Jul 11, 2020

பாப்பாத்தி

பாப்பா, பாப்பு, பாப்பாத்தி என்ற பெயர்கள் கடந்த தலைமுறை வரைக்கும் கொங்கு வட்டாரத்தில் பரவலாக உண்டு.  இப்படியான பாப்பாத்திகளில் ஒரு பாப்பாத்தியைப் பற்றிய கதை இது. பக்கத்து ஊரில் தெரியும். மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். மாடு என்றால் ஒன்றிரண்டில்லை- தெருவை நிறைத்துக் கொண்டு ஊர்வலம் செல்லுமளவுக்கு நிறைய மாடுகள். எருமைகளும், ஆடுகளும் கூடச் சேர்ந்து நடக்கும்.

காலையில் ஒன்பது மணியளவில் ஆக்கி வைத்திருக்கும் சோற்றை தூக்குப் போசியில்  எடுத்துக் கொண்டு கையில் ஒரு குச்சியும் வாயில் மாடு விரட்டும் சத்தமுமாக வாய்க்கால், வயல் ஓரம் ஓட்டிச் சென்றால் பொழுது சாயும்  வரைக்கும் அதுதான் பணி. யாருமற்ற தனிமைப் பொழுதுகளில் வாய் ஏதோ முணுமுணுக்கும். பாடலா, பேச்சா என்று புரியாத முணுமுணுப்பு. மேய்ந்து கொண்டிருக்கும் மாடுகளில் ஒவ்வொன்றகாக இழுத்து வந்து வாய்க்காலின் ஓரமாக இறக்கி குளித்துவிடுவதிலேயே பகல் முழுக்க தீர்ந்துவிடும். கொப்பு பிரியும் இடத்தில் ஒரு கல்கட்டுக்குள் சவக்காரமும், தேங்காய் மஞ்சியும் எப்பொழுதும் வைத்திருப்பார். அவை இருக்கும் இடம் பாப்பாத்திக்கு மட்டுமே தெரிந்திருக்கும். சுத்தமாக இருக்கும் மாடுகள் உற்சாகமாக இருப்பதான நம்பிக்கை அவருக்கு உண்டு. மாடுகளுக்கு குளித்து முடித்துவிட்டு, மஞ்சள்பையில் கொண்டு வந்திருக்கும் துணியை எடுத்து நெஞ்சு வரைக்கும் ஏற்றிக் கட்டி வாய்க்காலில் இறங்கி தானும் குளித்து எழும் போது உச்சி கீழே இறங்கத் தொடங்கியிருக்கும்.

தூக்குப் போசியைத் திறந்து வைத்து பிசைந்து எடுத்து வந்ததை ஒவ்வொரு கவளமாக யோசித்தபடியே தின்று முடிக்கவே முக்கால் மணி நேரம் ஆகும். மனிதர்களுக்கு யோசிக்கவா ஒன்றுமில்லை- ஒவ்வொருவருக்கும் கிடைத்திருக்கும் வாழ்க்கை அவருக்கு மட்டுமே பிரத்தியேகமானது இல்லையா? என்னதான் எழுதினாலும் பேசினாலும் தீர்க்கவா முடிகிறது? யோசித்து யோசித்தே மனிதர்கள் தங்கள் கடந்த காலத்தை கொஞ்சம் கொஞ்சமாகச் செரிக்கிறார்கள். கரைக்கிறார்கள்.

உணவை முடித்துவிட்டு கொஞ்ச நேரம் அதே நாவல் மரத்தடியில் அமர்ந்திருப்பார். மதியத்திற்கு மேல் மாடுகளைக் கழுவுகிற வேலையை பாப்பாத்தி ஒரு போதும் செய்வதில்லை. அந்தச் சமயத்தில் வேலை முடித்து வரும் பெண்களிடம் எதையாவது பேசுவார். அவர்கள் அதிகாலையில் வயலில் இறங்கிய பெண்களாக இருப்பார்கள். அவசர அவசரமாக வீட்டுக்குச் சென்று கொண்டிருக்கும் அவர்களுக்கு ஒவ்வொரு கணங்களும் ஒரு யுகங்கள் என்று எண்ணம்.  ஒற்றை வினாடியையும் வீணடித்துவிடக் கூடாது என்ற வேகத்தில் நடப்பார்கள். நடந்தபடியே கேள்வியை வீசிவிட்டு காற்றில் மிதந்து வரும் பதிலுக்கு நிற்காமலேயே ஓடிக் கொண்டிருப்பார்கள். பாப்பாத்திக்குத்தான் எந்த அவசரமுமில்லை. மேற்கில் சூரியன் மலைகளுக்குள் இறங்கத் தொடங்கும் வரைக்கும் அவருடைய பொழுது அந்த நாவல் மரத்தடியிலேயே கரையும். சொசைட்டியிலிருந்து பால் வண்டி போவதற்குள் பால் கறந்து ஊற்றினால் போதும். 

