Jun 16, 2020

புத்தம் புது இறகு

எதைச் செய்தாலும் கூட்டமாகச் செய்கிறார்கள். அது அஞ்சலி பதிவு எழுதுவதாக இருந்தாலும் சரி; தற்கொலைக்கு அறிவுரை சொல்வதாக இருந்தாலும் சரி; மன நலன் சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைச் சொல்வதாக இருந்தாலும் சரி; செய்துவிட்டுப் போகட்டும். ஆனால்  இதுவே மனிதர்களை உளவியல் ரீதியாக வதைக்கிறது. கூட்டமாக ஒன்றை எல்லோரும் பேசுகிற போது உண்மையிலேயே அதனால் பாதிக்கப்பட்டவர்களை குற்றவுணர்ச்சி கொள்ளச் செய்கிறது.

கொரோனா, ஊரடங்கு, தனிமை, வேலை, பொருளாதார இழப்பு என எல்லாமும் கலந்து மனிதர்களை ஏதாவதொரு வகையில் பாதிக்கிறது. சில நாட்களுக்கு முன்பாக ஒரு நண்பர் அழைத்திருந்தார். ஒரு நாள் இரவு பத்து மணிக்கு அழைத்த அவருடைய தம்பி தற்கொலை செய்து கொள்ளப் போவதாகச் சொல்லியிருக்கிறார். அவருக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள். தொழில் நசிந்துவிட்டது. கந்து வட்டிக்கு கடன் வாங்கியிருக்கிறார்- சகலமும் கலந்து ஒரு வழியாக்கியிருக்கிறது. நண்பர் வெளியூரில் இருக்கிறார். தம்பியை இணைப்பிலேயே இருக்கச் சொல்லிவிட்டு இன்னொரு அலைபேசியில் பக்கத்து வீட்டுக்காரரை அழைத்துச் சொல்லிய பிறகு அவர் ஓடிச் செல்லும் வரை தம்பியிடம் இவர் பேசியபடியே இருந்திருக்கிறார். ‘என்ன செய்வது’ என்ற குழப்பம் நண்பருக்கு. சில நாட்களாக தம்பியை யாராவது கவனித்துக் கொண்டேயிருக்கிறார்களாம். அந்த ஊரில் எனக்கு ஒரு மனநல மருத்துவரைத் தெரியும். தம்பியை ஆலோசனைக்குச் செல்லச் சொல்லுங்கள் என்றேன். 

மன நலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் போகிற போக்கில் யாரும் தீர்வுகளைச் சொல்லிவிட முடியாது. அப்படி முயற்சிப்பதும் ஆபத்தில் கொண்டு போய் நிறுத்தும். 

இன்றைக்கு யாருக்குத்தான் பிரச்சினைகள் இல்லை? மூன்று மாதங்களுக்கு முன்பிருந்த சூழல் முழுமையாக மாறியிருக்கிறது. யாருமே கற்பனை செய்திடாத புத்தம் புது சூழல் இது. பணத்தை விடுங்கள். மனம் விட்டு பேசுவதற்கான வாய்ப்புகளும் அருகிவிட்டனவே! வீட்டிற்குள்- நான்கு சுவர்களுக்குள்ளேயே இருக்கிறோம். கலகலவென்று சுற்றிக் கொண்டிருந்தவர்களையும் முடக்கிப் போட்டிருக்கிறது. பொருளாதாரப் பிரச்சினைகள் இல்லாதவருக்கும் கூட நோய் பற்றிய செய்திகள் பயமூட்டக் கூடும். அங்கே இறப்பு, இங்கே இறப்பு என்பது என்னவோ தொண்டையில் கரகரவென்றிருந்தாலே பதறச் செய்துவிடுகிறது. மனதளவில் ‘செம ஸ்ட்ராங்’ என்று நினைத்துக் கொண்டிருந்தவர்கள் கூட சற்றே படபடப்பாகிறார்கள். விதிவிலக்குகள் ஆங்காங்கே இருக்கலாமே தவிர பெரும்பாலானவர்களுக்கும் மன ரீதியில் ஏதோவொரு நெருடல் இல்லாமல் இருக்க வாய்ப்புகள் மிகக் குறைவு. 

சில நாட்களுக்கு முன்பாக ஏதோ வித்தியாசமாக உணர்ந்தேன். அதற்கு முன்பே பதினைந்து நாட்களாக இரவில் ஒழுங்காக உறக்கம் வரவில்லை. அது இயல்பானது என்றுதான் தொடக்கத்தில் நினைத்துக் கொண்டிருந்தேன் ஆனால் ‘ஏன் முகம் வாடியிருக்கு’ என்று அவ்வப்பொழுது யாராவது கேட்டார்கள். தேவையில்லாமல் கோபம் அதிகரித்தது. என்னவோ சரியில்லை என்று உணரத் தொடங்கிய பிறகு சில நண்பர்களிடம் பேசிவிட்டு கொரோனா குறித்தான பெரும்பாலான செய்திகளைத் தவிர்த்தேன். நோய் பற்றி வேண்டுமளவுக்கு நமக்குத் தெரிந்துவிட்டது. மண்டை நிறைய தகவல்கள் இருக்கும் போது ஏன் திரும்பத் திரும்ப நிறைக்க வேண்டும்?  இப்பொழுது கொரோனா குறித்து தினசரி வருவதெல்லாம் எண்ணிக்கையும், செய்தி நிறுவனங்கள் நமக்கு வீசுகின்ற வலையும்தான். இனி செய்திகளைப் பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை என்பதைப் புரிந்து கொண்ட பிறகு முழுமையாகத் தவிர்த்துவிட்டேன். 

