Dec 31, 2020

வந்துட்டேன்னு சொல்லு!

இரண்டு நாட்களுக்கு முன்பாக பூஜ்யம் கல்வியாண்டு என்று செய்திச் சேனல் ஒன்றில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். கல்வியாண்டு என்றில்லை- மொத்தமாகவே 2020 வருடத்தை பூஜ்யம் வருடம் என்று சொல்லிவிடலாம். மார்ச் மாதம் தொடங்கி டிசம்பர் வரைக்கும் 2020 வருடமே பூஜ்ஜியம் ஆண்டுதானே? கொரோனா வந்த ஆரம்பத்தில் எதுவும் தெரியவில்லை. வெறும் பயம் மட்டுமே கவ்வியிருந்தது. மாலையில் பால் வாங்கச் சென்றால் ஊரே அடங்கிக் கிடக்கும். ஏதோ பாழடைந்த வீட்டுக்குள் நுழைந்துவிட்டது போன்ற பிரமை உருவாகியிருக்கும். எங்கேயோ இருமல் சத்தம் கேட்டால் கூட முகம் தெரியாத பேய் ஒன்று துரத்தி வந்து கவ்வுவது போன்று பயமிருந்தது. வெளியில் சென்று வந்தால் எதையும் தொடாமல், கைகளைக் கழுவி, பிறகு குளித்து, துணிகளைத் தனியாகத் துவைத்து- நம்மில் பெரும்பாலானவர்களை இந்தச் சடங்குகள் ஒரு வழியாக்கியிருந்தது. எதற்கெடுத்தாலும் கைகளைக் கழுவுவது ஒரு மனோவியாதி. இல்லையா?

பயம் எல்லாக் காலத்திலும் பயமாகவே இருப்பதில்லை. மெல்ல நம் நெஞ்சாங்கூட்டுக்குள் நகர்த்தவே முடியாத கல் ஒன்றைத் தூக்கி வைத்துவிடுகிறது. நம்மையுமறியாமல் ஏதோவொன்று நம் குரல்வளையைப் பிடித்துக் கொள்கிறது. என்னதான் இயல்பாக இருக்க முயற்சித்தாலும்- இயல்பாகிவிட்டது போல நடித்தாலும் வீட்டை விட்டு வெளியேறாமல், அலுவலகத்துக்குச் செல்லாமல், புதிய முகங்களைக் காணாமல், எந்த மனிதனிடமும் இயல்பாக நெருங்க இயலாமல், எங்கே சென்றாலும் முகமூடியணிந்து நம் காற்றையே நாமே சுவாசித்து- எத்தனை இம்சைகள்? இனி எப்பொழுது நினைத்துப் பார்த்தாலும் எனக்கு அலர்ஜியான வருடமாக இது இருக்கும்.

2021 பிறக்கிறது. 

நேற்று இருந்ததைவிட இன்றும், இன்றைவிட நாளையும் சற்று சிறப்பாகவே அமையும் என்பதுதானே மனித மனம்? என்னதான் புரட்டி வீசினாலும் அடுத்த கணம் எழுந்துவிடுவோம் என்கிற பற்றுக்கோல்தான் நம்மை எழ வைக்கிறது. அப்படியே நம்புவோம். சொல்லிவைத்தாற்போல திடீரென்று புதிய மழை. தூறலும் துளியுமாகப் பெய்த மழை எல்லாவற்றையும் கழுவிச் சுத்தம் செய்துவிட்டது போன்ற மனநிலையைத் தந்துவிட்டுப் போயிருக்கிறது. மழை நனைத்திருந்த சாலையில் நடந்து வந்த போது குளிர்காற்று நுரையீரலை நிரப்பியது. எதனோடும் ஒட்டாத மனநிலையைத் தூக்கியெறிந்துவிட்டு பழைய இயல்புக்கு வந்துவிட வேண்டும் என்று மனதுக்குள் உந்திக் கொண்டிருந்த தருணம் கனிந்து உடைவது போன்ற எண்ணத்தை இந்த மழைக் காற்று தந்துவிட்டது. இப்படியான ஒரு தருணத்திற்குத்தான் காத்திருந்தேன்.

தொடங்கும் வருடம் புதியதாக இருக்கும் என நம்புவோம். மழையில் நனைந்த மல்லிகையைப் போல சங்கடங்கள் இல்லாத வருடமாக அமையட்டும். 