முன்பெல்லாம் நிறைய கறவைகள் இருக்கும். சொசைட்டிக்கு ஊற்றுவதைவிட வெண்ணெய், நெய் என்று வியாபாரம் செய்தால் வரும்படி அதிகம். ஆனால் குடைச்சல் பிடித்த வேலை. இதுவே போதும் என்று வேலைகளைக் குறைத்து ஆகிவிட்டது சில பல வருடங்கள். கறவைகளையும் வைத்துக் கொள்வதில்லை. சினை சேர்ந்தவுடன் வியாபாரிக்குச் சொல்லி அனுப்பினால் வந்து வாங்கிச் சென்றுவிடுவார்கள். மாடு விற்ற பணமே பேங்கில் இரண்டு மூன்று லட்சங்கள் இருக்கும். 

பாப்பாத்திக்கு அண்ணன் தம்பிகள் உண்டு ஆனால் எங்கேயோ இருக்கிறார்களாம். பேச்சுவார்த்தை இல்லாத குடும்பங்கள். பெற்றவர் மறைந்துவிட, உடன் பிறந்தவர்கள் கைவிட வெள்ளாட்டுக்குட்டிகள் வாங்கி மேய்த்துக் கொண்டிருந்தவர் பிறகு மாடுகள் மேய்க்கத் தொடங்கியதாகச் சொல்வார்கள். திருமணம் ஆகியிருக்க வேண்டும். அதுவும் ஒரு அனுமானம்தான். வெள்ளைப்புடவை தவிர பாப்பாத்தி வேறு எதையும் அணிந்து பார்த்ததில்லை. மேலே வண்ணத் துண்டு ஒன்றை போட்டிருப்பார். வெயிலில் நடக்கும் போது மாராப்பு மீது கிடக்கும் துண்டு தலை ஏறிக் கொள்ளும். வெள்ளைப்புடவை என்றாலும் அதைப் பற்றிய விவரம் யாருக்குமே தெரியவில்லை. 

கட்டிக் கொடுத்த இடம், கட்டிக் கொண்டு போனவன் பற்றிய எந்தப் புகாரும் பாப்பாத்திக்கு இல்லை கூட பல பெண்களும் அவளைப் பற்றி குசலம் பேச போதுமானதாக இருந்தது. தன்னை அயலூர்க்காரி என்று யார் சொல்வதையும் ஏற்றுக் கொள்வதுமில்லை. விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஊர் பேச்சை நம்மால் தடுக்கவா முடிகிறது?  வயல் வெளியில் முந்தி விரிப்பதாகவும், அவளது வீட்டுக்கு ஆண்கள் வந்து போவதாகவும் பேசுகிறவர்களும் உண்டு- அதை தம் கண்ணால் பார்த்ததாகச் சொல்கிறவர்களும் உண்டு. வயலோரம் சிரித்து விட்டு ஓட்டமும் நடையுமாகச் செல்கிற பெண்கள் கூட அந்தப்பக்கமாக ‘கிராக்கி இல்லையாட்ட இருக்குது’ என்று பேசுவது பாப்பாத்தியின் காதுகளுக்கு வந்ததில்லை.

நம்மைப்பற்றிய அடுத்தவர்களின் ஒவ்வொரு சொல்லும் நம்மைத் தவிர பிற அத்தனை பேர்களின் காதுகளுக்கும் சென்றுவிடும். அப்படித்தான் சரவணனுக்கும் சென்றிருந்தது. மீசை அரும்பிக் கொண்டிருந்த காலம் அது. பள்ளிக்கூடத்துக்கு ஒழுங்காகச் செல்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்தான். அவனுக்கும் பாப்பாத்திக்கும் 20 வயதுகளாவது வித்தியாசம் இருக்க வேண்டும். ஆனால் பாப்பாத்தி ‘அப்படி இப்படி’ என்ற சொற்கள் அவனைக் கிளர்ந்தெழச் செய்தன. வாய்க்கால் கரைக்குத் தனியாகச் செல்லத் தொடங்கினான். அதே நாவல் மரத்தடியில் சைக்கிளை நிறுத்திவிட்டு பாப்பாத்தி மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது இவன் குளிப்பதும் பேச்சு வளர்ப்பதுமாக இருந்தான். இவனது இருப்பு பாப்பாத்தியை எந்தவிதத்திலும் சலனமடையச் செய்ததில்லை. ஆனால் இவனது கற்பனைகள் எல்லை தாண்டிக் கொண்டிருந்தன. மனித மனம் எப்பொழுதும் குரூரமான கற்பனைகளுக்கு சிறகு பொருத்துகின்றன. அவற்றையெல்லாம் நண்பர்களிடம் நடந்ததாகச் சொல்ல நண்பர்கள் வட்டாரம் அதை வெவ்வேறு விதமாகப் பரப்ப ‘அது தெரிஞ்ச சமாச்சாரம்தானே’ என்று ஆர்வமில்லாதது போல சொல்லிவிட்டு ‘மேல சொல்லு’ என்று கேட்கத் தொடங்கின ஊர் வாய்கள்.

