Nov 8, 2020

வருங்கால அமெரிக்க ஜனாதிபதி

என்னடா இத்தனை நாளாக ஆளையே காணோம் என்று கேட்ட, கேட்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த, இவனை சொறிந்துவிட்டால் மறுபடியும் தினசரி பாட ஆரம்பித்துவிடுவான் என்பதால் இப்படியே இருக்கட்டும் என்று நினைத்த சகலமானவர்களுக்கும் வந்தனம்!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனுக்கும் கமலா ஹாரிஸூக்கும் பணியாற்றிக் கொண்டிருந்தேன் என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள்? காஜல் அகர்வால் திருமணத்தால் சோர்வடைந்து கிடந்தேன் என்று சொன்னால் இல்லாத வம்பு வந்து சேரும் என்பதால் அதையும் சொல்ல முடியாது. எல்லோரும் நம்பக் கூடிய ஒரே காரண காரியம் கொரோனா. கொரோனா வந்தாலும் கூட 15 நாள்தான் அதிகபட்ச இடைவெளி. அதுவும் வந்தது. ஆனால் கொரோனாவா என்று தெரியாத கொரோனா. தொண்டை கமறிக் கொண்டேயிருந்தது. மூக்கு அடைத்தது. தனிமைப்படுத்திக் கொண்டேன். ஏழாவது நாளில் சுத்தமாக வாசனை போய்விட்டது. ‘துளசி வாசம் மாறினாலும் இந்த தவசி வார்த்தை மாறமாட்டான்’ என்ற சாகாவரம் பெற்ற வசனத்தைக் கூட காலி செய்யும் கொரோனா பன்னாடை! துளசியும் வாசம் மாறிவிட்டது. கற்பூரவள்ளியும் வாசம் மாறிவிட்டது. ஆனால் அதைத்தவிர வேறு எந்த தொந்தரவும் எனக்கு இல்லை. ‘நம்ம அடி தாங்கமாட்டான் பொடியன்’ என்று அதுவாகவே கருணை காட்டிவிட்டது.

ஆனால் கொரொனா காரணமாகத்தான் எழுதவில்லை என்பதும் உடான்ஸ். அது வந்து போயே ஒரு மாதம் இருக்கும். 

வேறு என்னதான் காரணம்?  வீட்டிலேயே இருந்து வேலை செய்யச் சொன்னாலும் சொன்னார்கள்- ‘சும்மா இருப்பதும் சுகம்’ என்பதை பழகிக் கொண்டேன். இங்கே ஒரு கருத்துச் சொன்னால் சண்டை வருகிறது. இன்னொருத்தர் சொல்லும் கருத்து நமக்குச் சுள்ளென்றாகிறது. கருத்துச் சொல்லாமல் கந்தாமியாக வாழவும் முடிவதில்லை. எதைப் பற்றியும் கண்டுகொள்ளாமல் நாம் உண்டு நம் வேலையுண்டு என்று இருந்து பார்த்தாலும் நன்றாகத்தான் இருக்கிறது. அதைத்தான் செய்து கொண்டிருந்தேன். எந்தப் பிரச்சினையுமில்லை. உலகம் அதன் போக்கில் இயங்கிக் கொண்டிருக்கிறது.  

நாம்தான் நினைத்துக் கொள்கிறோம்- ‘ங்கொக்கமக்கா நாம பேசலைன்னா உலகமே ஸ்தம்பித்து போய்விடும்’ என்றோ ‘நான் மட்டும் இல்லீன்னு வைய்யியியி..’ என்றோ ‘நம்மை மீறுன அறிவாளி இங்க எவன் இருக்கான்’ என்றோ- இப்படி ஏதோ ஒரு அரையும் குறையுமாக வெந்த கருத்து நமக்குள் இருக்கிறது. அப்படி கொஞ்சம் கொஞ்சமாக மண்டையில் ஏறும் அரைவேக்காட்டுத்தனத்தை வடிய விடவும் இப்படியான அவகாசம் அவசியமானதாக இருக்கிறது. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இறந்தாலும் கூட உலகம் அதன் போக்கில் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. நாம்தான் பார்த்தோமே! மரத்தில் ஒட்டியிருக்கும் வரைதான் இலைகளின் சலசலப்பெல்லாம். சற்றே வேகமாக காற்று வீசி உதிர்ந்தாலும் மக்கிப் போய்விடுவோம். அதற்குள் எத்தனை சலம்பல்கள், அழிச்சாட்டியங்கள்?

தத்துவம் எல்லாம் பேசுகிற நீ ஏன் திரும்ப வந்த? - இப்படியொரு கேள்வி வருமே. 

நிசப்தம் அறக்கட்டளையில் ஐம்பது லட்ச ரூபாய் பணம் இருக்கிறது. ஒவ்வொரு ரூபாயும் அடுத்தவர்கள் பணம். விட்டுவிட்டுப் போக முடியுமா?  இதுவொரு சக்கரம். கொஞ்ச நேரம் நிறுத்தி வைக்கலாம். ஆனால் நிரந்தரமாக நிறுத்தி வைக்கவெல்லாம் வாய்ப்பே இல்லை. இடையில் கல்வி உதவி, குழந்தைக்கு அறுவை சிகிச்சை என்றெல்லாம் தொடர்ந்து உதவிகள் தொடர்ந்தன. ஆனால் எதையும் எழுதவில்லை. இனி வரிசையாக ஒவ்வொன்றாகச் சொல்கிறேன்.

