Jun 4, 2020

செந்தூரன்

 'நீங்க சோனா காதா’

இந்தக் கேள்வியை தமிழ்நாட்டில் யாராவது கேட்டிருந்தால் ஆச்சரியமாக இருந்திருக்காது. விசாகப்பட்டினத்தில் யாரோ கேட்ட போது பிரதீப்புக்கு ஆச்சரியம்தான் . கேட்டவரைப் பார்த்தான். மண்டைக்குள் கசகசவென ரசாயன மாற்றங்கள் நிகழ்ந்து வெகு சில முகங்கள் வேகமாக வந்து  போயின. முக்கால் வினாடிக்குள் கண்டறிந்துவிட்டான். மறக்கக் கூடிய முகமா அது?

‘செந்தூரா...எப்படி இருக்க?’- சிற்சில மாற்றங்களுடன் செந்தூரன் அப்படியேதான் இருந்தான். கல்லூரிக் காலத்தில் அவனுக்கு மீசை சற்று அடர்த்தி குறைவாக இருக்கும். மாறியிருந்தது. தவிர, இப்பொழுது தலையில் சில நரைமுடிகள் தெரிந்தன. முகத்தில்தான் பழைய களை இல்லை. படிப்பை முடித்து பதினாறு வருடங்கள் ஓடிவிட்டன. கிட்டத்தட்ட ஆயுளின் மத்திமத்தை நெருங்கியாகிவிட்டது. எல்லோருக்கும் இருக்கக் கூடிய நெருக்கடிகள், சுமைகள்தானே அவனுக்கும் இருக்கும்?

செந்தூரன் குளித்தலையிலிருந்து படிக்க வந்திருந்தவன். அப்பா இல்லை. பக்கத்திலேயே கரூரிலோ திருச்சியிலோ அம்மா படிக்கச் சொன்ன போது பி.ஈ ஐ.டி எங்கே கிடைத்தாலும் சென்றுவிடுகிறேன் என்று சேலம் வந்து சோனாவில் சேர்ந்ததாகச் சொல்லியிருக்கிறான். பிரதீப் எலெக்ட்ரிக்கல் டிபார்ட்மெண்ட். இருவரும் விடுதியில் பக்கத்து அறைகள். மிகவும் நெருங்கவில்லை என்றாலும் நண்பர்கள்.  

‘வைசாக்ல எங்க இருக்கீங்க’- செந்தூரன் கேட்டான் - கால இடைவெளி போடா வாடாவை அழித்து மரியாதையைக் கொண்டு வந்து நிரப்பியிருந்தது.

‘ரிஷிகொண்டா பீச் ஏரியால ஒரு ரிசார்ட் கட்டிட வேலை நடந்துட்டு இருக்கு...ரெண்டு நாள் மீட்டிங்..ஹோட்டல்லதான் தங்கியிருக்கேன்’ பிரதீப் சொல்லிக் கொண்டிருந்தபடியே ஸ்ரீவித்யாவின் முகத்தை நினைவுபடுத்திக் கொண்டான். 

‘நீ?’ -  ங்க விகுதியில்லாமலே கேட்டான். செந்தூரனை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்துவிடுவதற்கான முயற்சி அது. 

‘பக்கத்துலதான் வேலை’ என்றான். நிறுவனம் பற்றியெல்லாம் பெரிதாக விசாரித்துக் கொள்ளவில்லை. வித்யா பற்றிக் கேட்கச் சொல்லி மனம் குதித்தது. பிரதீப்புக்கு வித்யாவிடம் இனம்புரியாத ஈர்ப்பு இருந்தது. யாருக்குத்தான் இல்லாமல் இருந்திருக்கும்? அவள் யட்சி. 

செந்தூரனும், வித்யாவும் ஒரே வகுப்பு. ஐ.டி. டிபார்ட்மெண்ட்.  ஆனால் பிரதீப்புக்கு அவளிடம் நேரடியாகப் பேசுகிற வாய்ப்பே அமைந்ததில்லை. அமைந்ததில்லை என்பதைவிடவும் அவள் நறுக்குத் தெறித்தாற் போல பேசிவிடுவாள். அதுவே பல பையன்களுக்கும் பயத்தைத் தந்திருந்தது. பேச யோசிப்பார்கள். சற்றே பிசகினாலும் ஜென்மத்துக்கும் அவளோடு பேச முடியாது. உடைத்து வீசிவிடுவாள். அப்படித்தான் பிரதீப்பும் பேசாமலே காலம் தள்ளியிருந்தான்.

