Jul 15, 2020

எங்கே போவான் விவசாயி?

‘கொரோனா காலத்தில் எங்களையெல்லாம் கையெடுத்துக் கும்பிடணும்’ என்றார் அந்த விவசாயி. உறவுக்காரர். வேறு ஒரு பிரச்சினை குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம். அவருடைய பக்கத்துத் தோட்டக்காரரின் மகன் வேலை இல்லாமல் இருக்கிறானாம். ஒரு நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தவனை அனுப்பிவிட்டார்கள். ‘எந்தத் தொழிலும் நிரந்தரமில்லை’ என்பது மாதிரி சொன்னேன். விவசாயிகள் மட்டும் கொஞ்சம் தப்பித்துவிட்டீர்கள் என்ற ரீதியில் நான் குறிப்பிட்டதற்காக அப்படிச் சொன்னார். 

இவ்வளவு நெருக்கடியிலும் கூட நகர்ப்புறங்களில்  எந்தக் காய்கறியும் உணவுப்பொருளும் தடையில்லாமல் கிடைப்பதன் பின்னணியில் ஒவ்வொரு விவசாயியின் உழைப்பு இருக்கிறது என்று சொல்லிவிட்டு ‘ஆனா என்ன...பைல பத்து பைசா மிச்சமில்லை’ என்றார். பெரும்பாலான பொருட்களை கடந்த நான்கு மாதங்களில் விவசாயிகள் அடிமாட்டு விலைக்குத்தான் கொடுத்திருக்கிறார்கள். அதுவும் ஊரடங்கின் தொடக்க காலத்தில் வாகனப் போக்குவரத்து இல்லை, பதப்படுத்தும் நிறுவனங்கள் இயங்குவதில்லை என்று சொல்லி விளைந்து நின்ற வாழை உள்ளிட்ட பொருட்கள் கடும் நஷ்டத்தை உருவாக்கியிருக்கின்றன. டெல்டா மாவட்டங்களில் நெல் மூட்டைகள் ஆயிரக்கணக்கில் நனைந்து போன செய்திகளைக் கேள்விப்பட்டிருக்கலாம்.

எப்படிப் பார்த்தாலும் நட்டம்தான். எங்கள் தாய்மாமன் விவசாயி. அவரிடம் பேசினால் ‘அடுத்த போகத்துக்கு முட்டுவலிக்கு எங்ககிட்ட காசு இல்லை’ என்றார். எங்களிடம் என்று அவர் குறிப்பிடுவது பெரும்பாலான உழவர்களை. இந்த போகம் கையைக் கடித்துவிட்டதால் அடுத்த போகத்திற்கு களை எடுக்கவும், விதை வாங்கவும், நாற்று நடவும், கூலி கொடுக்கவும், உரம் வாங்கவும் என அனைத்திற்கும் காசு இல்லாத விவசாயி நம்புவது கடனைத்தான். ஒவ்வொரு போகமும் தொடங்கும் போது கையில் இருக்கும் கொஞ்சம் நகையை சொசைட்டியில் அடமானம் வைத்து கிடைக்கும் தொகையில் முதலீடு செய்து விளைச்சல் வரும் போது நகையை மீட்டுக் கொள்வதுதான் வழமை. இதுவொரு சுழற்சி- வறட்சி, பூச்சி, காற்று, வனவிலங்குகளால் சேதம் என்று கணிசமான இழப்பைச் சந்திக்கும் போது இந்த சுழற்சி பாதிக்கப்படும். கைவசம் இன்னமும் கொஞ்சம் நகையிருந்தால் அதுவும் உள்ளே போகும். நகை இல்லையென்றால் வெளி இடங்களில் கடன் தேடுவார்கள்.

பல ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளை விட்டுவிடுங்கள். சிறு குறு விவசாயிகள் யாரிடம் வேண்டுமானாலும் கேட்டுப்பார்த்து உறுதி செய்து கொள்ளலாம்.

கொரோனா வந்து அத்தனையும் முடங்கிப் போன சூழலில் விவசாயிகள் நம்பிக் கொண்டிருந்தது நகைக்கடன்தான். திடீரென அதன் மீதும் பாறாங்கல்லைத் தூக்கி வைத்துவிட்டார்கள். கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் வழங்கக் கூடாது என அறிவித்து அந்தக் கடனை ஏன் நிறுத்தி வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

