Jul 12, 2020

தெளிந்த நதி

‘என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட’ பாடலை பிரனிதி பாடும் வீடியோவை திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தாள் பாப்பாத்தி. ‘மடத்துப்பாளையம் லேடி டைகர்ஸ்’ வாட்ஸப் குழுமத்தில் வந்திருந்தது. பாப்பாத்தி  நிறைய வாட்ஸப்  க்ரூப்களில் இருக்கிறாள். ஊருக்குள் மாடு மேய்க்கிறவளுக்கு வாட்ஸப் தெரியுமா என்றுதானே நினைக்கிறீர்கள்? ஊரே அப்படித்தான் எகத்தாளம் பேசியது. இவளுக்கு கையில் செல்போன் என்ன, பாட்டு என்ன என்று சாடை பேசினார்கள். அதுவும் கூட ஆரம்பத்தில்தான். 

இப்பொழுது யாரிடம்தான் செல்போன் இல்லை? தோட்டத்தில் தண்ணீர் கட்டும் போது கூட பாட்டை சத்தமாக வைத்து ட்ரவுசருக்குள் போட்டுக் கொள்கிறார்கள். பாப்பாத்தியும் அதே வகையறாதான். முன்பு சிறிய ஃபோனாக வைத்திருந்தாள். ஜாக்கெட்டுக்குள் வைத்துக் கொள்ள செளகரியமாக இருந்தது. அப்பொழுது பாட்டு கேட்பாள், மாட்டு வியாபாரிகள் அழைப்பார்கள். அவ்வளவுதான். இப்பொழுது ஸ்மார்ட் ஃபோன் அப்படியில்லை. என்ன நெஞ்சுக்குள் வைத்துக் கொள்ள முடிவதில்லை. நனைந்து போகிறது. மஞ்சப்பைக்குள் போட்டு எடுத்துக் கொள்வாள். வெள்ளாட்டுக்குட்டி ஒன்றை ஐந்தாயிரத்துக்கு விற்று இதை வாங்கினாள். பத்து நாட்களில் அத்துப்படி ஆகிவிட்டது. மகரந்தம் சுய உதவிக்குழுவின் வாட்ஸப் குழுமத்திற்கு கூட பாப்பாத்திதான் அட்மின்.

மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கும் போது பாட்டு பாடிக் கொண்டிருக்கும். பெரும்பாலும் இளையராஜா பாடல்கள். எட்டு ஜி.பிக்கு ஏத்தி வைத்திருக்கிறாள். டவுனில் இவளுக்குத் தெரிந்த கடை ஒன்று இருக்கிறது. ‘அக்கா, மேட்டர் படம் ஏத்தி தரட்டுமா’ என்று அந்தக் கடைக்காரன் கேட்ட போது ‘கருக்கு அருவா வெச்சு அறுத்து வீசிடுவேன்..எனக்குப் பார்க்கத் தெரியாதா?’ என்று கேட்டுவிட்டு சிரித்தாள். இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால் அவளது பாண்டித்யத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். கூகிள் எல்லாம் பழகிக் கொண்டாள். டிக்டாக்கில் கூட கணக்குத் தொடங்கியிருந்தாள். ஒன்றிரண்டு வீடியோ கூட போட்டிருக்கிறாள். சப்பை மூக்கர்கள் படையெடுக்காமல் இருந்து டிக்டாக் இன்னமும் இந்த புண்ணிய தேசத்தில் இருந்திருந்தால் அவளுடைய கணக்கைத் திறந்து பாப்பாத்தியின் அபிநயங்களை நீங்களும் ரசித்திருக்கலாம். 

மதிய உணவு வரைக்கும் பாடல்களைக் கேட்டுவிட்டு மதியத்திற்கு மேலாக வாட்ஸப் வீடியோக்களை பார்ப்பாள். நாவல் மரத்தின் அடியில், பக்கத்தில் சலசலக்கும் வாய்க்கால், பாடல் கேட்டபடி - இப்படிப்பட்ட வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்துவிடுவதில்லை என்று போகிற வருகிறவர்களெல்லாம் பொறாமைப்படும்படியான சுகவாசி. பாப்பாத்தி பெரும்பாலும் ‘நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை’ வகையான வீடியோக்களைத்தான் பார்க்கிறாள். உண்மைத் தமிழச்சி என்பதால் அவற்றை பிறருக்கும் அனுப்பி வைத்துவிடுகிறாள். இப்படி பார்த்துப் பார்த்தே முக்கால்வாசி வைத்தியச்சி ஆகிவிட்டாள் என்று நாம் கணக்குப் போட்டுக் கொள்ளலாம். கேன்சரிலிருந்து எய்ட்ஸ் வரைக்கும் அவளிடம் மருந்து உண்டு. சில நோய்களை எல்லாம் மூச்சுப் பயிற்சியிலேயே சரி செய்துவிடுவதாகச் சொல்கிறாள். அரசியல் வீடியோக்களும் பார்ப்பாள். அவற்றை விலாவாரியாகச் சொன்னால் எனக்கும் உங்களுக்கும் கச்சடா ஆகிவிடும் என்பதால் மருத்துவம், சினிமா கிசுகிசு பற்றியெல்லாம் அவள் பார்ப்பதை மட்டும் நாம் பேசிக் கொள்வோம்.