இப்பொழுதும் கூட அவ்வப்பொழுது  ஸ்ரீவித்யா சோனா, ஸ்ரீவித்யா ராமச்சந்திரன் என்று பல்வேறு விதங்களில் அவளது முகத்தை ஃபேஸ்புக்கிலும் கூகிளிலும் தேடிப் பார்ப்பதுண்டு. ஆனால் அவளைப் பற்றி எந்தத் தகவலையும் எடுக்க முடிந்ததில்லை. எதுவும் செய்யப் போவதில்லை- முகத்தைப் பார்க்கலாம் என்று அவ்வப்பொழுது தோன்றுவதைத் தவிர்க்கவே முடியாமல் இருந்தது. இப்பொழுதும் கூட ‘உங்க க்ரஷ் யார்?’ என்று கேட்டாள் அவள் பெயர்தான் வந்து போகிறது. பிரதீப்புக்கு திருமணமாகி மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. வித்ய ப்ரீத்தா என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

‘நீ வைசாக் வந்து எவ்ளோ வருஷம் ஆச்சு?’ பிரதீப்தான் கேள்வியைக் கேட்டான். 

‘ஆறேழு வருஷம்’ 

‘ஐடி- யா?’

‘இல்ல’- இந்த பதில் செந்தூரனை நெருடியது. என்னவோ சரியில்லையோ என்று நினைத்தான். அடுத்த கேள்வியாக வித்யா குறித்துக் கேட்டுவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தவன் அமைதியாக இருக்க வேண்டியதாகிவிட்டது. பலரும் அணுகத் தயங்கிய வித்யா செந்தூரனிடம்தான் அதிகம் பழகினாள். மெக்கானிக்கல் சீனியர் பாலகுமாரன் ஒரு முறை தனது விடுதி அறைக்கு செந்தூரனை அழைத்து வித்யா குறித்து விசாரித்தார். 

செந்தூரனிடம் ஒரு தெனாவெட்டு இருக்கும். பார்ப்பதற்கு நளினமானவனாகவும், நாசூக்கானவனாகவும் தெரிந்தாலும் கட்-த்ரோட் என்பதன் சரியான உதாரணம். அதெல்லாம் இயல்பிலேயே வர வேண்டும். என்னதான் பயிற்சி செய்தாலும் வந்து சேராது. அது கூட வித்யாவை ஈர்த்திருக்கக் கூடும். 

தாம் இங்கு ஏதேனும் மென்பொருள் துறையில் பணிபுரியக் கூடும் என பிரதீப் நினைத்திருப்பான் என்பதை செந்தூரனும் உணர்ந்தவனாக பேச்சை மாற்ற விரும்பினான். 

‘வேலை என்ன வேலை... நம்மைச் சுத்தி வெளியில் இருக்கிறதுதான் நமக்கு சந்தோஷம்ன்னு நினைக்கிறோம்..இல்லையா?’ என்றான். 

பிரதீப் மெலிதாக புன்னகைத்தான்.

‘கார், வீடு, வசதி...இப்படி’

‘ம்ம்ம்’

‘வெளியில் இருக்கிறது என்னதான் நம்மை டிஸ்டர்ப் செஞ்சாலும் உள்ளுக்குள்ள நாம அலட்டிக்காம இருக்கணும்..ஆனா பாருங்க...வெளியில் செளகரியமா இருக்கணும்ன்னு உள்ளுக்குள்ள பயங்கரமா அலட்டிக்கிறோம்’- உள்ளுக்குள் என்று சொல்லும் போது நெற்றிப்பொட்டில் கட்டை விரலை வைத்துக் காட்டினான். செந்தூரன் எதையோ அப்பட்டமாக பேசுவதாக பிரதீப் நினைத்தான். மனிதர்கள் தங்களுக்குள் எவ்வளவுதான் சுமைகள் சேர்ந்தாலும், அழுத்தங்கள் வந்து குவிந்தாலும் பணம், சம்பாத்தியம், சுகபோகம் எனபதற்காக எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்கிறார்கள். இல்லையா? 

