Jun 4, 2021

பிராய்லர் கோழிகள்

தமிழ்வழியில் பொறியியல் கல்வி கற்பிக்கலாம் என்று அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் அறிவித்ததைப் பார்த்த போது மகிழ்ச்சியாக இருந்தது. அந்த உற்சாகத்தில் ஃபேஸ்புக்கில் இரண்டு பதிவுகளை எழுத ‘கூமுட்டை மாதிரி பேசாதீங்க’ என்று சிலர் கிளம்பி வந்துவிட்டார்கள். ஒருவேளை அதீத மொழி உணர்வினால் தவறாக யோசிக்கிறேனா என்று கூட யோசித்தேன். அப்படியெல்லாம் எதுவுமில்லை. 

பள்ளியில் தமிழ்வழிக்கல்வியில் பயின்று, பொறியியல் படித்து, பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றி- குறிப்பாக இந்தியாவிலேயே இருந்தவன் என்ற அனுபவங்களின் அடிப்படையில் பார்த்தாலும் கூட தாய்மொழி வழிக்கல்வியே மிகச் சிறந்தது என உணர்கிறேன்.  ஆங்கிலவழியில் பொறியியல் படித்ததாலும் தஸ்ஸூ, புஸ்ஸூ என உருட்டுகிறவனாக மாற முடியவில்லை. ஒருவேளை தமிழ் வழிக்கல்வியில் பொறியியல் படித்திருந்தாலும் கூட இதே அளவுக்கு உருட்டியிருக்க முடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. குறைந்தபட்சம் பாடங்களாவது தெளிவாகப் புரிந்திருக்கக் கூடும். 

மேல்நிலைக்கல்வியில் புரியத் தொடங்கிய கலைச் சொற்கள்- விசை, முடுக்கம், விரிகோணம், நேர்மின்வாய் - இப்படி எதுவுமே பொறியியல் படிப்பின் முதல் வருடத்தில் மிகக் குழப்பமாக இருந்தன. நேர்மின்வாய் என்ற சொல் உருவாக்கிய தெளிவை Anode என்ற சொல் கடைசி வரைக்கும் உருவாக்கவில்லை. அண்டக்கதிர் என்ற சொல்லில் இருந்த தெளிவு cosmic ray என்பதில் இல்லை. இவையெல்லாம் உடனடியாக மனதில் தோன்றுகிற சொற்கள். இப்படி ஆயிரக்கணக்கான சொற்களைப் புரிந்தும் புரியாமலும் உருப்போட்டு தேர்வெழுதி, கடைசியில் பட்டம் வாங்குவது மட்டுமே என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான பொறியியல் மாணவர்களின் ஆகப்பெரிய கனவாக மாறிவிட்டது.

பொறியியல் படிப்பில் சேர்ந்த ஆரம்பகாலத்தில் உருவாகியிருந்த கனவுகளான ஆராய்ச்சி செய்ய வேண்டும், விஞ்ஞானி ஆக வேண்டும் என்பதெல்லாம் வெற்று ஆசையாகவே முடிந்து போயின. பல பாடங்களை நன்கு புரிந்து கொள்ளாமல் அடிப்படையில் கோட்டைவிட்டிருந்தேன் என்பதைப் தெளிந்து கொள்ளும் போது மாதம் இருபதாயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்தால் போதும் என்ற மனநிலை உருவாகியிருந்தது. நான்காண்டு கால கல்லூரிப்படிப்பில் வேலைக்கு போவதற்கோ, அங்கு ஆங்கிலத்தில் உளறுவதற்காவோதான் நான் தயார் செய்யப்பட்டிருந்தேன் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

தொண்ணூறுகளுக்குப் பிறகு பல்கிப் பெருகிய பொறியியல் கல்லூரிகளின் முதன்மையான பணியே மாணவர்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு சேவகம் செய்கிறவர்களாக மாற்றுவதுதான். இதனைக் குறையாகச் சொல்லவில்லை. இதுதான் களச்சூழல். தாராளமயமாக்கலுக்குப் பிறகு இங்கு பல நூறு நிறுவனங்கள் தோன்றின. ஆட்களுக்கான தேவையை உருவாக்கின. ஓரளவுக்கு ஆங்கிலம் தெரிந்தால் போதும் என்பதுதான் அந்நிறுவனங்களின் அடிப்படையான தேவை. சிவில் படித்தாலும் சரி, மெக்கானிக்கல் படித்தாலும் சரி- வேலை கொடுத்து சி,ஜாவா சொல்லித் தந்தார்கள். அதற்காக கல்லூரிகள் போட்டி போட்டு பிராய்லர் கோழிகளை உருவாக்கிக் கொடுத்தன.

