Jun 3, 2020

எதிர்மறைச் சிந்தனைகள்

சமீபகாலமாக அதிகமான நண்பர்கள் - குறிப்பாக பணியில் இருப்பவர்கள் தங்கள் வேலை, எதிர்காலம் குறித்தான குழப்பங்களை முன் வைத்து- தொடர்ந்து வேலை இருக்குமா இருக்காதா, ஆறு மாதங்களுக்குத்தான் ப்ராஜக்ட் இருக்கிறது என்கிறார்கள் அதன் பிறகு என்ன நடக்கும் என்று தெரியவில்லை போன்ற காரணங்களைச் சொல்லி மன அழுத்தம் அதிகரிப்பதாகச் சொல்கிறார்கள்.  பலரும் அதை மன அழுத்தம் என்று நினைப்பதில்லை- குழப்பமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். 

பல நண்பர்களிடமும் வலுக்கட்டாயமாகப் பேசுகிறேன். பொதுவாகவே பலரும் அடுத்தவர்களிடம் பேசுவதில்லை அல்லது முன்பு பேசியதைவிட வெகுவாக பேச்சு குறைந்திருக்கிறது. மீறிப் பேசினாலும் எதிர்மறைச் சிந்தனைகள் மூளை முழுவதும் நிரம்புகிறது என்று வருந்துகிறார்கள். வீடுகளிலும் கூட கணவன் அல்லது மனைவி, குழந்தையிடம் பேசி தம் சுமையை அவர்கள் மீது இறக்கி வைக்கவும் பலரும் தயங்குகிறார்கள். யோசித்துப் பாருங்கள்- பல்வேறு குழப்பங்களும், கேள்விகளும் தொடர்ச்சியாக மனதில் சேகரமாகிக் கொண்டேயிருக்கின்றன. இவற்றை வெளிப்படையாகப் பேசுவதுமில்லை, வடிகால் உருவாக்குவதுமில்லை. இப்படி தமக்குள்ளாகவே நாட்கணக்கில், வாரக் கணக்கில் கசடுகளைச் சேர்க்க விடும் போது அது கடைசியில் என்னவாகும்? எந்தவிதமான வடிகாலைத் தேடுவது எனத் தெரியாமல் அது கோபமாகவும், எரிச்சலாகவும், புலம்பலாகவும் வெவ்வேறு வடிவங்களைக் கைக்கொள்கிறது. 

ஒருவேளை இத்தகைய மனச்சிக்கல்களை உணர்ந்தால் இவற்றை தொடர்ந்து அப்படியே அனுமதிப்பது சரியானதில்லை.  மாற்று வழிகளைக் கண்டறிந்தே தீர வேண்டும். 

ஒன்றை மட்டும் உறுதியாக மனதில் நிறுத்திக் கொள்ளலாம்- இன்றைய சூழலில் யாருக்குமே பொருளாதார உத்தரவாதமில்லை. கோடிக்கணக்கில் பணத்தை வைத்துக் கொண்டு வட்டிக்கு விட்டு அதை வாங்கி காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தவர்கள் கூட திணறுகிறார்கள். வட்டியை விடுங்கள்- அசல் வந்து சேருமா என்று தெரியவில்லை. ‘வாழ்க்கையில் இவருக்கு எந்தக் கவலையுமில்லை’ என்று மூன்று மாதங்களுக்கு முன்பாக நீங்கள் யாரை நினைத்துக் கொண்டிருந்தீர்களோ அவர்களிடம் பேசிப் பாருங்கள். அவர்களுடைய பிரச்சினைகள் நமக்குத் தெரிய வரும்.  தனியார் ஆம்னி பேருந்துகள், லாட்ஜ், பெரும் உணவுவிடுதிகள் நடத்தியவர்கள்- யாருக்குமே எந்த உத்தரவாதமுமில்லை. சிறு, குறு தொழில் நிறுவனங்கள் தொடங்கி பெருமுதலாளிகள் வரை அத்தனை பேரும் பதற்றத்தில்தான் இருக்கிறார்கள். இப்போதைக்கு பெரும்பாலானோர்  நம்பிக் கொண்டிருப்பது நிலைமை சீராகிவிடும் என்கிற ஒற்றை நம்பிக்கையில்தான். இந்த ஒற்றை நம்பிக்கைதான் நம் எல்லோருக்குமே தேவை.

