Sep 26, 2022

ஸ்டார்ட்...ஸ்டார்ட்...

பெங்களூருவில் இருக்கும் வரைக்கும் அலுவலகம் செல்லும் போதே மூளைக்குள் எழுத்துதான் ஓடிக் கொண்டிருக்கும். அதுவும் வீட்டிலிருந்து அலுவலகத்துக்கு முக்கால் மணி நேரப் பயணம். பிரதான சாலைகளைத் தவிர்த்து சந்து பொந்துகளில்தான் வண்டி ஓட்டுவேன். சில நண்பர்களை பெலந்தூர் ஏரிக்கரைக்கு வரச் சொல்லி அங்கேயே நின்று மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்ததெல்லாம் நினைவுக்கு வந்து போகின்றன. அத்தகைய தருணங்கள் எழுதுவதற்கான சம்பவங்களையும், மனநிலையையும் தந்து கொண்டேயிருந்தன.

பெங்களூரு அற்புதமான ஊர். எழுதுவதற்கு வாகான மனநிலை இருந்தது. பணியும் அனுமதித்தது. 


வாரம் ஒரு முறை ஏதாவது காரணத்துக்காக பேருந்துப் பயணத்தில் பல ஊர்களுக்கும் சென்று வந்ததும் அனுபவங்களைத் தந்தது. 


தமிழ்நாட்டில் சூழலும் அப்படி இல்லை. வேலையும் அப்படி இல்லை. படுக்கையிலிருந்து எழும் போதே வேலை சம்பந்தமான எண்ணங்கள்தான் மனதில் ஓடுகின்றன. மாலை வரைக்கும்- இரவு தூக்கத்திலும் கூட அதேதான். மனம் ஐக்கியம் ஆகிவிடுகிற மாதிரியான வேலையைத் தேர்ந்தெடுத்தால் பிறவற்றில் எதிலும் கவனம் செல்லாது என்பதற்கு எனது சமீபத்திய மனநிலை உதாரணம். 


பதிப்பாளர் ஜீவகரிகாலன், திருப்பதி மகேஷ் போன்ற நண்பர்கள்எதையாவது எழுதித் தொலைஎன்று சொல்லும் போதெல்லாம் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழிப்பதுண்டு. 


சமீபத்தில் ஜீவ கரிகாலன் ஒரு உற்சாகமான விஷயத்தைச் சொன்னார். 


மூன்றாம் நதி நாவலை சென்னை எம்..பி.வைஷ்ணவா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளார்கள் என்றார். ஏற்கனவே கோபி கலை அறிவியல் கல்லூரியில் ஒரு வருடம் பாடத்திட்டத்தில் இருந்தது. அது கூட உள்ளூர் கல்லூரி. நம் ஊர்க்காரனுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் செய்திருப்பார்கள். 


எம்..பி கல்லூரியில் யாரையும் அறிமுகமில்லை. யார் பரிந்துரை செய்தார்கள் என்றும் தெரியவில்லை. பரிந்துரைத்தவர்களும், தேர்ந்தெடுத்தவர்களுக்கும் நன்றி. வாசிக்கப் போகும் மாணவிகளுக்கும் நன்றி. இந்தத் தகவலைச் சொல்லிவிட்டுமறுபடி ஆரம்பியுங்கள்என்றார் கரிகாலன்.  அப்படித்தான் நானும் நினைக்கிறேன். ஆனால் நாளைக்கு ஏதேனும் ஒரு பணி வந்துவிடும். அடுத்த நாளுக்கு தள்ளிவைத்தால் அவ்வளவுதான். 


எழுதுவது என்றால் எப்பொழுதும் ஒரே நேரமாக இருக்க வேண்டும். காலையில் 11 மணிக்கு காபி குடித்துப் பழகினால் ஒவ்வொரு நாளும் 11 மணிக்கு மனம் காபியை கேட்க ஆரம்பித்துவிடுவது போலத்தான் எழுதுவதும் கூட. ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி வலுக்கட்டாயமாக எழுத ஆரம்பித்து மனதைப் பழக்கிவிட்டால் அந்த நேரத்தில் தானாக எழுதுவதற்கான உந்துதல் உருவாகும். அப்படியொரு அலைபாயாத நேரத்தை கண்டறிவதுதான் ஆகப்பெரிய சவாலாக இருக்கிறது.



ஒவ்வொரு மனிதனிடமும் சுவாரசியங்கள் உண்டு. அவை எல்லோருக்கும் சுவாரசியங்களாக இருக்காது. ஆனால் இது சுவாரசியம்தான் என்று கருதுகிறவர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள். அவர்களுக்குச் சொல்ல நம்மிடம் கதைகளும், சம்பவங்களும் சேகரம் ஆகிக் கொண்டேயிருக்கும். அதை தொடர்ந்து அடுத்தவர்களுக்குச் சொல்ல வேண்டும் என முடிவு செய்து கொள்வதும் ஒரு வாதைதான். அந்த வாதையுமே ஒரு போதைதான்.


ஒரு வாரம் எழுதிவிட்டால் வண்டி பிக்கப் ஆகிவிடும்.


8 எதிர் சப்தங்கள்:

ஜீவ கரிகாலன் said...

பிக்கப் ஆகட்டும்.. நம்புகிறேன்

Aravind said...

சூப்பர் சார். முடியும்போது எழுதுங்கள்.

Mahesh said...

என்ன மீண்டும் பழைய கதையா போச்சே சார்...
நீங்களூம் இதோ எழுத துவங்குவதாக சொல்லுரீங்க;
அடுத்த நாள் வந்து பார்த்தால்...
ஏமாற்றம்தான்:)

Unknown said...

உங்கள் நண்பர்கள் கூறியது போல "எதையாவது எழுதி தொலையமாட்டாரா" என்று வாரம் ஒரு முறையாவது blog பக்கம் எட்டி பார்ததது வீண்போகவில்லை.

Welcome back Mani with a bang !

சேக்காளி said...

//ஒரு வாரம் எழுதிவிட்டால் வண்டி பிக்கப் ஆகிவிடும்//
பாப்போம்

Kanthan said...

please write soon

Nanjil Siva said...

வாழ்த்துக்கள்!

போத்தி said...

Please do write!