Jan 5, 2021

என்ன மனுஷன்யா!

பெங்களூரு ஏரோ எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் எனக்கு மேலாளராக இருந்தவர் மகேஷ். மகேஷ் ஜெயராமன். திருச்சிக்காரர். டெல் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது நிறுவனம் மாறிவிட வேண்டும் என்ற எண்ணம் முளைத்தது. நல்ல சம்பளம்தான். ஆனால் அந்நிறுவனத்தில் ஏகப்பட்ட பணியாளர்கள். பெருங்கூட்டம். அவ்வப்பொழுது ஆட்களை வெளியில் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். எந்த அடிப்படையில் அனுப்புகிறார்கள் என்றே புரிந்து கொள்ள முடியவில்லை. அது ஒருவகையில் பதற்றமாகவே இருக்கும். வேறு இடத்துக்கு மாறிவிடுவதுதான் உசிதம் என்று தேடத் தொடங்கியிருந்தேன். 

ஏரோ எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திலிருந்து அழைப்பு வந்தது. நேர்காணல் அடுத்த வாரம் வைத்துக் கொள்ளலாமா என்று கேட்டார்கள். வேலை தேடத் தொடங்கிய பிறகான முதல் நேர்காணல் அது. நேர்காணலுக்குத் தயாரிக்கிறேன் பேர்வழி என்று ஒரு வாரத்திற்கும் படபடப்பாகவே இருக்கும். ஒரு நேர்காணலை முடித்துவிட்டால் கொஞ்சம் ஆசுவாசமாக இருக்கும் என நினைத்தேன். என்ன மாதிரியான கேள்விகளைக் கேட்கிறார்கள் என்றும் தெரிந்து கொள்ளலாம்.

‘நாளைக்கே வரட்டுமா?’ என்று கேட்டேன்.  நேர்காணல் நடத்துகிறவரிடம் கேட்டுவிட்டுச் சொல்வதாக மதியம் அழைத்தார்கள். அடுத்த நாளே நேர்காணல் என்பதை உறுதிப்படுத்திவிட்டு, அலைபேசியில் அழைப்பதாகச் சொன்னார்கள். 

‘நானும் பெங்களூரில்தானே இருக்கிறேன்..நேரிலேயே வருகிறேன்’ என்றேன். மீண்டும் அவரிடம் விசாரித்துவிட்டு அழைத்தார்கள். அடுத்த நாள் நேர்காணல். எட்டரை மணிக்குச் சென்றுவிட்டேன். அப்பொழுதே நேர்காணல் நடத்துகிறவர் வந்திருந்தார். மகேஷ் ஜெயராமன் தன்னுடைய அணிக்கு ஆள் எடுப்பதாகச் சொன்னார். வழக்கமான முகஸ்துதிகளுக்குப் பிறகு தனியறைக்கு அழைத்துச் சென்றார். 

‘எனக்கு வேண்டித்தான் சீக்கிரமாவே வந்துட்டீங்களா?’ என்றேன். ‘இல்லை எப்பவுமே எட்டரைக்கு வந்து விடுவேன்’ என்றார். தூக்கிவாரிப்போட்டது. இந்த மாதிரியான ஆளிடம் பணி புரியத் தொடங்கினால் நமக்கும் பிரச்சினை வந்துவிடும். எட்டு மணிக்கு அலுவலகம் வரச் சொல்வார்கள் என்கிற பிரச்சினைதான். ஆனால் நேர்காணல் மிகச் சாதாரணமாக நடைபெற்றது.ஆங்கிலத்தில்தான் உரையாடினோம். நிறையக் கேள்விகளுக்கு எனக்கு பதில் தெரியவில்லை. தெரிந்தவற்றைச் சொன்னேன். சில கேள்விகளுக்கு அவரே பதில் சொன்னார். ஒயிட் போர்டில் படம் வரைந்து விளக்கினார். அநியாயத்துக்கு நல்லவராக இருக்கிறாரே என்று நினைக்கும்படியான மனிதராக இருந்தார்.  வேலை கிடைக்குமா என்று தெரியவில்லை. முடித்துவிட்டு அலுவலகம் சென்றுவிட்டேன். ஆனால் அடுத்த ஒன்றிரண்டு நாட்களில் கடிதம் வந்துவிட்டது. ஏரோ எலெக்ட்ரானிக்ஸில் சேர்ந்தேன்.

