Sep 14, 2020

குவித்து என்ன செய்யப் போகிறீர்கள்?

இந்தியா போன்ற மிகப்பரந்த மண்ணில்  ‘எல்லாவற்றையும் ஒருங்கிணைக்கிறோம், ஒன்றாக்குகிறோம்’ என்று பேசுவது மிகப் பெரிய ஆபத்து. ஆனால் மத்திய அரசு அதைத்தான் செய்து கொண்டிருக்கிறது. அரசியல் ரீதியாக வேண்டுமானால் அவர்களுக்கு இது பலனளிக்கக் கூடும். ஆனால் பொருளாதாரம், வளர்ச்சி என்ற நோக்கில் பார்த்தால் நம்மை புதைகுழிக்குள் தள்ளப் போகிறார்கள் என்று அர்த்தம். 

இன்றைய வணிகச் சூழலில் நாமும் நம் சமூகமும் வளர்ச்சியடைய வேண்டுமானால் ‘பரவலாக்கம்’(decentralization) மிக அவசியம். முடிவு எடுப்பதும் ஒரே இடம், திட்டமிடுதலும் ஒரே இடம், வழிகாட்டலும் ஒரே இடம் என்று எல்லாவற்றையும் டெல்லியில் குவித்து வைக்கும் போது அந்த இடத்தை யாரெல்லாம் அணுக முடியுமோ அவர்கள் மட்டும்தான் வளர்ச்சியடைவார்கள்- அப்பட்டமாகச் சொன்னால் வசதியும் அதிகாரமும், அரசியல் செல்வாக்கும் கொண்ட அதானியாலும், அம்பானியாலும் அணுக முடியும். அவர்கள் வளர்ச்சியடைவார்கள். அணுக முடியாதவர்கள் சிதைந்து போவார்கள். 

விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால்- வாய்ப்புகளை வழங்குவதற்காக உலகின் கதவுகள் திறந்த போது உருவாகியிருக்கும் சூழலை வைத்து மேலேறி வந்துவிட முடியும் என்று மிகச் சரியாகப் புரிந்து கொண்டு ஆச்சரியத்தக்க அளவில் வளர்ச்சியடைந்த மாநிலம் தமிழகம். வளர்ச்சி என்றால் ஒரேயொரு ஊருக்கான வளர்ச்சி, ஒரேயொரு தொழிலுக்கான வளர்ச்சியில்லை; மிகப்பரவலான வளர்ச்சி- உணர்ச்சிப்பூர்வமாக இதைச் சொல்லவில்லை- 

தமிழகத்தில் வளர்ச்சியடைந்த பெருநகரங்கள் என்று எவற்றையெல்லாம் குறிப்பிட முடியும்? சென்னை, கோவை, திருச்சி, மதுரை தொடங்கி ஈரோடு வரைக்கும் மிகச் சிறப்பாக வளர்ச்சியடைந்த நகரங்களே பத்துக்கு மேல் தேறும். இவை தவிர மாவட்டத் தலைநகரங்கள் தொடங்கி மூன்றாம் நிலை நகரங்கள் வரை கணக்கெடுத்தால் ஐம்பதைத் தாண்டும். வளர்ச்சி என்பது கட்டமைப்பு, பொருளாதார வளர்ச்சி, தொழில் என அனைத்தையும் உள்ளடக்கியது.  இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தை வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு அந்த மாநிலத்தில் எத்தனை நகரங்கள் தமிழக நகரங்கள் அளவுக்கு வளர்ச்சியடைந்திருக்கின்றன என்று பட்டியலிடுங்கள் பார்க்கலாம். இதனைப் புரிந்து கொள்ள முடியும். பரவலான வளர்ச்சி என்று எடுத்துக் கொண்டால் மஹாராஷ்டிரா கூட தமிழகத்தைவிட பின்னால்தான் நிற்கும். 

