உள்ளூர் இளைஞர் ஒருவரை சில நாட்களுக்கு முன்பாக கடையில் சந்திக்க நேர்ந்தது. கஷ்டப்பட்ட குடும்பம். பொறியியல் முடித்திருக்கிறான். நான்கு வருட அனுபவம் இருக்கிறது. நெட்வொர்க்கிங் துறையில் பணிபுரிவதாகவும் சம்பளம் சொற்பமாக இருப்பதாகவும் சொல்லிக் கொண்டிருந்தான். ‘இப்போதைக்கு இருக்கிற வேலையைக் காப்பாத்திக்க...இடைப்பட்ட காலத்தில் ஏதேனும் உருப்படியா படிச்சு வை’ என்றேன். எனக்கு ஏ.டபிள்யூ.எஸ் தெரியும் என்றான். சுயமாகவே படித்திருக்கிறான்.
ஒன்றிரண்டு வருடங்களுக்கு முன்பாக சிங்கப்பூரில் பணிபுரியும் கவி சொல்லித்தான் ஏ.டபிள்யூ.எஸ் பற்றி தேடத் தொடங்கியிருந்தேன். க்ளவுட் என்று கேள்விப்பட்டிருப்போம். கணினித்துறையில் இன்றைய காலகட்டத்தில் மிக அதிகளவு உச்சரிக்கப்படும் சில சொற்களில் இதுவும் ஒன்று.
அது என்ன க்ளவுட்?
முன்பெல்லாம் ஒரு நிறுவனம் இயங்குவதற்கு அடிப்படையான கட்டமைப்பு தேவை. அதனால் சர்வர் உட்பட எல்லாவற்றையும் சொந்தமாகவே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். வாங்கி வைத்துக் கொண்டால் மட்டும் போதாது. மின்கட்டணம், தடையில்லா மின்சாரம், குளிரூட்டும் வசதிகள் என்று வசதிகள் மட்டுமில்லாமல் பாதுகாக்க, பராமரிக்க, தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படின் சரி செய்ய என்று நிறையப் பணியாளர்களும் தேவை. செலவும் அதிகம். தொழில்நுட்பம் வளர வளர இப்பொழுது இவற்றை வாடகைக்கு விடும் நிறுவனங்கள் அதிகமாகிவிட்டன. அமேசான், கூகிள் மாதிரியான நிறுவனங்கள் கட்டமைப்பை உருவாக்கி வைத்திருப்பார்கள். மேற்சொன்ன அத்தனை குடைச்சல்களும் அவர்கள் பொறுப்பு. தேவைப்படும் நிறுவனங்கள் தேவைக்கு ஏற்ப பணம் கொடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
இன்றைய தேதியில் க்ளவுட் சர்வீஸ் சந்தையில் முப்பத்தைந்து சதவீதம் அமேசானிடம்தான் இருக்கிறது. இரண்டாமிடத்தில் அஸ்யூர் இருக்கிறது. கூகிள் மூன்றாமிடம். அப்படியென்றால் அமேசான் உருவாக்கி வைத்திருக்கும் கட்டமைப்பை காசு கொடுத்து பயன்படுத்திக் கொள்கிற நிறுவனங்கள் அதிகம் என்றுதானே அர்த்தம். அமேசானின் கட்டமைப்பை பயன்படுத்தும் நிறுவனங்களில், அந்தக் கட்டமைப்பைப் பயன்படுத்தத் தெரிந்த பணியாளர்கள் தேவை. ‘அமேசான் வாடகைக்குக் கொடுப்பதை எனக்கு சரியாகப் பயன்படுத்தத் தெரியும்’ என்று நிறுவனங்களிடம் எப்படிச் சொல்வீர்கள்? அதற்குத்தான் ஏ.டபிள்யூ.எஸ்.
இதே போல அஷ்யூர், கூகிள் என அந்தந்த நிறுவனங்கள் தம் க்ளவுட் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பும் ஆட்களுக்கு சான்றிதழ்க படிப்புகளைக் கொடுக்கின்றன.
உள்ளூர் இளைஞனைப் பற்றிச் சொல்லியிருந்தேன் அல்லவா? அவனுக்கு ஏதாவது வகையில் உதவலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது ஜீரோ இனிஷியேட்டிவ் பற்றி ஒரு நண்பர் தெரிவித்தார். அக்ஷய் என்ற தமிழர் ஒருவர் நடத்தும் தளம். ஏ.டபிள்யூ.எஸ் பற்றி விரிவாக, வீடியோ பதிவுகளாகத் தயாரித்து வைத்திருக்கிறார். யார் வேண்டுமானாலும் படித்துக் கொள்ளலாம். இலவசம்தான். இளைஞனுக்கு நள்ளிரவில் ‘உனக்குத் தெரியாதது ஏதாவது ஒன்றைப் புதியதாகக் கற்றுக் கொள்ளப் பயன்படுத்திக் கொள்ளவும்’ மின்னஞ்சல் அனுப்பினேன். அவன் சுறுசுறுப்பானவன். கற்றுக் கொள்வான்.
