May 24, 2021

இன்னமும் எத்தனை நாட்களுக்கு?

பத்து நாட்களுக்கு முன்பாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அத்தனை பதற்றம். ‘எங்கேயாச்சும் படுக்கை கிடைக்குமா?’ ‘ரெம்டெசிவர் மருந்து வேண்டும்’ என்பது மாதிரியான அழைப்புகளுக்கு என்ன பதில் சொல்வது? ஒன்றிரண்டு படுக்கைகள் என்றாலும் கூட ஏதாவது முயற்சிக்கலாம். உண்மையில் என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை.  கண்களைக் கட்டி காட்டில் விட்டது போல இருந்தது. எதனால் இத்தனை பேருக்கு ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கும் போதே மரணச் செய்திகள் குவியத் தொடங்கின. ஃபேஸ்புக், ட்விட்டர் மேலும் நடுங்கச் செய்தன. பயம் தொற்றிக் கொண்டது. 

கடந்த வாரத்தை ஒப்பிடும் போது இப்பொழுது தொற்றின் எண்ணிக்கையும், பரவலின் வேகமும் குறைந்துவிடவில்லை. சொல்லப் போனால் சென்னை- அதனைச் சுற்றியிருக்கும் மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் கூடுதலாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் அரசுக்கு சம்பந்தமில்லாதவர்களுக்கு வரும் படுக்கை வேண்டும், மருந்து வேண்டும் என்ற அழைப்புகள் குறைந்திருக்கின்றன. அதற்கு பல்வேறு காரணங்கள் பின்னால் இருக்கின்றன. 

அவசர அழைப்பு 104, வார் ரூம் போன்றவை செயலாற்றிக் கொண்டிருக்கின்றன. பல்வேறு இடங்களில் படுக்கைகள் அதிகரிக்கப்பட்டதும் ஒரு காரணமாக இருக்கிறது . அதைவிடவும் மிக முக்கியமான காரணமாக மருத்துவர்கள் கூறுவது- இந்த வாரத்தில் லேசான அறிகுறி தென்பட்டவுடன் மருத்துவமனைக்கு வருகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என்பதுதான். 

கடந்த பத்து நாட்களுக்கு முன்பு வரையில் அசிரத்தையாக இருந்தார்கள். காய்ச்சல் இருந்து சரியாகிவிட்டது, கொஞ்சம் அசதியாக இருந்தது ஆனால் இப்பொழுது பிரச்சினையில்லை, ஒரே ஒரு நாள் மட்டும்தான் பேதி என்று எந்த அறிகுறியாக இருந்தாலும் தானாக சரியாகிவிடும் என்றுவிட்டுவிட்டவர்கள் அதிகம். அவர்களையும் அறியாமல் உடலுக்குள் வினை விதைக்கப்பட்டு ஒரு வாரம் கடக்கும் போது நுரையீரல் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வரும் போது பலருக்கும் நிலைமை கைமீறிவிட்டது. உடனடியாக ஆக்ஸிஜன் தேவை, வெண்டிலேட்டர் தேவை என்ற நிலையை அடைந்திருந்தார்கள். மருத்துவமனைகளிலோ படுக்கைகள், ஆக்ஸிஜன் போதுமான அளவுக்கு இல்லாமல் இருந்தது. கடந்த வார சம்பவங்கள் பலரையும் மிரட்டிவிட்டது. 