இன்னமும் நுணுக்கமாக கொங்கு மண்டலத்தை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்- கோவையில் ஃபவுண்டரி, திருப்பூரில் பின்னலாடை, காங்கேயத்தில் அரிசி, நாமக்கல்லில் முட்டை, திருச்செங்கோட்டில் லாரி, சங்ககிரியில் லாரிப் போக்குவரத்து, ஈரோட்டில் மஞ்சள் மற்றும் நெசவு, பவானி-குமாரபாளையத்தில் நெசவு, கரூரில் கொசுவலை, சேலத்தில் சேகோ- இப்படி வெறும் நூற்றைம்பது கிலோமீட்டர் சுற்றளவில் எத்தனை தொழில்கள்? எத்தனை இலட்சம் பேர்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்குகின்றன? எத்தனை கோடி வருமான ஈட்டித் தருகின்றன? இவையெல்லாம் வெறுமனே இந்த ஊரின் தொழில்கள் மட்டுமில்லை- இந்திய அளவில் இந்தத் தொழில்களின் போக்கையே நிர்மாணிக்கக் கூடிய ஊர்கள். நாமக்கல்லில் முடிவு செய்யப்படுவதுதான் முட்டை விலை, காங்கேயத்தில் முடிவு செய்யப்படுவதுதான் அரிசி விலை, ஈரோட்டில் முடிவு செய்யப்படுவதுதான் மஞ்சள் விலை என பட்டியலிடலாம். சாதாரண வளர்ச்சி இல்லை. பிரம்மாண்டம்!

எப்படி இவ்வளவு பரவலான வளர்ச்சி சாத்தியமானது? 

வரி விதிப்பு மாநிலங்களிடம் இருந்தது. திட்டமிடும் அதிகாரம் மாநில அரசாங்கத்திடம் இருந்தது. நிதியை ஒதுக்கீடு செய்வதும், தேவையான கல்விக்கூடங்கள், பாடத்திட்டங்களை உருவாக்கும் கட்டுப்பாடும் கூட மாநிலங்களிடம் இருந்தது. எந்தத் தொழிலுக்கு எந்தச் சலுகையை அளித்தால் அது அந்தத் தொழிலில் தாக்கத்தை உருவாக்கும் என்று மாநில அரசு முடிவு செய்தது. அதற்கேற்ப வரி விதிப்பை மாற்றியமைத்தது, சலுகை அளித்தது. அந்த ஊருக்குத் தேவையான வசதியை உருவாக்கித் தந்தது.  அந்தத் தொழிலுக்குத் தேவையான கல்விக்கூடங்களை அந்தப் பகுதியில் தொடங்குவதற்கான அனுமதியை மாநில அரசாங்கம் அளித்தது. இப்படி நிறையக் காரணங்களை அடுக்க வேண்டும்.  அதனால்தான் பரவலான வளர்ச்சி சாத்தியமானது. இப்படி அரசாங்கம் உருவாக்கித் தரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு முதலாளிகள் திட்டமிட்டார்கள்- உழைப்பாளிகள் திறமையைக் காட்டினார்கள்- வேலை வாய்ப்புகள் பெருகின, வருமானம் பெருகியது அதனால் முதலாளிகள் மட்டுமின்றி மாநிலமும் சேர்ந்து வளர்ச்சியடைந்தது.

தமிழகம் வளர்ச்சியடைந்த மாநிலம் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்வதன் பின்ணணியில் இத்தகைய நுணுக்கமான காரணிகள் இருக்கின்றன. கடந்த நாற்பதாண்டு காலத்தில் தமிழகத்தில் பெரும் வளர்ச்சியை அடைந்திருக்கிறோம்- சென்னையைச் சுற்றி எவ்வளவு வளர்ச்சி? காஞ்சிபுரம் சாதாரண வளர்ச்சியா? சிவகாசியை எடுத்துக் கொள்ளுங்கள்- இன்றைக்கு திருநெல்வேலி, விருதுநகர் ஆட்கள்தானே தமிழகம் முழுவதும் வணிக வலையமைவை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்? ஒருங்கிணைந்த வளர்ச்சி என்பதுதான் இது. எல்லோரையும், அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய வளர்ச்சி, தமிழகத்தில் ஒவ்வொரு மனிதனும் ஏதாவதொரு விதத்தில் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து கொண்டிருந்தான்.

ஆனால் மத்திய அரசாங்கத்தின் குவித்தல் (Centralization) என்ன செய்கிறது? 