மகேஷ்தான் மேலாளர். நேர்காணல் முழுக்கவும் ஆங்கிலத்தில் பேசியவர், பணிக்குச் சேர்ந்த முதல் நாளில் தமிழில் பேசினார். அவர் தமிழர் என்று அப்பொழுதுதான் தெரியும்.  ‘எழுத்தாளர் வா.மணிகண்டன்னு மத்தவங்ககிட்ட அறிமுகபடுத்தட்டுமா?’ என்றார். என்னைப் பற்றி அவருக்கு எதுவும் சொல்லியிருக்கவில்லை. ‘உங்களுக்கு எப்படித் தெரியும்?’ என்றேன் ‘நான் நிசப்தம் படிப்பேன்’ என்றார்.  அதன்பிறகு நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டோம்.

நண்பராகவும் இருக்க முடியும்; அதே சமயம் மேலாளராகவும் இருக்க முடியும் என்பதை அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டும். ஏதாவது பிடிக்காத விஷயத்தைச் செய்துவிட்டால்  அல்லது பணியில் தவறிழைத்துவிட்டால் அருகில் வந்து ‘உங்ககிட்ட பேசணும்’ என்று தனியறைக்கு அழைத்துச் செல்வார். ‘உங்ககிட்ட பேசணும்’ என்பதை அவர் ஆங்கிலத்தில் சொன்னால் அலுவல் ரீதியிலான உரையாடல் என்று புரிந்துவிடும். சொல்ல வேண்டியவற்றையெல்லாம் அறைக்குள் வைத்து முகத்தில் அறைந்தாற்போல நேரடியாகச் சொல்லிவிடுவார். வெட்டு ஒன்று துண்டு இரண்டுதான். எதையும் மனதில் வைத்துக் கொண்டிருக்க மாட்டார். 

பேசி முடித்துவிட்டு அவர் தன் இடத்துக்குச் சென்றுவிடுவார். நமக்குத்தான் ஒரு மாதிரியாக இருக்கும். அரை மணி நேரம் கழித்து வந்து ‘ஒரு வாக் போலாமா’ என்று தமிழில் கேட்டால் அதன் பிறகு அந்தத் தவறைப் பற்றி எதுவுமே பேச மாட்டார் என்று அர்த்தம். அவர் வாசித்தவற்றை, குடும்பம் பற்றி என்றெல்லாம் நண்பர்கள் பேசுவதைப் போலவே பேசிக் கொள்வோம். சிறு நிறுவனம்தான் அது. ஆனால் ஏகப்பட்ட அரசியல் செய்வார்கள். மகேஷூக்கு எதிரான அரசியலும் வெகு அதிகம். புலம்பியிருக்கிறார். ஆனால் அடுத்தவர்களுக்கு எதிராக துளி அரசியல் கூட அவர் செய்து பார்த்ததில்லை. எல்லோரும் நன்றாக இருக்கட்டும் என்று நினைப்பதில் மகேஷ் போன்று வேறு மனிதர்களை நான் சந்தித்ததில்லை.  ‘என்ன மனுஷன்யா’ என்பது அவருக்கு நூறு சதவீதம் பொருந்தும்.

மகேஷ் அதிதீவிரமான பக்தர். மிக அதிகமாக வாசிக்கக் கூடியவர். அதிகாலை மூன்று மணிக்கு எழுந்துவிடும் பழக்கம் கொண்டவர். அவரது மனைவி முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர் என்பதால் குழந்தைகள் எழுவதற்கு முன்பாக சமையலை முடித்து வைத்துவிடுவார். நிசப்தத்தில் அவர் குறித்து பெயர் குறிப்பிடாமல் எழுதியிருக்கிறேன். அவர் படித்துவிட்டு அருகில் வந்து சிரிப்பார்.  ‘மத்தியானம்தான் சொல்லிட்டு இருந்தேன், சாயந்திரத்துக்குள்ள எழுதிட்டீங்க...வெட்டியா இருக்கீங்களா? இருங்க ஏதாச்சும் டாஸ்க் அசைன் பண்ணுறேன்’.ஆனால் அதற்காகவெல்லாம் எப்பொழுதும் அதிகப்படியான வேலை தந்ததில்லை.

அவரைப் பற்றி அதீதமாகச் சொல்வதாகத் தெரியக் கூடும். 

ஆனால் மிகக் குறைவாகச் சொல்லியிருக்கிறேன். நீங்கள் நம்புவதற்காகச் சொல்கிறேன் - எனக்கு புது வேலை கிடைத்தவுடன் வீட்டில் இருப்பவர்களிடம் கூட அது குறித்துப் பேசவில்லை. மகேஷிடம்தான் சொன்னேன். வேறு நிறுவனத்தில் வேலை வாங்கிச் செல்கிறேன் என்பதை யாராவது தன்னுடைய மேலாளரிடம் சொல்வார்களா? ஆனால் நான் சொன்னேன். ‘இங்க ஏதாச்சும் பிரச்சினையா?’ என்றார். அதெல்லாம் இல்லை என்றேன். சில கணங்கள் யோசித்துவிட்டு ‘சரிங்க...அது சரியா இருக்கும்’ என்றார். அதன் பிறகுதான் புதிய பணியை ஒத்துக் கொள்வதாக பதில் அனுப்பினேன். அந்தளவுக்கு நல்ல மனிதர். ஏரோ எலெக்ட்ரானிக்ஸின் கடைசி நாளில் ‘எப்போ வேணும்ன்னாலும் என் டீமுக்கு நீங்க வரலாம்’ என்று சொல்லி அனுப்பினார்.