சரவணின் அம்மா ‘எம் பையனை ஏன் வளைச்சு போட்ட..அவனை விட்டுடு’ என்று கையெடுத்துக் கும்பிடும் வரைக்கும் பாப்பாத்திக்குத் தெரியவில்லை. தானுண்டு தன் வேலையுண்டு எனக் கிடக்கிறவளுக்கு அது தெரிய வருவதற்கான வாய்ப்புகளும் குறைவு. பாப்பாத்தி விக்கித்து நின்றாள். அவசரமாக சரவணனின் அம்மா வீட்டுக்குள் நுழைந்த போது டி.வி பார்த்துக் கொண்டிருந்த பாப்பாத்தி எழுந்து தனது சேரை அவருக்கு நகர்த்தினாள். பால் கறந்து சொசைட்டியில் ஊற்றிவிட்டு ஒன்பது மணிக்கு மேல்தான் அவளுக்கு நேரம் கிடைக்கும். ஆனால் தூக்கம் கண்களைச் செருகும். அமரச் சொன்ன போதும் சரவணனின் அம்மா அமரத் தயாராக இல்லை. ஒருக்களித்திருந்த கதவை இன்னமும் நன்றாகச் சாத்திவிட்டு நெடுஞ்சாண்கிடையாக காலில் விழுந்து அழுதபடியே இதைச் சொன்னாள். ‘வேற விவகாரமா இருந்திருந்தா சண்டைக்கு வந்திருப்பேன்..ஆனா இதுல எனக்கு கால்ல விழறதை தவிர ஒண்ணும் தெரியல’ என்ற போதுதான் பாப்பாத்திக்கு மெல்ல மெல்ல புரியத் தொடங்கியது.

‘எந்திரிங்க’ என்றாள். ‘சத்தியம் செஞ்சு கொடு’ என்று மறுத்துக் கிடந்த பெண்மணியிடம்  எதுவுமே மறுக்காமல் ‘இனி அவன் என்ரகிட்ட வர மாட்டான்..சத்தியம்’ என்றாள். அவர் எழுந்து முந்தானையால் கண்களைத் துடைத்துக் கொண்டு எந்த உரையாடலுக்கும் இடம் கொடுக்காமல் எழுந்து சென்றுவிட்டார். 

பாப்பாத்தி சுவரோடு சேர்ந்தபடி அமர்ந்து கண்களை மூடிக் கொண்டாள். சாப்பிடத் தோன்றவில்லை. உணர்ச்சிகளற்று வெற்று உடலாகத் திரிந்தாலும் பெண்ணின் உடல் மீதுதான் ஊருக்குக் கண். ஏதேதோ நினைவுகள் வந்தன. ஆனால் அழக் கூடாது என்பதில் வைராக்கியமாக இருந்தாள். குளித்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. ஓலைத் தடுக்கு வைத்து மறைத்த குளியலறை. எப்பொழுதாவது சாவு வீட்டுக்குச் சென்று வந்தாள் மட்டும்தான் அதில் குளிப்பாள். வெந்நீர் வைத்துத் தயாரானாள். இரவு கவிந்திருந்தது. ஊர் அடங்கிவிட்டது. மணி பத்து இருக்கக் கூடும். மாடுகளின் கால் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.

வெந்நீரை தலையிலிருந்து ஊற்றினாள். ஏதோ ஆசுவாசமாக இருப்பதாகத் தோன்றியது. குளித்து முடிக்கும் போது குழப்பங்களை வெந்நீர் அடித்துச் சென்றுவிட ஏதோ ஒன்று முடிவுக்கு வந்ததைப் போல இருந்தது. தடுக்கை நகர்த்திவிட்டு நிர்வாணமாகவே வீட்டுக்குள் நுழைந்தாள். யாராவது பார்த்துவிடுவார்களோ என்ற எந்த அலட்டலும் அவளுக்கு இல்லை. ஒரு பாயை விரித்து அப்படியே படுத்துக் கொண்டாள். எப்பொழுது உறங்கினாள் என்று அவளுக்கே தெரியவில்லை. விடிந்த போது அவளது நிர்வாணம் அவளுக்கே ஏதோ சங்கடமாகத் தெரிந்தது. புடவையைக் கட்டிக் கொண்டு வெளியே வந்தாள். கோழி கூவிக் கொண்டிருந்தது.

