Jul 16, 2020

ஜுன் 2020

கடந்த மாதம் அறக்கட்டளையின் வரவு செலவுக் கணக்கை வெளியிட்டிருந்த போது திரு.பழனிவேல் கேட்டிருந்த கேள்விகளுக்கு  தனியான பதிவாக இல்லாமல் ஜூன் மாதக் கணக்கோடு சேர்த்து எழுதிவிடலாம் என்று எடுத்து வைத்திருந்தேன்.

மே’2020க்கான செலவு விவரங்களை இணைப்பில் பார்த்துக் கொள்ளலாம். 

முதலில் ஜூன்’2020க்கான வரவு செலவு விவரம் பின்வருமாறு:
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் சுமார் ஐம்பது குடும்பங்களுக்கு தனியாக பொருட்கள் வழங்கப்பட்டன. அதற்காக கடைக்கு வழங்கிய தொகை வரிசை எண். 6 இல் இருப்பது.


சமீபகால நெருக்கடியினால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களைத் தேர்ந்தெடுக்கும் பணி நடைபெறுகிறது. ஆனால் அதில் சில தடைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். சரி செய்ய வேண்டிய வேலை இருக்கின்றன. இந்தத் தருணத்தில் அவற்றை வெளிப்படையாக எழுதுவது சரியாக இருக்காது என நினைக்கிறேன். ஆயினும், அவற்றில் முதல் உதவியாக ஒரு சிறுமியின் அறுவை சிகிச்சைக்காக உதவுகிறோம். சனிக்கிழமையன்று அந்தப் பெண் மருத்துவமனைக்குக் கிளம்புகிறாள். அவளிடம் காசோலையை வழங்கிவிட்டு விரிவாக எழுதுகிறேன். 

                                                                     ***
திரு பழனிவேலின் கேள்விகள்:

1. அறக்கட்டளை உபரி நிதி வளர்ந்து கொண்டு செல்கிறது (2017 - 17 லட்சம் , 2018 - 45 லட்சம், 2019 - 47 லட்சம், 2020 - 58 லட்சம் ).  உங்களது நிலைப்பாடு - " எழுபது அல்லது எண்பது சதவீதத் தொகையைச் செலவு செய்தே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் கிடைக்கிற ஆட்களுக்கு எல்லாம் கொடுக்க வேண்டியதில்லை" என்பது சரி . இந்த தேக்கத்தை சீராக்க ஏதேனும் முயற்சி எடுக்கிறீர்களா - (தன்னார்வலர்களுக்கு அதிக பொறுப்பை வழங்குவது / புது நிதியை கோராமல் இருப்பது) - இப்படி எதாவது?

தொடர்ச்சியாகச் செயல்படும் போது நன்கொடையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது. ஒரே சமயத்தில் லட்ச ரூபாய் தருகிறவர்களும் இருக்கிறார்கள். உபரி நிதி வளர்ந்து கொண்டு செல்வதை இருவிதமாக எடுத்துக் கொள்ளலாம். தேக்கம் என்று எடுத்துக் கொண்டால் தேக்கம்; வளர்ச்சி என்று எடுத்துக் கொண்டால் வளர்ச்சி. ஒரு கோடி ரூபாய் கையிருப்பாக இருக்கும் வரைக்கும் பெரிய தொகை என்று சொல்ல முடியாது என்றே நினைக்கிறேன். 

ஊரடங்கு காலத்தில் மட்டும் ஆறு லட்ச ரூபாய்க்கும் அதிகமாக உதவி செய்திருக்கிறோம். இன்னமும் ஆறு அல்லது ஏழு லட்ச ரூபாய்க்கு திட்டமிருக்கிறது. ஒருவேளை கல்லூரிகள் திறந்திருந்தால் ஐந்தாறு லட்ச ரூபாய் கல்லூரிக் கட்டணமாகக் குறைந்திருக்கும். முழுமையான ஸ்டேட்மெண்ட்டை வெளியிடுவதாலும், கையிருப்பை மட்டுமே கவனிப்பதாலும் இந்தக் கேள்வி வருகிறது என நினைக்கிறேன்.

அலுவலகப் பணி, குடும்பம் என அனுசரித்து ஒதுக்கும் நேரத்தில் தொடக்கத்தில் செய்த அதே அளவு பணிகள்தான் இப்பொழுதும் தொடர்கின்றன. அலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல்கள், தகவல் சேகரிப்பு, சரி பார்த்தல் என சரியாக இருக்கிறது. நேற்றிரவு கூட அம்மாவிடம் ‘எதுக்கு இத்தனை ஃபோன் பேசற’ என்று திட்டு வாங்கினேன். கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உதவுகிற திட்டத்திற்காக தினசரி 4-5 அழைப்புகளாவது மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அலுவலகப்பணிகளை எல்லாம் முடித்துவிட்டு மாலை நேரத்தில் பேசிக் கொண்டிருப்பதால் அம்மாவுக்கு இது அதிகமாகத் தெரிகிறது.