நாம் படித்ததற்கும் வேலை செய்வதற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா என்று படித்தவர்களும் யோசிக்கவில்லை; கற்பித்தவர்களும் யோசிக்கவில்லை. இப்படியாக  இன்றைய பொறியியல் கல்வியின் சூழல் குறித்து வெவ்வேறு தளங்களில் விவாதிக்க முடியும். ஆனால் இப்பத்தியில் இந்த அளவுக்கு போதும் எனக் கருதுகிறேன்.

பிராந்திய மொழிகளில் பொறியியல் கல்வியை கற்பிக்கலாம் என்ற ஏ.ஐ.சி.டி.ஈயின் அறிவிப்பானது அரசாங்கம் ஒரு பொது மனநிலையை உருவாக்க  உகந்ததாக இருக்கும். ஆங்கிலத்தை ஒரு மொழியாக மட்டுமே கருத வைக்க வேண்டும். ஆங்கிலம் மட்டுமே போதும் என்றால் பன்னாட்டு நிறுவனங்களில் குமாஸ்தா வேலையை மட்டுமே செய்து, நல்ல வருமானம் ஈட்டி, ஈ.எம்.ஐ கட்டி வாழ்க்கையை முடித்துவிடுவோம். ஒரு தலைமுறை அப்படித்தான் முடியப் போகிறது. இனியாவது விழித்துக் கொண்டு அடுத்தடுத்த தலைமுறைகளை மேம்படுத்தச் செய்ய வேண்டியதில்லையா?

இங்கு எத்தனை நிறுவனங்கள் ஆராய்ச்சியை நடத்துகின்றன? அரசு வரிச்சலுகை தருகிறது என்பதால் பெயரில் மட்டும் ஆர்&டி இருக்கும். ஆனால் அந்நிறுவனத்திற்குள் வேலை செய்கிறவர்கள் முக்கால்வாசி பேர் சம்பளப்பட்டியல் தயாரிப்பவர்களாகவும், அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு உதவுகிறவர்களாகவும்தான் இருக்கிறார்கள். பொறியியல் படித்து முடிக்கும் போது அவனுக்குள் ஒரு கர்வம் இருக்க வேண்டும். என் படிப்புக்கு இது தகுதியான வேலை/இது தகுதியற்ற வேலை என்ற பகுக்கும் தைரியம் வேண்டும். அத்தகைய தைரியமான மனநிலையை எந்தக் காலத்தில் உருவாக்கப் போகிறோம்? 

பொறியியல் கல்வியில் தாய்வழிக் கல்வியை நிதானமாக அதே சமயம் ஆழமாக நிலை நிறுத்தலாம். அது அவ்வளவு எளிதான காரியமில்லைதான். பாடங்களைத் தரமாக மொழி பெயர்க்க வேண்டும். கற்பிக்கும் ஆசிரியர்களைத் தயார் செய்ய வேண்டும். இத்தகைய பணிகளுக்கு சரியான குழு அமைக்கப்படும்பட்சத்தில் சில ஆண்டுகள் தேவைப்படலாம். அதே சமயம் வேலை வாய்ப்பில் எந்தப் பிரச்சினையுமில்லை என்ற நிலையும் உருவாக்கப்பட வேண்டும். ’வேலை கிடைக்குமா?’ என்று கேட்டுக் கேட்டே கடந்த காலத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் கொண்டு வரப்பட்ட தமிழ்வழி பொறியியலை நசுக்கினார்கள். அதனால் மனநிலை மாற்ற மிக அவசியம். இப்பொழுது பொறியியல் பாடத்திட்டத்தில் முதலாம் ஆண்டில் மட்டுமே ஆங்கிலப்பாடம் இருக்கிறது.  தமிழ்வழிக் கல்வியில் பொறியியல் பாடத்திட்டம் கொண்டு வரப்படும் போது ஆங்கிலத்தில் பேசும் முறை, எழுதும் முறை, கலந்துரையாடல், மேடையில் ஆங்கிலத்தில் பேசுவது என தொடர்ச்சியாக நான்கு வருடங்களும் கற்பிக்கப்பட வேண்டும். மொழியை விளையாட்டாக கற்றுவிடலாம் என்ற வகையில் பாடத்திட்டம் அமைக்கப்படலாம். ஆங்கிலம் பெரிய சிரமம் இல்லை என்ற மனநிலை உருவாகும் அதே சமயத்தில் பாடங்களைத் தெளிவாகப் புரிந்து படிக்கும் ஒரு பொறியாளர் கூட்டத்தை உருவாக்க முடியும்.

எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதையும் மாற்றியமைக்க வேண்டியதில்லை. ஆனால் நீண்டகால நோக்கில் தமிழ் வழியிலேயே கல்வித்திட்டத்தை உருவாக்கிவிட முடியும் என்று நம்பலாம்.

பாடங்கள் என்பவை புரிந்து கொள்வதற்கும், நம் அறிவைத் தூண்டுவதற்குமான களம். அது தாய்மொழியில் இருப்பது எந்தச் சூழலில் இருந்து வரும் மாணவனுக்கும் எளிதாக இருக்கும். அதே சமயம் மொழி ஒரு கருவி மட்டும்தான். இந்த இரண்டு அம்சத்திலும் தெளிவு இருக்க வேண்டியது அவசியம்.  ஆனால் நாம் அப்படிக் கருதுவதில்லை என்ற இடத்தில் இருந்துதான்  நம்முடைய அடிப்படையான சிக்கல் தொடங்குகிறது. 

’பையன் இங்கிலீஷ்ல பேசட்டும்’ என்பதற்காக ஆங்கில வழிக்கல்வியில் சேர்க்கும் பெற்றோர் ஒரு தரப்பு என்றால், கல்லூரியில் சிரமப்படக் கூடாது என்று ஆங்கில வழிக்கல்வியில் சேர்க்கிறது இன்னொரு தரப்பு. உயர்கல்வியில் உருவாக்கப்படும் மாற்றங்கள் மூலமாக மேற்சொன்ன இரு தரப்பு பெற்றோரையும் திருத்திவிட முடியும்.

சீனா, ஜப்பான், கொரியா, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் பல்லாண்டுகளாக தாய்மொழிக்கல்வியில்தானே பாடத்திட்டங்களை அமைத்திருக்கிறார்கள்? நம்மால் ஏன் இயலவில்லை என்றால் வேலை வாய்ப்புக்காக நாம் பன்னாட்டு நிறுவனங்களைச் சார்ந்திருக்கிறோம். அதே பன்னாட்டு நிறுவனங்கள் சீனாவில் சீன மொழியில் தங்கள் நடைமுறைகளை அமைத்திருக்கின்றன. ஜப்பானில் ஜப்பானிய மொழியில் தங்கள் நடைமுறைகளை வகுத்திருக்கின்றன. ஆனால் இந்தியாவில் ஆங்கிலமே பிரதானம் என்ற சூழல் முக்கியமான சவால். அவர்களை மாறச் சொல்ல வேண்டியதில்லை- ஆங்கிலத்தை ஒரு மொழியாகத் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்புகளையும் சூழலையும் மாணவர்களுக்கு உருவாக்கித் தருவது போதுமானது. 

வெறுமனே வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் கல்வி என்பது மூளையை மழுங்கச் செய்துவிடும். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் ஓரளவு அதைச் செய்திருக்கிறது. சுயமாக சிந்திக்க வைக்கும், ஆராய்ச்சியில் ஈடுபடும் திறன் கொண்ட, மனோ தைரியம் மிக்க இளைஞர் பட்டாளத்தை உருவாக்குவதே கல்வி முறையின் மிக அவசியத் தேவையாக இருக்கிறது. அதற்கு தாய்வழிக்கல்வி நிச்சயமாக பேருதவி செய்யும்.