நிறைய காரணங்களை அடுக்குவார்கள்- கூட்டுறவு சங்கத்தில் ஊழல் நடக்கிறது, தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சரியில்லை என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால் அதையெல்லாம் சரி செய்ய வேண்டுமே தவிர, கடனே இல்லை என்று சொல்லிவிட்டால் கடைசியில் பாதிக்கப்படப் போவது விவசாயிதானே? கூட்டுறவு சங்கத்தில் தேர்தல் நடைபெற்றால் உள்ளூர் அமைச்சர்களும் அரசியல்வாதிகளும் தலையிட்டு பெரிய அக்கப்போர் செய்து தமக்கு வேண்டிய ஆட்களை தலைவர்கள் ஆக்குகிறார்கள். அதைத்தானே அரசு சரி செய்ய வேண்டும்? தலைவர்களும் உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கும் முறையில் சீர்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும், விவசாயியின் பெயரில் தலைவர்களும் உறுப்பினர்களுமே கடன் வாங்குவதாகத் தெரிந்தால் ஆடிட் செய்வதை ஒழுங்குபடுத்த வேண்டும். அதிகாரவர்க்கத்தின் தலையீடு இல்லாமல் சீர்படுத்த வேண்டும். 

விவசாயிகளுக்கு ஒரு லட்சம் வரை பயிர்க்கடனாக வழங்கிக் கொண்டிருந்தார்கள். அந்தக் கடனுக்கு வட்டி குறைவு. ஒரு அறிவாளி ‘இதெல்லாம் விவசாயத்திற்கு பயன்படுத்துவதில்லை- புள்ளைக்கு காலேஜ் ஃபீஸ் கட்ட பயன்படுத்துகிறார்கள்’ என்று ஒரு அறிக்கை வெளியிட்டார். இருந்துவிட்டுப் போகட்டுமே. விவசாயிக்குத்தானே கொடுக்கிறீர்கள்? அவன் மகனுக்கு அவன் கட்டாமல் வேறு யார் கட்டுவார்கள்? வங்கிகளில் கல்விக்கடன் என்று கேட்டுப் போனாலே முகத்தை அஷ்ட கோணலாக்கிக் கொள்கிறார்கள்.  ‘உங்க வீதி எங்க லிமிட்ல இல்ல’ ‘இந்தப் படிப்புக்கு கடன் இல்ல’ ‘பதினஞ்சு நாள் கழிச்சு வாங்க’ என்று அலைகழிக்கப்பட்டு கடைசியில் கடன் கிடைக்காத பல மாணவர்களை அறிவேன். ஆதி திராவிட நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் வரும் உதவிப்பணத்திற்கு எவ்வளவு கமிஷன் அழ வேண்டும் என்று விசாரித்துத் தெரிந்து கொள்ளலாம். இப்படி திரும்பிய பக்கமெல்லாம் முட்டுச்சந்தாக இருக்க அவனுக்கு இருக்கும் வழி கடன் வாங்குவதுதான்.

வங்கிகளில் கடன் கிடைக்கவில்லை, இருந்த பணம் எல்லாம் விவசாயத்தில் போட்டாகிவிட்டது, கல்லூரிக்கு கட்டணம் என்று வந்து நிற்கும் மகனுக்கும் மகளுக்கும் என்ன பதில் சொல்ல முடியும்? இருக்கும் வாய்ப்புகளில் ஒன்று நகைக்கடன் இல்லையென்றால் பயிர்க்கடன். வெளியிலிருந்து பார்த்தால் ‘அவர்களுக்கு என்ன கரண்ட் பில் இல்ல, உள்ளூருக்குள்ள ராஜ வாழ்க்கை’ என்றெல்லாம் பேசலாம். ஆனால் பிக்கலும் பிடுங்கலும் அவர்களுக்குத்தான் தெரியும். ஆத்மார்த்தமாக ஒரு விவசாயியிடம் 10 நிமிடங்கள் பேசிவிட்டால் அவர்களைக் குறை சொல்ல நமக்கு எந்த முகாந்திரமும் இருக்காது.

விவசாயிகளுக்கான கதவுகளை அரசுகள் ஒவ்வொன்றாக அடைத்து வருவது முறையன்று. தனியார் பைனான்ஸ்களில் வட்டி அதிகம். கந்து வட்டி, மீட்டர் வட்டி வாங்கி விவசாயம் நடத்துகிற அளவுக்கு அதுவொன்றும் டாஸ்மாக் பாரில் சைட் டிஷ் விற்கும் வியாபாரம் இல்லை- தினசரி வருமானத்திலிருந்து வட்டியையும் அசலையும் சேர்த்து அடைக்கலாம் என்று சொல்வதற்கு. வேறு வழியே இல்லாமல் பைனான்ஸ்களுக்குச் சென்றாலும் கூட பைக் வாங்க, கார் வாங்கவும் கூலி வேலைக்குப் போகிறவர்களுக்கும், மில் தொழிலாளிகளுக்கும்தான் கடன் தருகிறார்களே தவிர விவசாயிகளுக்குத் தருவதில்லை. ‘அவன்கிட்ட கடனைக் கொடுத்தா அடுத்த போகத்து வரைக்கும் வட்டியும் வராது, அசலும் வராது’ என்று சொல்கிற ஃபைனான்ஸியர்கள் அதிகம்.

