Jul 21, 2020

சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடுகள்

புதிய தலைமுறையில் சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடுகள் தேவையா என்ற விவாதத்தில் கலந்து கொண்டேன். நெறியாளாராக திரு.கார்த்திகேயன் இருந்தார். திரு. ராமசுப்பிரமணியனும் நானும் கருத்தாளர்கள். வலதுசாரி கருத்தாளர் என்ற டைட்டிலுடன் அவர் வந்திருந்தார். மென்பொறியாளர் என்ற தொப்பியைக் கழற்றிவிட்டு வலைப்பதிவராக நான் கலந்து கொண்டேன்.

சமூக வலைத்தளங்களில் கட்டுப்பாடுகளை எப்படிச் செயல்படுத்த முடியும் என்று எனக்குப் புரியவில்லை அதில் இரண்டு சிக்கல்கள் இருக்கின்றன-முதலாவதாக எவையெல்லாம் கட்டுப்படுத்தப்பட  வேண்டும் என்று வகைப்படுத்துவதே பெரிய சிரமம். ஒருவேளை பெருமொத்தமாக வகைமைக்குள் கொண்டு வந்தாலும் தொழில்நுட்ப ரீதியாக எப்படிச் செயல்படுத்துவது என்பதில் பெரிய கேள்வி இருக்கிறது.  டிக்டாக் மாதிரியாக மொத்தமாக தடை செய்யலாமே தவிர, வடிகட்டுவெதெல்லாம் வாய்ப்பில்லை.

இந்தியாவில் இருந்து கொண்டு இவற்றையெல்லாம்  பேசக் கூடாது, எழுதக் கூடாது என்று சொல்லலாம். ஆனால் வெளிநாட்டிலிருந்து அதே கருத்தை எழுதினால், பேசினால் என்ன நடவடிக்கை எடுக்க இயலும்? பதில் சொல்ல வேண்டும் என நினைக்கும் இந்தியர்கள் என்ன செய்ய வேண்டும்? ஒருவேளை வி.பி.என் வைத்துக் கொண்டு இந்தியாவிலிருந்தே எழுதினால் என்ன செய்வார்கள்? ஒருவேளை இதற்கெல்லாம் வழி கண்டுபிடிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆனால், இதில் இன்னொரு அம்சத்தையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். கட்டுப்பாடு, சென்சார் என்றெல்லாம் இறங்கினால் யாருக்கு பலம் இருக்கிறதோ, யார் ஆள்கிறார்களோ அவர்களின் சித்தாந்தங்கள் அனுமதிக்கப்படும். யார் வலு குன்றி இருக்கிறார்களோ அவர்களின் சித்தாந்தங்கள், கருத்துகள் கட்டுப்படுத்தப்படும். இது கருத்துகளைச் சொல்ல தனிமனிதனுக்கு இருக்கும் சுதந்திரத்தைப் பறிப்பது ஆகாதா?

ஊடகங்களில் தரப்படுகிற அரசியல் அழுத்தங்கள் சமூக ஊடகங்களிலும் தருவது ஏற்றுக் கொள்ள இயலாதது. சமூக ஊடகங்கள் தனிமனிதர்களுக்கான கருத்து வெளியை உருவாக்குகின்றன. குரல் எழுப்பவே வாய்ப்பில்லாதவர்களின் குரல்கள் கூட இங்கே ஒலிக்கின்றன. இதில் அதிகாரம் மிக்கவர்கள் தலையிடுவது முறையாகாது. 

ஆனால் வசை பாடப்படுகின்றனவே, தனிமனிதத் தாக்குதல்களில் ஈடுபடுகிறார்களே என்று சுட்டிக் காட்டுவார்கள். இதற்கு என்ன வழி என்று கேட்பார்கள். ஒரே வழிதான் - காவல்துறை, சட்டம் ஆகியவற்றை காலத்திற்கேற்ப மாற்றிக் கொள்ள வேண்டும். யாராக இருந்தாலும் தயவு தாட்சண்யமில்லாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வழிமுறைகளைச் செயல்படுத்த வேண்டும். இதைச் செய்ய முடியாத ஆட்சியாளர்கள்தான் ‘எல்லோருடைய கழுத்தையும் நெருக்கி பிடித்துக் கொள்ளலாம்’ என்கிறார்கள்.

சாலையில் சென்று கொண்டிருக்கும் போது என்னை ஒருவன் திட்டுகிறான் என்றால் எனக்கு இருக்கும் இரண்டு வழிகளில் ஒன்று அதை நான் கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாம் அல்லது காவல்துறையிடம் சென்று புகார் அளிக்கலாம். அதைத்தான் சமூக வலைத்தளத்திலும் செய்ய இயலும். அப்படி ஒருவன் புகார் எடுத்துக் கொண்டு வரும் போது அலைகழிக்காமல் உடனடி நடவடிக்கைகளை எடுக்கும் வழிமுறைகளை, சட்டத்தின் முன்பாகக் கொண்டு வரும் செயல்திட்டங்களைச் செயல்படுத்தினால் போதும். அதை விடுத்து ‘யாருமே திட்டக் கூடாது’ என்று சட்டம் கொண்டு வந்தால் எல்லாம் சரியாகிவிடுமா என்ன? சாலையில் யாருமே சண்டை போடக் கூடாது என்பது மாதிரிதான். சண்டை நடக்கும். சண்டையில் ஒருவன் பாதிக்கபட்டால் அவன் நியாயம் கேட்டு காவல்துறையிடம் படியேறுவான். அதே செயல்முறைதான் சமூக வலைதளங்களிலும் செயல்படுத்தப்பட வேண்டும்.