பிரச்சினை அதுவன்று. திரு.பழனிவேல் கேட்டிருப்பது போல தன்னார்வலர்களை அதிகரித்து, பொறுப்புகளை அதிகரிப்பது என்பது மாதிரி நிறுவனமயாக்க வேண்டியதில்லை எனத் தோன்றுகிறது. தன்னார்வலர்கள் இருக்கிறார்கள். அரசு தாமஸ், கார்த்திகேயன், விக்னேஷ்வரன் மாதிரியாக உடனிருந்து உதவுகிற தன்னார்வலர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களே சொல்வது போல ‘எல்லாவற்றிலும் நீங்களே தன்னிச்சையாக முடிவெடுப்பதுதான் சரி’ என்பதை மனதில் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. நிறைய தன்னார்வலர்கள், பரவலான செயல்பாடுகள் என வளர்க்க ஆரம்பத்தில் அதற்கான முயற்சிகளைச் செய்தேன். அதில் சில கசப்பான அனுபவங்களும் வந்து சேர்ந்தன. ஒருவர் தன்னுடைய சாதிய அடிப்படையிலேயே பரிந்துரைகளைச் செய்தார். அவர் அறக்கட்டளையில் உதவி வாங்கியவர். அவரிடம் ‘இனி நீங்கள் செய்ய வேண்டாம்’ என்று சொல்லவும் சங்கடமாக இருந்தது. அவரைக் கழற்றிவிடவும் தெரியவில்லை. இது சரிப்பட்டு வராது என்று மட்டும் தோன்றியது.

என்னை நம்பித்தான் பணம் தருகிறார்கள். அதனால் நம்மால் இயன்ற அளவில் ஒவ்வொரு காரியத்திலும் நேரடியாக அதே சமயம் முழுமையாக ஈடுபட வேண்டும் என நினைக்கிறேன். 

பணத்தை வேண்டாம் என்றும் சொல்வதுமில்லை; கொடுங்கள் என்று கேட்பதுமில்லை. கோவில் உண்டியல் போல அது இயங்கிக் கொண்டேயிருக்கட்டும். சிலருக்கு சில சமயங்களில் கொடுக்கத் தோன்றும், சிலருக்கு பல சமயங்களில் இயலாது- அவரவருக்கு செளகரியப்பட்ட நேரங்களில் கொடுக்கட்டும். எதிர்கொள்ளும் காரியங்களுக்கு செலவழித்துக் கொண்டேயிருப்போம்.


2. ஆண்டு அறிக்கை - Oct 2016 வெளியிட்ட அறிக்கை மிக தெளிவு. இதை போல் ஏன் ஆண்டு அறிக்கை வருவதில்லை. Bank Statement இல் இருப்பது data. அது information ஆவது நீங்கள் முன்பு வெளியிட்ட வடிவம் ( இவ்வளவு வந்தது அதை இந்த விகிதத்தில் செலவு செய்தோம்).

பெங்களூரில் இருந்த போது அமைந்த ஆடிட்டர் மிகத் தெளிவாக விவரங்களைக் கொடுத்தார். ஆடிட்டர் மாறிய பிறகு உங்களுக்கு இருக்கும் அதே சிரமம்தான் எனக்கும். டேட்டாவை இன்பர்மேஷனாக மாற்றும் வகையில் என்னால் அதைத் தொகுக்க முடியவில்லை. திரு.தீபக்கிற்கு பிறகு அமைந்த கணக்காயரிடம் சில குறைகள் உண்டு. அதனால் அந்தத் தெளிவு கிடைக்கவில்லை . அதனால் இருப்பதை அப்படியே வெளியிட்டுவிடலாம் என்று வருடம் முழுவதிற்குமான வங்கி ஸ்டேட்டமெண்ட்டை வெளியிட்டுவிட்டேன். இந்த வருடம் புதிய கணக்காயரிடம் செல்ல திட்டமிருக்கிறது. யார் என்றுதான் தெரியவில்லை. 

நிச்சயமாக இதனை கவனத்தில் எடுத்துக் கொள்கிறேன். 

3.  சில பதிவுகளுக்கு follow up இருப்பதில்லை. (உதாரணம் - கேரளா வெள்ள நிவாரண நிதி. மீதி 4 லட்சம் எப்படி செலவு செய்யப்பட்டது?)