‘பிரனிதிக்கு பனிரெண்டு வயசு இருக்குமா?’ என்று மனம் கணக்குப் போட்டது. இந்த வயதிலேயே இந்தப் பெண்ணுக்கு எப்படி குரல் வளம் வாய்த்திருக்கிறது என்று நினைத்தபடியே கூடவே பாடிப் பார்த்தாள். ம்ஹூம், சரியில்லை. தனக்கு கே.பி.சுந்தராம்பாள் பாட்டுதான் சரியாக வரும் என்று வாட்ஸப்பை நிறுத்திவிட்டு பாடல்களைத் தேடி அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிதுவை ஒலிக்கவிட்டாள். தன்னால் இதைப் பாட முடியும் என்று நம்பினாள். பாப்பாத்திக்கு நாற்பது வயதுக்குள்தான் இருக்கும். கணவனை இழந்து வாழ்க்கையின் பெரும்பாரத்தை தாண்டியவள். ஆனால் நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் சாதித்துவிட வேண்டும் என்பதில் பாப்பாத்தியை மிஞ்ச இனி யாராவது பிறந்துதான் வர வேண்டும்.

ஊர் என்ன பேசும், உலகம் என்ன நினைக்கும் என்கிற எந்த நினைப்பும் அவளுக்கு வருவதேயில்லை. விரும்பியதை வாழ்கிற வாழ்க்கை வரம். அவளுக்கு வாய்த்திருக்கிறது. மடத்துப்பாளையத்திலிருந்து பதினாறு கிலோமீட்டருக்கு அந்தப்பக்கம் போனால்தான் டவுன். போக வேண்டும் என நினைத்தால் காலையிலேயே வயலுக்கு சைக்கிள் எடுத்துச் சென்று இரண்டு மூன்று கட்டுக்கள் புல் அறுத்து வந்து மாடுகளுக்குப் போட்டுவிட்டு அதே சைக்கிளை மிதித்து டவுனுக்குச் சென்றுவிடுவாள். இப்படி ஒரு பெண் தன்னந்தனியாக டவுனுக்கும் சினிமா தியேட்டருக்கும் போனால் ஊர் வாய் சும்மா இருக்குமா? அதுவும் எண்பத்தேழு வீடுகள் மட்டுமே இருக்கும் குக்கிராமம். ஒவ்வொரு வீட்டுக்கும் ஓராயிரம் கண்கள்.  ‘மாடுகளைக் கூட மேய்க்காம இவ மேய போய்ட்டா’ என்று சாதாரணமாகச் சொல்லிவிடுவார்கள். ஆனால் அவையெல்லாம் பாப்பாத்திக்கு குதிங்கால் மயிருக்குச் சமானம்.

பாப்பாத்தியின் கையில் இரண்டு மூன்று லட்ச ரூபாய் பணம் இருந்தது. மாடும் ஆடும் விற்றுச் சேர்த்த பணம். இப்பொழுது இருக்கும் மாடுகளை விற்றால் மட்டும் ஏழெட்டு லட்சம் கிடைக்கும். ஒத்தைக்கட்டைக்கு இத்தனை காசு எதற்கு என்று அவளுக்கு எந்நேரமும் தோன்றும். ‘நமக்கு எதுக்கு இவ்வளவு பணம்’ என்ற எண்ணம் ஒருவனுக்கு வந்துவிட்டால் அவன் மிகப்பெரிய விடுதலையை அடைந்துவிட்டான் என்று அர்த்தம்தானே! அந்த விடுதலை பாப்பாத்திக்கு இருந்தது. புரோட்டா தின்னவும் தயங்கியதில்லை, ஐஸ்க்ரீம் தின்னவும் யோசித்ததில்லை.

தானும் யாரையுமே சார்ந்திராமல், தன்னையும் யாருமே சார்ந்திராமல் இருந்து கொண்டிருப்பது சரியா என்று கூட அவள் நினைத்துப் பார்த்ததில்லை. முருகன்தான் இந்தக் கேள்வியைக் கேட்டான். இந்திரா தியேட்டருக்கு எதிரில் மெஸ் நடத்துகிறான். புதுக்கோட்டைக்காரன். டவுனுக்கு வந்தால் அங்குதான் டிபன் சாப்பிடுவாள். ஆண்களிடம் பேசக் கூடாது என்கிற கூச்சமெல்லாம் அவளுக்கு இருந்ததில்லை. மாட்டுக்கார வியாபாரிகளிடம் இவளேதானே பேசுகிறாள்? 

