Feb 14, 2023

அந்த ரெட் ரோஸ் என்ன விலை?

வழக்கமாக திருவாசகனை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் சாலைதான் அது. அவனை குளிக்க வைத்து, உணவூட்டி, சீருடை தேய்த்து அணியச் செய்து பள்ளியில் விடுவது என் கடமை. அது ஒரு குறுகலான சந்து. பள்ளிக்குச் செல்ல குறுக்கு வழி. லுங்கியைக் கட்டிக் கொண்டு கிளம்பும் வரையில் காதலர் தினம் என்ற நினைப்பே வரவில்லை. போகும் வழியில் ஆங்காங்கு ஒன்றிரண்டு ஜோடிகள் நின்று கொண்டிருப்பதைப் பார்த்ததும் மனசுக்குள் மணி அடித்து பிப்ரவரி 14 நினைவுக்கு வந்தது.

சந்தில் ஒரு ஜோடி நின்று கொண்டிருந்தது. அந்தச் சந்தில் இருபக்கமும் வீடுகள் எதுவும் இருக்காது. திருவை விட்டுவிட்டு திரும்ப வரும் போதும் நின்று கொண்டிருந்தார்கள். இளஞ்சிட்டுகளை விலகிச் சென்ற போது கடமை அழைத்தது. அலுவலகத்தின் வாட்ஸப் குழுமத்தில் ஒரு செய்தியை அனுப்பி அதனை இரண்டு பேர்களிடம் தகவல் சொல்லச் சொல்லியிருந்தார்கள். வீட்டிற்கு போய் கூட அதைச் செய்திருக்கலாம். எளிமையான வேலைதானே என்று அங்கேயே வண்டியை நிறுத்தி அச்செய்தியை உரியவர்களுக்கு அனுப்பிவிட்டு U டர்ன் அடித்த போது சனிபகவான் வண்டியின் பின்பக்கமாக அமர்ந்து கொண்டார் போலிருக்கிறது.


அந்தக் குறுகலான சாலையில் வண்டிகள் ஒதுங்கவும் இடம் இருக்காது. அதுவுமில்லாமல் கொஞ்சம் சாக்கடை வாடை அடிக்கும். சற்று முன்னோக்கிச் சென்றால் வீட்டிற்குச் செல்லும் வழி பிரதான சாலை. வாகன நெரிசலில் அங்கு நின்று பேச வாய்ப்பில்லை. எனவே திரும்பி மீண்டும் பள்ளியின் பக்கம் சென்று நிறுத்தி அந்த இருவரிடமும் அலைபேசியில் அழைத்துப் பேசிவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தேன். அப்பொழுது அந்தச் சந்தில் யாரும் இல்லை. ஆனால் வண்டியில் ஏறிய சனி பகவான் இறங்கிக் கொள்ள விரும்புவார் அல்லவா? 


நான் அழைத்துப் பேசியவர்களில் ஒருவர் திரும்ப அழைத்தார். வண்டியை நிறுத்தி போனை எடுத்தேன். 


சனி அருகில் நின்று சிரிக்கத் தொடங்கிவிட்டார். 


பக்கத்தில் வந்து ஒருத்தன் வண்டியை நிறுத்தினான்.


பேர் என்ன?’ என்றான். அவன் இயல்பாகக் கேட்டது போலத் தெரிந்தது. 


இருங்க பேசிட்டு வர்றேன்என்று அலைபேசி உரையாடலைத் தொடர்ந்தேன். பார்த்துக் கொண்டே நின்றான்.


பேசி முடித்த பிறகு அழைப்பைத் துண்டித்துவிட்டுமணிகண்டன்என்றேன்.


எங்க வேலை செய்யற?’ - பேச்சில் மலையாள வாடை இருந்தது.


எங்கேயாவது நம்மைப் பார்த்தவனாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு எதார்த்தமாக பதில் சொன்னேன். 


செல்போனை எடுத்து வீடியோ எடுக்க ஆரம்பித்துவிட்டான். ‘பொண்ணை ஃபாலோ செய்யறியா…’ என்று பேசத் தொடங்கிவிட்டான்.