விவசாயி எங்கே போவான்? 

அரசுதான் காத்திட வேண்டும். வங்கிகளில் கடன் வாங்க முடிவதில்லை, கூட்டுறவிலும் கடன் இல்லை, வட்டிக்கடையும் வாய்ப்பில்லை- அக்கம்பக்கத்தில் சேட் கடை இருந்தால் அங்கே கொண்டு போய் நகையைக் கொடுத்து, எந்த உத்தரவாதமுமில்லாமல் நகையை மீட்டெடுக்க முடியாமல் கழுத்தில் சுருக்குக் கயிறைத் தேடுவதுதான் அவனுக்கு இருக்கும் ஒரே வழியாக இருக்கும். 

மனமறிந்து சொல்கிறேன் - சிறு, குறு விவசாயிகளைப் போன்ற பாவப்பட்ட இனம் வேறு இல்லை. அவர்களுக்கு அந்த நிலம் தவிர வேறு எந்த வாய்ப்புமில்லை. அதையும் தொலைத்துவிட வேண்டாம். விவசாயிகளின் பெயர்களைப் பயன்படுத்தி ஊழல் நடைபெற்றால், கொள்ளை நடந்தால் ஊழல்வாதிகளையும் கொள்ளையர்களையும் அரசாங்கம் ஒழுங்குபடுத்துவதுதான் செய்ய வேண்டிய காரியம். அதைச் செய்யாமல் உழவனின் வாய்ப்புகளை அடைத்தால் காலமும் வரலாறும் மன்னிக்காது. விவசாயிகளின் பாவமும் சும்மாவிடாது.

5 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

// உழவனின் வாய்ப்புகளை அடைத்தால்//
அடைப்போம்.
விவசாயத்தை நிறுத்துவோம்.
அப்புறம் விவசாய நிலத்தில் எண்ணெய் கிணறு அமைப்போம்.
கிணறு குத்தகையில் தரகாக பெருமளவில் பணம் பெறுவோம்.

மதன் said...

நிதர்சனமான உண்மை. 100 ல் ஒரு விவசாயியை பார்த்துவிட்டு புறம்பேசும் மக்களை கண்டால் எரிச்சல்தான் வருகிறது. ஒவ்வொரு கதவையாய் அடைத்து விட்டு கடைசியில் வேறு நாட்டிலிருந்து பதப்படுத்தப்பட்ட தானியங்களை இறக்கி மேலும் உடலை கெடுத்துக் கொள்வோம். அதுதானே்உலகமயமாக்கல்.

ss said...

ஒரு விவ.சாயி ..உண்மை நிலை தெரிகிறது..கண்களில் கண்ணீர்
..உலகத்தில் உள்ள அனைவரும் வாடிக்கையாளராக இருந்தும் நஷ்டத்தில் இயங்கும் ஒரே தொழில் ....

~விவசாயம்......

Unknown said...

தமிழ்நாட்டு விவசாயிகள்தான் உலகிலேயே மிகப்பெரிய பிராடு கூட்டம்! விவசாயம் ஒரு தொழில்; அதனை ஒவ்வொரு வருடமும் நட்டத்திற்கு செய்பவன் முட்டாள், திருடன். இந்தியாவில்தான் ஒரு தொழிலை புனிதப்படுத்தி முட்டாள் திருடர்கள் ஏமாற்றி வாழ வழிவகுக்கும் நிலை உள்ளது

அன்புடன் அருண் said...

//மனமறிந்து சொல்கிறேன் - சிறு, குறு விவசாயிகளைப் போன்ற பாவப்பட்ட இனம் வேறு இல்லை. அவர்களுக்கு அந்த நிலம் தவிர வேறு எந்த வாய்ப்புமில்லை.

நூத்துல ஒரு வார்த்தை சார்...

சிறு, குறு விவசாயி நடவு தொடங்கி (investment) - வறட்சி, பூச்சி, காற்று, வனவிலங்குகளால் சேதம் (risk factors) - இதுல எல்லாம் தப்பிச்சு விளைச்சல் எடுத்து (result), அதை விற்று (Sales), இடைத்தரகருக்கு கொடுத்தது போக (Sales commission) - மிஞ்சின பணம் (Net Return) - அவன் போட்ட உழைப்புக்கு கூலிக் கணக்கு (Salary) பார்த்தா அவனுக்கு நட்டம் (Loss) தான்..

எனக்கு தெரிஞ்சு இந்த ஒரு தொழில் தான் இவ்வளவு risk ஆ தெரியுது..