Apr 10, 2022

பூமர் அங்கிள்!

முழுமையாக பூமர் அங்கிள் குழுவில் சேர்ந்தாகிவிட்டது.

நேற்றிரவு நாற்பதா அல்லது நாற்பத்தொன்றா என்று கணக்குப் போட்டுக் கொண்டிருந்தேன். எத்தனை முறை கணக்குப் போட்டாலும் ‘நீ அங்கிள்தான் மாமே’ என்று கணக்கு சொன்னது. என் வயதையொத்த ஆட்களிடம் ‘தலைமுடி மட்டும் விழாம இருந்திருந்தா எனக்கெல்லாம் வயசே தெரியாது..தெரியுமா?’ என்பதுண்டு. அவர்கள் கமுக்கமாக சிரித்துக் கொண்டே ‘ஆமாமா’ என்று சொல்வது கவுண்டமணி சொல்வது போலவே இருக்கும் என்றாலும் உள்ளூர சந்தோஷம் தரக்கூடிய ‘ஆமாமா’ அது.

ஒவ்வொரு ஹார்ட் அட்டாக் செய்தி பற்றியும் கேள்விப்படும் போது ‘பக்’ என்றிருக்கும். பிறகு அவருக்கு அந்தப் பழக்கம் இருந்ததாம்; இந்தப் பழக்கம் இருந்ததாம் என்று யாராவது சொல்வார்கள்; அப்பாடா என்றிருக்கும். சமீபத்தில் கூட ஷேன் வார்னேவுக்கு இருதய அடைப்பு என்று தெரிந்தவுடன் அதே ‘பக்’தான். மேலே இருக்கும் ஆண்டவனுக்கு மனசாட்சியே இல்லை போலிருக்கிறது என்று தோன்றியது. இரண்டொரு நாட்களுக்குப் பிறகு அவருக்கு மேலே இருந்தது ஒரு ஆண்டவன் இல்லை, நான்கு ஆண்டவள்கள் என்று தெரிந்த போது சற்றே நிம்மதியாக இருந்தது. 

யாரோ எப்படியோ போகட்டும். 

நாற்பது வயதிலிருந்து ஆண்டுக்கு ஒரு முறை முழு உடற்பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என எப்பொழுதோ முடிவு செய்து வைத்திருந்தேன். எண்பது வயது ஆயுள் விதிக்கப்பட்டிருந்தால் ஆயுளில் பாதியைத் தாண்டியாகிவிட்டது. அறுபதுதான் என்றால் மூன்றில் இரண்டு முடிந்துவிட்டது. எப்படியிருந்தாலும் இது மிக முக்கியமான வயது. தத்துவம் பேசுகிற தத்துப்பித்து ஆகிவிடாமல் இருக்க கருப்பராயன் காத்தருள வேண்டும்.

வயது கூட கூட மனம் துள்ளலை விட்டுவிடுகிறது. கண்ட சுமைகளையும் சேகரித்து தலைக்கு மேலாக இறக்கி வைத்துக் கொள்கிறோம். நாம் அறியாமலே பெருஞ்சுமை அழுத்திக் கொண்டிருக்கிறது. உண்மையில் நாம் அதனை பொருட்படுத்துவதே இல்லை. எந்த மருத்துவரிடம் பேசினாலும் உணவுப்பழக்கம், வாழ்க்கை முறை எல்லாவற்றையும் விட மன அழுத்தமே நம் நோய்மைக்கு மிக முக்கியக் காரணி என்கிறார்கள். 

கூலாக இருப்பதாகத்தான் நம்பிக் கொண்டிருந்தேன். 

கொரோனா காலகட்டத்தில் ஆக்ஸிஜன் அளவை பரிசோதிக்கும் போதெல்லாம் இருதயத்துடிப்பு 100க்கு பக்கமாகவே இருந்தது. சராசரி இருதயத்துடிப்பு நிமிடத்திற்கு 72 என்றுதான் பள்ளிக்கூட பாடப்புத்தகத்தில் படித்திருக்கிறோம். ஆனால் இது ஏன் வாலில் வறண்ட ஓலையைக் கட்டிவிட்ட கழுதை மாதிரி ஓடிக் கொண்டிருக்கிறது என்று யோசனை இருந்தது. பத்து நாற்காலிகளை இடம் மாற்ற வேண்டுமெனில் இரண்டு முறை ஐந்தைந்து நாற்காலிகளாக இடம் மாற்றுவதுதானே முறை? ஆனால் ஒவ்வொரு முறையும் ஓரோர் நாற்காலி என்று எடுத்து வைத்து இருதயம் பதறிக் கொண்டிருக்கிறதாம். 