சமீபமாக லாக்டவுன்- இந்தக் காலகட்டத்தில் ஏற்பட்டிருக்கும் மன அழுத்தம் பற்றியெல்லாம் நிறைய நண்பர்கள் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். அது பற்றி தனியாக-விரிவாக எழுத வேண்டும்.
மென்பொருள் துறையில் இருப்பவர்கள் கவனத்தைத் திசை மாற்ற விரும்பினால், உருப்படியாக எதையாவது செய்யலாம் என்று ஆசுவாசப்படுத்திக் கொள்ள விரும்பினால் ஏ.டபிள்யூ.எஸ் மாதிரியான தொழில்நுட்பம் குறித்துக் கொஞ்சம் கவனம் செலுத்தலாம். வேலைக்கும், சம்பள உயர்வுக்கும் பயன்படுகிறதோ இல்லையோ- அதில் என்ன இருக்கிறது என்றாவது தெரிந்து கொள்ளலாம். தகவல் தொழில்நுட்பத்துறை ஓடுகிற வேகத்துக்கு நாம் ஒவ்வொன்றைப் பற்றியும் குறைந்தபட்ச புரிதல்களையாவது கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. ஆர்ட்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் தொடங்கி க்ளவுட், மெஷின் லேர்னிங் வரைக்கும் எதைப் பற்றியும் - குறிப்பிட்ட தொழில்நுட்பம் எதற்குப் பயன்படுகிறது, அந்தத் தொழில்நுட்பத்தை மேம்படுத்த அல்லது பயன்படுத்த சந்தையில் கிடைக்கும் மென்பொருட்கள் யாவை, அவற்றைக் கொண்டு என்ன செய்கிறார்கள், எந்த நிறுவனங்கள் அதிகம் பயன்படுத்துகின்றன என்பதைப் பற்றியெல்லாம் ஐந்து நிமிடங்களாவது பேசத் தெரியுமளவுக்கு தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள் என்றுதான் நண்பர்களுக்குச் சொல்கிறேன்.
சற்றே பின்தங்கினாலும் நம்மைவிட்டு தொழில்நுட்பம் வெகுதூரம் ஓடிவிடும் என்பது நம் எல்லோருக்குமே தெரிந்த க்ளிஷேவான வாக்கியம்தான். அதன் பிறகு ஓடிப் பிடிப்பது சாத்தியமேயில்லை. நமக்கு எதில் விருப்பம் அதிகமோ அதில் கொஞ்சம் ஆழமாகவே காலை விடலாம். பெரிய ஆர்வமில்லாதவற்றை அலசி மட்டும் பார்த்துவிட்டு விட்டுவிடலாம். ஆனால் முக்கியமான சமாச்சாரங்கள் எதையுமே தெரியாது என்று சொல்லி விட்டு விடக் கூடாது.
மேற்சொன்ன இளைஞர்களைச் சந்திக்கும் போது இன்னொரு காரியத்தையும் தொடர வேண்டும் எனத் தோன்றுகிறது- சில வருடங்களுக்கு முன்புவரை யாரேனும் ‘எங்கள் அலுவலகத்தில் பணி காலி இருக்கிறது’ என்று மின்னஞ்சல்கள் அனுப்பினால் அதை நிசப்தத்தில் பதிவிடுவதுண்டு. நிறையப் பேருக்கு பாலமாக இருக்கவும் முடிந்தது. அறக்கட்டளைப் பணிகள் காரணமாக நிறைய மின்னஞ்சல்கள் வரத் தொடங்கியதும் வேலை வாய்ப்பு சம்பந்தபப்ட்ட மின்னஞ்சல்களை பெரிதாக கவனிக்க முடியவில்லை. அதை மீண்டும் தொடரலாம் என நினைக்கிறேன்.
உங்களுக்கு யாரோ அனுப்பி வைக்கும் (forwards) மின்னஞ்சல்களை அனுப்ப வேண்டாம். அது வேலையைக் கடினமாக்கிவிடும். உங்கள் நிறுவனங்கள், உங்கள் நண்பர்களின் நிறுவனங்களில் ஏதேனும் காலியிடங்கள் இருப்பதாகத் தெரியவந்தால் தயவு கூர்ந்து ஒரு மின்னஞ்சல் அனுப்பி வைக்கவும். வாரத்தில் ஒரு முறையாவது தொகுத்து பதிவாக பிரசுரம் செய்துவிடலாம். நிச்சயம் பலருக்கும் பயன்படும்.
vaamanikandan@gmail.com
0 எதிர் சப்தங்கள்:
Post a Comment