அனுபவ சித்த மருத்துவ முறைகள் என்றொரு புத்தகம். முதல் பல பக்கங்களுக்கு செடிகளின் படம், பெயர் ஆகியவற்றை பதிப்பித்திருப்பார்கள். சென்னையில் எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். மூத்த நண்பர். அவர்தான் ஏறு சிங்கி, இறங்கு சிங்கி, திகைப்பூண்டு என்றெல்லாம் விதவிதமான மூலிகைகள் பெயர்களைச் சொல்லிக் கொண்டிருப்பார். பல பெயர்களை அப்பொழுதுதான் முதல்முறையாக கேட்டிருப்பேன்.
நம்மைச் சுற்றி எத்தனை விதமான மரங்களும் செடிகளும் பறவைகளும் இருக்கின்றன? அவற்றில் எத்தனை பறவைகளையும், மரங்களையும் நம்மால் அடையாளம் காணமுடிகிறது? சில நாட்கள் சாலையில் எதிர்படும் தெரிந்த ஒவ்வொரு மரத்தின் பெயரையும் சொல்லிப் பார்ப்பேன். பத்து மரங்களை அடையாளம் கண்டறிந்து பெயரை சொல்லிவிட்டால் ஆச்சரியமாக இருக்கும். சில வருடங்களுக்கு முன்பாக ஊரில் அடர்வனம் அமைக்கும் போது அத்தனை உள்நாட்டு தாவர நாற்றுகளை வெவ்வேறு ஊர்களில் இருந்து வாங்கி வந்து நட்டோம். எதுவுமே நினைவில் இல்லை. மரங்களாவது பரவாயில்லை. கண்ணில்படும் சிறுசெடிகளின பெயரைச் சொல்லிப் பார்த்தால் ஐந்து செடிகளை பெயருடன் கண்டுபிடித்தாலே பெரிதுதான்.
கூகிள் ஏ.ஐ வந்தபிறகு ஓரளவு பரவாயில்லை. படம் எடுத்து பெயரைக் கேட்டால் சொல்லிவிடுகிறது. இதையெல்லாம் தெரிந்து வைத்து என்ன செய்யப் போகிறோம் என்றுதான் தோன்றும்.
போயஸ்கார்டனில் தோட்டம் வைத்த ஒரு வீடு வழியாக இன்று காலை சென்று கொண்டிருந்தேன. போயஸ்கார்டன் என்றவுடன் ஒரு விவகாரத்தைச் சொல்லிவிட வேண்டும. ஒரு வருடம் முன்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை தினசரி பார்க்கிறேன் என்று ஃபேஸ்புக்கில் எழுதினேன். ராகவ வீரா அவென்யூவில் காலை 6 மணி வாக்கில் படுவேகமாக நடந்து கொண்டிருப்பார். இத்தனை வருடங்களுக்குப் பிறகும் அவ்வளவு சுறுசுறுப்பு. இன்றைக்கும் சூப்பர்ஸ்டாராக இருக்க அவர் உடலுக்கு கொடுக்கும் முக்கியத்துவம்தான் முதன்மையான காரணம் என்றெல்லாம் நினைத்து எழுதிய பதிவு அது.
ரஜினியை விட்டுவிட்டு ‘இவனுக்கு போயஸ்கார்டனில் வீடு இருக்கிறது’ என்று என்னைப் பிடித்துக் கொண்டார்கள். டக்ளஸ்தான் டீக்கடைக்கு ஓனர் என்பது போலாகிவிட்டது. மாமனார் ஒரு நிறுவனத்தில் பணியாற்றுகிறார். அந்த நிறுவனத்தினர் எங்கள் அபார்ட்மெண்ட்டில் மூன்று ப்ளாட் வைத்திருக்கிறார்கள். வந்தால் போனால் தங்குவதற்கான கெஸ்ட் அவுஸ் மாதிரி. கோவிட் சமயத்தில் கேட்பாரற்று கிடக்கிறது என்று மாமனார் கேட்டதும் ‘தங்கிக்க சொல்லுங்கள்’ என்று சொல்லிவிட்டார்கள். சரி, ஜெயலலிதா, ரஜினி, தனுஷ் வரிசையில் நாமும் என்ற நினைப்பில், ஊரில் யாராவது கேட்டால் பந்தாவாக ‘போயஸ்கார்டனில் வீடு’ என்று சொல்லிக் கொண்டிருந்தேன். இவர்கள் கதை கட்டி வீட்டை விட்டே காலி செய்து விட வைத்துவிடுவார்கள் போலிருந்தது. அதனால்தான் ரஜினி பற்றியும் வேண்டாம், போயஸ் கார்டன் பற்றியும் வேண்டாம் என்று அமைதியாகிவிட்டேன்.