சில நாட்களுக்கு முன்பாக ஒருவர் ‘ஏன் கடப்பாரையை முழுங்கின மாதிரியே இருக்கிற?’ என்றார். 

‘இல்லையே’ என்றேன்.

பார்ப்பவர்களுக்குத்தான் தெரிகிறது. என்னையும் அறியாமல் இளமையை இழந்து கொண்டிருக்கிறேன் போலிருக்கிறது.

‘வயசாகுதுல்ல’ என்று அவர்களாகவே முடிவு செய்து தீர்ப்பும் எழுதிவிடுகிறார்கள்.

முன்பே திட்டமிட்டிருந்தது போல முழு உடற்பரிசோதனை செய்து கொண்டேன். பெரிய பிரச்சனை எதுவுமில்லை. உணவு முறையை சரி செய்து, தினசரி நடைபயிற்சி செய்து, மனதை உழப்பிக் கொள்ளாமல் வைத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர் சொல்லி அனுப்பினார். குலோப்ஜாமூன், ரசகுல்லாவை எல்லாம் பார்த்தால் உணவு முறையை எங்கே சரி செய்வது?

இன்று திருப்பதி மஹேஷ் அழைத்திருந்தார். ‘இன்னைக்கு இருந்து எழுத ஆரம்பிச்சுடுவேன்’ என்றேன். போட்டு வைத்திருந்த கோடுகள் எல்லாம் இடைவெளியில் அழிந்திருக்கின்றன. புதியதாக கோடுகளை போடத் தொடங்க வேண்டும். ஆனால் அதுதான் சந்தோஷம். எழுத்து முறை பெருமளவில் மாறியிருக்கும். பழைய எழுத்து வேகத்தைப் பிடிக்க இன்னும் சில நாட்கள் தேவைப்படும். எழுத்தில் சுவாரசியத்தைக் கூட்ட கச்சாப்பொருட்களை உள்ளே தள்ள வேண்டும். நிறையத் தகவல்களை சேகரிக்க வேண்டியிருக்கும். இணையத்தில் வீடியோக்களுக்குத்தான் மவுஸ்; எழுத்தெல்லாம் படிக்க ஆட்கள் இல்லை என்பார்கள். அது தவறான வாதம், எப்படியிருந்தாலும் ஒரு கூட்டம் இருக்கும் என்ற நம்பிக்கையில் ஓட வேண்டும். 

எழுத்தும் வாசிப்பும் மிகச் சிறந்த வடிகால். நான்கு நாவல்கள், மூன்று அபுனைவு என்று வாசித்து கடந்த இரண்டு மாதங்களாக தூர் வாரி சரி செய்து வைத்திருக்கிறேன். ஏப்ரல் 10 க்கு காத்திருந்தேன்! பேச நிறைய இருக்கிறது.

வாழ்த்துகளுக்கு நன்றி.

7 எதிர் சப்தங்கள்:

இரா.பூபாலன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வா.மணிகண்டன். நாற்பது வெறும் எண். நாற்பதுக்கும் மேல் தான் எம்.ஜி.ஆர் கதாநாயகன் ஆனாராமா.. நீங்க ஏற்கனவே எம்.ஜி.ஆர் ஆயிட்டீங்க..

வரதராஜலு .பூ said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வா.மணிகண்டன்.

ஜீவ கரிகாலன் said...

அடிபொலி..

Waiting...

Siva said...

Pls come back ji

Bakkyaraj said...

Happy Birthday Ji . I miss your writing terribly and happy to see you back. Keep writing and your style is always near to reality.
Bakkyaraj
Kottayam

Ragavachari B said...

Belated birthday wishes bro... I also turned 40 but I didn't think about it... just keep on going. Happy to see your post.

Ragav

Paramasivam said...

திரும்ப எழுத ஆரம்பித்தது மகிழ்வாக உள்ளது.
ஆயினும், இந்த மே 2வரை ஒரு மடல் தானே எழுதியுள்ளீர்கள். ஏன் இப்படி