‘வித்யா எப்படி இருக்கா?’ - இப்பொழுதும் பிரதீப் உள்ளுக்குள்தான் அலட்டிக் கொண்டிருந்தான். பொறுக்க முடியாமல் கேட்டே விட்டான்.

‘தெரியலை’- செந்தூரன் சாவகாசமாகச் சொன்னான். விரக்தியில் சொல்கிறானா, இயல்பாகச் சொல்கிறானா என்று புரிபடாத தொனி அது. 

அலுவல் பணி முடிந்து அறையில் லேப்டாப்பை வைத்துவிட்டு காலாற நடந்து வரலாம் என்று வரும் போதுதான் செந்தூரனை எதிர்கொண்டான். இந்தச் சூழலில் செந்தூரனை- தாம் விரும்பிய பெண்ணின் காதலனாக இருந்தவனை எதிர்கொள்வோம் என்று பிரதீப் நினைக்கவில்லை. அவன் இப்படியெல்லாம் பேசுவான் என்று எதிர்பார்க்கவில்லை.

பாலகுமாரனிடம் எதிர்த்துப் பேசிவிட்டு வந்த போதே விடுதி முழுக்கவும் அதுதான் பேச்சாக இருந்தது. கல்லூரியிலும் பேசினார்கள். பாலாவைப் பார்த்தால் எல்லோருக்குமே சற்று பயமாக இருக்கும். திடீரென்று அடித்துவிடுவார். அதற்காகவே அவரை கல்லூரியிலிருந்து பல முறை சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள். செந்தூரனை எதுவும் செய்யாமல் அனுப்பியிருந்தார். அந்தத் தகவல் வித்யாவுக்கும் சேர்ந்திருந்தது. அடுத்த சில மாதங்களிலேயே செந்தூரனும் வித்யாவும் நெருங்கியிருந்தார்கள். அது காதல்தான். 

அதன் பிறகு மற்றவர்கள் யாரும் வித்யாவிடம் பேச முயற்சித்ததாக நினைவில் இல்லை. பிரதீப்பும் அவளை ஓரக்கண்ணால் பார்ப்பதோடு ஒதுங்கியிருந்தான். கல்லூரியின் இறுதிக் காலம் வரையிலும் அவர்களது காதல் தொடர்ந்தது. பிரதீப்புக்கு எலெக்ட்ரிக்கல் துறையைச் சார்ந்தவர்களுடனேயே கூட அத்தனை பேருடனும் தொடர்பில் இல்லாத சூழலில் ஐ.டி. டிபார்ட்மெண்ட்டைச் சார்ந்தவர்கள் யாருடனுமே தொடர்பில் இல்லை. கோபால் அமெரிக்காவில் இருப்பதாகச் சொன்னார்கள். முரளியும் வெளிநாடு சென்றுவிட்டான். எல்லாமே செவி வழிச் செய்திதான். 

வித்யாவைத் தேடும் போதெல்லாம் செந்தூரனையும் தேடியிருக்கிறான். பிரதீப்புக்கு இருவருமே பிடிபடவில்லை.

‘நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சுக்கலயா?’ தான் மட்டுமில்லை யாராக இருந்தாலும் செந்தூரனிடம் அவனைவிடவும் அவளைப் பற்றித்தான் கேள்வி கேட்டிருப்பார்கள் என பிரதீப் உள்ளுக்குள் சமாதானம் சொல்லிக் கொண்டான்.

‘இல்ல’

வித்யா பற்றியக் கேள்விகளுக்கு ஒற்றைச் சொற்களுடன் முடிக்கிறான். ‘ஏன் செஞ்சுக்கல’ என்று கேட்டுவிடலாமா என்று குழப்பமாக இருந்தது. 

‘அம்மா என்ன பண்ணுறாங்க?’ என்றான் பிரதீப். கல்லூரியின் நான்காண்டு காலத்தில் ஒரேயொரு முறை வந்திருந்தார். இவன் கல்லூரிக்கட்டணத்தை வாங்கி வர ஊருக்குச் சென்றிருந்த சமயத்தில் பணத்தைப் புரட்ட முடியாமல் இவன் கல்லூரிக்கு வந்து சேர்ந்த இரண்டு நாட்களில் எடுத்து வந்து கட்டினார். கைத்தறிப் புடவை, கழுத்தில் ஒரு மெல்லிய செயின் அணிந்திருந்தார். 