அதன் பிறகும் அவருடன் தொடர்பு உண்டு. மகேஷின் அப்பா சிறுவயதிலேயே இறந்துவிட்டார். கஷ்டப்பட்டு வளர்ந்த மனிதர். தன்னுடைய கஷ்டம் எதுவும் தன் பிள்ளைகளுக்கு வந்துவிடக் கூடாது என்பதை கடந்த சில நாட்களுக்கு முன்பாக அலைபேசியில் பேசிய போது சொல்லிக் கொண்டிருந்தார். 

அவர் எப்பொழுதுமே மதிய உணவைத் தவிர்த்துவிடுவார். அதற்கு பதிலாக பெரும்பாலும் நானும் அவரும், சில சமயங்களில் வேறு சில அலுவலக நண்பர்களும் ஒரு நீண்ட நடை சென்று வருவது வழக்கம் அந்தச் சமயத்தில் வறுத்த கடலையும், கொய்யாப்பழமும் உண்பார்.  நடையின் போது கம்பராமாயணப் பாடல்களை மனப்பாடமாக ஒப்பித்து விளக்கம் சொல்வார். அன்றைய தினத்தின் அதிகாலையில் மனனம் செய்த திருக்குறளை விளக்கி நவீன இலக்கியத்தில் தொடர்பு படுத்துவார். சிலப்பதிகாரமும் மனனம் செய்து வைத்திருந்தார். ஜெயமோகனின் வெண்முரசு தொடரை வரிவிடாமல் வாசிப்பார். ஆச்சரியமூட்டும் மனிதர் அவர்!

வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய நாள் மங்களூருக்கு குடும்பத்தோடு சென்றிருக்கிறார்கள். அவர் எப்பொழுதுமே பயணத்தை விரும்புகிறவர். காரிலேயே வட இந்தியா முழுவதும் சுற்றியிருக்கிறார். அவருக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் ஏழாம் வகுப்பு படிக்கிறான். அவன் மங்களூரில் தண்ணீருக்குள் விழப்போக அவனைக் காப்பாற்ற மகேஷ் முயன்றிருக்கிறார். காப்பாற்றிவிட்டார் ஆனால் மகேஷூக்குத்தான் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார். கேள்விப்பட்ட கணத்திலிருந்து எனக்கு என்னவோ போலாகிவிட்டது. அருகாமையில் இல்லாமல் வேறொருவர் வழியாகக் கேள்விப்பட்ட மரணம் ஒன்று இவ்வளவு அலைக்கழித்தது இப்பொழுதுதான். மகேஷ் போன்ற நல்லதொரு மனிதனை இனிமேல் சந்திக்க முடியுமா என்கிற ஆற்றாமைதான் அது.

தீவிர கிருஷ்ண பக்தரான மகேஷ் ஜெயராமனை வைகுண்ட ஏகாதசியன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் இருக்கும் திருச்சிக்கு எடுத்து வந்துவிட்டார்கள். 42 வயதுதான். இந்தத் தலைமுறையில்தான் கையூன்றி மேலே எழுந்து கொண்டிருந்தார். அதற்குள் குழந்தைகளைக் கைவிட்டுவிட்டார். அவர்கள் இருவரும் நல்லபடியாக வளர வேண்டும் என மனதார விரும்புகிறேன்.

இதை எழுதக் கூடாது என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் யாருக்கு எப்பொழுது விதி முடியும் என்பதே தெரியவில்லை. அவருக்கு எதிராக அரசியல் செய்தவர்கள் கூட ஒரு கணம் கலங்கிப் போயிருப்பார்கள். மரணம் என்பதே ஒரு பாடம்தானே? எவ்வளவோ கற்றுக் கொடுத்துவிட்டுப் போய்விடுகிறது. 

19 எதிர் சப்தங்கள்:

MAHI said...

மனம் கனக்கின்றது சார்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நல்ல மனிதர்!

இறைவன் ஏன் இவ்வளவு சீக்கிரம் அழைத்துக் கொள்கிறான்?

தெரியவில்லையே!

Uma said...

மனம் வலிக்கிறது. பயமும் வருகிறது.

Aravind said...

