச் சொல்)

10. அங்கராக்கு - சட்டை

11. பாப்பராண்டி - அரணை. (ஊர்வன வகையினைச் சார்ந்தது.)

12. செம்பூத்து - செண்பகப் பறவை

13. கழுமுண்டராயன் -ஆஜானுபாகுவான மனிதன்.
அவனுக்கென்ன கழுமுண்டராயன் மாதிரி இருக்கறான் என்று சொல்வது வழக்கு.

14. புறடை - புரூடா (பொய்)
அங்க போறான் பாரு. அந்த ஆளு செரியான புறட மன்னண்டா.

15. தெல்லவாரி, தேசாபோகம் - ஊதாரித்தனமானவன்.
சொற்றொடர்: இவுனுக்கு தெல்லவாரி, தேசாபோகத்துக் கூடதான் சாவுகாசமே.

16. சாவுகாசம் - சகவாசம்

17. ரவைக்கு - இரவுக்கு
சொற்றொடர்: ரவைக்கு சித்தப்பன காவலுக்கு போவச் சொல்லு.

18. போத்தாலை - புகையிலை.

19. கொழுந்தனார் - கணவனின் தம்பி

20. கொழுந்தியா - மனைவியின் தங்கை

21. நங்கையா - மனைவியின் அக்கா.

22. பொன்னாம்பூச்சி - பொன்வண்டு

23. தொருசு - ஊதாரியாக, பொறுப்பற்று சுற்றுதலைக் குறிக்கும் (ஆண்பால், பெண்பால் வேறுபாடற்றது).
நான் "கடைக்கு போயிட்டு வர்றேன்" என்று சொன்னால், என் அம்மா நக்கலாக, "செருப்புத் தொட்டுட்டு தொருசு கிளம்பிடுச்சு பாரு" என்பார்கள்.

24. தொண்டு - கொங்குப் பகுதியில் குறிப்பாக கோபி வட்டாரத்தில் தொண்டு என்றால், பல பேருடன் தகாத உறவு கொண்டிருப்பதைக் குறிக்கும். (ஆண்பால், பெண்பால் வேறுபாடற்றது)

25. மொளைக்க போடுதல் - முளைக்கப் போடுதல். தொலைத்து விடுதல் என்னும் பொருளில் எடுத்தாளப்படும்.
சொற்றொடர்: அவன்கிட்ட போயி கொடுத்த பாரு. அவன் மொளைக்க போட்டுறுவான்னு உனக்குத் தெரியாதா?

26. கொட்டை போட்டுட்டாரு - இறந்து விட்டார்.
அந்த மனுஷன் எப்பவோ கொட்டை போட்டுட்டாரு.

27. நலங்கு - உடல்நலமற்றுப் போதல்.(குழந்தைகளுக்கு மட்டுமே இச்சொல்லை உபயோகப்படுத்துவார்கள்)
குழந்தை நலங்கி போச்சு

28. கதக்கு - குழந்தை வாந்தி எடுத்தல்
குழந்தை கதக்கி வெச்சுடுச்சு.

29. மோடம், கருக்கல் - மேகம்

30. கும்மாயம் - சமையலறையில் உபயோகப்படுத்தும் கருவி (மத்து)

31. சடஞ்சு - சோர்வடைந்து
மனுஷன் சடஞ்சு போயி வந்தா நச்சாம இருக்க மாட்டயா?

32. நேக்கு - கவனமாக,சரியாக
நேக்கு பாத்து ஒரே போடா போட்டேன். வக்காரோலுது ரெண்டா போயிடுச்சு

33. எச்சா - அதிகமாக
சோறு கொஞ்சமா போனா கூட போச்சாது. பையனுக்கு கறி எச்சா வை.

34. நேசர் பாரு - உளவு, உண்மை நிலை
எதுக்கால ஊட்ல(எதிர் வீடு) போயி சண்டையான்னு நேசர் பாத்துட்டு வா. போ

35. பூலவாக்கு -உண்மை நிலை.
டேய் சும்மா பேசாத. கடன் வாங்கீட்டு போனா எப்படித் தருவ? உன்ற பூல வாக்கு எனக்கு தெரியாதா?