இரண்டாம் அலைக்கு நாம் தயாராகவே இல்லை. தமிழகத்தில் பிப்ரவரி மாதத்திலிருந்தே தேர்தல் பிரச்சாரம்தான் நடந்து கொண்டிருந்தது. மத்திய அரசு கொரோனாவை வென்றுவிட்டதாக கிட்டத்தட்ட அறிவித்திருந்தது.  மே 5 ஆம் தேதி வரைக்கும் அரசாங்கம் என்ற ஒன்றே தமிழ்நாட்டில் இல்லை. மக்களும் கொரோனா காலம் முடிந்துவிட்டது என்று தெனாவெட்டாக இருந்துவிட்டோம். இரண்டாம் அலை என்பதெல்லாம் கட்டுக்கதை என்றும் அப்படியே வந்தாலும் முதல் அலையைப் போலவே பெரிய பிரச்சினை இல்லாமல் சரி ஆகிவிடும் என்ற நம்பிக்கைதான் பலருக்கும் வில்லனாகியிருந்தது. அந்த வில்லன் கடந்த 20 நாட்களில் புகுந்து விளையாடிவிட்டான். நிறையப் பேரைப் பறிகொடுத்துவிட்டோம். 

ஒவ்வொரு மருத்துவருமே ‘இளவயது மரணம் அதிகம்’ என்று சொன்னார்கள். நமக்குமே தெரிந்தது அல்லவா? நேரடியாக அறிமுகமான ஒருவரையாவது நாம் ஒவ்வொருவரும் பறி கொடுத்திருக்கிறோம். 

நிலைமை இன்னமும் கட்டுக்குள் வந்துவிடல்லை. இப்பொழுதும் தினசரி 35000 பேர் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். நிறைய மரணங்கள் நடக்கின்றன. ஆனால் கடந்த வாரத்தில் இருந்த குழப்பங்கள் குறைந்திருக்கின்றன. இப்போதைக்கு மருத்துவர்கள் சொல்லும் இரண்டு முக்கியமான அம்சங்களில் முதலாவது, தொடக்கத்திலேயே மருத்துவர்களை அணுகிவிடுவது உயிரிழப்பைக் குறைத்து விடுகிறது. இரண்டாவது, தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும் தொற்று ஏற்படுகிறது ஆனால் ஆக்ஸிஜன் தேவைப்படும் அளவுக்கு நிலைமை மோசமாவது இல்லை. 

படுக்கைகளை அதிகரிப்பது, ஆக்ஸிஜன் கையிருப்பு, மருந்துகளை அதிகரிப்பது என அரசு ஓரளவு சமாளித்துவிடக் கூடும். ஊரடங்கு காலகட்டம் அரசாங்கத்திற்கும், மருத்துவத்துறைக்கும் ஒரு வகையில் மூச்சுப்பிடித்துக் கொள்ள அவகாசம் அளிக்கும் காலகட்டம். மே 11 ஆம் தேதியன்று 29000 புதிய தொற்றாளர்கள் என்ற எண்ணிக்கை மே 23 அன்று 35000 தொற்றாளர்கள் என்ற எண்ணிக்கையில் இருந்தது. ஒருவேளை ஊரடங்கு இல்லாமல் இருந்திருந்தால் அநேகமாக ஒரு நாளைக்கு 50000 புதிய தொற்றுக்கள் என்ற கணக்கு வந்திருக்கக் கூடும். எத்தனை நாட்களில் எண்ணிக்கை இருமடங்காகிறது என்பது முக்கியமான கணக்கு. பனிரெண்டு நாட்களாகியும் இருமடங்கு ஆகவில்லை என்பது ஓரளவுக்கு ஆசுவாசம்தான். அப்படி எகிறியிருந்தால்  சுகாதாரக் கட்டமைப்பு நொறுங்கிப் போய் இருக்கும். கடந்த வாரத்திலேயே பல மருத்துவர்கள் கடுமையான மன அழுத்தத்தை உணரத் தொடங்கியிருந்தார்கள்.  