மனம் கணக்கச் செய்கிற பதிவு.
மிக நல்ல மனிதர்களே தங்களின் இறப்பிற்கு பிறகும் இப்படிப்பட்ட நினைவுகளை விட்டுச்செல்ல முடியும்.
சிறந்த மேலாளர், தனக்கு கீழ் வேலை செய்பவர்களின் குறைகளை தனியாகவும் நிறைகளை பொதுவாகவும் சொல்லி தொழிலாளர்களின் மதிப்பையும் அதிகபட்ச திறனையும் வாங்கிவிடுவார்.
அதை மஹேஶ் சார் சிறப்பாக செய்திருப்பார்.
சிறந்த வாசிப்பு பழக்கமும் கொண்டவராலேயே இப்படி அணைவரையும் வசீகரிக்கும் வண்ணம் வாழ்ந்திருக்க முடியும்.
அவரின் இழப்பு அணைவருக்கும் பேரிழப்பே.
அவரின் குடும்பத்திற்காக வேண்டிக்கொள்வோம்.

Haridas Narayanan said...

Dear Manikandan, am moved to read this article, in fact, anyone would be moved too. Am one of his best friends and sincerely thank you for the post. " Evar pola Yarendru Oor solla vendum" ,he lived those lines
Haridas Narayanan,
Singapore

Paramasivam said...

டைம்ஸ்ல் செய்தி படித்த ஞாபகம். அப்போது அவரைப் பற்றி முழுமையாக தெரியாத்தால் கடந்து சென்று விட்டேன். ஆயினும், இப் பதிவு படித்த பின், மனது கனக்கிறது.

சேக்காளி said...

//வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய நாள் மங்களூருக்கு குடும்பத்தோடு சென்றிருக்கிறார்கள்//
இந்த வரியை வாசிக்கும் போது ஏதோ அசம்பாவிதம் நடக்க போகிறது என ஊகித்தேன்.
ஆனால் அது மரணமாக இருக்கும் என எதிர்பார்க்கவில்லை.
எத்தனையோ வழிதேடிகளுக்கு இழப்பு தான்.
அவரது ஆன்மா சாந்தியடையட்டும்

ilavalhariharan said...

இப்படித்தான் நல்லபடியாக் கொண்டு போவீங்க..... கடைசியிலே கண்ணீரை வரவச்சிடுவீங்க... ஒரு நல்ல மனிதரை காலம் ஏன் இவ்வளவு சீக்கிரம் அழைத்துக் கொள்கிறது அவருக்கு ஏன் மாரடைப்பு... காலம் மிகக் கொடுமையானது.
இளவல் ஹரிஹரன்

NAGARATHAN said...

நல்ல மனிதர்களுக்கு ஏதாவது நேரும்போது, அவர் நம் அருகில் இல்லாவிட்டாலும் அதன் அதிர்ச்சி நிச்சயம் நம்மைத் தாக்கும். இப்படித்தான் சமீபத்தில் என்னுடைய ஒரு நண்பரின் மரணம் என்னை தாக்கியது. திரு. மகேஷ் அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

subramanian said...

i am pained to read about your mentor. why god takes good people very early
wheras all the bad elements, corrupt politicians live longer life.

Sundar Kannan said...

அவரது மனைவி முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர் என்பதால் குழந்தைகள் எழுவதற்கு முன்பாக சமையலை முடித்து வைத்துவிடுவார்

எனக்கு புரியவில்லை

Unknown said...

very sorry to hear. May his soul rest in peace.

Rajan

radhakrishnan said...

இப்படியும் நல்ல மனிதர்கள் இருந்தார்கள் என்பதறிய மிக ஆறுதலாக உள்ளது. இதை அறியச் செய்த உங்கள் பதிவுக்கும் நன்றி.அவரது முடிவு
பற்றி என்ன சொல்ல.? இறைவன் விளையாட்டு.காரணம் புரியவில்லை.
ராதாகிருஷ்ணன்
மதுரை

Unknown said...

ஆழ்ந்த இரங்கல்

Deiva said...

மரணம் என்பதே ஒரு பாடம்தானே? எவ்வளவோ கற்றுக் கொடுத்துவிட்டுப் போய்விடுகிறது.

Subramanian said...

Sorry to hear such a good soul passing away so quickly. The ones left behind have to bear this pain.May his good deeds protect his children.

வழிப்போக்கன் said...

மிகவும் துயரமான பதிவு.
என் கண்களில் பல சொட்டுக் கண்ணீர் வந்துவிட்டது.
செய்தித்தாளில் படித்த போது எந்த உணர்வும் வரவில்லை. பலர் மரணங்களில் இதுவுமொன்று என்று படித்தேன்.
மணிகண்டன் இது போன்ற பதிவுகள் இதுவே முதலும் முடிவுமாக இருக்கட்டும்.
அன்புடன்

Siva said...

When will you start writing Mani ? What happened?

vic said...

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்