கேரளாவுக்கு முதல் கட்ட உதவிகளைச் செய்து கொடுத்தோம். கூடுதலாக இருந்த நான்கு லட்ச ரூபாயில் மாடுகள் வாங்கித் தரச் சொல்லி அந்த அரசின் தரப்பில் சொன்னார்கள். ஆதரவற்ற பெண்களுக்கு மாடுகள் வாங்கித் தந்துவிடலாம் என்று அம்மாநிலத்தைச் சார்ந்த ஓர் அதிகாரி தொடர்பில் இருந்தார். அவர் உண்மையிலேயே அர்ப்பணிப்புள்ள அதிகாரிதான். ஆனால் ஏதோ சில காரணங்களினால் இந்த உதவி அவசியமில்லை எனத் தோன்றியது- நிலைமை ஓரளவு சரியானதும், வேறு சில உதவிகள், தன்னார்வலர்கள், அமைப்புகளின் மூலமாக அந்தப் பகுதிக்கு கிடைத்த செய்திகளும் அப்படித் தோன்றச் செய்தன. பணம் இருக்கிறதே என்பதற்காக செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை அல்லவா? 

"மெதுவாகச் செலவு செய்வோம். பொறுமையாகவே செய்வோம். நமக்கென்று ஒரு வரையறை இருக்கிறது. அளவும் இருக்கிறது. அள்ளி வீசிவிட முடிவதில்லை என்பதுதான் நிஜம்." - உங்களது எண்ணமும் நேர்மையும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது. ஆனால் அறக்கட்டளை - is it functioning to its full potential?

நிசப்தம் அறக்கட்டளையில் நண்பர்களின் உதவி இருந்தாலும் ஒருவனாகவே இருந்து செய்யக் கூடிய செயல்களை என்னால் முடிந்த அளவு- சமயங்களில் என் சக்திக்கு சற்று மீறியும் செய்கிறேன். இதுதான் அளவும் கூட. இதற்கு மேல் எதிர்பார்க்க வேண்டியதில்லை. 

இந்த ஊரடங்கு காலத்தில் ஜூம் மூலமாக சில கலந்துரையாடல்களில் கலந்து நிசப்தம் பற்றி பேசச் சொன்னார்கள். அவர்களிடம் சொன்னது ஒன்றுதான் - நிசப்தம் அறக்கட்டளை அபரிமிதமாக வளர வேண்டும் என்பதில் துளி கூட ஆர்வமில்லை. இதுவொரு சிறு வட்டமாகவே இருந்துவிட வேண்டும் என்றே நினைக்கிறேன். என்னைப் பற்றி முழுமையாக அறிந்தவர்கள் மட்டும் பணம் அனுப்பினால் போதும்.  ‘இந்தப் பணம் பற்றி இனி யோசிக்க வேண்டியதில்லை’ என்று நம்புகிறவர்களின் உதவியால் மட்டுமே செயல்களைச் செய்வோம் என்பதிலும் தெளிவாகவும் இருக்கிறேன். அதன் காரணமாகவே நிசப்தம் பற்றி வேறு பல இடங்களிலும் ஊடகங்களிலும் பேசியும் எழுதியும் திடீரென நிறைய மனிதர்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பதில் எனக்கு எள்ளளவும் உடன்பாடில்லை. அப்படிக் கொண்டு போய் நிதி அதிகமாகக் குவிந்தால் அதைச் செயல்படுத்த ஆட்களைச் சேர்த்து நிறுவனம் ஆக்க வேண்டும். அது அவசியமற்றது. 

ஓரளவு விளக்கிவிட்டேன் என்று நினைக்கிறேன். வேறு வினாக்கள் இருப்பினும் கேட்கவும். இவ்வளவு துல்லியமாக கவனித்துக் கொண்டிருக்கும் திரு. பழனி வேல் அவர்களுக்கு அன்பும் நன்றியும். 

1 எதிர் சப்தங்கள்:

vijay said...

. என்னைப் பற்றி முழுமையாக அறிந்தவர்கள் மட்டும் பணம் அனுப்பினால் போதும். ‘இந்தப் பணம் பற்றி இனி யோசிக்க வேண்டியதில்லை’ என்று நம்புகிறவர்களின் உதவியால் மட்டுமே செயல்களைச் செய்வோம் என்பதில் தெளிவாகவும் இருக்கிறேன்// இந்த மனோ உறுதியை வைத்துக்கொண்டு தான் நான் 2002 ம் ஆண்டிலிருந்து செயட்படுகின்றேன் .உமது பணி தொடரட்டும் .வாழ்த்துக்கள் .