பொதுவாக வெவ்வேறு தொழில்களை நடத்துகிறவர்கள், நிறுவனங்களை நடத்துகிறவர்கள், முதலீடுகளைச் செய்தவர்கள் என பெரும்பாலானவர்கள் தங்கள் தொழிலில் மேடு பள்ளங்களைப் பார்த்தவர்கள். அவர்களுக்கு இது பெரிய பள்ளம். அவ்வளவுதான். ஆனால் கார்போரேட் நிறுவன ஊழியர்கள், ஐடி ஊழியர்கள் ஒருவிதமான comfort zone இல் இருந்து பழகியவர்கள்தான் அதிகம். இப்படியொரு நீண்டகால நிலையின்மையை, அதுவும் தனியாக அமர்ந்து ‘என்ன ஆகுமோ’ என்று புலம்புகிற அவஸ்தையை இப்பொழுதுதான் முதலில் உணர்கிறார்கள். முன்பும் கூட பொருளாதார தேக்க நிலையின் போது, நிறுவனங்கள் ஆட்குறைப்பைச் செய்த போதெல்லாம் குறைந்தபட்சம் கேண்டீனிலாவது நான்கு பேர் பேசக் கிடைப்பார்கள். பேசிப் பேசிச் சுமையை இறக்கிவிடலாம். பயம் அதிகமாகும் போது அலுவலகத்துக்கு வெளியில் காலாற நடந்து வரலாம்.  இப்பொழுது அதற்கும் வாய்ப்பில்லை. தனித்துச் சிக்கியிருக்கிறார்கள். கொரோனாவும், ஊரடங்கும், அலுவலக வதந்திகளும் சிதைத்து வதைக்கின்றன.

என்னதான் செய்வது என்று கேட்டால் நம்பிக்கைதான் ஒரே வழி. நிலைமை சீரடைந்துவிடும் என்கிற நம்பிக்கைதான் அவசியம். 

எனக்கும் அதுதான் தேவை. உங்களுக்கும் அதுவேதான். ஆறு மாதங்களுக்கு ப்ராஜக்ட் இருக்கிறது; வேலை இருக்கிறது என்றால் அடுத்த ஆறு மாதங்களில் நிலைமை தேறிவிட எல்லாவிதமான வாய்ப்புகளும் இருக்கின்றன. வேலையில் இருக்கும் நமக்கே ஆயிரத்தெட்டு கவலைகள் இருக்கும் போது நம்மை நம்பி கோடிக்கணக்கில் முதலீடு செய்திருக்கும் நிறுவன அதிபர்கள், நிறுவன இயக்குநர்கள் எல்லாம் கவலைப்படாமல் இருப்பார்களா? ப்ராஜக்ட்களைத் தேடுவார்கள், பணம் சம்பாதிக்கும் வழிகளை ஆய்வார்கள். அப்பொழுது நம்முடைய பங்களிப்பும் நிச்சயமாகத் தேவையானதாக இருக்கும்.

நிலைமை மெல்லச் சீரடையும் போது நாம் பணிபுரியும் நிறுவனங்கள் சற்றே தடுமாறினால் நம் நிறுவனம்  இழக்கும் வாய்ப்புகளை இன்னொரு நிறுவனம் பெறுகிறது என்றுதான் அர்த்தமே தவிர உலகமே மூழ்கிக் கொண்டிருக்கிறது என்று கருத வேண்டியதில்லை. அப்படி ஒரு போதும் நடக்காது. சக்கரம் சுழன்று கொண்டேதான் இருக்கும். அப்படியான வாய்ப்புகளைப் பெறும் நிறுவனங்களுக்கு பணிகளைச் செய்து தர ஆட்கள் தேவைப்படுவார்கள். அவர்களுக்கு நாம் பொறுத்தமானவர்களாக இருப்போம் என்ற நம்பிக்கையை உருவாக்க வேண்டியதுதான் நாம் செய்ய வேண்டிய ஒரே வேலை. அதற்குத் தேவையான கற்றல், கற்றவற்றை வெளிக்காட்டும் மனநிலை, உற்சாகமான எண்ணங்கள் என்று நம்மை மெருகேற்றிக் கொண்டேயிருப்பதுதான் காலத்தின் கட்டாயமே தவிர முடங்கி நம்மை நாமே நசுக்கிக் கொள்வதில்லை.

ஊரடங்கு காலத்தின் தொடக்க மனநிலைக்கும் இப்போதைய மனநிலைக்குமான வித்தியாசங்களை சில கணங்கள் யோசித்துப் பார்க்கலாம். எண்ண மாற்றங்கள் (mood swing) வந்து போவது இயல்புதான். ஆனால் அப்பொழுது இருந்ததைவிட இப்பொழுது தொடர்ச்சியான மன அழுத்தம், கோபம், வேலை அல்லது பொருளாதாரம் சார்ந்த பயம், குழப்பம் என சஞ்சலமுற்று, தூக்கம் வரவில்லை, பசியில்லை என்பது மாதிரியான பிரச்சினைகள் கடந்த சில நாட்களாகவே இருப்பதாக உணர்ந்தால் நமக்காகவும் நம் குடும்பத்துக்காகவும் இத்தகைய மனச்சிக்கல்களைவிட்டு வெளியில் வர வேண்டியது மிக அவசியம். அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது கட்டாயம்.