தினசரி வெளியாகும் புள்ளிவிவரத்தில் இன்னொரு அம்சத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் புதிய தொற்றாளர் எண்ணிக்கைக்கும், டிஸ்சார்ஜ் ஆகிறவர்களின் எண்ணிக்கைக்கும் உள்ள வித்தியாசம்தான் அந்த அம்சம். இன்று 100 பேர் புதிய தொற்றாளர்கள் உருவாகியிருக்கிறார்கள் ஆனால் பழைய தொற்றாளர்களில் 100 பேர் வீடு திரும்பிவிட்டார்கள் என்றால் அந்த மாவட்டத்தில் இருக்கும் சுகாதாரத்துறைக்கு பெரிய அழுத்தம் இருக்காது. நேற்று செய்த அதே அளவிற்கான வேலையை இன்றும் செய்தால் போதும். அதுவே 100 பேர் புதிய தொற்றாளர்கள் வந்து பழைய தொற்றாளர்களில் 50 பேர்தான் வீடு திரும்பினார்கள் என்றால் நேற்றைவிடவும் இன்று 50 பேருக்கு கூடுதலாகப் பணியாற்ற வேண்டும். தினசரி இப்படியே அதிகரித்தால் எத்தனை நாட்களுக்கு சுகாதாராத்துறை தாக்குப் பிடிக்கும்?

இப்பொழுதும் கூட ஒவ்வொரு மாவட்டவாரியாக எடுத்துப் பார்த்தால் பல மாவட்டங்கள் பயமூட்டுகின்றன. மிகக் குறுகிய காலத்தில் எண்ணிக்கை இருமடங்காகி வருகிறது.

இப்போதைக்கு ஊரடங்கு ஒரு சிறு அவகாசம். ஆனால் இதையே எத்தனை நாட்களுக்கு இழுக்க முடியும்? ஊரடங்கு மட்டுமே தீர்வாகிவிடப் போவதில்லை. மக்களின் வாழ்வாதாரம் சிதைந்து போகும். அரசு வருமானமில்லாம திணறும். அதிகபட்சம் இம்மாதக் கடைசி அல்லது அடுத்த மாதத்தில் ஒரு வாரம் வரைக்கும் கட்டுப்படுத்தி வைப்பார்கள். அதன்பிறகு நாம் கட்டுப்பாடுகளின்றி இருப்போம். 

கடந்த மாதமே கூட இறப்பு வீடுகளில் சிலர் முகக்கவசம் அணிந்திருப்பார்கள். ஆனால் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து போகும் திருமணங்களில் ஒருவர் கூட அணிந்து கொள்ளமாட்டார்கள். அத்தகைய அசிரத்தைகள் இரண்டாம் அலைக்கு முக்கியமான காரணம். இம்முறையும் கூட கொரோனா கட்டுக்குள் வரும். வந்த பிறகு நம்மவர்கள் அசிரத்தையாக இருப்பார்கள். மூன்றாம் அலை வரும். கடந்த அலையின் போது பெரியவர்களைக் குறி வைத்தது. அப்பொழுது பெரியவர்களுக்கு தடுப்பூசி போடத் தொடங்கினோம். இம்முறை 40-50களில் இருப்பவர்களை வீசியிருக்கிறது. இனி அந்த வயதையொத்தவர்களில் கொஞ்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொள்வார்கள். அடுத்த அலையில் குழந்தைகளைத் தாக்கினால் என்ன செய்வது?

இருக்கும் ஒரே வாய்ப்பு பெரும்பாலானவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதுதான். தடுப்பூசி மனிதவர்க்கத்திற்கு எதிரானது என்று பேசிக் கொண்டிருப்பவர்கள் பேசிக் கொண்டிருக்கட்டும். ஆனால் அறிவியலை நாம் நம்பலாம். நாம் தடுப்பூசி போட்டுக் கொண்டால் 70% நோய்த்தொற்றிலிருந்து தப்பிக்கும் வாய்ப்பிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த 70% நமக்கும், நம் குழந்தைகளுக்கு பாதுகாப்பைத் தருகிறோம் என அர்த்தம்தானே? தடுப்பூசியை மறுத்து நாம் வெளியே சென்று கிருமியை வீட்டுக்கு எடுத்து வந்தால் அது நம் குழந்தைகளுக்குச் செய்யக் கூடிய மிகப்பெரிய ஆபத்து இல்லையா? 

0 எதிர் சப்தங்கள்: