Jun 29, 2020

மழைக்கால மாலை

இன்று தமிழகத்தில் புதியதாக நான்காயிரம் பேர்களுக்கு கொரோனா தொற்று என்று செய்தி வாசிக்கிறார்கள். இன்று நண்பரொருவரின் வீட்டிலும் கொரோனா பாஸிடிவ். எனக்குத் தெரிந்து சுமார் பத்து நண்பர்களின் வட்டாரத்தில் நோய்த்தொற்று இருக்கிறது. நோய் வந்த எல்லோருமே இறந்துவிடுவதில்லை என்று எழுதியிருந்த முந்தைய கட்டுரைக்கு எதிர்வினையாக ‘இறந்தவர்கள் யாருமே நாம் இறக்கமாட்டோம் என்று நம்பியவர்கள்தானே’ என்று ஒருவர் கேட்டிருந்தார். எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். அவரவர் மனம்தானே?

கொரோனாவின் காரணமாக தற்கொலைகள், தற்கொலை முயற்சிகள் குறித்தான செய்திகள் தினசரி எவ்வளவு வருகின்றன என்று மட்டும் பாருங்கள். என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? 

கடந்த நூற்றைம்பது நாட்களாக ஊடகங்கள், அரசு எந்திரம்  என அனைத்தும் திகட்டத் திகட்ட பயமூட்டி வைத்திருக்கின்றன. அதே சமயம் இன்னொன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்- இன்னமும் நூறு நாட்களுக்கு இதே வேகத்தில், இதே செறிவில் பயமூட்டினாலும் கூட மொத்த ஜனத்தொகையில் ஒரு பிரிவினர் சாதாரணமாகச் சுற்றிக் கொண்டேதான் இருப்பார்கள். உலகில் எந்த நாடாக இருந்தாலும் அதுதான் இயல்பு. அதே சமயம் இன்னொரு பிரிவினர் நோய் குறித்தே நினைத்து நினைத்து மன உளைச்சலில் புழுங்கிக் கிடப்பார்கள். அவர்களுக்கு இனம்புரியாத பதற்றம் மனதில் ஏறிக் கொண்டேயிருக்கும். விழிப்புணர்வு என்ற பெயரில் மேலும் மேலும் பயமூட்டுவது இப்படி புழுங்கிக் கிடக்கிறவர்களுக்குத்தான் பெரும் பாதிப்பை உண்டாக்கும். அவர்களுக்கு அல்லது அவர்களது உறவினர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் போது திணறிப் போய்விடுகிறார்கள். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் நடுங்கத் தொடங்கிவிடுகிறார்கள். தற்கொலைகள், தற்கொலை முயற்சிகளை இவற்றோடுதான் பிணைத்துப் பார்க்க வேண்டும். 

கடந்த மூன்று-நான்கு மாதங்களாக நோய் குறித்தான விழிப்புணர்வை வேண்டுமளவுக்கு ஊட்டியாகிவிட்டது. எல்லோருக்குமே நோய் குறித்துத் தெரியும். எப்படிப் பரவும் என்று தெரியும். பரவினால் தப்பிவிடுகிறவர்களும் உண்டு; இறப்பவர்களும் உண்டு என்பதும் தெரியும். யாராவது ஒருவருக்காவது இது குறித்துத்தெல்லாம் தெரியாது என்று நினைக்கிறீர்களா? தெரிந்தும் ஏன் வெளியில் வருகிறார்கள்? வெளியில் வரக் கூடிய தொண்ணூற்றொன்பது சதவீதம் பேருக்கு வேறு வாய்ப்புகள் இல்லை. பிழைப்பு தேட வேண்டும். வருமானத்திற்கு வழி பார்க்க வேண்டும். கடனைக் கட்ட வேண்டும் என்று ஏகப்பட்ட சுமைகளோடு வெளியில் வருகிறார்கள். அப்படி வருகிறவர்களிடம் ‘நோய் வந்தால் நீ செத்த’ என்று மீண்டும் மீண்டும் உருவேற்றுவது எந்த வகையில் நியாயம்? அது அவர்களை இன்னமும் மனவருத்தம் அடையச் செய்துவிடாதா?

சம்பளம் வருகிறது- வீட்டிலிருந்தே வேலை செய்ய முடியும் என்று முடிகிறவர்கள் வீட்டில் இருக்கலாம். சாலையில் இறங்கினால்தான் வருமானம் என்று இருக்கக் கூடிய கோடிக்கணக்கானவர்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் இறங்கித்தானே தீர வேண்டும்? அப்படி இறங்குகிறவர்களுக்கு நெரிசலை ஏற்படுத்தாமல் வாய்ப்பிருப்பவர்கள் வீட்டில் இருக்கலாம். அதுதான் நாம் ஒவ்வொருவருக்குமான புரிதலுடன் செய்து கொள்ளக் கூடிய மிகப்பெரிய உபாயம். 

ஊரடங்குகள் தளர்வடையக் கூடும். இனி அலுவலகங்கள் செயல்படத் தொடங்கும். பேருந்துகள் இயங்கும். மக்கள் மெல்ல மெல்ல வெளியே வருவார்கள். ‘கொரோனாவோடு வாழப்பழகுங்கள்’ என்று அரசு எப்பொழுதோ அறிவித்துவிட்டது. அப்படி வாழப்பழகுவதற்கான தயாரிப்புகளைச் செய்ய அரசுதான் உதவ வேண்டும். ஊடகங்கள்தான் துணையாக இருக்க வேண்டும். நோய் கடுமையானது; வேகமாகப் பரவும் என்பதைச் சொல்வதோடு மீறி வந்துவிட்டால் எப்படி மீண்டு வருவது என்பதற்கான வழிமுறைகளைச் சொல்லித் தர வேண்டியது அவசியம். அதற்கான எந்த முன்னெடுப்புகளும் இதுவரையிலும் இல்லை. நேர்மறையாகப் பேசுகிறவர்களையும் இந்த ஊடகச் சூழல் சுருட்டி மூலையில் அமரச் செய்திருக்கிறது. 

மாலை தெரியாத்தனமாக தொலைக்காட்சியை பார்த்துவிட்டால் அதோ கதிதான். சாவடித்துவிடுகிறார்கள். எப்பொழுதாவது பார்க்கும் போதே பதற்றத்தை விரல் நுனிக்குக் கொண்டு வந்துவிடுகிறார்கள் என்றால் எந்நேரமும் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு என்ன நிலை என்று நினைத்துப் பார்க்கிறேன்.

நோய் பரவாமல் தடுத்துவிடுவோம் என்பதில் பெரிய நம்பிக்கையில்லை. பரவும். கண் முன்னால் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அப்படிப் பரவினால்- தொற்றினால் எப்படிச் சமாளிப்பது, உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் எப்படி தயாராக வேண்டும் என்பதுதான் நாம் அறிந்து கொள்ள வேண்டியது. நண்பர் ஒருவரின் தந்தை தனியார் மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். மருத்துவமனை விடுதி ஒன்றைப் பிடித்து வைத்திருக்கிறார்கள். அங்கே அவருக்கு ஓர் அறை ஒதுக்கித் தந்துவிட்டார்கள். பெரிய பிரச்சினை எதுவுமில்லை. நன்றாக இருக்கிறார். 

இன்னொரு நண்பர் அரசு மருத்துவமனை. நுகர்திறன் குறைந்து, தலைவலி வந்து பரிசோதனை செய்தார். அறையில் பத்து பேர்கள் இருக்கிறார்கள். கபசுரக் குடிநீர், துத்தநாக மாத்திரைகளைத் தருகிறார்கள். இப்பொழுது தலைவலி இல்லை. செல்போன் இருக்கிறது. நோண்டிக் கொண்டிருக்கிறார். மீதமிருக்கும் ஒன்பது பேர்களிடம் பேசுகிறார். இப்படி இன்னமும் எட்டுப் பேர்கள் பற்றி எழுத முடியும். எல்லோருக்குமே பாஸிடிவ்தான். எல்லோருமே பாஸிட்டிவாக இருக்கிறார்கள்.

ஹைதராபாத்தில் ஒரு இளைஞர் மூச்சுத் திணறி இறந்த வீடியோதான் நம் கண்களில்படுகிறது. அதுதான் பதறச் செய்கிறது. ஆனால் என்ன செய்ய முடியும்? சாலை விபத்துகளில் யாராவது அடிபட்டுச் சாவோம் என்று நினைத்து இறக்கிறார்களா? பெரும் நோய்கள் வரும் என்று எதிர்பார்த்துதான் நோய் வருகிறதா? எல்லோருமே ஏதாவதொரு நம்பிக்கையில்தானே இருக்கிறோம். அந்த நம்பிக்கை பெரும்பாலானவர்களைக் காப்பாற்றிவிடுகிறது. சிலரை ஏமாற்றிவிடுகிறது. அப்படித்தான் இதிலும். நம்பிக்கை மட்டும்தான் ஒரே ஆயுதம்! வராது. வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்கிற மனநிலையை வளர்த்துக் கொள்வதற்கான முயற்சிகளைத் தொடங்கிட வேண்டும். கொரானா, ஊரடங்கு என்பதெல்லாம் தனிமனித வாழ்க்கையிலும் சரி; சமூக அமைப்பிலும் சரி மிகப்பெரிய மாறுதல்களைக் கொண்டு வந்து சேர்த்திருக்கின்றன. இனி அவற்றோடு சேர்ந்து மனதளவிலும் உடலளவிலும் நெகிழ்த்தி வாழ வேண்டுமே தவிர எப்பொழுதும் முடங்கியே கிடக்க வேண்டியதில்லை.

நம் அனைவருக்குமே நேர்மறையான சிந்தனையை ஊட்டக் கூடிய சூழல் அவசியம். இந்தக் காலகட்டத்தை கடப்பது குறித்து பாஸிட்டிவிட்டியுடன் பேச வேண்டியிருக்கிறது. நோய் குறித்து, அது பரவுகிற வேகம் குறித்து நம் எல்லோருக்குமே பயம் உண்டுதான். ஆனால் அவரவர் பயங்களை ஒதுக்கி வைக்க சக மனிதர்களுக்கிடையிலான ஆறுதல்களும் ஆசுவாசங்களும் தேவையாக இருக்கின்றன. மழை பெய்து முடித்த மாலையொன்றில் நடப்பதைப் போன்ற ஈரமான மன அமைதியை உண்டாக்கும் நேர்மறைச் சிந்தனைகள் பரவ வேண்டும். அது மட்டுமே சமூகமாக நாம் மீண்டெழ அவசியமாக இருக்கும். புறக்காரணிகள் ஆயிரம் அழுத்தங்களை உருவாக்கினாலும், நசுக்கினாலும் ஏதோவொரு ஆறுதலைத் தரக் கூடிய சூழலை நமக்கும் நம் குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. 

2 எதிர் சப்தங்கள்:

NAGARATHAN said...

என்னவே. சத்தத்தையே காணோம். Comments கூட 0 லயே இருக்கு. சொகம்மா இருக்கீயளா எல்லாரும். ஆனாலும், மழைக்கால மாலை ரெம்பயும் சீரியஸாத்தான் இருக்கு. உம்ம குசும்பு கூடுன ஒரு பதிவ அடிச்சு விடுங்கய்யா. ஒலகமே இருண்டு போன மாதிரில்லா இருக்கு எல்லார் பேச்சும். Positive - வா ஒண்ணு சொல்லுங்க.

senthilkumar said...

இந்த ஆறு மாதத்தில் பலர் உயிர் இழந்திருப்பது மிகவும் வேதனைக்குரிய
விஷயம் தான். ஆனால் யோசித்து பார்த்தால் கீதையில் பகவான் கிருஷ்ணர்
சொன்னது போல் உலகில் அக்கிரமங்கள் மிக அதிகமா க பெருகும்போது
இறைவன் ஏதோ ஒரு வடிவில் பாடம் புகட்டுவார் என்று தெரிகிறது.

ஒரு கல்லில் இரண்டு மாங்காய் மனிதன் அடிக்கலாம். ஆனால் ஒரு கல்லில்
மில்லியன் மாங்காய் அடிக்க கடவுளால் மட்டுமே முடியும்..
கொரோனா என்ற கல்லினால் அடித்திருக்கிறான் இறைவன்..
எத்தனை பேருக்கு பாடம் புகட்டியிருக்கிறான்..
கொள்ளை அடித்த திருமண மண்டபத்தார், கேட்டரிங் ஏஜென்ட்கள் ஆட்டோ ஓட்டுனர்கள், பேராசை பிடித்த சிறு மற்றும் பெரு வியாபாரிகள், வீட்டு வேலைகளை காரணமின்றி செய்ய மறந்த /மறுத்த பெண்கள், வீட்டில் இருக்கும் உழைக்கும் பெண்களின் அருமை புரியாத ஆண்கள், அதிக சம்பளத்துக்கு ஆசைப்பட்டு நல்ல எஜமானர்களை மதிக்காத வேலைக்காரர்கள், பெண்களை போக பொருளாய் நினைத்து
பலாத்காரம் செய்த கயவர்கள், பொது ஜனங்களை முட்டாள்கள் ஆக்கிய சினிமாக்காரர்கள்.., அநியாயத்துக்கு விலை ஏற்றிய ஹோட்டல்கள், ஒன்றுக்கும் உதவாத ஆடம்பர மால்கள் என்று சொல்லிகொண்டே போகலாம்.

விவசாயத்துக்கு முக்கியத்துவம் தராமல் இருப்பதும் வெளி நாட்டு
மோகத்துடன் இருப்பதும், நாம், செய்த தவறல்லவா?
பொது முடக்கத்தில் எந்த வேலையும் செய்யாமல் இருக்கலாம் . ஆனால்
அம்பானி வீட்டிலும் அடுப்பெரிய வேண்டியிருக்கிறதே.

விவசாயம் நின்று
போனால்??? இருக்கும் பொருட்களை வைத்து எவ்வளவு காலம் தள்ள
முடியும்?

இந்த வைரஸ் சுத்தமாக / சுகாதாரமாக இருக்க மட்டும் கற்று தரவில்லை....

1. வேளாண்மை, கால்நடை வளர்ப்புக்கு முக்கியத்துவம் தர

2. அவரவர் வேலையை அவரவர் செய்ய

3. சோம்பலை ஒழிக்க

4. அவசிய தேவைக்கு மட்டும் பொருட்களை வாங்க

5. அதிக விலை விற்கும் பொருட்களை எப்பொழுதும் ஒதுக்கி தள்ள

6. ஆடம்பரத்தை ஒழிக்க

7. குடும்ப அமைப்பிற்கு முக்கியத்துவம் தர

8. மனித நேயம் வளர்க்க

9. நாட்டு பற்றுடன் இருக்க

10. எதிர்கால தலைமுறையை நல்ல முறையில் வளர்க்க

11. உண்மையான சந்தோஷம் எதில் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள

12. வெளி நாட்டு மோகத்தை தவிர்க்க

13. அறிவியல் வளர்ச்சியை எந்த அளவு பயன் படுத்தவேண்டும் என்று தெரிந்து கொள்ள

14. எந்த மாற்றங்கள் வந்தாலும், எத்தனை வருடங்கள் சென்றாலும் அடிப்படையாக நம் முன்னோர்கள் காட்டிய ஒழுக்கமான வாழ்வியலை மறக்காமல் கடை பிடிக்க, அதை அடுத்த தலைமுறைக்கும் கற்று தர இன்னும் பலவும்,,,,,,…….. கற்று தந்திருக்கிறது..

இந்த பாடங்களை கற்றால் கொரோனா என்ன எந்த கொம்பன் வந்தாலும் நாம் பயம் கொள்ள தேவை இல்லை. எது வந்தாலும் அதை சமாளிக்கும் வழி உடனடியாக கிடைத்துவிடும்..
கற்றுக்கொள்வோமா???