இன்றைக்கு தம்மிடம் ஆட்சியும் அதிகாரமும் இருப்பவர்கள் ‘ஆமாம் கட்டுப்பாடு தேவை’ என்பார்கள். ஏனென்றால் அதிகாரம் அவர்களிடம் இருக்கிறது. அவர்களால் தமக்கு ஆகாதவற்றைக் கட்டுப்படுத்திவிட முடியும் என்ற நம்பிக்கை இருக்கும். நாளை வேறொரு கட்சி ஆட்சிக்கு வரும் போது ‘அய்யோ விமர்சனம் செய்ய இயலாமல் போய்விடும்’ என்று அவர்களே சொல்வார்கள். இவையெல்லாம் சூழல் தமக்கு சாதகமாக இருக்கிறதா என்பதைப் பொறுத்து முன் வைக்கப்படுகிற கோரிக்கைகளாகத்தான் கருதுகிறேன். அதிகாரம் தன்னிடம் இருக்கும் போதே தமக்கு எதிரான குரல்களை அடக்கிவிட வேண்டும் என்கிற பதற்றமாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்கள் கருத்துக்களங்கள். இன்றைக்கு பெருமளவிலான விவாதங்களை முன்னெடுக்க அவைதான் பயன்பட்டுக் கொண்டிருக்கின்றன. அங்கே கட்டுப்பாடு வேண்டும் என்று குரல் எழும்பி அதற்கான வாய்ப்புகள் உருவானால் ஒரு தலைப்பட்சமான நிலைமை சமூக வலைத்தளங்களிலும் ஏற்படும். பலம் பொருந்தியவன் தனது குரலை அழுத்தமாக பதிவு செய்வான். பலம் குன்றியவன் பேசுவது விதிகளுக்கு முரணானதாக கருதப்படலாம், சட்டத்திற்கு எதிரானதாக எடுத்துக் கொள்ளப்படலாம். 

இது தகவல் யுகம். ‘இன்பர்மேஷன் எரா’ - ஒவ்வொரு தொழில்நுட்பம் வளரும் போதும் சமூகத்தின் ஏதாவதொரு பகுதியில் இருக்கும் எளிய மனிதர்கள் அதன் மூலம் பலனடைவார்கள். அப்படி பலதரப்பினரும் பயன்படுத்தப்படும் போது உண்டாகக் கூடிய அதிர்வுகள் இவை. நாளை நானும் கூட பாதிக்கப்படலாம். ஆனால் ஒன்று- எல்லோரும் பேசட்டும் என்பதுதான் நம் நிலைப்பாடாக இருக்க வேண்டும். ஆனால் தனிப்பட்ட ஒருவன் கடுமையாகத் தாக்கப்படும் போது அரசாங்கம் அவனது குரலைக் கேட்க வாய்ப்பினை உருவாக்கித் தர வேண்டும்.  இந்தியா மாதிரியான நாடுகளில் அது சாத்தியமா என்று தெரியவில்லை. 

ஒரு சமூகம் பண்பட்டு மேலே வரவும், புரிதல்களை வளர்த்துக் கொள்ளவும் உரையாடல்கள் அவசியம். சகலரும் பேச வேண்டும். அப்படியான சூழலை சமூக வலைத்தளங்கள் உருவாக்கித் தந்திருக்கின்றன. 

பண்படுதலும் புரிதலும் கச்சடாக்களை தன்னியல்பாக வெளியேற்றக் கூடும். 

வாய்ப்பிருப்பவர்கள் விவாதத்தைப் பார்த்துவிட்டு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன். சொல்ல விரும்பியதை ஓரளவுக்குச் சொல்லியிருக்கிறேன். நன்றி.


2 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

நீங்கள் சொன்னது போல் இதை கட்டுப்படுத்துவது என்பதெல்லாம் இனி சாத்தியமே இல்லை.
அப்போதைக்கு ப்ரசனையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு "இதோ தடை"
என அறிவிக்கலாம்.

Unknown said...

நன்றாக பதிவு செய்துள்ளீர்கள்.. நன்றி.. "ஒரு சமூகம் பண்பட்டு மேலே வரவும், புரிதல்களை வளர்த்துக் கொள்ளவும் உரையாடல்கள் அவசியம். சகலரும் பேச வேண்டும். அப்படியான சூழலை சமூக வலைத்தளங்கள் உருவாக்கித் தந்திருக்கின்றன." உண்மையான வார்த்தை...!💐💐💐🤝