‘அம்மாவும் போய்ட்டாங்க...சூசைட்’- இவன் முகத்தில் ஏன் களை குறைந்திருக்கிறது என்பதைப் புரிந்தவனாக பிரதீப் அமைதியானான். செந்தூரன் சொல்கிற எந்த பதிலுமே மறு கேள்விக்கு வாய்ப்பைத் தராமல் தாழிடும் பதில்களாகவே இருக்கின்றன.

உள்ளே-வெளியே என அப்பட்டமாக பேசியது கூட தன்னை ஆறுதல்படுத்திக் கொள்வதற்காக அவனே பேசுகிற வார்த்தைகள் என்று தோன்றியது.

‘நீ உள்ளுக்குள்ள அலட்டிக்காம இருக்கிறயா?’- பிரதீப் கேட்டான். செந்தூரன் எதிர்பார்க்கவில்லை. ‘அப்படித்தான் இருக்க ட்ரை பண்ணுறேன்’ சொல்லிவிட்டு மெதுவாகச் சிரித்தான்.

‘வேற ஏதாச்சும் பேசுவோமா? ஃபேமிலி பத்தி...’ என்று பிரதீப் கடந்த காலத்தைவிட்டு நிகழ் உலகத்துக்கு அவனை அழைத்து வர விரும்பினான்.

‘என் எல்லா பதிலுமே உனக்கு அதிர்ச்சியாத்தான் இருக்கும்...கல்யாணம் நடக்கவே இல்ல.....அம்மா இறந்த பின்னாடி தனியாகிட்டேன்..அதுக்கு முன்னாடியே அவ விலகிட்டா...எல்லாம் சேர்ந்து டிப்ரெஷன்....தேடல் அது இதுன்னு பல வருஷம் ஓடிடுச்சு... ஒழுங்கான வேலை இல்லை...’

‘இப்போ என்ன செய்யற?’

‘அங்க பெட்ரோல் பங்க் தெரியுதா...ஹெச்.பி...அங்க மேனேஜர்...இது டீ டைம் இது..ஒரு தம் அடிக்கலாம்ன்னு வந்தேன்...தெரிஞ்ச முகமா இருக்கேன்னு பார்த்தா நீ...முடிதான் கழண்டுடுச்சு உனக்கு’ சொல்லிவிட்டுச் சிரித்தான்.

ஐடி படிப்புக்காக அம்மாவை தனியே விட்டு வெளியில் வந்தவன், எல்லோரும் பயந்த பாலகுமாரனை  சாதாரணமாக டீல் செய்தவன், கல்லூரியே விரும்பிய யட்சி ஒருத்தியை மிகச் சாதாரணமாக காதலிக்கத் தொடங்கியவன். இப்பொழுது எல்லாமே புதிராக இருந்தது பிரதீப்புக்கு. 

எல்லோருக்கும் வாழ்க்கை சீராக ஓடிக் கொண்டிருப்பதில்லை. அது நிறையப் பேர்களை புரட்டி ஓரத்தில் வீசிவிடுகிறது. முனகலோடு கிடக்கும் அவர்களைக் கண்டறிவதில் நமக்கு நேரமும் சூழலும் வாய்ப்பதில்லை. 

‘நீ கேட்ட இல்ல...எதுக்குமே நான் அலட்டிக்கிறதில்லையான்னு? அலட்டிக்க என்ன இருக்கு சொல்லு? ஒரு ரூம் இருக்கு..சின்னதா டிவி இருக்கு....முடிஞ்ச வரைக்கும் பங்க்ல கிடப்பேன்...ரூமுக்கு போனா தூங்கறது மட்டும்தான்...தனிமையைத் தவிர நான் கவலைப்பட ஒண்ணுமே இல்ல’

‘பழசெல்லாம்?’