ஜி.எஸ்.டி வரிவிதிப்பை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்- மொத்த வரிவிதிப்பையும் மத்திய அரசாங்கம் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்கிறது. குமாரபாளையத்துக்கு என்ன தேவை என்ன என்பதை டெல்லியில் யார் யாரிடம் சொல்வது? கரூருக்கு என்ன சலுகை அவசியம் என்பதை யார் மத்திய நிதித்துறையிடம் சொல்லிப் புரிய வைப்பது? சரி, வரி விதிப்புதான் அரசாங்கம் முடிவு செய்கிறது என்றால் வசூலித்த நிதியை மாநில அரசுகளுக்குத் தருகிறதா? அதுவுமில்லை- பிப்ரவரி மாதக் கணக்குப்படி 12,000 கோடியை மத்திய அரசாங்கம் தமிழகத்துக்குத் தர வேண்டும்; அவர்களாக ஒரு வரியைப் போட்டு வசூலையும் செய்து கொள்கிறார்கள், வசூலித்த தொகையை மாநிலத்துக்கும் தருவதில்லை என்றால் மாநில அரசாங்கம் எந்தவிதமான வளர்ச்சித் திட்டங்களை உருவாக்க முடியும்?

மாநில அதிகாரத்தை மத்திய அரசாங்கம் தன்னிடம் குவித்துக் கொள்வதால் உருவாகும் சிக்கல்களின் ஒரு நுனிதான் இது. இதன் விளைவுகளை கடந்த நான்கைந்து வருடங்களில் உணரத் தொடங்கிவிட்டோம். ஒவ்வொரு தொழிலும் நசுங்கிக் கொண்டிருக்கின்றன.

உலகமயமாகிவிட்ட காலத்தில் பரவலாக்கம் எவ்வளவு முக்கியமானது என்பதை ஓர் எளிய உதாரணத்தோடு இன்னமும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.

90களுக்கு முன்பாக வெறும் தூர்தர்ஷன் மட்டும் இருந்த காலம். அனைத்து வணிக நிறுவனங்களாலும் தூர்தர்ஷனில் விளம்பரம் கொடுப்பது சாத்தியமில்லை. விளம்பரக் கட்டணமும் அதிகம், விளம்பரத்தை உருவாக்கும் வசதிகளுமில்லை. அமுல், ஹிந்துஸ்தான் லீவர் மாதிரியான பெரிய நிறுவனங்கள் மட்டுமே விளம்பரப்படுத்துவார்கள். மற்ற நிறுவனங்கள் தங்களால் முடிந்த அளவுக்கு உள்ளூரில் ஆட்டோ வைத்து, செய்தித்தாள் விளம்பரங்களைச் செய்து கொண்டிருந்தார்கள். ஜாடிக்கு ஏற்ற மூடி என்று சிறு வருமானத்தில் வணிகம் நடந்து கொண்டிருந்தது. 

அப்படியான தருணத்தில் தனியார் சேனல்கள் அனுமதிக்கப்பட்டன. அதுதான் பரவலாக்கம் என்பது.  தமிழில் சன், ராஜ், விஜய் மாதிரியான சேனல்கள் நுழைந்தன. சக்தி மசாலா, பொன்வண்டு சோப்பு தொடங்கி சரவணா ஸ்டோர்ஸ் வரைக்கும் விளம்பர வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார்கள். ஆரம்பத்தில் சன் உட்பட தனியார் தொலைக்காட்சிகளில் விளம்பரத் தொகை மிகக் குறைவு- எனக்குத் தெரிந்து செங்கல் நிறுவனம் கூட விளம்பரம் செய்தார்கள். தங்களாலும் விளம்பரம் செய்வது சாத்தியம் தனியார் வணிக நிறுவனங்கள் விளம்பரம் செய்வதற்கான வழிவகைகளைத் தேடினார்கள். விளம்பர ஏஜென்ஸிகள் பெருகின. விளம்பரத் தயாரிப்பு, டிசைன், மாடலிங் என்று நம் கண்ணுக்குத் தெரியாமல் ஒரு துறை வளர்ந்தது என்றால் நம் கண்ணுக்குத் தெரிந்து தனியார் சேனல்கள் வளர வளர அதன் மூலமாக நிறுவனங்கள் வணிக நிறுவனங்கள் தங்கள் வணிகத்தை பெருமளவில் வளர்த்துக் கொண்டன.

தனியார் சேனல்களின் வளர்ச்சிக்கான வரைபடத்தையும் (Graph), சக்திமசாலா தொடங்கி சரவணா ஸ்டோர்ஸ் வரைக்குமான நிறுவனங்களின் வரைபடத்தையும் வரைந்து பார்த்தால் 99% பொருந்தும். அந்நிறுவனங்கள் உழைத்தன, திட்டமிட்டன- எல்லாமும் இருந்தாலும் அதனை மக்களிடையே கொண்டு போய்ச் சேர்க்கும் வாய்ப்புகள் உருவாக்கித் தரப்பட்டதை மிக முக்கியமான அம்சமாக எடுத்துக் கொள்ள வேண்டும். உடைக்க உடைக்கத்தான் வளர்ச்சி கிட்டும்.  பரவலாக்கம் என்பதற்கான ஓர் எளிய உதாரணமாக இதனைச் சுட்டிக்காட்டியிருக்கிறேன். 

