Jul 17, 2020

பறக்கத் தெரியுமா?

சிறு வயதில் ஆயா சொன்ன ஒரு கதை நினைவில் இருக்கிறது. ஏதோவொரு ஊரில் ஒரு சாமியார் தோளின் இரு பக்கங்களிலும் இரண்டு முறங்களைக் கட்டிக் கொண்டு மலை மீது இருந்து எட்டிக் குதித்தார்; கொஞ்ச தூரம் பறந்து போய் ஒரு குளத்தில் இறங்கினார். அதன் பிறகு அவர் மேலே வரவில்லை என்பது மாதிரியான கதை. முறத்தைக் கட்டிக் கொண்டு திண்ணை மீதிருந்து எட்டிக் குதித்துப் பார்த்துவிட வேண்டும் என்று வெகு காலம் திட்டமிட்டுக் கொண்டிருந்தேன். ஒரு சமயம் அப்படியொரு சம்பவத்தை நடத்தி முட்டியையும் கிழித்துக் கொண்டேன்.  அது போகட்டும்.

இப்பொழுது யோசித்துப் பார்த்தால் அமத்தா, ஆயாவிடம் இத்தகைய கதைகள் நிறைய இருந்தன. வேமாண்டம்பாளையத்தில் ஒரு பழங்குளத்தில் கல்வெட்டு இருப்பதாகவும் அந்தக் கல்வெட்டைப் படித்துப் புரிந்து கொண்டால் அது மாபெரும் புதையலுக்கு வழிகாட்டும் என்றும் அமத்தால் சொல்வார். ஒருவேளை படிக்க முடியாவிட்டால் அந்த இடத்திலேயே பேய் அடித்துக் கொன்றுவிடும் என்றும் சேர்த்துச் சொன்னதால் அந்தப் புதையல் பற்றி யோசிக்கவே இல்லை. 

அந்தத் தலைமுறை ஆட்கள் சொல்லிக் கேட்ட கதைகள் அத்தனையும் புனைவு மாதிரியே இருக்கும். ஆனால் நடந்தும் நடக்காத மாதிரியாக ஏதோவொரு உண்மைத் தன்மை ஒட்டியிருப்பதாகவும் தோன்றும். கோவில் வாசலில், ஊரடியில் கதைகளைச் சொல்ல ஆட்கள் இருந்தார்கள். அதைக் கேட்கவும் சில காதுகள் தயாராக இருந்தன. வெகு காலத்திற்குப் பிறகுதான் ஆயா சொன்னது உண்மையிலேயே எங்கேயோ நடந்திருக்கிறது எனத் தெரிய வந்தது. 

நாமக்கல் அருகில் வாழவந்தி ஒரு கிராமம் இருக்கிறது. பழங்காலத்தில் அது சிறு நாடு. அங்கு சென்மப் புலவன் என்றொருவர் இருந்திருக்கிறார். மோடி வித்தை செய்யக் கூடியவர். அவர்தான் ஒரு கூட்டம் சேர்த்து தன் தோள்களில் முறத்தைக் கட்டிக் கொண்டு பறக்க முயற்சித்தவர்.  அவரது இந்தச் செயல் குறித்து செப்பேடு கூட இருக்கிறதாம். முனைவர். மகுடீஸ்வரன் என்னும் ஓய்வுபெற்ற பேராசிரியர் சில கட்டுரைகளைத் தொகுத்து வைத்திருக்கிறார். அதைப் புரட்டிக் கொண்டிருந்த போது இந்தத் தகவல் இருந்தது. 

‘சுவாமி பறாக்குயென்று ரண்டும் முறம் கொண்டு வரச் சொல்லி
ரண்டு தோளுலையும் கட்டி பறவையாகப் பறந்து பறக்கும்போது
தெய்வப்பாழியிலே வந்து நின்றான்’