வழக்கம் போல பால் கறந்து, கால் லிட்டர் பாலை சுண்டக் காய்ச்சி குடித்துவிட்டு சோறாக்கி தூக்குப் போசியில் போட்டுக் கிளம்பினாள். சரவணனை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என ஒரு முடிவுக்கு வந்தவளாக இருந்தாள். அவன் தன்னை முகத்துக்கு நேராகச் சந்திக்கும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தவள் மாடுகளை ஓட்டிக் கொண்டு கிளம்பினாள். சின்ன வாய்க்கால் ஏரியில் மாடுகள் போய்க் கொண்டிருந்தன. 

சரவணனின் அப்பா பைக்கில் வந்து நின்றார்.  

‘நேத்தே சொல்லி அனுப்பிட்டனுங்க’ என்றாள். அவர் எதுவும் பேசுவதற்கு முன் பேசி அனுப்பிவிடலாம் என்கிற எச்சரிக்கை அது. ஆணிடம் இதைப் பற்றி என்ன பேசுவது எனத் தோன்றியது.

‘நீ கண்டாரோலித்தனம் பண்ண என் பையன்தான் சிக்குனானா’ என்று ஓங்கி ஒரு அறை விட்டார். அடி விழும் என்று எதிர்பார்க்கவில்லை. அவரும் அவனை விட்டுவிடச் சொல்லி வந்திருப்பார் என்றுதான் பாப்பாத்தி நினைத்துக் கொண்டிருந்தாள்.

‘ஊர்க்காரனுகதான் ஏதோ பேசறானுக...நீ அப்படி இருக்கமாட்டேன்னு நினைச்சுட்டு இருந்தா...நீ என்னமோ உட்டுக் கொடுக்குற மாதிரி பேசுனியாமா’ என்று இன்னொரு அறைவிட்ட போது கையை வைத்துத் தடுத்துக் கொண்டாள்.

‘அதை உங்க பையன்கிட்ட கேட்கலாம்ல’ என்று பாப்பாத்தி அவசரப்பட்டுவிட்டாள். அத்தகைய ஒரு அனாதரவான இடத்தில் தன்னை மீறிய உடல்பலமும் கோபமும் கொண்ட ஒருவனிடம் அப்படி பேசியிருக்கக் கூடாது. அதுதான் புத்திசாலித்தனம். ஆனால் மனம் புத்தியை மீறி பேசிவிட்டது.  பேசிக் கொண்டிருக்கும் போதே அந்த ஆள் தனது பைக்கின் பின்னாடி கட்டியிருந்த விறகு ஒன்றை எடுத்து ஓங்கி வீசவும் அது பாப்பாத்தியின் பின்னந்தலையை பதம் பார்த்தது. ரத்தம் வழிய அப்படியே சரிந்தாள். உயிர் இருக்கிறதா என்றெல்லாம் எந்த அக்கறையும் காட்டிக் கொள்ளாமல் பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார். 

வெகு நேரம் ஆகியும் யாரும் வரவேயில்லை. அவள் அப்பொழுதும் ஈனஸ்வரத்தில் தண்ணீர் கேட்டுக் கொண்டிருந்தாள். பக்கத்தில் வாய்க்கால் நிறைய நீர் ஓடிக் கொண்டிருந்தது. மாடுகள் அலட்டல் இல்லாமல் மேய்ந்து கொண்டிருந்தன. 

4 எதிர் சப்தங்கள்:

Aravind said...

உருக்கமான கதை சார். பாப்பாத்தி போல நிராதாரமாக விடப்பட்ட பெண்கள் மிக அதிகம்

NAGARATHAN said...

ஏற்கனவே மனம் கனத்துக் கிடக்கிறது. இதே போல் இன்னும் இரண்டு கதை கேட்டால் வாழ்க்கையின் விளிம்பைத் தொட்டுவிட்டதாய் தோன்றும். உங்களின் கதை சொல்லல் கை பிடித்து கதைக்குள் கூட்டிச் செல்கிறது. வர்ணிக்கப்படும் சம்பவங்களை அருகிருந்து பார்க்கும் அனுபவத்தைத் தருகிறது. கதைக்கு நன்றி.

Paramasivam said...

அது புத்திசாலித்தனம் அல்ல. தான் தவறு செய்யவில்லையே என்ற மனத்துடன். ஆனாலும், இது போன்ற கொடூரங்கள் பல இடங்களில் நடைபெற்றுக்கொண்டு கொண்டு தான் வருகின்றன.

சேக்காளி said...

திருப்பங்கள் திருப்பங்கள் திருப்பங்கள்.