May 22, 2021

கல்வியில் விஷம்

2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக தோற்றுவிட்டால் தமிழகம் முழுவதும் காவி மயமாகிவிடும் என்பது பலரின் கருத்தாக இருந்தது. என்னுடைய எண்ணமும் அதுதான். ஒரு பக்கம் சிலர் தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கி நம் கவனத்தைத் திசை திருப்ப, இன்னொரு பக்கமாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல பல காரியங்களைச் செய்து வந்தார்கள். 

ஒரு சித்தாந்தத்தை புகுத்துவதற்காகவும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகவும் களமிறங்கிப் போராடுவது, மேடைதோறும் பரப்புரை செய்வது என்பதையெல்லாம் யாரும் தவறு எனச் சொல்ல முடியாது. மக்களை ஏற்றுக் கொள்ள வைத்துவிட்டால் அவர்கள் வெற்றியைத் தரப் போகிறார்கள் அதன் பிறகு நம்முடைய சித்தாந்தத்தைப் புகுத்துவது வேறு. அதுதான் ஜனநாயக வழிமுறையும் கூட. ஆனால் யாருக்கும் தெரியாமல் கொள்ளைப்புறம் வழியாகவும், சத்தமில்லாமலும் தில்லாலங்கடி வேலைகளைச் செய்து தம்முடைய சித்தாந்தங்களைப் பதியச் செய்வது என்பதுதான் மிகப்பெரிய ஆபத்து. அந்த மாதிரியான ஆபத்து தமிழகத்தைச் சூழ்ந்திருந்தது. 

சாத்தான்குளம் பெலிக்ஸ்-ஜெயராஜ் மரணத்திற்குப் பிறகுதான் காவல்துறையில் சேவாபாரதிக்கு என்ன வேலை என்று பேச்சு எழும்பியது. அதுவரைக்கும் மதச்சார்புடைய அமைப்புகள் காவல்துறையில் இணைந்திருக்கின்றன என்பது பொதுச்சமூகத்துக்கு தெரியவே இல்லை. 

கூவத்தூர் சம்பவம் வரைக்கும் கே.ஏ.செங்கோட்டையனுக்கு அமைச்சர் பதவி கிடையாது. அவரை அழைத்து திருமதி. நிர்மலா சீதாராமன் பேசினார். கே.ஏ.எஸ் கல்வி அமைச்சர் ஆனார். தன் கண்களையும் மூடிக் கொண்டார். தங்களுக்கு சாதகமான மாஃபா பாண்டியராஜன் தமிழ் வளர்ச்சித்துறைக்கு அமைச்சராக்கப்பட்டார். அமைச்சரோ தமிழும், சமஸ்கிருதமும் இரு கண்கள் என்றார் அவர். கீழடி பண்பாடு என்பது பரதப் பண்பாடு என்று ஒரே போடாகப் போட்டார். 

12 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் தமிழை விட சமஸ்கிருதம் பழமையானது என்று எழுதினார்கள். இத்தகைய வேலைகள் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருந்தன. 

நேற்றைய தினம் உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.பொன்முடி அவர்கள் சுட்டிக்காட்டினார் அல்லவா? அப்பட்டமான இசுலாமிய, கம்யூனிஸ, திமுக வெறுப்பை விதைக்கும் பாடங்களை எம்.ஏ பொலிட்டிக்கல் சயின்ஸ் பாடத்திட்டத்தில் சேர்த்திருக்கிறார்கள். இப்போதைக்கு ஒன்றுதான் வெளியாகியிருக்கிறது. இன்னமும் முழுமையாக ஆய்ந்து பார்க்கும் போதுதான் எவ்வளவு விஷம் தூவப்பட்டிருக்கிறது என்பது வெளியில் தெரியும். வெறும் நான்காண்டுகளில் நடந்த செயல்கள் இவை. அனைத்தையும் களைவதற்கே ஓராண்டு காலம் தேவைப்படலாம்.

உயர்கல்வித்துறை மட்டுமில்லை- பல்வேறு துறைகளில் இத்தகைய பணிகள் நடந்து வந்திருக்கின்றன. பள்ளிக்கல்வித்துறையிலும் பல்வேறு சீர்கேடுகளைச் செய்திருக்கிறார்கள். தமிழகத்தில் ஒவ்வொரு ஊரிலும் மேலாண்மையால் நடத்தப்படும் பள்ளி (மேனேஜ்மெண்ட் ஸ்கூல்) ஒன்று இருக்கும். ஆசிரியர்களுக்கான ஊதியத்தை அரசாங்கம் கொடுத்துவிடும். நிர்வாகத்தை இப்பள்ளிகள் நடத்திக் கொள்ளும். இப்பள்ளிகளில் பெரும்பாலானவை மிகச் சிறப்பாக செயல்பட்டவை. ஆனால் தனியார் பள்ளிகளின் அழுத்தத்தினால் இத்தகைய பள்ளிகள் சீரழிக்கப்பட்டன. இவற்றில் கிறித்துவ அமைப்புகளால் நடத்தப்படுகிற பள்ளிகள் கணிசமாக இருப்பதும் ஒரு காரணம் என்கிறார்கள். எது எப்படியோ- இன்றைக்கு பெரும்பாலான மேலாண்மையால் நடத்தப்படுகிற பள்ளிகளை பழைய பெருங்காய டப்பாக்கள் ஆக்கிவிட்டார்கள். பல மூடப்பட்டுவிட்டன.