பரவலாக்கம் என்பது தமிழகத்தில் எல்லாவிதத்திலும் நடைபெற்றிருக்கிறது. போக்குவரத்துத்துறையை மண்டலவாரியாகப் பிரித்தார்கள்- பஸ் போக்குவரத்து இல்லாத வழித்தடமே இல்லை. எந்த ஊரிலிருந்தும் இன்னொரு ஊருக்கு அதிகபட்சம் ஓரிரவில் சென்று அடைந்துவிட முடியும். இப்படி ஒவ்வொரு துறையிலும் மண்டலங்கள்- வாரியங்கள் என பரவலாக்கத்தை மிக விரிவாக அலச முடியும். 

வளர்ச்சிக்கான அடிப்படையான சூத்திரம் இது! கடந்த முப்பது-நாற்பதாண்டு காலத்தில் எவையெல்லாம் நம் வளர்ச்சிக்குக் காரணிகளாக இருந்தனவோ, எவையெல்லாம் தாராளமயமாக்கல் சூழலில் நமக்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருமோ அவற்றையெல்லாம் புரிந்து கொள்ளாமல் டெல்லியில் கொண்டு போய்க் குவிக்கிறார்கள். இந்தியா முழுமைக்கும் ஒரே வரி, இந்தியா முழுமைக்கும் ஒரே மொழி, இந்தியா முழுமைக்கும் ஒரே கல்வித்திட்டம் என எல்லாவற்றையும் குவிப்பது வாய்ப்புகளைச் சுருக்கும், இதுவரையிலான வளர்ச்சியைச் சிதைக்கும். 

இவற்றை எதிர்ப்பது என்பது அரசியல் எதிர்ப்பு மட்டுமில்லை- நம் எதிர்காலத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு எதிர்ப்பதுதான். 

தேசியக் கல்விக் கொள்கையால்- ஜி.எஸ்.டியால்- சுற்றுச்சூழல் அறிவிக்கையால் நீண்டகால விளைவுகள் என்ன என்பதை பரவலாகப் புரிய வைக்க வேண்டிய அவசியமும் நமக்கு இருக்கிறது. எங்களுக்கான உரிமைகளை எங்களிடம் தாருங்கள் என்று உரக்கக் குரல் எழுப்ப வேண்டியிருக்கிறது.

14 எதிர் சப்தங்கள்:

ponniinselvan said...

Current central government and its policies are anti-India, pro-gujarati and marwadi business.

Every policy of this BJP Company (not government) should be opposed tooth and nail.

From Methane extraction to NEET to GST Implementation that destroyed small business and paved for large corporations to have free hand in policy making and implementation is against the constitutional rights of an ordinary citizen.

This government thinks big business is the way forward (Ambani and Adani are the fund managers or sponsors of this government) while in actual scenario small business is the key for highly populated country like India where everyone makes a decent living out of such small business.

Surya said...

மிக சிறந்த கருத்து .....

கரூர்பக்கம் சென்றால நம்ம அண்ணாமலை கிட்ட printout குடுங்க மணி

சேக்காளி said...

வாம
// எந்தத் தொழிலுக்கு எந்தச் சலுகையை அளித்தால் அது அந்தத் தொழிலில் தாக்கத்தை உருவாக்கும் என்று மாநில அரசு முடிவு செய்தது. அதற்கேற்ப வரி விதிப்பை மாற்றியமைத்தது, சலுகை அளித்தது. அந்த ஊருக்குத் தேவையான வசதியை உருவாக்கித் தந்தது//
சேக்காளி
எந்தத் தொழிலுக்கு எந்தச் சலுகையை அழித்தால் அது அந்தத் தொழிலில் தாக்கத்தை உருவாக்கும் என்று மத்திய அரசு முடிவு செய்தது. அதற்கேற்ப வரி விதிப்பை மாற்றியமைத்தது, சலுகைகளை அழித்தது. அந்த ஊருக்குத் தேவையான வசதியை நாசமாக்கித் தந்தது.
காரணம் தமிழர்களாகிய நாம் அவர்களுக்கு எதிரிகள்.
காரணம் நம் வளர்ச்சி அவர்களுக்கு பொறாமையை ஏற்படுத்துகிறது.

