Nov 22, 2021

தேடலுக்கான பருவம்

கொரோனா லாக்டவுன் காலகட்டம் முடிவடையும் இக்காலகட்டத்தில் நிறையப் பேர் தங்களுடைய வேலையை மாற்றிக் கொள்வதைப் பற்றி பேசுகிறார்கள்; யோசிக்கிறார்கள். கடந்த இரண்டு வருடங்களாக வீட்டில் இருந்தே பணியாற்றும் வாய்ப்பை நிறுவனங்கள் வழங்கியிருந்தன. சொந்த ஊரில் இருந்து கொள்ளலாம். வீட்டு வாடகை இல்லை; போக்குவரத்து செலவு இல்லை- நினைத்த நேரம் எழுந்து நினைத்த நேரம் பணியாற்றி வேலையை முடித்துக் கொடுத்தால் போதும். உள்ளூரில் இருந்தபடி திருமணம், இழவு, பூப்பு நன்னீராட்டு விழா வரை ஒன்றுவிடாமல் கலந்து கொள்ள முடிந்தது. 

வாரத்தில் எந்த நாளில் எந்த விசேஷத்திற்குச் சென்றாலும் தகவல் தொழில்நுட்பத்துறையினர் கணிசமாக இருக்கிறார்கள். சனி, ஞாயிறு கூட கணினிக்குள் தலையைப் புதைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு இது ஒரு வகையில் வசந்தகாலம்தான். அதனால்தான் பல நிறுவனங்கள் புதிதாக வரும் பணிகளுக்கு ஆட்களை எடுக்க முடியாமல் திண்டாடுவதாக நண்பர்கள் சொன்னார்கள். யாரைக் கேட்டாலும் ’வொர்க் ஃப்ரம் ஹோம் முடிஞ்ச பிறகு பார்த்துக் கொள்ளலாம்’என்பதுதான் பிரதானமான காரணம். 

டிசம்பர், ஜனவரி மாதங்களில் நிறுவனங்கள் பணியாளர்களை திரும்ப அலுவலங்களுக்கு அழைக்கும் சூழல் தென்படுகிறது. இனி எப்படியும் சென்னையும் பெங்களூரும் சென்றாக வேண்டும் என்பதால் தற்பொழுது வாங்கிக் கொண்டிருக்கும் ஊதியத்தைவிடவும் அதிகமாக வழங்கும் நிறுவனங்களுக்குச் செல்லலாம் என்று நினைக்கிறார்கள். அப்படி நினைப்பவர்கள் வேறு நிறுவனத்திற்கு மாறலாமா? அல்லது வேறு லைனுக்கு மாறலாமா என்று மண்டை காய்கிறார்கள்.

பொதுவாகவே படித்து முடித்து வேலைக்குச் சேர்ந்த ஆரம்பகட்டம் என்றால் முழுமையாகவே வேறொரு துறைக்குத் தாவலாம். தவறில்லை. ஆனால் தனிப்பட்ட முறையில் கேட்டால் அனுபவம் நம்மிடம் இருக்கும் போது அதனை ஏணிப்படி போல பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முழுமையாக புதிய கடலுக்குள் குதிக்காமல் ஏற்கனவே தமக்கு இருக்கும் அனுபவம் சார்ந்த துறைகளில் புதிய தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்வது, புதிய நிரல் மொழிகளைத் தெரிந்து கொள்வது, அதன் வழியாக அடுத்த கட்டத்திற்கு நகர்வது சாலச் சிறந்தது. 

ஒருவேளை முழுமையாக சலித்துப் போய்விட்ட மனநிலையில் இருந்தால் அவர்கள் தாவுவதில் தவறில்லை. ஏற்கனவே 15 ஆண்டுகள் இதில் குப்பை கொட்டியாகிவிட்டது. இனி இதில் மேலே வருவதற்கான வாய்ப்புகள் மங்கிவிட்டன என்றெல்லாம் கருதுகிறவர்கள் துணிந்து களமிறங்கலாம். 

ஆனால் வால் எது? நுனியை எப்படிப் பிடிப்பது என்பதுதான் இதில் இருக்கும் சூட்சமம். 

பல இணையதளங்கள் வழிகாட்டுகின்றன. udemy போன்ற தளங்களில் இலவச பாடத்திட்டங்கள் குவிந்திருக்கின்றன. யுடியூப் கூட நல்ல வழிகாட்டிதான். 

ஐடி நிறுவனங்களில் பத்து அல்லது பதினைந்து ஆண்டுகள் பணியாற்றி தம் துறையில் வல்லுனர் என்று நம்புகிறவர்களுக்கும் இதுவொரு மிகச் சிறந்த வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. கடந்த வாரம் ஒரு நண்பரைச் சந்தித்தேன். அவர் டேட்டா சயின்ஸ் துறையில் வித்தகர். தற்பொழுது அவர் ஆன்லைன் வழியாகப் பாடங்கள் நடத்துகிறார். இருபது மணி நேர வகுப்புக்கு பத்தாயிரம் ரூபாய். கடந்த ஆறு மாதங்களில் மட்டும் நூற்றுக் கணக்கானோருக்கு பாடம் நடத்தியிருப்பதாகச் சொன்னார். நண்பர்கள், அவர்களைச் சார்ந்தவர்கள் என்று தன்னுடைய வட்டத்தில் இருப்பவர்கள் மட்டுமே இத்தனை பேர்கள் என்றார்.