பாப்பாத்தியின் வனப்பும், அவளின் தனிமையும் ஆண்களின் ஹார்மோன்களைக் கிளப்பிவிடுவதில் தவறேதுமில்லை. பாப்பாத்தியின் செல்போனிலும் எல்லாமே வந்துவிடுகிறது.  ஆண்கள் வந்து போகிறார்கள். மனதைக் கிளறுகிற எல்லை மீற எத்தனிக்க வைக்கிற எல்லாவற்றையும் தாண்டியபடியே இருக்கிறாள். கனவுகளில் ஏதோவொரு ஆண் வந்து போகிறான். அவர்களது ஸ்பரிசமும் கொஞ்சு மொழியும் நெகிழச் செய்கின்றன. அடையாளம் தெரியாத அந்த ஆண்கள் அவளின் அந்தரங்கத்தை நிரப்பியபடி இருக்கிறார்கள். 

‘இப்படியே காலம் பூரா இருந்துடுவியா’ என்றுதான் முருகன் கேட்டான். 

‘இருக்க முடியாதா?’ என்றாள். 

‘இல்ல...கேட்கலாம்ன்னு தோணுச்சு’ என அவன் சொன்ன போது துளி கூட யோசிக்காமல் ‘என்னை கட்டிக்கிறயா வெச்சுக்கிறயா?’ என்றாள்.

அவன் சிரித்தபடியே ‘வெச்சுக்கிறேன்’ என்று முடித்தான்.

‘பொண்டாட்டி புள்ள பத்திரமா வேணும்...கூட இன்னொருத்தி கீப்பாவும் வேணும்’ என்று சிரித்தாள். அவனுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.

‘உருப்படுற வழியைப் பாரு’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பிச் சென்றாள். அதன் பிறகு அவளை அவன் ஏதாவதொரு வகையில் தொடர்பு கொள்ளத் தொடங்கினான். ஆடு, மாடு சம்பந்தமாகவோ, எப்போ டவுனுக்கு வருவ என்பதாகவோ அவனது உரையாடல் தொடர்ந்தது. அவளுக்கு அது ஆறுதலாகவும் இருந்தது. அடையாளம் தெரியாத ஆண்களைவிடவும் ஏதோ நெருக்கமாக இருப்பது போல உணர்ந்தாள். ஆனால் நீட்டித்துக் கொள்ள விரும்பவில்லை.

மீண்டும் பார்த்த போது ‘நீதான் நினைச்சதை அடைஞ்சுட நினைக்குற ஆள்தானே’ என்று முருகன் ஒரு முறை கேட்டான்.

‘உன்னை அடையணும்ன்னு நினைக்கவே இல்ல’ என்றாள். 

‘வேற யாராச்சும் மேல ஆசை இருக்கா?’ என்று மெலிதாகக் கேட்டான்.

‘இது உனக்கு அவசியமான கேள்வியா?’ என்றாள். அவனுக்கு அது முகத்தில் அறைந்தாற் போல இருந்தது.

மனித மனதின் குரூரங்களில் பெண்கள்தான் எளிதில் சிக்கிக் கொள்கிறார்கள். ஆண்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்கிறார்கள் அல்லது இந்தச் சமூகம் அவர்களைக் காத்துவிடுகிறது. காதல், உறவு என்றெல்லாம் யாருடனும் உணர்வுப்பூர்வமாக நெருங்குகிற மனநிலையே அவளுக்கு இல்லை. எதையும் சிக்கலாக்கிக் கொண்டு அதற்காக அழுதும் கவலைப்படுவதும் தன் வாழ்க்கையின் மிச்ச காலத்தையும் கசக்கி எறிந்துவிடக் கூடும் என்று பயந்தாள். ஆணின் காதல் பார்வையும், அன்பு கலந்த மொழியும் பெண்ணின் உடலை அடைவதற்கான ஆயுதம் என்று உறுதியாக நம்பினாள். ஆனால் அதை யாரிடமும் சொல்லி உதாசீனப்படுத்தும் எண்ணம் அவளுக்கு இருந்ததில்லை. 

உரையாடலை வெட்டி விட்டு எதுவுமே நடக்காதது போல கடந்துவிடுவதை அவள் பழகியிருந்தாள்.