36. பண்டம் பாடி - கால்நடைகள்

37. பீத்து - பெருமை
அவ பையன் பத்தாவதுல நெறயா மார்க்கு வாங்கி தள்ளிட்டானாம். பீத்து பீத்துன்னு பீத்தறாப்பா.

38. பீத்தை - பழைய
அந்த வண்டியவா வாங்குற? அது பீத்த வண்டி டா.

38. சீக்கு- நோய்

39. பிலுக்கு - பந்தா.
அவிய அமத்தா பப்ஸ் வாங்கிட்டு வந்திருக்குதாம். ஒரே பிலுக்கு அவளுக்கு.

40. கொக்காணி - தனக்கு மட்டும் ஒரு பொருள் கிடைக்குமிடத்து கிடைக்காதவரைப் பார்த்து பழிப்பாக செய்யப்படும் செய்கை.

41. பொறந்தவன்/ பொறந்தவள் - சகோதரன்/சகோதரி
என்ன சுப்பாயா...பொறந்தவனூட்டுக்கு கெளம்பீட்டாப்ல இருக்குது?

42. தொண்டுபட்டி - கால்நடைகளை கட்டி வைக்கும் இடம்.

Sep 19, 2006

கொங்கு வட்டார வழக்கு

கொங்கு நாட்டு வட்டார வழக்கில் புழங்கும் சில சொற்களின் தொகுப்பு இது.

கொங்கு நாட்டில்,'ழ'கர உச்சரிப்பை கண்டுபிடிப்பது மிகக் கடினம்.

1. பொழுதோட - மாலை நேரத்தில் (பொழுதோட அந்த வேலையை முடிக்கிறேன்)

2. கோழி கூப்பிட - அதிகாலை நேரம்

3. பொறகால - பின்புறம் (ஊட்டுக்கு பொற்கால பொடக்காலி இருக்குது -வீட்டின் பின்புறம் காலிபுறம் இருக்கிறது.)

4. பொடக்காலி- புறம் காலி (புறம் காலி என்பது காலி புறத்தின் முற்றுப் போலி) [காலி இடம் = கொல்லைப் புறம்]

5. அம்மணி - பெண்மணியைக் குறிக்கப் பயன்படும். பொதுவாக சகோதரி உறவுமுறை.

6. வெடுக்குனு இருக்குது- சுகமாக இருக்கிறது. வெந்தண்ணில தண்ணி வார்த்தா வெடுக்குனு இருக்கும் (சுடு நீரில் குளித்தால் சுகமாக இருக்கும்)
வெடுக்குன்னு - விரைவாக (என்ற பேனாவ வெடுக்குன்னு புடுங்கிட்டான்- என் எழுதுகோலை சட்டென்று பறித்துவிட்டான்)

7. என்றது - என்னுடையது.

8. உன்றது - உன்னுடையது.

9. அப்பச்சி- தாய்வழி தாத்தா

10. அப்பாரு- தந்தை வழி தாத்தா.

11. அமத்தா, அம்மச்சி, அம்மாயி- தாய்வழி பாட்டி

12. அப்பத்தா, ஆயா- தந்தைவழி பாட்டி

13. விசுக்குன்னு - திடீரென்று (அவன் விசுக்குனு கெளம்பிட்டான். -அவன் திடீரென்று கிளம்பிவிட்டான்)

14. நடவை - வெளிப்புறக் கதவு

15. வட்டல்- தட்டு

16. நருவசா- முழுவதுமாக

17. ஸோலி- பணி (கானங்காத்தால கடை கடையா என்ன ஸோலி உனக்கு?)

18. மடார் - உடனடியாக (ஒரு வேலையச் சொன்னா மடார்ன்னு முடிச்சுட்டு வேற ஸோலியப் பாரு)

19. மோந்துட்டு - மொண்டு (குடுவையில் நீர் மொண்டு வருதல்)

20. ஒட்டுக்கா - இணைந்து (ரெண்டு பேரும் ஒட்டுக்கா போயிட்டு வாங்க - இருவரும் இணைந்து சென்று வாருங்கள்)

21. மொளவு சாறு- மிளகு சாறு என்பதன் மாறுபாடு (அசைவக் குழம்பைக் குறிக்கப் பயன்படுத்தப் படுகிறது)

22. எகத்தாளம் - திமிரு/ நக்கல் (பெரியவங்க கிட்ட எகத்தாளமா பேசாதே)

23. இட்டாரி/ இட்டேரி - தெரு. (கிராமப்புறங்களில் குறிப்பாக மண் சாலை)

24. அவுறு - அவிழ்த்தல் (கயிற்றை அவிழ்த்து விடு)

25. அவத்தைக்கு - அங்கே

26. இவத்தைக்கு - இங்கே

27. சலவாதி - மலம்.