திரும்பவும் ஆரம்பிக்க ஏதாவது உசுப்பேற்றல் அமையும் என்று காத்திருந்தேன். ஜோ பைடன் வெற்றி அறிவிப்பு வந்து சேர்ந்தது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வென்றதற்கு இந்தியாவில் ஏன் இத்தனை குதூகலம் என்று யோசித்துப் பார்த்தால் ஒரேயொரு காரணம்தான் புலப்படுகிறது. உங்களுக்குப் புலப்படும் அதே காரணம்தான். அது அரசியல் காரணம்.

ஜோ பைடன் அமெரிக்க வரலாற்றிலேயே வயதான குடியரசுத்தலைவர். நாற்பது வயதில் சலித்துப் போனவர்களுக்கும், இனிமேல் என்ன வாழ்க்கையில் இருக்கிறது என்று ஐம்பதாவது வயதில் எரிந்து எரிந்து விழுகிறவர்களுக்கும் வெளிச்சம் காட்டியிருக்கிறார். 77 வயதில் உலகின் மிகப்பெரிய வல்லரசை வழி நடத்தப் போகிறார். எந்த வயதிலும் எதுவும் முடிந்து போவதில்லை. எப்பொழுது வேண்டுமானாலும் வாழ்க்கையின் புத்தம் புதிய அத்தியாயம் ஒன்று திறக்கக் கூடும். எதிர்பாராத மலர் ஒன்று மலரக் கூடும். 

அதனால்தான் ‘சும்மா இருப்பதே சுகம்’ என்று கிடக்காமல் எழுந்து பார், வருங்கால அமெரிக்க ஜனாதிபதியாக முருகேசன் கூட ஆகலாம் என்று லேப்டாப்பைத் திறந்து தட்ட ஆரம்பித்துவிட்டேன்.

எங்கே கோரஸாகச் சொல்லுங்கள்... ‘வருங்கால அமெரிக்க ஜனாதிபதி அண்ணன்....’

22 எதிர் சப்தங்கள்:

mohan said...

வருங்கால அமெரிக்க ஜனாதிபதி அண்ணன் முருகேசன்.. சே.. மணிகண்டன் வாழ்க! வாழ்க!!

சேக்காளி said...

வருங்கால அமெரிக்க ஜனாதிபதி அண்ணன்
வா மணிகண்டன் வாழ்க வாழ்க

சேக்காளி said...

//வருங்கால அமெரிக்க ஜனாதிபதி அண்ணன்//
அப்ப இன்னும் நாலு வருசம் போணுமா?

சேக்காளி said...

//உங்களுக்குப் புலப்படும் அதே காரணம்தான்//
கைராசி தான?

Shriram said...

Welcome Back

Avargal Unmaigal said...

யார் எப்படியோ தினமும் உங்கள் பதிவுகள் வருகின்றதா என்று பார்த்தவர்களில் நானும் ஒருத்தன்.

Avargal Unmaigal said...

இங்குள்ளவர்களக்கு வயது ஒரு முக்கியம் அல்ல நேற்றுக் கூட ஜோபைடன் மேடைக்கு வரும் போது எப்படி ஒடிவந்தார் அதுமட்டுமல்ல அவர் மனைவி எவ்வளவு அழகாக இருக்கிறார்.. இந்த வயதில் நம்ம ஆளுங்களை பாருங்க அதுவும் நடந்து வருவதை...

Surya said...

நீங்க பணி நிமித்தம் அண்ணாமலை டீம் கூட வேலை செய்யுறீங்களோனு சாத்தியமா சில சமயம் நினைத்தேன் :) :)

Saro said...

#BoycottManikandan
He disappointed Blog readers for months.

Unknown said...

அரசியல்வாதி யாரோ மிரட்டி அமைதியாக மாறி விட்டாரோ அல்லது வேலை போய் புதிய வேலை தேடலோ என நினைத்தேன்.

இரா.கதிர்வேல் said...

வருங்கால அமெரிக்க ஜனாதிபதி அண்ணன் மணிகண்டன் வாழ்க.

Siva said...

Welcome back. "

viswa said...

யார் பேச்சயும் கேக்காதீங்க உங்கள் வழி தனி வழி👍சொல்லிப்புட்டேனுங்க

விஸ்வநாதன்

Unknown said...

Welcome back!

NAGARATHAN said...

Welcome back. நான் மறுபடியும் வந்துட்டேன்னு சொல்லு.

NAGARATHAN said...

நான் மறுபடியும் வந்துட்டேன்னு சொல்லு.

Ganpa said...

Dharmam thalai kakkum

ADMIN said...

வருங்கால அமெரிக்க ஜனாதிபதி அண்ணன் தங்கம் பழனி வாழ்க வாழ்க.. செச்சே.. மணிகண்டன் வாழ்க வாழ்க.

அன்புடன் அருண் said...

வருங்கால அமெரிக்க ஜனாதிபதி, கொரோனா கொன்றான்/வென்றான், அண்ணன் மணிகண்டன்...!!

Unknown said...

Well come back

Ganeshtamil said...

🔥🔥🔥
ரஷ்யாவுக்கு
காலண்டர்'ல கண்டம்😂😂😂
Ithu enga pudhu blog nanbaa❤️
ஒரு வல்லரசு நாட்டுக்கே இப்படி ஒரு நிலைமை!🤣

Click to read




👉Pidicha Subscribe pannunga 😍

Unknown said...

welcome Back

வணக்கம் ,

ரொம்ப நாளாக உங்கள் பதிவை காணாமல் தேடிக்கொண்டு இருந்தேன் ,

ஏனென்றால் ஆளும் அரசு மீது அவ்வளவு நம்பிக்கை ,

Take Care