ஆசிரியர்களிலும் நிறையப் பேர் மடை மாற்றப்பட்டார்கள். ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை உயர்த்திப் பிடிக்கும் ஆசிரியர் சங்கங்கள் உருவாக்கப்பட்டன. காவி திருவள்ளுவரை பரப்புகிற இயக்கங்களாக, புதிய தேசியக் கல்விக்கொள்கையை ஆதரிப்பவையாக செயல்படத் தொடங்கின. ஆசிரியர்களில் காவி சிந்தனைகள் கொண்டவர்கள் இருக்கலாம். ஏன் திராவிட சிந்தனை கொண்டவர்கள் இல்லையா? நாத்திகம் பேசுகிறவர்கள் இல்லையா? அப்படித்தான் காவி சிந்தனை கொண்ட ஆசிரியர்களும். அது பற்றிய விமர்சனம் எதுவும் இல்லை. ஆனால் அவர்கள் இணைந்து ஒரு சங்கமாகச் செயல்படும் போது அவர்களால் பல்வேறு பள்ளிகளில் தங்கள் வேலைகளைக் காட்ட முடிகிறது. இப்படி ஆசிரியர்கள் தங்களின் சித்தாந்த ரீதியாக சங்கம் அமைப்பது பெரும் அபாயம் விளைவிக்கும் செயல்பாடு. ஆனால் அதைச் செய்தார்கள்.  

மாணவர்கள் மட்டத்திலும் அங்கீகாரம் பெறாத பல்வேறு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. இவை அந்தந்த ஊரில் இருக்கும் பெரிய மனிதர்களால் போஷித்து வளர்க்கப்பட்டன. காவல் மாணவர்கள், பசியாற்றும் மாணவர் என்ற பல்வேறு பெயர்களில் இவை தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றன. வெளியிலிருந்து பார்த்தால் ஏதோ நல்லெண்ண இயக்கமாகத் தெரியும். ஆனால் அப்பட்டமான சித்தாந்தத் திணிப்புக்கான ஏற்பாடுகள் இவை. வாரத்தில் ஒரு நாள் அல்லது இரு நாள் மாணவர்களை அழைத்து வைத்து சிறப்புரை என்ற பெயரில் உள்ளூர் ஆட்கள் பேசுவார்கள். அதில் விஷம் தூவப்படும். வெளிப்படையாக நடைபெற்று நம்மால் எதுவுமே செய்ய முடியாத செயல்பாடுகள் இவை.

பாடத்திட்டங்கள்- ஆசிரியர்கள்-மாணவர்கள் என்று சகலவிதத்திலும் ‘பெயிண்ட்’ அடித்துவிட்டிருக்கிறார்கள். இன்னமும் வேறு என்னவெல்லாம் இருக்கின்றன என்று தெரியவில்லை. ஆசிரியர்களிடம் பேசினால் தெரிய வரும்.

பள்ளிக்கல்வித்துறைக்கு பெரும்பணி இருக்கிறது. பாடத்திட்டத்தை மாற்றியமைப்பது, நீட் எதிர்ப்பு போன்ற பெரும்பணிகளோடு சேர்த்து இத்தகைய சீரழிவுகளையும் சரி செய்ய வேண்டியிருக்கிறது.

கல்விப்பணி என்பது மாணவர்களை கற்கச் செய்வதாக இருந்தால் போதும். அவர்கள் படித்து, தெளிந்து தமக்கான பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். ஆனால் அவர்களாகப் படிக்காமல் அரசாங்கமே ஒரு கருத்தையோ சித்தாந்தத்தையோ திணித்து மூளைச் சலவை செய்வது மிக மோசமான சமூகத்தை உருவாக்கும். சிந்திக்கும் திறனற்ற- தனிமனித அல்லது சித்தாந்த துதிபாடும் அடியாட்களாக மாற்றும். அப்படி அடியாட்களை உருவாக்கிட பள்ளிக்கூடங்கள் எதற்கு? ஆனால் அதற்கான முன்னெடுப்புகள் கடந்த நான்காண்டுகளாக நடந்து கொண்டிருந்தன. நல்லவேளையாக ஆட்சி மாறியது. இன்னுமொரு ஐந்தாண்டுகள் கிடைத்திருந்தால் நிலைமை விபரீதமாகியிருக்கும்.