கடந்த வாரத்தில் ஒரு இறப்புக்குச் சென்றிருந்தேன். எண்பது வயது மூதாட்டி. தாயார் இறந்த சோகத்தில் இருந்தார் மகன். மகனுக்கே அறுபதைத் தொடுகிற பருவம். அமைதியாக இருந்தவர் கடந்த வாரத்தில் இறந்து போன தனது பெரியம்மாவைப் பற்றிய ஒரு சம்பவத்தைச் சொன்னார். அம்மாவுக்கு ஒருவாரம் முன்னதாக அந்த மூதாட்டி இறந்திருக்கிறார். இவரிடம் ஒரு புல்லட் உண்டு. எப்பொழுதுமே கன வேகம்தான். பெரியம்மாவை புல்லட்டில் ஏற்றிச் செல்ல வேண்டிய சூழல். 

‘உன்னை கூட்டிட்டு போய் நீ உழுந்துட்டா காலத்துக்கும் சொல்லிக்காட்டுவ’ என்றாராம். அந்த பாட்டி ‘அந்தக் காலத்துல நான் எருமை மேலயே உக்காந்துட்டு போய் இருக்குறேன்..புல்லட்டு என்ன புல்லட்டு கெட்டியா புடிச்சுக்கிறேன்’ என்றாராம். இவரும் ஏற்றிக் கொண்டு சென்றவர் வெகு தூரம் சென்று வண்டியை நிறுத்தியிருக்கிறார். பின்னால் திரும்பிப் பார்த்தால் பாட்டியைக் காணவில்லை. என்னடா இது வம்பாகிவிட்டது என்று வண்டியைத் திருப்பியவர்- புல்லட் வேறு புடு புடு என்று சத்தம் எழுப்பும் அல்லவா? ஒருவேளை பெரியம்மா அடிபட்டு முனகிக்கொண்டு கிடந்தால் அவரின் சத்தம் கேட்காதோ என்று ஓரடிக்கு ஒரு முறை வண்டியை நிறுத்தி ஒவ்வொரு இடமாக பெரியம்மா பெரியம்மா என்று அழைத்து ஏழெட்டுக் கிலோமீட்டர் தள்ளி வந்து கண்டுபிடித்தாராம்.  பெரியம்மாவைக் கண்டுபிடித்த போது இருட்டிவிட்டது. பெரியம்மா அதே இடத்தில் அடி எதுவுமில்லாமல் அமர்ந்திருந்து ‘நீ எப்படியும் வருவன்னு தெரியும்’ என்று சொன்னதாகச் சொல்லிச் சிரித்தார். அம்மாவின் மறைவையும் தாண்டி அவருக்கு சிரிப்பு வந்துவிட்டது. சாவதற்கு முன்பாக சில நாட்கள் வரைக்கும் ‘இவன் புல்லட்ல கூட்டிட்டு போய் தள்ளிட்டான்’ என்று சொன்னாராம். எல்லோரும் சிரித்துவிட்டோம். 

எவ்வளவு பெரிய துக்கத்திலும் மனிதர்கள் தமக்கான கதைகளையும், நகைச்சுவையையும் ஒளித்து வைத்திருப்பதுதான் நம் அத்தனை பேரின் வாழ்க்கையும் சுவாரசியமாக இருப்பதற்கான மூல ஆதாரம்.

உயிர் மீது பயம், நோய் மீது பயம், கிருமி மீது பயம் என்பதெல்லாம் வாழ்க்கையின் அங்கமாகிப் போனாலும் எல்லாவற்றையும் தாண்டி நம் இயல்புத்தன்மையைத் தேட வேண்டியிருக்கிறது. அலட்டல் இல்லாமல் பேருந்தில் ஏறி, நினைத்த இடத்தில் உறங்கி, கிடைக்கிற உணவை உண்டு, பார்க்க வேண்டிய மனிதர்களைப் பார்த்து எப்பொழுதும் போல பேசி, கதை கேட்கும் நாட்கள் வாய்க்கட்டும் என்று மனம் விரும்புகிறது. அப்படியொரு நிலைமை 2021 இல் கூடிய சீக்கிரம் அமையும்.

அனைவருக்கும் வாழ்த்துகள்! நலமுடன் இருப்போம். மகிழ்வுடன் இருப்போம்!

8 எதிர் சப்தங்கள்:

NAGARATHAN said...

இங்க பாருய்யா வந்துட்டாரு. Anyway புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்க மணி.

Yarlpavanan said...


தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

சேக்காளி said...

//வந்துட்டேன்னு சொல்லு//
காலியா கெடக்க அந்த வெற்றிடத்த நிரப்பவா? தல

Krishnamoorthy said...

Welcome sir,Happy New Year!
With love.

vic said...

புத்தாண்டு வாழ்த்துகள்

Unknown said...

புத்தாண்டு வாழ்த்துகள் தல.

Unknown said...

Back with a bang ! Welcome back Mani.

Subramanian said...

Wishing you also a Happy New Year