சில மாதங்களுக்கு முன்பாக நேர்காணல் செய்யும் நோக்கத்தில் நண்பர் ஜீவகரிகாலன் கேள்விகளை அனுப்பியிருந்தார். அந்தக் கேள்விகளுக்கான பதில்களை மின்னஞ்சலில் அனுப்பினால் போதும் என்றார். பதில்களைத் தட்டச்சு செய்யலாம் என ஆரம்பித்தால் ஏதோ செயற்கையாக இருப்பது போல இருந்தது. இத்தனைக்கும் வெளியில் மழை பெய்து கொண்டிருந்தது. உரையாடுவதற்கான மனநிலைதான் அது. ஆனால் நகரவேயில்லை.
பொதுவாக கட்டுரைகள், சிறுகதைகள் எழுதும் போது ‘இதுதான் உள்ளடக்கம்’ என்று மனதுக்குள் ஓடிக் கொண்டிருக்கும். ஏதேனும் சில வரிகளும் மனதுக்குள் இருக்கும். அந்த உள்ளடக்கத்தின், வரிகளின் வால் பிடித்தபடியே மடமடவென்று தட்டச்சு செய்துவிடுவேன்.
அதுவே கேட்கப்பட்ட கேள்விகள்- அவற்றுக்கான பதில்களைத் தயார் செய்ய வேண்டும் என்பது நமக்கு முன்பாக யாரோ ஒருவர் அமர்ந்து ‘இதுக்கு பதில் எழுது’ என்று இயக்குவது போல இருந்தது. கேள்விகளை அப்பொழுதே மூடி வைத்துவிட்டு கரிகாலனை அழைத்து “கேள்விகளை நான் முழுமையாகக் கூட படிக்கவில்லை; நாம் நேரில் சந்திக்கும் போது உங்களுக்கு மனதில் தோன்றும் கேள்விகளைக் கேளுங்கள்; அந்தக் கணத்தில் மனதில் என்ன தோன்றுகிறதோ அதுதான் வெளிப்படையான பதிலாக இருக்கும் பிறகு எடிட் கூட செய்ய வேண்டாம்” என்று சொல்லியிருந்தேன்.
நேர்காணல் என்பதே மனதில் தோன்றுவதுதானே? கவித்துவமாக, படிப்பவர்களை கட்டிப் போடும் விதமாக, ஏதாவது வலுக்கட்டாயமாகத் திணிப்பதாகவெல்லாம் இருக்க வேண்டிய அவசியமில்லை. என்ன தோன்றுகிறதோ அது அப்பட்டமாக இருக்க வேண்டும்.
அப்படியான ஒரு சந்திப்பில் கரிகாலன் வினாக்களைக் கேட்க, பதில்களைச் சொன்னேன். எனக்கு முன்பாக ஒரு வீடியோ கேமிராவை வைத்து பதிவும் செய்து கொண்டார். ஒரு மணி நேரம் பதிவாகியிருக்கும் என நினைக்கிறேன். இதையெல்லாம் இவர் திரும்பப் பார்த்து, தட்டச்சு செய்து அனுப்பமாட்டார் என்ற நம்பிக்கையில் இருந்தேன்.
ஆனால் சில வாரங்களில் அவற்றை மெனக்கெட்டு தட்டச்சு செய்து அனுப்பி வைத்தார். இந்த நேர்காணலை இன்னமும் மெருகேற்றலாம் என்று சொல்லிக் கொண்டேயிருந்தார். ஒரு பதிப்பாளராக அது நியாயமான கோரிக்கைதான். ஆனால் கட்டுரை, கவிதை என்றால் மெருகேற்றலாம். பேசியவற்றை என்ன மெருகேற்றுவது என்கிற ஒரு நினைப்பு அதற்கான மனநிலையை உருவாக்கவே இல்லை.
இன்று அழைத்து ‘யாவரும்.காம்’ தளத்தில் பிரசுரம் செய்துவிடுகிறேன் என்றார்.
‘என்னங்க..எடிட் செய்யலாம்ன்னு சொன்னீங்க’ என்றேன்.
‘ம்க்கும்..நீங்க செஞ்சுட்டாலும்....இருக்கிறதை பப்ளிஷ் செய்வோம்’ என்று சொல்லிவிட்டு செய்திருக்கிறார். அவருக்கு நன்றி. நேர்காணலில் பெரும்பாலான பகுதி நிசப்தம் சார்ந்துதான் பேசியிருக்கிறோம். அதனால் நிசப்தம் தளத்தை வாசிக்கும் நண்பர்களுக்கு இணைப்பைத் தருவதுதான் முறை. நேரமும் ஆர்வமும் இருப்பின் வாசிக்கவும்.
மேலே குறிப்பிட்டுள்ளபடி, மனதில் தோன்றியதை அந்தக் கணத்தில் அப்படியே பேசியிருக்கிறேன். தவறுகள் இருக்கலாம். அப்படி ஏதேனும் தென்பட்டால் மன்னித்து அதை எனக்குச் சுட்டியும் காட்டவும். ஏனென்றால் அங்கேயிருப்பதுதான் மனதில் இருக்கிறது. மனதில் இருப்பதுதான் பதிலாக எட்டிப் பார்த்திருக்கிறது என்று அர்த்தம். தவறு என்றால் காலப்போக்கில் திருத்திக் கொள்வதும் அவசியம்! திருத்திக் கொள்கிறேனோ இல்லையோ- குறைந்தபட்சம் இது தவறு என்றாவது உணர்ந்து கொள்ள வேண்டுமல்லவா?
நிசப்தம் செயல்பாடுகளை மதித்து நேர்காணல் நடத்திய யாவரும்.காம் தளத்துக்கும், கரிகாலனுக்கும் நன்றியும் அன்பும்! எப்பொழுதும் போல- நிசப்தம் வாசகர்களுக்கும் நன்றிகள்!
2 எதிர் சப்தங்கள்:
Great flow, Mani. Congratulations and happy that our Nisaptham is getting a lot more attention it deserves.
Regards,
Radha Balaa
√
Post a Comment