‘எனக்கும் தெரியும்; வகுப்பெடுக்கிறேன்’ என்று தொடங்குகிறவர்களிடம் தொடர்ச்சியான ஈடுபாடு அவசியம். இணையத்தில் நிரந்தர வெளிச்சம் வேண்டுமெனில் தொடர்ச்சியான உழைப்பும் அதற்கான மெனக்கெடலும் அவசியம். இணையத்தில் பாடம் எடுப்பது மட்டுமில்லை; எழுதுவது; வீடியோ பதிவிடுவது என்று எதுவாக இருந்தாலும் இது அடிப்படையான சூத்திரம். மெல்ல படிப்படியாகவே நமக்கான வட்டம் உருவாகியிருக்கும். நாம் ஏற்படுத்தும் ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளியிலும் நம்மைப் பின் தொடர்பவர்கள், தேடுகிறவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும். இடைவெளி நீள நீள நம்மை நினைப்பவர்களை விட மறந்து போனவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் ஆகிவிடும். பிறகு முதலில் இருந்து கோடுகளை போடத் தொடங்க வேண்டும். 

எனவே தொடர்ச்சியான ஈடுபாட்டுடன் வழிகாட்டுதல்களைச் செய்ய முடியும் என்று நம்புகிறவர்கள் முயற்சித்துப் பார்க்கலாம். 

துறை மாறுகிறோமோ இல்லையோ- பொதுவாக ஒன்றைக் குறிப்பிட வேண்டும். தம் துறையிலேயே தம்முடைய திறன்களைக் கூர் தீட்டிக் கொள்ளவும், புதிய துறையில் கால் நனைப்பதற்கும் தோதான கால கட்டம் இது. சந்தையில் நிறைய வாய்ப்புகள் உருவாகியிருக்கின்றன. 

டேட்டா சயின்ஸ், பிஸினஸ் இண்டலிஜென்ஸ், மெஷின் லேர்னிங் மாதிரி பல சூடான துறைகளுக்கு கணிசமான எண்ணிக்கையில் ஆட்கள் தேவைப்படுகிறார்கள். சற்று முயற்சித்தால் கூடுதலாக ஒரு திறனை வளர்த்துக் கொள்ள முடியும். வழக்கமாக அலுவலகங்களுக்குச் சென்று வரும் போது நிறுவனங்களில் ஏதாவது செமினார், பயிற்சி வகுப்புகள், கட்டாயத் தேர்வுகள் என்று அவ்வப்பொழுது செதுக்கியிருப்பார்கள். குறைந்தபட்சம் மதிய உணவின் போது, தேனீர் இடைவேளையின் போது ஒன்றிரண்டு சொற்களாவது காதுகளில் விழுந்திருக்கும். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அப்படியில்லை. மின்னஞ்சலில் வரும் வேலையை செய்து முடிப்பதோடு சரி என்று பலரும் இருந்துவிட்டது கண்கூடாகத் தெரிகிறது. ஓடாத வாகனம் போல ஒரே இடத்தில் தேங்கியவர்களின் எண்ணிக்கை அதிகம். இனி ஓரளவுக்கேனும் சர்வீஸ் செய்து கொள்வது அவசியம். அலுவலகங்கள் வழக்கம் போல இயங்கத் தொடங்கும் போது எந்தவிதத்திலும் பழையவர்கள் ஆகிவிடக் கூடாது; அப்படி பழையவர்கள் என்று ஆகிவிட்டால் அதன் விளைவுகள் என்ன என்பது குறித்து அனைவருக்கும் நன்றாகவே தெரியும். எனவே தேடலுக்கான பருவம் இது!

11 எதிர் சப்தங்கள்:

ஜீவ கரிகாலன் said...

Welcome back

NAGARATHAN said...

அடேங்கப்பா. அஞ்சு மாசத்துக்கப்புறம் வந்துருக்காரய்யா. Welcome back.

சேக்காளி said...


சேக்காளி said...

நீண்ட நாட்களுக்கு பிறகு தல யிடம் இருந்து
"வாங்க ஜெயிக்கலாம்"
பதிவு

Krishnamoorthy said...

ரொம்ப நாளாச்சு சார்!

Karthik.vk said...

மிகச் சரியான கருத்து. உயிரியல் ஆய்வாளர்களுக்கு இது பொருந்துமா எனத் தெரியவில்லை. ஏனென்றால் ஆய்வகத்தில் தான் இருந்தோம். நிறைய வெளிநாட்டு பயணங்கள் ரத்தாகின. வளரும் நாடுகள் இந்த துறையில் பின்தங்கி விட்டது என்றே தோன்றுகிறது.

Paramasivam said...

So, w.f.h is coming to end. Good. Nisaptham arrived.

Siva said...

Pls write continuously . We all here to support you.pls give update on "Adar vanam" which we made. Eager to see trees.

Murali said...

What happened Mani ?
Busy in cinema/work ?
Long time no see ..
Anyways happy to see you again 😊

Ravi said...

"இடைவெளி நீள நீள நம்மை நினைப்பவர்களை விட மறந்து போனவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் ஆகிவிடும்."

இந்த அருமையான blog செத்துப் போச்சுனு நான் முடிவு பண்ணியதுக்கும் இது தான் காரணம்... Daily updates போடறது ஒண்ணும் கடினமான விஷயம் இல்லைனு எழுதியவர் இப்ப பல மாதங்களாக தான் ஏன் எழுதுவதில்லை என்று சொல்லாமல் விட்டது வருத்தமாக இருக்கிறது - இப்படிக்கு, முகநூலில் கீழ்த்தரமான சண்டைகளில் நேரத்தை வீணடிக்க விரும்பாத ஒரு நபர். நன்றி.

NAGARATHAN said...

திரும்ப வந்துட்டீகளா.