28. போச்சாது- "பரவாயில்லை விடு" என்பது போல (ஏதாவது பொருள் தொலைந்து விடும் பட்சத்தில் போச்சாது விடு என்று ஆறுதல் படுத்துவார்கள். போய்ச் சாகிறது என்ற சொல் இப்படி மாறி இருக்கலாம் என்பது என் தீர்மானம்)

29. போசி- பாத்திரம்

30. அலுங்காம -அசைக்காமல் (போசிய அலுங்காம எடுத்துட்டு வா - பாத்திரத்தை அசைக்காமல் எடுத்து வா)

31. சிந்திடாம - உதிராமல்/கீழே கொட்டாமல் (அரிசி சிந்தாம அள பார்க்கலாம்)

32. மலக்காகிதம் - மழைக்காகிதம் - பாலிதீன் காகிதம்

33. பொறவு - அப்புறம். (கடைக்கு பொறவு போறேன்)

34. வெசனம் - வருத்தம்/சோகம் (ஏண்டா அவன் வெசனம் புடிச்சு உக்காந்திருக்கான்?)

35, 36. கருமாந்திரம் - கருமாதி என்பதாக இருக்கலாம். பிடிக்காத ஒரு நிகழ்வில் கருமாந்திரம், கெரகம் என்ற இரண்டு சொற்களும் அடிக்கடி உபயோகிக்கப் படும். (கருமாந்திரம் புடிச்சது)

37. பொசுக்குனு - சடக்கென்று (இவனுக்கு பொசுக்கு பொசுக்குன்னு கோபம் வந்துடும்)

38. பொக்குன்னு - வருத்தமாக (முட்டாய் தரன்னு சொல்லிட்டு தராம இருந்தா குழந்தை
பொக்குன்னு போயிடும்)

39. பவுடு- கீழ் அன்னம் (லோலாயம் பேசாதடா. பவுட பேத்துடுவேன்)

40. தாவாக்கட்டை- கீழ் அன்னம்.

41. சீவக்கட்டை- விளக்குமாறு

42. கூமாச்சி- கூர்மையாக

43. தொறப்பு - பூட்டு

44. தொறப்புக் குச்சி - சாவி

45. மண்டு விடுதல்- சிறுநீர் கழித்தல்

நன்றி: ஆர்குட்- கொங்கு வெள்ளாளர் குழுமம்.

Aug 25, 2006

சில உவ்வே படங்கள்!!!

இந்தப் படங்களைப் பார்த்து வா.மணிகண்டன் இப்படித்தான் என முடிவு செய்யவேண்டாம். காலத்தின் கட்டாயமாகிறது. நடிகைகளின் படத்தையும் என் படத்தையும் பார்த்த நண்பணோடு பணிபுரியும் பெண்கள், "பையன் முகத்தைப் பார்த்தால் நல்லா இருக்கான். கேரக்டர் சரியில்லையோ" என்றார்களாம். :)

இது என்னுடைய 101வது பதிவு. இந்தப் பெயரில் மட்டுமே, இந்தப் பதிவில் மட்டுமே எழுதுகிறேன். நண்பரொருவர் கேட்டது போல் என் கருத்துக்களைச் சொல்ல எனக்கு வேறு பெயரோ, முகமோ தேவையில்லை.(இதுக்கு எல்லாம் சர்டிபிகேட் கொடுக்க வேண்டியிருக்குப்பா!)

100வது பதிவே தனிப்பதிவிடலாம் என நினைத்திருந்தேன். ஆனால் நேற்று எழுதிய பதிவு முக்கியமானதாகத் தோன்றியதால் தனிப்பதிவிட இயலவில்லை. கடந்த நூறு பதிவுகளில், என் எழுத்திலும், பார்வையிலும் நல்ல மாற்றங்களை நான் உணர்கிறேன்.(மற்றவர்களுக்கு எப்படி என்று தெரியவில்லை.) நன்றி வலையுலகமே. (சுஜாதா சார், இது கூட வலைப்பதிவுகளின் பயன்தான். யாராவது எடுத்துச் சொல்லுங்க!)

குளிர்ச்சியாகப் படங்கள் போடுவதாக சொல்லி இருந்தாலும், பச்சையாக இருப்பதனைத் தவிர்க்க இயலவில்லை. கோபிச் செட்டிபாளையத்தை சுற்றி இருக்கும் பகுதிகளின் படங்கள் இவை.
Photobucket - Video and Image Hosting

கோபியின் பழைய பெயர் வீரபாண்டி கிராமம் என்பதாகும்.

ஊரின் சிறப்பம்சமே இந்தப் பசுமைதான். பவானி ஆறு இப்பகுதிக்கான முக்கிய பாசன ஆதாரம். இந்த ஆறு பல கால்வாய்களாக வெட்டப்பட்டு பல பகுதிகளுக்கும் பாசனம் அளிக்கின்றன. தொலைவில் தெரியும் மலைப் பகுதிகள் கர்நாடகாவை, தமிழகத்தில் இருந்து பிரிக்கின்றன. தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் "வீரப்பன் மலை".
Photobucket - Video and Image Hosting
பெரும்பாலும் கோபியின் அனைத்துப் பகுதிகளும் திரைப்படங்களில் முகம் காட்டி இருக்கக் கூடும். கொடிவேரி மிகப் பிரசித்தம். சின்னத்தம்பி படத்தில் பிரபுவின் இல்லம் இந்த அணையில் அமைக்கப்பட்டிருக்கும்.
Photobucket - Video and Image Hosting
இப்பகுதியின் முக்கியத்திருவிழா பாரியூர்(கொண்டத்துக் காளியம்மன்) குண்டம் திருவிழா. ஊரே திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். இளவட்டங்களுக்கு "முத்துப் பல்லக்கு". அம்மனின் ஊர்வலமும் இருக்கும். பாவடை தாவணி, சுடிதார் தேவதைகளின் ஊர்வலமும் இருக்கும்.

கோபியைச் சுற்றிலும் இருக்கும் பாரியூர், பச்சைமலை, பவளமலை, கொடிவேரி மற்றும் குண்டேறிப் பள்ளம் போன்றவை இயற்கை எழில் சூழ்ந்த பிரதேசங்கள். ஒரு முறையாவது காண்பதற்கு முயற்சி செய்யுங்கள்.
Photobucket - Video and Image Hosting
வாய்க்கால் பாசனம் தவிர்த்து, கிணற்றுப் பாசனம் பெறும் நிலப் பரப்புகளும் உண்டு.(தோட்டம்). நெல், கரும்பு, மஞ்சள் ஆகியவை அதிகம் பயிரிடப்படுகின்றன. வாழையும் உண்டு.
Photobucket - Video and Image Hosting
நிறைய சாதிகள் இருப்பினும் கவுண்டர்கள்(கொங்கு வெள்ளாளர்) அதிகம் வாழும் பகுதி. இவர்கள் தவிர்த்து நரம்புகட்டி கவுண்டர்கள், வேட்டுவக் கவுண்டர்கள், முதலியார்கள் ஆகியோரும் கணிசமாக உண்டு. எளிமையான வாழ்க்கை முறை என்றாலும், கரைவழிந்து நீர் ஓடும் வளமையின் காரணமாக கொஞ்சம் "பந்தா பார்ட்டிகள்".
Photobucket - Video and Image Hosting
முக்கியமான பண்டிகை மாரியம்மன் பண்டிகை.(மாரி=மழை). கம்பம் வெட்டுதல், கம்பம் குதித்தல், அம்மை அழைத்தல், மா விளக்கு எடுத்தல்,அக்கினிக் கும்பம் எடுத்தல், கம்பம் பிடுங்குதல், மஞ்சள் நீராட்டம், மறுபூசை, பண்டாரன் வீடு சேர்த்தல் என ஏழு நாள் திருவிழா.
Photobucket - Video and Image Hosting
இந்தப் புகைப் படங்களை நண்பர் பிரதீப் எனக்கு அனுப்பி வைத்தார். (இவரைப் பற்றி ஏற்கனவே கொங்கு நாட்டு காதல் கதைங்கண்ணா என்ற பெயரில் எழுதி இருக்கிறேன்.)