‘உன்னை மாதிரி யாராச்சும் கிளறினாத்தான்...இன்னைக்கு தூக்கம் வராது...தண்ணியடிப்பேன்’ 

பிரதீப் எதுவும் சொல்லவில்லை. அவனது வலது கரத்தைப் பற்றினான். அப்படியொரு பற்றுதல் செந்தூரனுக்கு சமீபகாலத்தில் நிகழவேயில்லை என்பதை அவனது பதில் பற்றுதல் உணர்த்தியது. 

‘ஒரேயொரு வார்த்தை...இல்லன்னா ஒரேயொரு வாக்கியம் போதும்...ரெண்டு பேருக்கான ரிலேஷன்ஷிப்பை உடைச்சுட’ என்றான். அவனை மீறி கண்ணீர் கசிவது போலத் தெரிந்தது. அவன் வித்யாவை நினைத்துச் சொல்லியிருக்க வேண்டும் அல்லது அம்மாவை நினைத்துமாகவும் இருக்கலாம்.

‘எனக்குள்ள இருந்த ஸ்டெபிலிட்டியை அசைச்சு பார்க்குற நீ’ என்று சிரித்தான். அப்பொழுது கண்ணீர் உருண்டுவிட்டது.

‘ரெண்டு பேருக்கும் இடையில் நட்போ, உறவோ உருவாகும் போது அப்பட்டமா பேசிடக் கூடாது....மறைச்சு வெச்ச ஓவியம் மாதிரி....ஒவ்வொரு வார்த்தையும் வாக்கியமும் மறைப்ப மெல்ல விலக்கலாமே தவிர ஒரேயடியா விலக்கிட கூடாது...அது எல்லாத்தையும் குலைச்சு போட்டுடும்’ என்று சொல்லிவிட்டு  ‘சிகரெட் வெச்சிருக்கியா’ என்றான். இது நிச்சயமாக வித்யாவை நினைத்துப் பேசுகிறான்.

‘இல்ல’

‘நீ உன் ஃபேமிலி பத்தி சொல்லவே இல்லை’ செந்தூரனின் கேள்வி காதுக்குள் நுழையவே இல்லை. பிரதீப்புக்கு ஏனோ மனசுக்குள் அலையடித்தபடியே இருந்தது.

‘நாளைக்கும் இங்கதான் இருப்பேன்...பங்குக்கு வரட்டுமா’ என்றான்.

‘கிளம்புறியா?’ செந்தூரன் அவனை இருக்கும்படியான தொனியில் கேட்டான்.

‘நாளைக்கு வர்றேன்’ என்றான்.

‘நூறு ரூபா தந்துட்டு போறியா’ என்றான். பிரதீப்புக்கு என்னவோ போலாகிவிட்டது. ஐநூறு ரூபாயை எடுத்துக் கொடுத்தான்.

‘இல்ல...நிறைய தண்ணி அடிச்சுடுவேன்..நூறு மட்டும் கொடு’ என்றவன் ‘மாசக் கடைசி’ என்று அவனாகவே சொல்லிக் கொண்டான்.

பிரதீப் கொடுத்தான். வாங்கும் போது பழைய கட்-த்ரோட் செந்தூரனாக அவனில்லை. உடைந்து போனான்.

பிரதீப் நடக்கத் தொடங்கினான். செந்தூரன் எதிர்திசையில் நடந்தான். கடற்காற்று பிரதீப்பின் வியர்வை முழுக்கவும் கரிப்பை படியச் செய்திருந்தது.

4 எதிர் சப்தங்கள்:

sivakumarcoimbatore said...

arumai sir...

seenu said...

ஆழ்மனதை ஆட்டம் காண வைக்கிறது. தரமான படைப்பு.

Saravanan Sekar said...

வெகு நாட்களுக்கு பிறகான நிசப்தம் சிறுகதை - பிடித்திருந்தது. அருமை.
செந்தூரன் என்ற சற்றே வித்யாசமான பெயர் கூட எதோ ஒரு வகையில் அந்த கதாபாத்திரத்துக்கு பொருத்தி போகிறது போல் தோன்றியது.

Worth reading a story in Nisaptham after a while. We are waiting for more such writings...

அன்புடன்,
சரவணன் சேகர்

Paramasivam said...

மனதை நெருட (நெகிழ) வைக்கும் எழுத்து நடை.