இன்னமும் கூட வாழவந்தி கிராமத்தில் அந்தக் குளம் இருக்கிறது.  ஒருவேளை அந்தப் புலவர் இறந்திருக்கக் கூடும். அதனாலேயே அவர் கடவுளாகிவிட்டார் என்று கூட அக்குளத்தை சித்தன்குளம் என்று அழைத்திருக்கக் கூடும். இந்தச் சம்பவம் 17 ஆம் நூற்றாண்டில் நடைபெற்றிருக்கிறது. இந்தச் சம்பவம் அடுத்த முந்நூறு ஆண்டுகளுக்கு செவி வழிச் செய்தியாகவே சுற்றித் திரிந்து, இடம் குதித்தவர் பெயர் எல்லாம் மருவி இருபதாம் நூற்றாண்டுக் காலத்தில் ஆயாவை வந்து சேர்ந்திருக்கிறது. இருபத்தோராம் நூற்றாண்டில் வாழப்போகும் என்னிடம் கடத்திவிட்டார். அது மண்டைக்குள்ளேயே ஆணி அடித்தாற்போல ஒட்டிக் கொண்டது.

அமத்தா சொன்னதும் கூட அப்படித்தான். வேமாண்டம்பாளையத்தில் மிகச் சமீபத்தில் பழங்கால பாறை நினைவுச்சின்னங்களைக் கண்டறிந்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட நினைவுச்சின்னங்கள் என்று செய்தியில் குறிப்பிட்டிருந்தார்கள். 

1930களுக்கு முன்பு பிறந்தவர்கள் எல்லோரிடமும் இப்படியான கதைகள் உண்டு. நம்பவே முடியாத அளவிற்குச் சொல்லப்பட்ட கதைகளிலும் கூட ஏதோவொரு வரலாற்றின் தொடர்ச்சி என்று நம்பலாம். அரசல் புரசலாக ஏதோவொன்று ஒளிந்திருக்கும். தாம் சொல்லிக் கொண்டிருப்பது தொல்பொருள் சம்பந்தப்பட்டது என்றோ, பழங்காலச் சின்னங்கள் என்றோ தெரியாமல் அந்தக் காலத்து மக்களின் புரிதலுக்கு ஏற்ப விடுகதையாகவோ அல்லது புனைவாகவோ சுற்றிக் கொண்டிருந்தவற்றைத்தான் கடந்த தலைமுறை ஆராய்ச்சியாளர்கள் ‘இப்படி ஒரு கதை இருக்கே...அப்படி ஒரு கதை இருக்கே’ என்று வால் பிடித்துச் சென்று தேடினார்கள். அவர்களுக்கு நிறையத் தகவல்களும் கிடைத்தன.

பேராசிரியர் கா.அரங்கசாமி- இன்றைய கோயமுத்தூர் எஸ்.பி அருளரசுவின் தந்தை- எங்கள் ஊரில் நிறைய ஆராய்ச்சிகளைச் செய்தவர். அவரிடம் பேசும் போது இப்படியான செவி வழிச் செய்திகள்தான் தனக்கு பலவிதமான வரலாற்றுத் தகவல்களைக் கொடுத்ததாகச் சொல்வார். தன்னுடைய மாணவர்கள் அவர்களது ஊரிலும் வீட்டிலும் கேட்ட கதைகள், சக நண்பர்களுக்குத் தெரிந்த தகவல்களையெல்லாம் வைத்துக் கொண்டு கள ஆராய்ச்சிகளுக்குச் சென்றதாகவும் அளுக்குளி, அயலூர் மாதிரியான ஊர்களில் தான் ஆராய்ந்து கண்டறிந்தவை அதற்கு முன்பே அரையும் குறையுமான கதைகளாகச் சுற்றிக் கொண்டிருந்தவைதான் என்னிடம் பகிர்ந்திருக்கிறார்.

ஐம்பதுகளுக்குப் பிறகு இத்தகைய மண் சார்ந்த வரலாற்றுத் தொடர்ச்சி அறுபட்டுவிட்டது. நம்முடைய கல்வி முறையானது அறிவியல், மருத்துவம், கணிதம் என்று வேறு கதவுகளைத் திறந்துவிட்டாலும் மண் சார்ந்த வரலாறுகளுடன் நம் இணைப்பைத் துண்டித்துவிட்டது. எங்கள் அம்மா பி.எஸ்சி பட்டதாரிதான். ஆனால் அவருக்கு அளுக்குளி குறித்தோ, சீனாபுரம் குறித்தோ எந்தத் தொடர்ச்சியுமில்லை. அம்மாவை முந்தைய தலைமுறை ஆட்களுக்கான ஓர் உதாரணமாகச் சுட்டிக்காட்டுகிறேன். அவரால் அதிகபட்சம் இராமாயணமோ அல்லது மகாபாரதமோதான் குழந்தைகளுக்குச் சொல்லித் தர முடிகிறது. இப்படித்தான் இதுகுறித்த எந்தப் புரிதலும் இல்லாத ஒரு தலைமுறையாக நாம் உருவாகிவிட்டோம். அடுத்தடுத்த தலைமுறைகள் குறித்து கேட்கவே வேண்டியதில்லை.  