நண்பர்களோடு பேச முயற்சிக்கலாம். ஒருவர் எதிர்மறையாகப் பேசுகிறார் என்றால் அவரிடம் கொஞ்சம் பாஸிட்டிவிட்டியை நம்மால் உருவாக்க முடியுமென்றால் முயற்சிக்கலாம் அல்லது அப்போதைக்கு பேசுவதையே தவிர்த்துவிடலாம். செய்திச் சேனல்களை முழுமையாகத் தவிர்த்துவிடுவதில் தவறேதுமில்லை. அவை மிக அதிகமான குழப்பத்தை உண்டாக்குகின்றன. சமூக ஊடகங்கள் ஓரளவுக்கு பரவாயில்லை. அவற்றிலும் யாரேனும் நம்மை பயமூட்டும்படியாகத் திரும்பத் திரும்ப எழுதியும் பேசிக் கொண்டுமிருந்தால் அவர்களைத் தவிர்த்துவிடலாம். நம் எண்ணங்களுக்கு எதிரானவற்றை, நமக்கு விருப்பமில்லாதவற்றை, எதைப் பேசினால் நமக்கு எரிச்சல் உண்டாகுமோ அதைப் பேசிக் கொண்டிருப்பவர்களை தாட்சண்யமின்றி un-follow செய்துவிடலாம். 

மனதுக்கு ஆறுதலான சில காரியங்களைச் செய்து பார்க்கலாம். வெளியில் சற்று நடந்து வரலாம். நடக்கும் போது யாரிடமாவது பேசலாம். புத்தகம் படிப்பதும், படம் பார்ப்பதும் மனதினை இலகுவாக்குகிறது என்றால் அதைச் செய்து பார்க்கலாம். இதையெல்லாம் செய்வது மட்டுமில்லாமல் மெல்ல மெல்ல மனைவியிடமும் கணவரிடமும் பேசித் திட்டமிடல்களை ஆரம்பிக்கலாம். ஒருவேளை சூழல் மோசமாகி வேலையே போய்விட்டாலும் ‘இதைச் செய்து கொள்ளலாம்’ என்று ஏதேனும் மாற்று வழிகள்- இப்படியொரு வழி இருக்கிறது என்று தெரிந்து வைத்திருந்தாலும் கூட ஆசுவாசமாக இருக்கும். 

நோய், அரசாங்கம், குளறுபடிகள், வேலை, பொருளாதாரம், சம்பளம் என எல்லாவற்றையும் தாண்டி நம் ஆரோக்கியமும், நம் குழந்தைகளின் மனநலமும் மிக முக்கியம். எவ்வளவு பெரும் கவலை வந்தாலும் உடல் ஆரோக்கியமாகவும், மனம் தைரியமாகவும் இருந்தால் நீந்திக் கடந்துவிடலாம். மனிதனுக்கு அளவுகடந்த பேராற்றல் இருக்கிறது! 

ஒன்றை மட்டும் உறுதியாக நம்பலாம். சக்கரம் மேலே வந்தே தீரும். அது வரைக்கும் மனதை இலகுவாக்குகிற காரியங்களை மட்டும் செய்யுங்கள். மனதைக் குழப்புகிறது, பயமூட்டுகிறது, சஞ்சலப்படுத்துகிறது என்றால் எதுவாக இருந்தாலும்- அது எதுவாக இருந்தாலும் அதை முழுமையாகத் தவிர்த்துவிடுங்கள். அதுதான் நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான காரியம். 

vaamanikandan@gmail.com

2 எதிர் சப்தங்கள்:

Srii said...

சக்கரம் மேலே வந்தே தீரும் ! Perfect

அன்புடன் அருண் said...

உங்கள் கருத்து மிகச் சரியானது...சக்கரம் மேலே வரும் வரை "தம்" கட்டுவது தான் இப்போதைக்கு முக்கியம்...

என் பார்வையில் உங்கள் கருத்தில் ஒரு சிறு திருத்தம்.

//ஒன்றை மட்டும் உறுதியாக மனதில் நிறுத்திக் கொள்ளலாம்- இன்றைய சூழலில் யாருக்குமே பொருளாதார உத்தரவாதமில்லை - இந்நாள் மற்றும் முன்னாள் அரசு ஊழியர்கள் தவிர.