Jun 27, 2020

அசைந்து கொடுத்துவிடக் கூடாது!

கொரோனா, ஊரடங்கு, பிழைப்பு நாறிக் கொண்டிருப்பதெல்லாம் இந்தியாவில் மட்டும்தானா என்று புரியவில்லை. சில வெளிநாட்டு நண்பர்களிடம் விசாரித்தால் ‘நாங்க வீட்டிற்குள்தான் இருக்கிறோம்...ஆனா மத்தபடி இயல்பாகத்தான் இருக்கிறார்கள்’ என்கிறார்கள். அமெரிக்காவில் பரவலாகவே மக்கள் வெகு இயல்பாக இருப்பதாகச் சொல்கிறார்கள். கடற்கரை, சுற்றுலாத்தளங்களில் வழக்கமான கூட்டம்தான் என்கிறார்கள். ஐரோப்பிய நாடுகளிலும் கூட அப்படித்தான் சொல்கிறார்கள். ஒருவேளை சூழல் அப்படியில்லை எனில் நண்பர்கள் உறுதிப்படுத்தலாம். 

தமிழகத்தில் ஊரடங்கு நூறாவது நாளை நெருங்கிக் கொண்டிருக்கிறது ஆரம்பத்தில் இருந்ததைவிடவும் பலரும் மிகக் கடுமையான விரக்தியைக் காட்டுகிறார்கள். எல்லாவிதங்களிலும் முடங்கிப் போயிருப்பது பலரையும் சலிப்படைய வைத்திருக்கிறது. மீண்டும் ஊரடங்கு வர வாய்ப்பிருக்கிறது என்று சிலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மறுபடியும் இன்னுமொரு கட்ட ஊரடங்கு என்பது பெரிய வம்பாகத்தான் இருக்கும். 

அரசு ஆப்பசைத்த குரங்காகச் சிக்கிக் கொண்டது என்றுதான் தோன்றுகிறது. கடந்த நூறு நாட்களாகவே நோய்பரவலின் எண்ணிக்கையும் வேகமும் அதிகரித்தபடியேதான் இருக்கிறது. இப்பொழுது ஊரடங்கைத் தளர்த்தினால் ‘நூறு நாளா முடக்கி தொழிலும் போச்சு, வருமானமும் போச்சு, நோயும் கட்டுக்குள் வரவில்லை...இவ்வளவு நாள் அடக்கி வெச்சு என்ன பலன்?’ என்று மக்கள் எதிர்ப்புணர்வைக் காட்டுவார்கள்.  திறந்துவிட்டால் தொற்றாளர்களின் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரிக்கும். மருத்துவமனைகள் நிரம்பக் கூடும். மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் பளு அதிகரிக்கும். இரண்டு முடிவுகளுமே சிக்கலானதுதான். 

ஒருவேளை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுதும் கூட நோய்த்தொற்றின் வேகமும் எண்ணிக்கையும் இப்படியேதான் தொடரும். ஒவ்வொரு ஊரடங்கு கட்டத்தின் முடிவிலும் தினசரி அதிகரிக்கும் எண்ணிக்கையைப் பார்த்தால் அது புரியும். முன்பு ஒரு நாளைக்கு ஐம்பது என்று  அதிகரித்த எண்ணிக்கை இன்று ஒரு நாளைக்கு நான்காயிரம் என்று போய்க் கொண்டிருக்கிறது. இன்னமும் ஒரு மாதம் கழித்தால் என்னவாகும்? ஜூலை இறுதியில் ஒரு நாளைக்கு இருபதாயிரம் அல்லது இருபத்தைந்தாயிரம் என்று எண்ணிக்கை இருக்கும். அதன் பிறகு மீண்டும் நீட்டிப்பார்களா?

பீலா ராஜேஷ் போய் ராதாகிருஷ்ணன் வந்த போது ஓரளவு வேகம் குறையும் என்ற நம்பிக்கையிருந்தது. பொய்த்துப் போனது. சென்னையில் ஒவ்வொரு மண்டலமாக சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டார்கள். அமைச்சர் குழுக்கள் அமைக்கப்பட்டன எதுவும் இம்மியளவு கூட பலனளித்ததாக சாமானியக் கண்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்ட பிறகுதான் தினசரி ஒரு மாவட்டம் மிச்சமில்லாமல் அத்தனை மாவட்டங்களிலும் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கிறது. எங்கேயோ கோட்டைவிட்டுவிட்டார்கள் என்றுதானே அர்த்தம்?

ஐம்பது, நூறு என்றிருந்த போதே முழுமையாக அடைத்து, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் (Containment zone)அனைவருக்குமே பரிசோதனைகளைச் செய்திருந்தால், பாஸிடிவ் வந்த அத்தனை பேர்களையும் கண்டறிந்திருக்கலாமோ? ஆரம்பத்தில் பரிசோதனைக் கருவிகள் வந்து சேர்வதில் இருந்து- விலை அதிகம், தரமில்லை என்று திருப்பியனுப்புவது வரையிலும் பல சொதப்பல்களைச் செய்தார்களே! அதையெல்லாம் தவிர்த்திருக்கலாமோ? சென்னையில் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருந்த போது பிற ஊர்களுக்கு தடையில்லாமல் செல்வதற்கான அத்தனை வாய்ப்புகளும் உருவாகியிருந்தன. சென்னையை முழுமையான கட்டுப்பாட்டில் எடுத்து, நோய் அதிகமான எண்ணிக்கையிலிருந்த மண்டலங்களிலாவது அத்தனை பேருக்கும் சோதனைகளைச் செய்திருக்கலாமோ? - இப்படியெல்லாம் யோசிக்கத் தோன்றுகிறது. 

எனக்கும் உங்களுக்கும் கைவசம் எந்தத் தரவுமில்லை. நாம் நிபுணர்களுமில்லை. எங்கே ஏமாந்தோம் என்று தெரியாது. நாம் என்ன தீர்வைச் சொன்னாலும் இன்னொருவருக்கு அபத்தமாகத் தெரியக் கூடும். ஆனால் தீர்வைச் சொல்ல வேண்டியவர்களும் எதுவும் சொல்வதில்லை. இன்னமும் ‘சமூகப்பரவல் இல்லை’ என்றுதான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். கொரோனா மாநிலம் முழுவதும் பரவியிருக்கிறது. எந்த மாவட்டத்திலும் பூஜ்ஜியம் என்ற எண்ணிக்கை இல்லை. இனி என்ன செய்யப் போகிறார்கள் என்பதுதான் பெருங்குழப்பமாக இருக்கிறது. 

அதே சமயம், பலருக்கும் பயமும் மன உளைச்சலும் ஏற்பட்டிருக்கிறது. பயப்படுகிறார்கள். பொருளாதார நெருக்கடிகள் பீதியூட்டுகின்றன. வாங்கி வைத்திருக்கும் கடன் நினைவுக்கு வந்து வாதிக்கிறது. நோய் பற்றியும் வருந்துகிறார்கள். இத்தகைய நண்பர்களிடம் பேசும் போது ஒன்றை மட்டும் சுட்டிக்காட்டுகிறேன். நமக்கு கண்களில் தெரியும் செய்தியெல்லாம் இறப்புச் செய்திதான். மருத்துவர் இறந்து போனார், இளவயது ஓட்டுநர் இறந்துவிட்டார், போலீஸ், எம்.எல்.ஏ, செவிலியர் உயிரிழந்துவிட்டனர் என்றுதான் செய்திகளில் காட்டுகிறார்கள். ஆனால் ஆயிரக்கணக்கானவர்கள் தப்பித்துவிடுவது நடந்து கொண்டிருக்கிறது. ‘பாராசிட்டமால் எடுத்துக் கொண்டேன். வேறு எந்தப் பிரச்சினையுமில்லை’ என்று இலண்டனில் வசிக்கும் அனுபமா என்ற மருத்துவ நண்பர் சொன்னார். இரண்டு மாதங்களுக்கு முன்பு கடுமையாக பயமூட்டியவர் அவர். இப்பொழுது சர்வசாதாரணமாகப் பேசுகிறார். வரும் வரைக்கும்தான் பயம். வந்தால் மீண்டுவிடுவோம். தொண்ணூறு வயது ஆட்களும் தப்பி வருகிறார்கள். இரண்டு வயதுக் குழந்தை எந்தப் பிரச்சினையுமில்லாமல் மீண்டிருக்கிறது. இப்படியாக இடது கையில் நோயைக் கையாண்டவர்கள் பற்றி எந்தச் செய்தியும் நமக்குத் தெரிவதில்லை என்பதுதான் இவ்வளவு உளைச்சலுக்கும் காரணம்.

வெளிப்படையாகச் சொன்னால் எல்லாவற்றையும் சொதப்பி வைத்துவிட்டார்கள். இவர்களால் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை துளியுமில்லை. நோய் பரவத்தான் செய்யும். அதை எதிர்கொள்ளும் வழிவகைகளைப் பார்ப்போம். பொருளாதார நெருக்கடி, நிதிப்பிரச்சினைகளை மனதில் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டியதில்லை. ஆறேழு மாதங்களில் ஓரளவு தேறி விடுவோம். அவையெல்லாம் லெளகீக பிரச்சினைகள். இத்தகைய புறக்காரணிகள் நம் மனதை அரித்துவிட எந்தவிதத்திலும் அனுமதிக்க வேண்டியதில்லை. ஆனது ஆகட்டும், பார்த்துக் கொள்ளலாம் என்கிற ஒற்றை வரியை மட்டும் இறுகப் பற்றிக் கொண்டிருப்போம். 