அப்பொழுதுதான் வித்தியாசத்தை உணர ஆரம்பித்தேன். 


நான் யாரை ஃபாலோ செய்தேன்?’ என்று கேட்டுக் கொண்டே வீடியோவில் தெரியாதவாறு முகத்தைத் திருப்பிக் கொண்டேன்.


அவன்பாட்டுக்கு பேசிக் கொண்டேயிருந்தான்.  வீடுகள் இல்லாத அந்தச் சந்திலேயே பைக்கை நிறுத்திவிட்டு வீடுகள் இருக்கும் அடுத்த வீதிக்கு நகர்ந்தாலும் அவன் விடுவதாக இல்லை.


யார், எந்தப் பெண் என்றே புரிவதற்குள் எனக்கு வியர்க்கத் தொடங்கியிருந்தது. சாலையில் எத்தனை பேரைப் பார்த்திருப்பேன். யாராக இருக்கும் என்று நினைக்கத் தொடங்கியிருந்த போது எங்கேயோ இருந்து அந்தப் பெண் வந்து வண்டியை நிறுத்தினாள்.


தலையில் ஹெல்மெட். முகத்தில் சுடிதாரைச் சுற்றியிருந்தாள். கேரளா பதிவு எண் கொண்ட வண்டி.


எடுத்த உடனயேஎன்னை ஏன் ஃபாலோ செஞ்ச?’ என்றாள்.


அதற்குள் இவன் வீரசாகசம் செய்யத் தொடங்கினான். 


நான் வண்டியை நிறுத்தி போனில பேசிட்டு இருந்தேன். பெட்ரோல் பங்க் இருக்கு அதுக்கு போனேன்..உங்களை ஏம்மா ஃபாலோ செய்யப் போறேன்?’


இல்ல என்ன ஃபாலோ செஞ்சே நீஎன்றாள். 


அவளுக்கு 20 வயது இருக்கலாம். ’நீ முகத்தை மறைச்சிருந்த, ஹெல்மெட் போட்டிருக்கஉன்னை எதுக்கு நான் பார்க்கணும்?’  என்றாலும் அவள் விடாப்பிடியாக இருந்தாள்.


நிஜமாகவே அவளை அதுவரை துல்லியமாகவெல்லாம் கவனிக்கவே இல்லை. 


உன்னை நான் பார்க்கவே இல்லைநீ எங்க இருந்தன்னு தெரிஞ்சுக்கலாமா?’ என்றேன்.


நீ போன் பேசிட்டு இருந்த இடத்துக்கு பின்னாடிதான் இருந்தேன்என்றாள். 


அடியே, நீ பின்னாடி நின்றால் நீதான் ஃபாலோ செய்வதாக அர்த்தம் என்று நினைத்துக் கொண்டிருந்த போதே மூன்று நான்கு பேர்கள் வந்துவிட்டார்கள். 


யாருக்குமே அங்கு என்ன நடந்தது என்று தெரியாது. அத்தனை பேரும் இடையில் வந்து சேர்ந்தவர்கள். ஒன்றிரண்டு பேர் அந்த வழியாகச் சென்றவர்கள். அடித்துவிடுவார்களோ என்று நினைக்கும் அளவுக்கு பதற்றப்படுத்திவிட்டார்கள். ஆனால் கோபத்தைக் காட்டத் தயாராக இருந்தார்கள்.


சரி போலீஸை கூப்பிடலாம்என்றேன்.  நண்பர்களைத்தான் அழைத்தார்கள். சில நிமிடங்களில் எங்கிருந்தோ இரண்டு, மூன்று மலையாளிகள் வந்துவிட்டார்கள்.


வேறு வழியில்லை. காவல்துறை நண்பர் ஒருவரை அழைத்துச் சொன்னேன். 


பதற்றப்படாதீங்கபேட்ரோல் வண்டியை அனுப்பி வைக்கிறேன்என்று சொன்ன சில நிமிடங்களில் காவல்துறையினர் வந்துவிட்டனர். பதற்றப்படாமல் எப்படி இருப்பது? இன்னும் நான்கைந்து நிமிடங்கள் தாமத்திருந்தால் முகத்தை வீங்க வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். 


