Jul 27, 2020

லைலா

லைலா ஒன்பதாம் வகுப்பு செல்கிறாள். அம்மாவும் அப்பாவும் கூலித் தொழிலாளர்கள். சில மாதங்களுக்கு முன்பாக கழுத்துப் பகுதியில் ஒரு வீக்கம் வந்திருக்கிறது. ஏதோ சிறு பிரச்சினை என்று நினைத்திருக்கிறார்கள். அது உடல் உபாதைகளையும் அளிக்கத் தொடங்க பக்கத்தில் இருந்த சில மருத்துவர்களிடம் காட்டிய போது அவர்கள் பெரிய மருத்துவமனைக்கு சொல்லியிருக்கிறார்கள். 

கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் ரத்தப் பரிசோதனை, ஸ்கேன் என்றெல்லாம் பார்த்துவிட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்.

கொரோனா ஊரடங்கும், எளிய மக்களிடம்  அது காட்டிக் கொண்டிருக்கும் கோர முகமும் லைலா மாதிரியானவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளிலிருந்துதான் தெரியத் தொடங்குகிறது. அறுவை சிகிச்சைக்கு ஒன்றேகால் லட்ச ரூபாய் ஆகும். அறுவை சிகிச்சையின் போது ஏதேனும் சிக்கல் உண்டானால் மேலும் ஒரு ஐம்பதாயிரம் ரூபாய் வரைக்கும் ஆகும் என்று மருத்துவர்கள் சொல்லியிருந்தார்கள். ஏன் சிக்கல் என்றால் அது பெரிய அறுவை சிகிச்சை. இருதயத்திலிருந்து தலைப்பகுதிக்கு ரத்தம் செல்லும் குழாயில் கட்டி உருவாகியிருக்கிறது. சற்று பிசகினாலும் விளைவுகள் மோசமாகிவிடக் கூடும். அதனால் ஏதேனும் பிரச்சினைகள் உருவாகவும் வாய்ப்பிருக்கிறது என்பதைச் சொல்லாமல் சொல்லியிருந்தார்கள்.

லைலாவை அவளது வீட்டிலேயே சந்தித்து அவளிடம் நேரடியாக காசோலையை அளித்துவிடலாம் என்று மருத்துவ நண்பர்கள் சிவசங்கரையும், பன்னீர்செல்வத்தையும் அழைத்துச் சென்றிருந்தேன். சிவசங்கர் அரசு மருத்துவமனையில் பொது நல மருத்துவர். பன்னீர்செல்வம் இருதய அறுவை சிகிச்சை நிபுணர். பொதுவாக எளிய மக்களின் குடியிருப்புகளுக்குச் செல்லும் போதெல்லாம் இத்தகைய தனிச்சிறப்பு வாய்ந்தவர்களை அழைத்துச் செல்வதுண்டு. இருதரப்புக்கும் ஒரு அறிமுகம் இருப்பது அவசியம். அரசு மருத்துவமனைக்குச் செல்லும் போது தைரியமாகச் சென்று ‘அன்னைக்கு எங்க ஊருக்கு வந்தீங்கல்ல டாக்டர்’ என்று பேசிவிடுவார்கள். சிவசங்கரும், பன்னீர்செல்வமும் சமூக அக்கறையுள்ள மருத்துவர்கள்- நம் ஊரிலேயே இப்படியான குடியிருப்புகள் இருக்கின்றன என்று வாய்ப்பிருக்கும் போது சமூக அக்கறை கொண்டவர்களிடம் காட்டிவிட்டால் அவர்கள் தம் தரப்பில் சிலரிடமாவது சொல்வார்கள். 


இரு மருத்துவர்களும் லைலாவையும் அவளது சோதனை அறிக்கைகளையும் பார்த்துவிட்டு சொன்னதுதான் கட்டி இருக்கும் இடம், அதன் அறுவையில் இருக்கக் கூடிய சிக்கல்கள் எல்லாமும். 

லைலாவின் பெற்றோர்களுக்கு கடந்த மூன்று-நான்கு மாதங்களாக எந்த வேலையுமில்லை. இருந்த கையிருப்புகள் கரைந்துவிட்டன. ஒன்றேகால் லட்ச ரூபாய்க்கு எங்கே செல்வார்கள். பொதுவாக யாருக்கேனும் மருத்துவ சிகிச்சை என்றாலு அந்தக் குடியிருப்பில் இருப்பவர்கள் ஒவ்வொரு வீட்டிலும் சிறு தொகை சேர்த்துக் கொடுப்பது வழக்கமாம். இந்த முறை யாரிடமும் பணமில்லை. அதிகபட்சமாக பத்தாயிரம் ரூபாய் சேர்த்திருக்கிறார்கள். கடனும் வாங்கியிருக்கிறார்கள். ஐம்பதாயிரம் ரூபாய் கடன் வாங்குவதே பெரிய சிரமம்தான் என்கிற மாதிரியான வாழ்க்கைச் சூழலில் வாழ்கிறவர்கள் அவர்கள். பொருளாதாரச் சூழலும் பழி வாங்கிக் கொண்டிருக்கிறது.