8 எதிர் சப்தங்கள்:

Radha Bala said...

Well said, Mani. Language is just a tool and as long as the knowledge foundation is set, it could be delivered (or applied) with any language (tool). It is more like - once you have a good logical reasoning skills & know how to arrive at algorithm for complex code, your language of choice (C++/Java/Python) could be anything.

However, this is easier said than being done. There would be a lot of practical difficulties in implementing this. However, as you have rightly said, these things could be ironed out & solidified in a period of 5 years or so. This paradigm shift (of switching from 'language' as the key to 'knowledge' as the key) would result in lot more R&D, product design and development that would eventually lead India to be a trend-setter rather than being a follower.

Thanks.

Sheae said...

On a related note, although certain level of English language usage among the populace give some benefits to Indian economy, (from call centers to outsourcing software institutions), it also put a road block on building localized solutions similar to existing Internet behemoths.

For instance, Yandex in russia and baidu in China is become possible only by the need to use these services in local language.

China pretty much has its own version of equivalent services for every major applications from Twitter to Google.

Pon vandu said...

தமிழ் வழியில் பள்ளி படிப்பை முடித்து Diploma முதலாண்டு Physics பாடங்கள் புரிந்துகொள்ள மிகவும் கஷ்டப்பட்டேன். அறிவியலை தாய்மொழியில் கற்பதே சிறந்தது

Aravind said...

சரியாக சொன்னீர்கள் ஐய்யா.
என்னுடன் வங்கியில் சேர்ந்த 30 பேரில் 28 பேர் பொறியியல் பட்டதாரிகள் என்பது மிகவும் வேதனையானது.
நானும் ஆங்கில இலக்கியம் புரியாமல் படித்து தேர்ச்சிபெற்று சம்மந்தமில்லாத வங்கிப்பணியில் சேர்ந்தவன் தான்.
இனி மாறுதல்களை கொண்டுவருவதும் கடினம் என்றாலும் இது தொடக்கமாக இருக்கட்டும்.
சொல்லிக்கொடுக்கவும் சிறந்த ஆசிரியர்கள், ஆராய்ச்சி மணப்பாண்மையை தூண்டுபவர்கள் வேண்டும்.
இந்தியாவின் கட்டமைப்பை உயர்த்த நிறைய பொறியாளர்கள் தேவை.
அது குறித்து அடிப்படை அறிவு திருமதி திருக்குறளரசியின் நூல் மூலம் எனக்கு கிடைத்தது.
அந்நூலை கிண்டிலில் பெற்று அணைத்து பெற்றோர்களும் முதலில் படிக்கவேண்டும்.
அப்போதுதான் பொறியியலில் வெளிநாட்டு வேலைகள் மட்டுமே உள்ளன என்ற மாயை குறையும்.
இதுபோல், பொறியியலை எளிதாகவும் சுவாரசியமாகவும் அறிமுகம் செய்யும் நூல்களை தாங்கள் எங்களுக்கு பரிந்துரை செய்யுங்கள்.

அருண் பிரசாத் ஜெ said...

During my diploma engineering second year I studied and wrote exams in English I was able to take average score (75%).

During third year I studied Tamil books (in polytechnic we have books in Tamil also), and able to score good marks with good understanding (95% average).

During B.E everything in English average of 79%.



Ponmani said...

We can probably translate text books. But all the reference books and academic references will be in English along with Japanese, German, Mandarin and a few other handpicked languages.

The language can be anything but the technical terms should also be in English. For example, dhisaivegam should always be accompanied by the corresponding English term velocity.
That way our students will be able to utilize the vast majority of resources in the open domain and internet

Siva said...

Pls send photos of miya vaahi tree planting which we did

சு.செல்வக்குமார் said...

தாய்மொழிக்கல்வியின் இன்றியமையாமையை மிகச் சிறப்பாக எடுத்து விளக்கி உள்ளீர்கள். மகிழ்ச்சி அய்யா!நன்றி!

சு.செல்வக்குமார்