ஒருவேளை நமக்கு தொற்று ஏற்பட்டாலும் தேறி வரும் ஆயிரம் பேர்களில் ஒருவராக இருப்போம் என்கிற நினைப்புதான் மிக முக்கியம். கண்டதையும் நினைத்துப் பயந்து புலம்பினால் உறக்கம் குறையும், உண்ணும் உணவின் அளவு குறையும், மனதுக்குள் என்னவோ உறுத்திக் கொண்டேயிருக்கும் இவையெல்லாம் நம்மை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் இன்னமும் வலுவிழக்கச் செய்துவிடும். அதற்கெல்லாம் துளியும் அசைந்து கொடுத்துவிடக் கூடாது.

4 எதிர் சப்தங்கள்:

aaran said...

I wouldn't go far as to say that everything is normal in western countries.

The resent images of huge crowd of people gathering on the beaches are considered by many as shocking, ignorant behavior.

In Canada, like other developed countries everything except essential services were shutdown initially and once the new infections started going down, the shutdown is being relaxed in stages. Each stage varies between different states, regions/provinces.

Even within a province, some regions are left in lock down while others let to relax the rules a bit. All based on gathered data.

Again, in Canada, federal government provided emergency funding for pretty much everyone who affected by the lock down. This has been extended for 6 months now.

Although, rich countries have more resources at their disposal to respond such an efficient way, I'm not sure resources is the only reason for the disarray in other countries.

Is this culture? or inherent talent? Whatever it is, it shows why some countries are developed and why some are lacking.

Avargal Unmaigal said...

கொரோனா வைரஸும் தமிழக அரசு மற்றும் ஊடகங்களின் தவறான அணுகுமுறைகளும்
https://avargal-unmaigal.blogspot.com/2020/06/coronavirus-and-misconceptions-of-tn.html


கொரோனா வைரஸ் சிகிச்சை (வீட்டில் இருந்ததே நலம் பெற அனுபவ பதிவு ) https://avargal-unmaigal.blogspot.com/2020/06/covid-19-coronavirus-covid-19-treatment.html

கொரோனாவில் இருந்து மீண்ட அனுபவங்கள் https://avargal-unmaigal.blogspot.com/2020/05/recovering-from-corona.html

NAGARATHAN said...

நீங்கள் சொல்லியிருப்பது ஓரளவுக்கு உண்மைதான். இங்கு ஆஸ்திரேலியாவில் ஆரம்பத்தில் கட்டுப்பாடான ஊரடங்கு இருந்தது. ஆனால், அந்த ஊரடங்கு காலத்திலும் தளத்தில் (field work) வேலை செய்தே ஆக வேண்டியவர்களை வேலை செய்ய - சமூக இடைவெளியுடன் - அனுமதித்தார்கள். வேலை இழப்பால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் ஆறு மாதங்களுக்கு உதவித் தொகை அறிவித்து அதை அளிக்கிறது. ஓரளவு நோய்த் தோற்று கட்டுக்குள் (நிஜமாகவே) வந்ததும் படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்துகிறது. முக்கியமாக மக்களிடம் நோய் குறித்து புரிதல்களை - பயத்தை அல்ல - அரசு உருவாக்கி உள்ளது. பெரும்பான்மையான மக்களும் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள்.

எங்களுடைய குயின்ஸ்லாந்து மாகாணம் தற்போதும் எல்லைகளை மூடியுள்ளது. காவல் துறையினருக்கு கையூட்டு கொடுத்து எல்லையை மீற இயலாது என்பது முக்கியமான செய்தி. கட்டுப்பாடுகளை மீறுகிறவர்களும் தயவு தாட்சண்யமின்றி (அவர்களின் பதவியோ, பணமோ, அதிகாரமோ) கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாமல் தண்டிக்கப்பட்டார்கள்/தண்டிக்கப்படுகிறார்கள்.

இன்னும் முழுமையாக கட்டுப்பாடுகள் விலக்கப்படவில்லையென்றாலும் ஓரளவு தளர்வுகள் உண்டு. வீடுகளில் இருபதுக்கு மேற்பட்ட விருந்தினர்களுக்கு அனுமதி இல்லை. கடைகள்/பல்பொருள் அங்காடிகள் அவற்றின் பரப்பளவைப் பொறுத்து, நியாயமான தனி மனித இடைவெளி கடைப்பிடிக்குமளவுக்கான வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். பொது இடங்களிலும் தகுந்த இடைவெளி (முடிந்த அளவு) கடைப்பிடிக்கப்படுகிறது. மனிதர்கள் அதிகமாக் கூடாக் கூடிய இடங்கள் - திரையரங்கு போன்ற - திறப்பதற்கு இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனாலும், இந்த வாழ்க்கையும் எங்களுக்கு இயல்பான ஒன்றாகத்தான் இருக்கிறது.

bons alias bondamani said...

https://www.youtube.com/watch?v=7o-li-N5MkM

அறிவியல் ரீதியாக பார்த்தால் நவம்பர் - டிசம்பர் ல் தமிழகத்தில் கொரோனா முடிய வாய்ப்புள்ளது ..