‘இன்னைக்கு எவ்வளவு பேருக்குத் தொற்று?’ என்று கேட்டால் ‘தோராயமாக இரண்டாயிரம் பேர்’ என்று சொல்வேனே தவிர துல்லியமாகத் தெரியாது. யார் எங்கே இறந்து போனார்கள் என்பது தெரியாது. இறந்தவர்களில் இளையவர்கள் யார், முதியவர்கள் யார் என்றெல்லாம் பின் தொடர்வதில்லை. கொரோனா செய்தியைத் தவிர்த்துவிட்டு வயிறு நிரம்ப உண்ணத் துவங்கினேன். இரவில் உறக்கம் வருகிறதோ இல்லையோ- அதிகபட்சம் பதினோரு மணிக்கு உறங்கச் சென்றுவிடுகிறேன். மாலை நேரத்தில் அவ்வப்பொழுது வெளியில் சென்று வருகிறேன். நான்கைந்து நாட்கள் பிடித்தது. இப்பொழுது ஓரளவுக்கு பழைய பழையபடிக்கு இருக்கின்றன! மன ரீதியாக ஆரோக்கியமாக இருப்பதே நமக்கு நாம் செய்து கொள்ளும் பேருதவி. 

நிறையப் பேர் ஏதோ ஒன்றைப் பற்றி கூட்டமாக பேசியும் எழுதியும் கொண்டிருக்கும் போது விமர்சிக்காமல் அல்லது கலந்து கொள்ளாமல் சற்று விலகி இருந்து கொள்வதும் நமக்கு நாமே செய்துகிற பெரிய உதவிதான் என்று நம்புகிறேன். 

பொதுவாகவே, கார்போரேட் நிறுவனங்களில், தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் தொடர்ந்து தம்மை ‘அப்டேட்’ செய்து கொள்ள வேண்டும் என்பார்கள். அப்டேட் என்பதைவிடவும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கும், நிறுவனம் மேற்கொள்ளும் மாற்றங்களுக்கும் ஏற்ப நாமும் வளைந்து நெளிய வேண்டும். அப்படி வளைந்தால் தப்பிவிடலாம். நெட்டுக்குத்தலாக நின்றால் அடுத்த ஆட்குறைப்பு பட்டியலில் பெயரைச் சேர்த்துவிடுவார்கள். இன்றைக்கு உலகமே மிகப்பெரிய மாற்றத்திற்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறது.

ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது- இப்பொழுது நிகழ்ந்து கொண்டிருக்கும் மாற்றத்தோடு நாம் அத்தனை பேரும் மாற வேண்டியிருக்கும். எல்லோருக்குமே ஏதாவதொரு சுமையை, இழப்பை, குழப்பத்தை, தெளிவின்மையை இந்த கொரோனா காலம் கொண்டு வந்து கொடுத்திருக்கிறது. அது நேரடியாக கண்ணுக்குத் தெரியலாம் அல்லது தெரியாததாகவும் இருக்கலாம். 

ஆனால் பாஸிட்டிவிட்டி மிக அவசியம். 

இது தனிமனிதர்களுக்கான பிரச்சினை மட்டுமில்லை. எல்லோருக்கும் பொதுவான பிரச்சினை. நமக்கு இருக்கும் பிரச்சினையைவிட பன்மடங்கு பிரச்சினைகளோடு எதிர்வீட்டுக்காரர் இருக்கக் கூடும். பிரச்சினைகளின் அளவுகள் மாறலாமே தவிர பிரச்சினையே இல்லாத மனிதர் என்று யாருமில்லை.  எப்பொழுதும் சொல்வதைப் போல இந்தச் சூழல் நிரந்தரமில்லை. நிலைமை மாறும் வரைக்கும் எதையாவது பற்றுக் கோலை பிடித்துக் கொண்டிருக்க வேண்டும். பற்றுக் கோல் ஒன்றினை பற்றிக் கொள்ளுதல் தவிர நம்மிடம் வேறு எந்த வாய்ப்புமில்லை.  நிலைமை மாறும். சூழல் மாறும். அத்தனையும் மாறும் போது நமக்கான இறகு ஒன்று கிடக்கும். யாரும் எடுக்காத அந்த இறகை குனிந்து பொறுக்கி எடுத்து கைகளில் வைத்துக் கொள்வோம். 

கல்யாண்ஜியின் கவிதை ஒன்று-

அதிகாலைத் தேநீர் கடையில்
இடக்கை நீட்டி 
யாசித்து நிற்கிற தாடிக்காரர்
சற்று மனநிலை பிறழ்ந்தவர்
தெரியும்.

வலக்கை விரல்களில் அவர்
ஏந்தியிருப்பது
வக்கீல் ஐயா வீட்டு
வளர்ப்புப் புறா ஒன்று உதிர்த்த
புத்தம் புது இறகு
தெரியும் அதுவும்.

தெரியாதது-
நீங்களோ நானோ 
குனிந்து பொறுக்காத ஒன்றை
அவருக்கு எடுத்துக் கொள்ளத் தோன்றிய
அற்புதம் குறித்து.

3 எதிர் சப்தங்கள்:

Saravanan Sekar said...

very nice...

shivabi said...

Keep busy always so try something new like gardening, painting or small home job like changing wash basin or painting vanity etc.,

சேக்காளி said...

//மனதளவில் ‘செம ஸ்ட்ராங்’ என்று நினைத்துக் கொண்டிருந்தவர்கள் கூட சற்றே படபடப்பாகிறார்கள்//
அட ஆமா ய்யா