காவல்துறையினர் வந்த பிறகுதான் கொஞ்சம் தெம்பு வந்தது.


அந்தச் சமயத்தில் எனக்கு வாட்ஸப்பில் வந்த மெசேஜ், அதை நான் சிலருக்கு அனுப்பியது, அனுப்பியவர்களை அழைத்துப் பேசியது அனைத்தும் செல்போனில் இருந்தது. காவல்துறையினர் அதையெல்லாம் கேட்கவில்லை. கலைத்து அனுப்பிவிடுவதிலேயே கவனமாக இருந்தார்கள்.


எனக்கு பிரச்சனை என்னவென்றால் நான் ஃபாலோ செய்யவில்லை என்று நிரூபிக்க என்னிடம் எதுவுமில்லை. ஒரு கட்டத்தில்நான் அப்படியெல்லாம் எதுவும் செய்யவில்லை, அதற்கான அவசியமும் இல்லை, ஒருவேளை நான் ஃபாலோ செய்ததாக இருந்தாலும் இப்பொழுது அதற்கு என்ன செய்ய வேண்டும்என்று கேட்ட போதுஎதுக்கு ஃபாலோ செஞ்சன்னு தெரியணும்என்றார்கள்.


இதற்கு என்ன பதிலைச் சொல்வது?


திணறிவிட்டேன்


ஒருவேளை அவளுக்கு உண்மையிலேயே பயம் நியாயமானதாக கூட இருக்கலாம். யாரோ அவளைப் பின் தொடர்வதாகக் கூட உணர்ந்திருக்கலாம். ஆனால் இப்படி அனாதரவாக நிறுத்தி மிரட்டினால் யாராக இருந்தாலும் நடுக்கம் வந்துவிடும் அல்லது இதைப்பற்றியெல்லாம் எதுவும் யோசிக்காத மனதைரியம் கொண்டவனாக இருந்தால் எகிறி இருக்கலாம். 


வீட்டிற்கு வந்தும் கூட படபடப்பு அடங்க ஒரு மணி நேரம் ஆனதுஒருவேளை அந்த காவல்துறை நண்பர் உதவிக்கு வராமல்இருந்திருந்தால் அந்த இடத்தில் என்னால் எதுவுமே செய்திருக்க முடியாதுஅடி வாங்கி இருக்கக் கூடும்வீடியோவில் பதிவு செய்திருக்கக் கூடும்என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம்.


சம்பவம் முடிந்த பிறகுஸ்கூலுக்கு லுங்கி கட்டிட்டு போறீங்க..இன்னும் கோபிச்செட்டிபாளையம் டைமண்ட் ஜூபிலியில் படிக்கிற மாதிரியே இருக்கீங்களா?’ என்று அந்த காவல்துறை நண்பர் கேட்டார். 


அதுவும் சரிதான். இயல்பாக இருக்கும் வரைக்கும் ஆபத்துதான். 


அமைதியாக இருந்த மாணிக்கத்தை அடித்துத்தான் பாட்ஷா ஆக்கினார்கள். 


Life begins at 40. நாற்பதாவது வயதில் காதலர் தினம் இப்படித் தொடங்கியிருக்கிறது. ஒரு ரோமியோ உருவாகிவிட்டான்! 


பாஸ்அந்த ரெட் ரோஸ் என்ன விலை?’

5 எதிர் சப்தங்கள்:

Saravanan Sekar said...

Rightu.. baasha bgm podunga pa ..

சேக்காளி said...

//வீடியோவில் பதிவு செய்திருக்கக் கூடும்…//
ஒலகம் பூரா வலம் வந்துருக்க வேண்டிய மனுசன காவல்துறை வந்து தடுத்துடுச்சே.

Aravind said...

எதாவது பணம் பிடுங்கும் உக்தியாக இருக்கும்.

Unknown said...

GREAT ESCAPE SIR

அன்புடன் அருண் said...

ரொம்ப நாள் கழிச்சு வந்துருக்கீங்க...இது நல்ல விஷயம்...

பாருங்க...இப்படி எங்களுக்கு நல்லது நடக்க நீங்க பிரச்சினையில மாட்ட வேண்டி இருக்கு!!