இன்று காலையில் அதே போயஸ்கார்டனில் மூன்று பேர் - குருவிக்காரர்கள் போலிருந்தார்கள் - இரண்டு பெண்கள், ஒரு ஆண். அந்த பையனின் கையில் உண்டிவில் இருந்தது. பெரும்பாலும் புள்ளிங்கோ மாதிரி பைக்கில் வருவார்கள். ஒருவன் ஓட்டிக் கொண்டு வருவான். பின்னால் இருப்பவன் உண்டிவில்லை வைத்து அடிப்பான். வீட்டின் உயரமான ஜன்னல்களில் அமர்ந்திருக்கும் புறாக்கள், மரத்தின் மீதமர்ந்துள்ள குருவிகள் சுருண்டு விழுவதை பார்த்திருக்கிறேன். ஜன்னல் கண்ணாடி உடைவதை இதுவரை பார்த்ததில்லை. இப்படி குறி மாறாமல் துல்லியமாக அடிக்க முடியுமா என்று ஆச்சரியமாக இருக்கும். இன்று மூவருமே நடந்து கொண்டிருந்தார்கள். பெண்கள் குப்பைகளை பொறுக்கிக் கொண்டிருந்தார்கள். இவன் குருவிகளைத் தேடிக் கொண்டிருந்தான்.
ஒரு வீட்டுள் இருந்த மரத்தின் மீதிருந்த பறவையை குறி வைத்து அடித்தான். சுருண்டு விழுந்தது. அநேகமாக இறந்திருக்கும். வீட்டின் பெருங்கதவு உட்புறம் தாழிடப்பட்டிருந்தது. ஆட்டிப் பார்த்தான். திறப்பதாக இல்லை. சில நிமிடங்களுக்குப் பிறகு கிளம்பிவிட்டான். காலையில் வேலைக்காக கிளம்பிச் செல்லும் நம்மைப் போலவேதான் பெயர் தெரியாத அப்பறவையும். அதிகாலையில தனது கூட்டை விட்டு கிளம்பி உணவு தேடலுக்காக வந்த பெயர் தெரியாத பறவை காரணமேயில்லாமல் சுருண்டு விழுந்திருக்க வேண்டியதில்லை. விழுந்துவிட்டது. அதற்கு பறக்கத் தெரியாத குஞ்சுகள் இருந்தால் அவை இப்பொழுது வரைக்கும் வானத்தை பார்த்துக் கொண்டிருக்கக் கூடும்.
என்ற வண்ணதாசனின் கவிதைதான் இன்றைக்கு நாள் முழுவதும் மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.
அம்மான்பச்சரிசி என்றொரு செடி. சிறு இலைகளுடன் இருக்கும். கிள்ளினால் பால் வரும். அதனை மரு மீது தொடர்ந்து சில நாட்களுக்கு வைத்து வந்தால் மரு விழுந்துவிடுகிறது. அனுபவ சித்த மருத்துவ முறைகள் புத்தகத்தில்தான் இந்தக் குறிப்பு இருந்தது. இப்பொழுதெல்லாம் சலூனிலேய மரு நீக்குகிறார்கள். ஒரு மருவுக்கு 100 ரூபாய். சூடு வைப்பார்கள். கொஞ்ச நேரம் எரிச்சலாக இருக்கும். அதற்கு அம்மான்பச்சரிசி தேவலாம்.