எதுவுமே முடியவில்லை என்றுதான் அழைத்து ‘ஏதாவது உதவ முடியுமா’ என்று கேட்டார்கள். இத்தகைய மனிதர்களுக்கு உதவாமல் யாருக்கு உதவப் போகிறோம்?

கடந்த சில நாட்களுக்கு முன்பாக அந்தப் பெண்ணின் குடியிருப்புக்குச் சென்றிருந்தோம். கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையின் பெயரில் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு காசோலையை மருத்துவர்களிடம் கொடுத்து வழங்கச் சொன்னேன். பெற்றுக் கொண்ட லைலாவின் தந்தை யாருமே எதிர்பாராத தருணத்தில் காசோலையை வழங்கிய மருத்துவர்களின் காலில் விழுந்துவிட்டார். எழுந்து நிற்கும் போது அவரையும் மீறி அழுகை பொத்துக் கொண்டது. ‘கவலைப்படாதீங்க...தைரியமா போங்க...இதுக்கும் மேல தேவைப்பட்டா மருத்துவமனையில் இருந்து ஃபோன் செய்யுங்க....ஆன்லைன் ட்ரான்ஸ்பர் செய்துவிடுகிறேன்’ என்று சொல்லியிருந்தேன்.

பணம் அவசியமானதாக இருக்கிறது. அதே சமயம் பணத்தைவிடவும் மனிதர்களுக்கு ஏதோ விதத்தில் தைரியம் சொல்ல ஆட்கள் தேவைப்படுகிறார்கள். எதுவும் ஆகாது என்று சொல்வதைவிடவும், என்ன ஆனாலும் நாங்கள் இருக்கிறோம் என்பதான ஆறுதல் அவசியமாக இருக்கிறது. மனிதர்கள் மிக எளிதில் உடைந்துவிடுகிறார்கள். ஏதோவொரு பாரம் அழுத்திக் கொண்டிருப்பதாகவே எதிர்ப்படும் ஒவ்வொருவரும் தெரிகிறார்கள். 

அரசு தாமஸ் அவர்களும் கார்த்திகேயனும் உடன் வந்திருந்தார்கள். வீட்டிற்கு வந்த பிறகு மருத்துவர் சிவசங்கரிடம் பேசிய போது அவர்தான் ‘அது மேஜர் சர்ஜரிதாங்க’ என்றார். ஏதோ குழப்பமாகவே இருந்தது. எல்லாம் நல்லபடியாக முடிந்த பிறகு எழுதிக் கொள்ளலாம் என்று இருந்தேன்.

லைலாவுக்கு அறுவை சிகிச்சை முடிந்துவிட்டது. நாளை அல்லது நாளை மறுநாள் வீடு திரும்பிவிடுவாள் என்று அழைத்துச் சொன்னார்கள். கேட்கவே மிகுந்த சந்தோஷமாக இருந்தது. எல்லாவிதமான உதவிகளுமே உதவிதான். முன்பு ஒரு நேர்காணலில் சொல்லியிருந்தேன் - மருத்துவ உதவியினால் ஓர் இளம் உயிர் திரும்பி வருவதைப் பார்க்கும் மகிழ்ச்சி தரும் ஆத்ம திருப்தியை வேறு எந்த உதவியும் காட்டுவதில்லை. நிசப்தம் வழியாக அத்தகையை உதவிகளை அவ்வப்பொழுது செய்துவிட முடிகிறது.

5 எதிர் சப்தங்கள்:

ILANDJEZIAN said...

Great help for helpless people Va Manikanadan sir and nisaptham 🙏

அன்புடன் அருண் said...

//லைலாவுக்கு அறுவை சிகிச்சை முடிந்துவிட்டது. நாளை அல்லது நாளை மறுநாள் வீடு திரும்பிவிடுவாள் என்று அழைத்துச் சொன்னார்கள். கேட்கவே மிகுந்த சந்தோஷமாக இருந்தது.

இந்த வரியை படிக்கிற வரைக்கும் பட பட-ன்னு இருந்தது. அப்புறம் என்னையும் அறியாமல் மகிழ்ச்சி ஆயிட்டேன்.

உண்மையிலேயே பெரிய ஆளு (மனுசன்) சார் நீங்க!

Krishnamoorthy said...

ரொம்ப சந்தோஷம் சார்,வாழ்க வளமுடன்.

Paramasivam said...

காலத்தில் செய்த மாபெரும் உதவி. வளர்க உங்கள் தொண்டு.

moe said...

Some positive news.