இத்தகைய புரிதல்கள் இல்லாததால்தான் எண்பதுகளுக்குப் பிறகு பழைய வீடுகள் இடிக்கப்பட்டு, சின்னங்கள் அழிக்கப்பட்டு ஊர்கள் முற்றாக மாறிப் போயின. அம்மா-அப்பா தலைமுறை குறைந்தபட்சம் உள்ளூரிலாவது இருந்தார்கள். கதையே தெரியவில்லையென்றாலும் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தார்கள். எழுபது எண்பதுகளுக்குப் பிறகு ஊர்களும் மாறிவிட, அதன் பிறகு பிறந்தவர்களையும் இந்த வாழ்க்கை முறை புரட்டிக் கொண்டு போய் வேற மண்ணில் எறிந்துவிட்டது. நாம் நமக்கு பின்னால் வரும் தலைமுறைக்கு மண்ணோடும், வரலாற்றோடும் எந்தச் சம்பந்தமும் இல்லாமல் பார்த்துக் கொள்கிறோம். 

இப்பொழுதும் வரலாறு தேடிச் சுற்றிக் கொண்டிருக்கிறவர்கள் இருக்கிறார்கள். குமரவேல் ராமசாமி என்று என் ஃபேஸ்புக் நண்பர் ஒருவர் இருக்கிறார். வாய்ப்பிருப்பவர்கள் அவருடைய பக்கத்தில் தேடிப்பார்க்கலாம். கல்வெட்டுகள், நடுகற்கள் என்று அலைந்து திரிகிறார். எவ்வளவு கண்டுபிடிப்புகள் என்று பிரமித்துப் போய்விடுவோம். எந்த அங்கீகாரத்தையும் எதிர்பார்க்காமல் அலைகிற பறவைகள் இவர்கள். இத்தகைய தனித்த ஆராய்ச்சியாளர்கள் இருந்து கொண்டிருக்கக் கூடும். ஆனால் பரவலாக பரவிக் கொண்டிருந்த வரலாற்றுக் கதைகள், தகவல்கள் எல்லாம் இனியும் அலைய வாய்ப்பில்லைதானே? நீங்கள் அப்படி அமத்தா, ஆயா சொன்ன கதைகள்- வரலாற்றுடன் தொடர்புடையதாக இருக்கக் கூடும் என்று எதையாவது நினைவின் அடுக்குகளில் சேகரித்து வைத்திருக்கிறீர்களா?

3 எதிர் சப்தங்கள்:

Seeni said...

சிறப்பு..

NAGARATHAN said...

சின்ன வயசுல ஆன்னு வாயப்பொளந்துட்டு நெறய கதை கேட்டுருக்கோம். அப்பல்லாம் அது உண்மையா பொய்யான்னு தெரியாது; அல்லது அதை பகுத்துப் பாத்து என்ன சமாச்சாரம்னு கண்டுபிடிக்கற அளவுக்கு பத்தாது. கொஞ்சம் வளந்ததுக்கு அப்புறம் அதையெல்லாம் யோசிச்சுப் பாத்து, இப்பிடில்லாம் கதை சொல்லி நம்மள முட்டாளாக்கிட்டாங்களேன்னு தோணும். ஆனா, இப்ப நீங்க எழுதியிருக்கிறதப் படிச்சப்பறம் ஒரு வேளை நெசமா நடந்ததைத்தான் கொஞ்சம் திரிச்சு சொல்லிட்டாய்ங்கய்யா அப்புடின்னு புரியுது.

சேக்காளி said...

காக்க காக்க கதைகளை காக்க