NAGARATHAN said...

மிகத் தீர்க்கமான சிந்தனை. ஆனால், இது அத்தனையும் செவிடன் காதில் ஊதிய சங்குதான். மாநில அரசும் தங்கள் தவறுகளுக்கு முட்டுக்கொடுக்கிற வேலையை மட்டுமே செய்கிறது. மொத்த இந்தியாவையும் சுருட்டி அதானி/அம்பானி சட்டைப் பைக்குள் அடக்கிவிட்டுதான் இவர்கள் ஓய்வார்கள் - மக்கள் விழித்துக் கொள்ளாதவரை. (ஒரு மாசம் கழிச்சு வந்தாலும் நச்சுனு சொல்லிருக்கீங்க)

$id said...

I was little worried about why no posts in nisaptham. Glad to hear from you brother.

Unknown said...

தமிழகத்தின் ஒவ்வொரு சிறு நகரமும் தனக்கான ஒரு சிறப்பான தொழிலை கொண்டுள்ளது... பொள்ளாச்சி தேங்காய் சார்ந்த தொழில், சோமனூர் விசைத்தறி, மேட்டுப்பாளையம், ஒட்டன்சத்திரம் காய்கறி, தேனி, போடி, திண்டுக்கல், கோவில்பட்டி என பல ஊர்களில் அவர்களின் தொழில்... பட்டியல. பெரியது

Paramasivam said...

இதில் மட்டும் உங்கள் கருத்துடன் என்னால் ஒத்துப் போக முடியவில்லை. காமராஜர், வெங்கட்ராமன், சுப்பிரமணியம் போன்ற அன்றைய மத்திய ஆளும் கட்சியில் இருந்த தலைவர்களால் சிறந்த பல திட்டங்களை தமிழகம் பெற்றது. அத்துடன், தமிழனின் ஆத்மார்த்தமான உழைப்பு இணைந்தது. டாஸ்மார்க் திறந்த பின் தான் தமிழகம் மாறுதல் அடைந்தது. அத்துடன், மத்திய அரசுடன் மோதல் போக்கும் அதிகரித்தது. நமது தமிழகத்தை முன்னேற்ற முதலில் திட்டங்களை பெறுவோம். டாஸ்மார்க்கை படிப்படியாக மூடி, தொழில்வளத்தை பெருக்குவது தான் இப்போதைக்கு நல்லது.

BalajiS said...

"பிப்ரவரி மாதக் கணக்குப்படி 12,000 கோடியை மத்திய அரசாங்கம் தமிழகத்துக்குத் தர வேண்டும்; அவர்களாக ஒரு வரியைப் போட்டு வசூலையும் செய்து கொள்கிறார்கள், வசூலித்த தொகையை மாநிலத்துக்கும் தருவதில்லை ".

Summa adichu vidunga.. The current tussle is about the compensation agreed when GST was introduced. And its fair that states expect the amount. But centre is not withholding GSX tax. Only chennai and coimbatore are improving. backward districts remain backward only... After GST, the logistics and tax has become very simple and transparent. Now only people know how much tax they pay. Before GST no one knows the tax component of a product price.

எம்.ஞானசேகரன் said...

அருமையான பதிவு

Itsdifferent said...

"ஜி.எஸ்.டி வரிவிதிப்பை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்- மொத்த வரிவிதிப்பையும் மத்திய அரசாங்கம் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்கிறது. குமாரபாளையத்துக்கு என்ன தேவை என்ன என்பதை டெல்லியில் யார் யாரிடம் சொல்வது? கரூருக்கு என்ன சலுகை அவசியம் என்பதை யார் மத்திய நிதித்துறையிடம் சொல்லிப் புரிய வைப்பது?"
Aren't there local Offices of GST which identify products, determine the proposal for tax percentages? That is on the bureaucratic side, and what is the political side like the MP or MLA doing? Shouldnt they be representing their constituency, meet the the right authorities, ministers locally and in Delhi, to highlight the issues and bring relief?

Kavipriya said...

Nice Article Mani

Giridharan C B said...

Decentralisation only leads to more curruption and inequal growth in populous country like india....

Black Money is mainly generated by this

Pera writings said...

நிதர்சனம்

Siva said...

Sir what happened ? Why no posts? Are you okay?