சில வருடங்களுக்கு முன்பாக வாய்க்கால் ஏரியில் ரத்த சகதியோடு கிடந்தவள் மருத்துவமனையில் பிழைத்ததிலிருந்து போக்கு இப்படித்தான்.  ‘ஏரியில் மாடு இழுத்ததில் கல் மீது விழுந்தது வரைக்கும்தான் நினைவில் இருக்கிறது’ என்று மருத்துவர்களிடம் தகவல் சொன்னாள்.  தன்னைத் தாக்கியவர்களைப் பழிவாங்கிவிட அவளுக்கு விருப்பமில்லை. பயம் என்று அர்த்தமில்லை. வாழ்க்கையின் வசந்தங்களை பார்க்கவே இனி மிச்சமிருக்கும் நாட்கள் என நம்பத் தொடங்கியிருந்தாள்.

தன்னுடைய வாழ்க்கையை தான் மட்டுமே வாழ வேண்டும் என்பதிலும், எந்தச் சிக்கலும் தன்னுடைய சந்தோஷத்தை பறித்துவிடக் கூடாது என்பது அவளுக்கு நன்றாகவே புரிந்திருந்தது.

‘எனக்கு என்ன பதில் வெச்சிருக்க?’ என்றான் முருகன்.

‘விலாவாரியா சொல்லிட்டு இருக்கிற விஷயமில்ல இது...’ என்பதோடு முடித்து சைக்கிளை மிதிக்கத் தொடங்கினாள். 

ஆண்களின் மனம் தேடலை நிறுத்துவதேயில்லை. ஒவ்வொரு ஆணையும் திருத்திக் கொண்டிருப்பது தன்னுடைய வேலை இல்லை என்று அவளுக்குத் தெரியும். தன்னுடைய வாழ்க்கையில் ஆண்களைத் தாண்டிய வசந்தங்கள் உண்டு என்பதில் தெளிவாக இருந்தாள். 

டவுன் தாண்டியதும் எதிர்காற்று சுகமாகவே இருந்தது. சைக்கிளின் முன்பக்கத்தில் கிடந்த மஞ்சள்பைக்குள்ளிலிருந்து சித்ராவின் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அது காற்றில் கரைவதைப் போலவே பாப்பாத்தியின் எண்ணங்களும் கரைந்து கொண்டிருந்தன.

5 எதிர் சப்தங்கள்:

vijay said...

ஆண்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்கிறார்கள் அல்லது இந்தச் சமூகம் அவர்களைக் காத்துவிடுகிறது. ஆணின் காதல் பார்வையும், அன்பு கலந்த மொழியும் பெண்ணின் உடலை அடைவதற்கான ஆயுதம். 100% true

Anonymous1 said...

Chinese are "சப்பை மூக்கர்கள்"? Why this much racism. With this much racism why are you running a foundation?

NAGARATHAN said...

ரொம்ப நன்றி மணி. மனதின் பாரத்தை பாதி இறக்கி வைத்த உணர்வு. ஒரு கதையை சொல்லிவிட்டு, அதற்குத் தொடர்ச்சியும் அருமை. ஒரு கதையை இரண்டு விதமாகச் சொல்லவும், இரண்டு பார்வைகளில் அணுகி தாங்கள் எழுதும் விதத்தை ஏற்கனவே பல பதிவுகளில் படித்துள்ளேன். உதாரணமாக, பங்களூருவில் அந்த பழைய பேப்பர் கடைக்காரர் உடனான உங்களின் அனுபவத்தை இரண்டு வெவ்வேறு பதிவுகளில், வெவ்வேறு பார்வைகளில் இருவேறு கருக்களில் பதிவு செய்திருந்தீர்கள். பாப்பாத்தியின் கதையில் முதல் பாகத்தில் ஒரு பாரத்தை ஏற்றிவிட்டு, அடுத்த பாகத்தில் அதை மடைமாற்றி விட்டீர்கள். இப்போது பாப்பாத்தி தன் வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டாள்; அவளைத் தாக்கிய சரவணனின் அப்பா, மகனை விட்டுத்தரக் கெஞ்சிய அம்மா மற்றும் சரவணன் - இந்த மூவர் தரப்பிற்கும் சொல்வதற்கு கதையில்லாமலா போய்விடும். சொல்வதற்கு கதை என்ற ஒன்று ஒவ்வொரு மனிதனிடமும் கண்டிப்பாக இருக்கும்; என்ன அந்தக் கதையை சுவாரசியமாக சொல்லும் வித்தை ஒருசிலருக்கு மட்டுமே வசமாகும்.

சேக்காளி said...

// சப்பை மூக்கர்கள் படையெடுக்காமல் இருந்து//
அப்ப படையெடுப்பு நடந்தது உண்மை தான்.

சிவபார்கவி said...

வாழ்க வளமுடன். அருமையான கதை.. ஆண்களின் சுயரூபத்தை உரித்துக் காட்டும் வரிகள். நீடுழி வாழ்க உமது இலக்கிய/சமூகப்பணி.. துரை.தியாகராஜ், திருச்செங்கோடு