7 எதிர் சப்தங்கள்:

ரமாராணி said...

மாணவர்களை சிந்திக்கும் ஆற்றல் உள்ளவர்களாக வளர்த்து விட்டாலே போதும்... அவர்களே சரியான பாதையை தேர்வு செய்து கொள்வார்கள்.

சமுதாயத்தை சீரழிக்க திட்டமிட்டு காய் நகர்த்தப்படுவதை தடுக்க வேண்டும்....

நீண்ட நாட்களுக்கு பிறகு அருமையான பதிவு...

நன்றி!!!

bandhu said...

இது எல்லோருமே பல காலமாக செய்துவருவது தான். ஐ நா விருது பெட்ற வடகிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் / வைக்கம் வீரர் / மிசா சென்ற தியாகி எல்லாமே இதே போன்ற 'விஷம் தூவல்கள்' தான். எஸ் எல் பைரப்பா வின் எழுத்துக்களை படித்தால் இது நேரு காலத்திலேயே முகலாயர் ஆட்சிகளில் நடந்த அக்கிரமங்களை சொல்லியும் சொல்லாமலும் பாடத்தில் வைத்த விதம் தெரியும். முகலாய அரசர்கள் அனைவரையும் நாமெல்லாம் விலாவரியாக படித்திருந்தாலும் இந்திய அரசர்கள் பற்றி பெரும்பாலும் நம் பாடங்களில் இல்லவே இல்லை என்பதெல்லாம் தற்செயல் இல்லை!

Uma said...

அவசியம் பகிரப்பட வேண்டிய கட்டுரை.‌நன்றி மணிகண்டன்.

Pon vandu said...

தேவையான நேரத்தில் வெளியான அவசியமான கட்டுரை. காவி கதைகளை களையெடுக்கும் சரியான சூழ்நிலை அமைந்துள்ளது

kandhu said...

ஆதாரமே இல்லாத பொய்யான பல செய்திகளையும் கோர்த்து கதை சோல்லி உள்ளீர்கள் என தெளிவாகிறது பல விசயங்கள் குறிப்பாக சேவாபாரதியுடன் காவல்துறையை சேர்த்தது
உண்மையை தேடிப்பாருங்கள் ஆதாரம் கிடைக்கிறதா என்று
இதுவரை சொல்லப்பட்டதே உண்மை என ஏற்றாக வேண்டும் என சொல்ல வருகிறீர்கள் அத்தனை நல்ல முயற்சிகளையும் தவறு என்கிறீர்கள் இனி நிறைய இது போல் எழுதுவீர்கள்

Unknown said...

திரு மணிகண்டன் அவர்களூக்கு,

எழுத்தாளர் திரு ஜெயமோகனின் தளத்தின் வழியாகத்தான் உங்களைப் பற்றி தெரிந்து கொண்டேன் . உங்களின் சமுதாய பணிக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும்..

இக்கட்டுரையின் வாயிலாக உங்களுக்குள் ஒளிந்திருக்கும் "உபிஸ்" மனப்பான்மை அப்பட்டமாக தெரிகிறது. செங்கோட்டையன், மாஃபா பாண்டியராஜன் காமெடி நன்றாக இருந்தது . சிரிக்காமல் இருக்க முடியவில்லை. ராஜேந்திதர பாலாஜியையாவது இழுத்து விட்டிருந்தால் நம்பும்படியாக இருந்த்திருக்கும் .. அப்பழுக்கற்ற காமராஜரையே பொய் குற்றச்சாட்டுக்களால் தோற்கடித்தார்கள். அப்துல்கலாம் ஜனாதிபதியாவதை எதிர்த்தார்கள். வேறு ஒன்றும் சொல்வதிற்கில்லை..

வாழ்த்துக்கள் ..

Ashokan said...

திரு மணிகண்டன் அவர்களூக்கு,

எழுத்தாளர் திரு ஜெயமோகனின் தளத்தின் வழியாகத்தான் உங்களைப் பற்றி தெரிந்து கொண்டேன் . உங்களின் சமுதாய பணிக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும்..

இக்கட்டுரையின் வாயிலாக உங்களுக்குள் ஒளிந்திருக்கும் "உபிஸ்" மனப்பான்மை அப்பட்டமாக தெரிகிறது. செங்கோட்டையன், மாஃபா பாண்டியராஜன் காமெடி நன்றாக இருந்தது . சிரிக்காமல் இருக்க முடியவில்லை. ராஜேந்திதர பாலாஜியையாவது இழுத்து விட்டிருந்தால் நம்பும்படியாக இருந்த்திருக்கும் .. அப்பழுக்கற்ற காமராஜரையே பொய் குற்றச்சாட்டுக்களால் தோற்கடித்தார்கள். அப்துல்கலாம் ஜனாதிபதியாவதை எதிர்த்தார்கள். வேறு ஒன்றும் சொல்வதிற்கில்லை..

வாழ்த்துக்கள் ..