இன்றைய டிஸ்கி: அந்த "உவ்வே" சந்தோஷமாகச் சொல்ல வேண்டிய உவ்வே. வாந்தியெடுக்கும் உவ்வே அல்ல. ;)

Jun 24, 2006

கோபிச் செட்டிபாளையம்

இந்த ஊர்ப் பெயரை பேரை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கொங்கு மண்டலத்தில்- ஈரோடு மாவட்டத்தின் முக்கியமான ஊர். உடனடியாக நினைவுக்கு கொண்டு வர வேண்டுமானால், இன்றிலிருந்து சுமார் பத்து வருடங்களுக்கு முன்னால் வந்த கிராமியப் படங்கள் பெரும்பாலானவற்றில் கோபி நடித்திருக்கும். (கோபிச் செட்டிபாளையத்தை சுருக்கி கோபி என்றுதான் சொல்வார்கள்). வயல்வெளி, வாய்க்கால், தூரத்தில் மலைப் பிரதேசம் என்றால் கண்ணை மூடிச் சொல்லலாம் அது கோபி என. மிக அருகாமையில் அமைந்த அல்லது தென்னந்தோப்பு போன்றவை இருந்தால் அது பொள்ளாச்சி.

கோபி பெரிய ஊர் எல்லாம் இல்லை. ஊரின் கிழக்கு முனையில் பயணத்தைத் தொடங்கினால் மேற்கு முனையை அதிக பட்சமாக பன்னிரண்டு நிமிடங்களில் அடைந்துவிடலாம். அதே போலத் தான் வடக்கும் தெற்கும். ஆக கோபி என்று சொல்லும் போது சுற்றியுள்ள ஊர்களையும் எடுத்துக் கொள்வதுதான் சரி. அரசாங்கத்தின் கூற்றுப் படி சொல்ல வேண்டுமானால் சட்டமன்றத்தொகுதி, நாடாளுமன்றத் தொகுதி, கோட்டம், நகராட்சி எனச் சொல்லலாம்.

ஆனால் இந்த அம்சங்கள் யாவும் பொருந்தக் கூடிய வேறு ஊர்களும் இருக்கலாம் என்ற போதும் அவைகளுக்கு இல்லாத தனித் தன்மைதான் கோபியின் சிறப்பு. ஈரோட்டிலிருந்து, சத்தியமங்கலத்தை நோக்கிப் பயணம் துவங்கினால், ஊர் எப்போது வரும் எனக் கவலைப் படாமல் தூங்கலாம். பேருந்தின் ஜன்னலோரத்தில், குளிர்காற்று வீசத் தொடங்கினால் கோபியை நெருங்கி விட்டதாக அர்த்தம். குளிர் காற்றினை மலைப் பிரதேசக் காற்றுடன் ஒப்பிட முடியாது. இது இந்த ஊர் தன்னைச் சுற்றி போர்த்திக் கொண்ட நெற்பயிரின் சுவாசம். முழுமையான குளிர் என்று சொல்ல முடியாத, வெக்கையுடன் கூடிய குளிர்ச்சி. இதனை நீங்கள் மேலும் அனுபவிக்க வேண்டுமானால், கோபிக்கு வடக்கே உள்ள தூக்க நாய்க்கன் பாளையம் என்னும் ஊருக்கு செல்லும் வழியில் பயணிக்க வேண்டும். வயலின் குளிர்ச்சி மெதுவாக-நத்தையின் வேகத்தில் நம் மீது படிவதை உணரலாம். வாய்க்கால்களும் சிறு கொப்புகளும் நரம்புகளைப் போல வயல்களினூடாக ஓடிக் கிடக்கும். சுவாசம், பார்வை என எல்லாவற்றிலும் மஞ்சளும் வெக்கையும் கலந்த பசப்பின் அநுபவம் கிடைக்க வேண்டுமானால், இருசக்கர வாகனப் பயணம் அவசியம். இந்தப் பகுதியில்தான் கொடிவேரி, குண்டேறிப் பள்ளம் போன்ற முக்கியமான சுற்றுலா செல்வதற்கான இடங்கள் இருக்கின்றன. ஒரு நாள் முழுமையாகத் தேவைப்படும் நிறைவாக ரசிக்க.

பாரியூர் என்னும் பெயரில் உள்ள பாரி என்பது கடையெழுவள்ளல் பாரியினைக் குறிக்கும் எனப் படித்திருக்கிறேன். ஆனால் சரியான வரலாற்றுப் பூர்வமான ஆதாரம் எனக்குத் தெரியவில்லை. இங்கு உள்ள கொண்டத்துக் காளியம்மன் கோவிலும், குண்டத்திருவிழாவும் மிகப் பிரபலம்.கைது அற்புதமான இயற்கைச் சூழல் நிறைந்த இடம். அருகில் உள்ள பச்சைமலை, பவள மலையையும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.

மற்ற ஊர்களின் மாரியம்மன் பண்டிகைகளை விட இந்தப் பகுதியின் பண்டிகை மிக வித்தியாசமானது. அது குறித்து தனிப் பதிவே எழுதலாம். பங்குனி, சித்திரையில் வரும் இந்த விழாவின் ஏழு நாட்களும் மிக ரசனையான கொண்டாட்டம்.

கோபிப் பகுதியை சார்ந்தவர்களை, சற்றே தள்ளியிருக்கும் வறட்சி பாய்ந்த மண் காரர்கள் கரவழிக்காரர்கள்(கரை வழிந்து ஓடும் பகுதி) என்று சொல்வது உண்டு. இது பவானி ஆற்றின் புண்ணியம். கோபியில் மழை பெய்ய வேண்டிய அவசியமே இல்லை. மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்தால் போதும், பவானியில் தண்ணீர் வந்துவிடும். அரக்கன்கோட்டை, தடப்பள்ளி, கீழ் பவானி என நிறைய வாய்க்கால்களை வெட்டி வைத்து தண்ணீர்ப் பஞ்சம் இல்லாமற் செய்திருக்கிறார்கள்.

கொங்குத் தமிழ் என்றால் கோபிதான். கோயம்புத்தூர் அந்த மண்டலத்தில் பெரிய ஊர் என்பதாலும், அந்தக் காலத்தில் ஒருங்கிணைந்த ஈரோடு, கோவை மாவட்டங்களுக்குத் தலைநகரம் என்பதாலும் கொங்குத் தமிழை- கோயம்புத்தூர் தமிழ் ஆக்கிவிட்டார்கள். திட்டுவதாக இருந்தால் கூட மரியாதையாகத் தான் திட்டுவார்கள். அதற்காகவாவது ஏதேனும் கிராமப் பகுதி பாட்டியிடம் திட்டு வாங்கலாம்.

கோபிப் பகுதிக்கென சில உணவு வகைகள் உண்டு. எனக்குப் பிடித்த வகை 'அரிசியும் பருப்பும்'. மிக விரைவாக செய்துவிடுவார்கள். நெய் ஊற்றி, ஊறுகாய் வைத்து முதலில் சாப்பிட வேண்டும். அடுத்து கத்தரிக்காய்ப் புளிக் குழம்பு அதன் பின் கெட்டியான, வெண்ணெய் எடுக்காத தயிர் ஊற்றி குழைத்துச் சாப்பிட வேண்டும். எருமைப் பால் தயிராக இருந்தால் இன்னும் தேவலை. இந்தச் சுவையைப் பழகிவிட்டால் வேறு உணவு வகைகள் சற்று தள்ளி நிற்க வேண்டும். நிறைய வெளியூர் நண்பர்கள் இந்தப் பெயரை கேள்விப்பட்டது கூட இல்லை.

பாக்யராஜ், ஆர்.வி.உதயகுமார், நடிகர் ரஞ்சித் போன்ற பிரபலங்களுக்கு கோபியுடன் நெருங்கிய தொடர்புண்டு. கோபியைத் திரைப்படங்களில் பிரபலப் படுத்தியதில் பாக்யராஜ் அவர்களுக்கு மிக முக்கியப் பங்குண்டு. 'முந்தானை முடிச்சு' பெரும்பலாலும் கோபியிலேயே எடுக்கப்பட்டது. எனக்குத் தெரிந்து கோபியில் 100 நாளைக் கடந்த முதல் படம் அதுவாகத் தான் இருக்கும்.

சில ஆண்டுகள் வரை நிறையக் கல்லூரிகள் இருந்ததில்லை. இப்பொழுது நிறைய உருவாகியிருக்கின்றன. மக்கள் விவசாயம் தாண்டியும் வெளி வரத் தொடங்கியிருக்கிறார்கள். கொஞ்சம் பொறாமை நிறைந்த மக்கள் என எனக்குப் படுகிறது. வதந்திகளுக்கு மிகப் பிரபலம். கண் காது மட்டுமல்ல, நல்ல துணிமணி, நகை எல்லாம் எடுத்துக் கொடுத்து வதந்தியைப் பரப்புவதில் கில்லாடிகள். இந்த விஷயத்தில் கவனம் தேவை.

நகரமும் கிராமமும் கலந்த வாழ்க்கையின் உண்மையான பொருளை கோபியில் அறியலாம்.

முக்கியமான விஷயம் பெரும்பலான கோபிப் பெண்கள் மிக அழகானவர்கள். வர்ணிக்க முயலும் போது வார்த்தைகளைத் தேட வேண்டியிருக்கும்.

Feb 10, 2006

வைர விழா மேல்நிலைப் பள்ளி.

பெயர் வித்தியாசமாகப் படுகிறதா? பள்ளியும் வித்தியாசமானதுதான். 1898ஆம் ஆண்டு இங்கிலாந்தை ஆண்டு வந்த விக்டோரியா மகாராணி ஆட்சிக்கு வந்து அறுபது ஆண்டுகள் முடிந்திருந்தன. அப்போது கோபிசெட்டிபாளையம் மற்றும் அதனைச் சுற்றியிருந்த மிராஸ்தாரர்கள், இதன் நினைவாக நமது ஊரிலும் ஏதேனும் நினைவுச் சின்னம் அமைப்போம் என முடிவு செய்தனர்.

அறுபதாம் ஆண்டு வைரவிழா என்பதனால் வைரவிழாப் பள்ளி என ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்தனர்.அதன் விளைவாக வைரவிழாப் பள்ளியானது.

வர்கீஸ் குரியன் கேள்விப்பட்டிருக்கீர்களா? நம் நாட்டின் வெண்மைப் புரட்சிக்கு வித்திட்டவர். 'ஆனந்த்'ன் தலைவர். அவர் எங்கள் பள்ளியின் முன்னாள் மாணவர். மகாத்மா காந்தி, வினோப பாவே எல்லாம் வந்து சென்றிருக்கின்றனர்.

ஆரம்பத்தில் இருபாலரும் சேர்ந்து படிக்கும் பள்ளியாக இருந்தது. சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு
முன்பாக என்ன காரணத்திலோ பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி என பெண்களுக்குத் தனியாகப் பிரித்துவிட்டனர்.(எங்களை எல்லாம் எண்ணிப் பாராமல்)

அந்தக் கால கட்டங்களிலோ அல்லது அதற்கு பின்னரோ திரு.அருணாச்சலக் கவுண்டர் என்பவர் தலைமை ஆசிரியராக
இருந்திருக்கிறார். தினமும் காலை வணக்கவகுப்பில் "சில பொறுக்குமணிகள் நேற்று பழனியம்மள் பள்ளியின் சாலையில்(!) சுற்றியிருக்கிறார்கள்.நீங்களாக வந்துவிடுவது நல்லது" என்று அறிவிப்பாராம்.உண்மையா பொய்யா-இவருக்கு தெரியுமா தெரியாதா என்று புரியாமல் பல மாணவர்களும் மேடைக்கு வந்து தண்டனை பெற்று செல்வார்களாம்.எங்க அப்பா சொன்னது.எங்க அப்பா அடிவாங்கினாரா என்பது தெரியாது.

ஆனால் ஒருவர் இருக்கிறார். எங்க அப்பவிற்கு எதிர் அணி- அந்தக் காலத்தில். ஏதோ ஒரு அலுவலக விஷயமாக சமீபத்தில் என் வீட்டுக்கு வந்த போது பழைய பகைமையில் இருவரும் நெளிந்ததை உணர முடிந்தது.(30 வருடத்திற்கு முன்பிருந்த பகை). அவர் சென்றவுடன் அப்பா சொன்னார்.

அந்த 'மீன் வாயன்' தன்னை அடிக்க ஆள் சேர்த்து வந்ததாகவும்,அடுத்த நாள் தானும் ஒரு படை சேர்த்து சென்றதாகவும்.என் அப்பா அமைதியானவர் என்று நினைத்திருந்தேன் . அந்த நிகழ்வும் அந்தப் பள்ளியின் ஒரு வரலாற்றுத் துணுக்கு.

நான் படித்த கதை சுவாரசியமானது. மூன்றாம் வகுப்பு வரை 'கான்வென்ட்'.தயவு செய்து ஊட்டி, கொடைக்கானால் அளவுக்கு நினைத்துக் கொள்ளாதீர்கள்.

மூன்றிலிருந்து ஐந்தாவது வரை 'சின்ன' வைரவிழா.எலிமெண்டரி ஸ்கூலை அப்படித்தான் சொல்வோம். அப்பவே எனக்கு நேரம் சரி இல்லை. அழகான பொண்ணு (சின்ன வைரவிழா இருபாலருக்குமான பள்ளி) ஏதாவது நம்ம வகுப்பில் இருக்காதானு ஏங்கிப் பார்ப்பேன்.(நிஜமாத்தாஙக).

மூன்றாவது படிக்கும் போது மட்டும் எனக்குப் பிடித்த ஒரு பெண் இருந்தாள். அவளையும் அடுத்த வருஷம் வேற வகுப்பில் மாற்றிவிட்டார்கள். அப்போ ஆரம்பித்த பிரமச்சாரி ராசி இன்னமும் தொடர்கிறது. பிரம்மச்சாரி ராசின்னா ஒரு பொண்ணும் நாயை மதிக்கும் அளவிற்குக் கூட நம்மை மதிக்காமல் இருப்பது.

ஆறாவது வகுப்பில் நோட்டில் எழுதாமல் தப்பிக்க நெஞ்சு வலிக்குதுன்னு சொல்லி அப்பாவுக்கு ரூ.3000 செலவு வைத்தது, ஏழாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வரை வகுப்புத் தலைவன் ஆக செய்த தகிடுதத்தங்கள்,எட்டாம் வகுப்பில் வேலுச்சாமி வாத்தியார் டியூஷனில் அடிவாங்கமல் தப்பிக்க மேற்கொண்ட வழிமுறைகள். ஒன்பதாம் வகுப்பில் நண்பனின் காதலை பார்த்து நமக்கு ஒரு காதல் வராதா என்று பேயாக அலைந்தது, பத்தாம் வகுப்பு தனம் டீச்சர் டியூஷன்,
பதினொன்று,பன்னிரெண்டாம் வகுப்பில் கட் அடித்து கிரவுண்டில் நாடு பிடித்து விளையாடுவது, கர்ணன் டியூஷனில் அடிக்கு பயந்து இளம்பரிதியிடம் மாறினால் அங்கு அப்புசாமி மூஞ்சி மொகறையப் பெயர்த்ததுன்னு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பதிவு எழுதினாலே நூறு பதிவுகளைத் தாண்டிவிடும்.இன்னொரு ஆட்டோகிராப் படமே ஓட்டலாம்.

என்னதான் சொன்னாலும் செய்தாலும் ஸ்கூல் வாழ்க்கை திரும்பி வருமா?

(இந்த பதிவை எழுத ஆரம்பிக்கும் போது பள்ளியினை பற்றி முழுமையான கட்டுரையாக எழுத நினைத்தேன். ஆனால் பல விஷயங்களை நினைவில் நிறுத்த முடியவில்லை.(நூரு வருட வரலாறு) மேலும் பல செய்திகள் திரட்டப் பட வேண்டியதாக இருக்கிறது. பதிவாளர் தாணு தெரிவித்தது போல் என் ஊர், அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் அதன் திருவிழாக்கள் கலாச்சாரக் குறியீடுகள் என அனைத்து பற்றியும் சில தகவலகளைத் தரலாம்தான்.
தகவல் திரட்டி முழுமையான கட்டுரைகளாகவே தரலாம் என்று நினைக்கிறேன்.)