May 21, 2020

இப்பொழுது வரை....

கோவை-திருப்பூரிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் யாரும் நடந்தோ அல்லது மிதிவண்டியிலோ சொந்த ஊர்களுக்குச் செல்வதில்லை என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். முன்பு போல பல இடங்களுக்கும் சுற்றினால் எப்படியும் கண்ணில்பட்டுவிடுவார்கள். வீட்டிலேயே அடங்கிக் கிடப்பதால் உள்ளூரில் நடப்பதே கூட யாராவது அலைபேசியில் அழைத்துச் சொன்னால்தான் தெரிகிறது.

கோவை-திருப்பூர் நண்பர்களிடம் விசாரிப்பதுண்டு. ஆரம்பத்தில் பெரிய பிரச்சினை இல்லை என்றார்கள். ஊரடங்குக்குப் பிறகு தமக்கு வேலை செய்ய ஆட்கள் தேவை என்கிற காரணத்திற்காகவாவது பெரும்பாலான முதலாளிகள் தம் தொழிலாளர்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகளைச் செய்து கொடுத்து தங்க வைத்திருந்தார்கள். இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டம் என்று நீடிக்கத் தொடங்கிய போது சில முதலாளிகளால் உதவ இயலவில்லை- உதாரணமாக சிறு அளவில் கட்டிடங்கள் கட்டித் தரும் பொறியாளர்கள். தம்மிடம் பணியாற்றும் தொழிலாளர்களுக்காக தினசரி ஆயிரம் அல்லது இரண்டாயிரம் ரூபாய் என்பது வருமானமில்லாத காலத்தில் அவர்களைத் திணறச் செய்தது. சிறு பட்டறை நடத்துகிறவர்கள்,சிறு உணவு விடுதிகள் நடத்துகிறவர்களுக்கும் அதே நிலைமைதான். அவர்கள் திணறுவதும், இவர்கள் உணவுக்கு வேறு வாய்ப்புகளைத் தேடுவதுமாக முதலாளிகளுக்கும்-தொழிலாளர்களுக்குமான பிணைப்பு மெல்ல அறுபடத் தொடங்கியது. 

மேலும் மேலும்  லாக்-டவுன் தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டுக் கொண்டேயிருக்க தொழிலாளர்களும் பயப்படத் தொடங்கினார்கள். தொழிலாளர்களையும் விட சொந்த ஊர்களில் இருக்கும் அவர்தம் குடும்பங்கள்தான் அதிகமாக பயந்திருப்பார்கள். நீங்களோ நானோ வெளிநாட்டில் இருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். தினசரி இந்தியாவில் அதிகரிக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையைப் பார்த்து எப்படி நினைப்போம்? ஒரு லட்சம் நோயாளிகள் என்னும் போது நாடு முடிந்தது என்றுதான் வெளியில் இருக்கும் பலருக்கும் தோன்றும். நாம் இங்கே எப்படி இதை எதிர்கொள்கிறோம், தொற்றாளர்களின் எண்ணிக்கையை எப்படி பார்க்கிறோம் என்பது வேறு- வெளியிலிருந்து இதைப் பார்க்கும் போது தோன்றுவது வேறு. கிட்டத்தட்ட அதே மனநிலைதான் இங்கே பணிபுரியும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும். அவர்கள் பீகாரிலும், உத்தரப்பிரதேசத்திலும் இருந்து தமிழகத்தைப் பார்க்கும் போது இந்தியாவிலேயே தமிழகம் இரண்டாமிடம் அல்லது மூன்றாமிடம் என்று செய்தி ஒளிபரப்பானால் பீதி கிளம்பியிருக்கும். போதாக்குறைக்கு வாட்ஸாப்பில் மிரட்டித் தள்ளிவிடுகிறார்கள். இதெல்லாம் சேர்ந்து பிற மாநிலங்களில் வாழு தொழிலாளர்களை சொந்த ஊருக்கு வரச் சொல்லி அழுத்தம் கொடுக்கவும் கிளம்புவதற்கான முஸ்தீபுகளை மேற்கொண்டார்கள். 

நான்கு பேர் இருக்கும் இடத்தில் இரண்டு பேர்கள் கிளம்பினால் மற்ற இருவரும் கிளம்பிவிடவே நினைப்பார்கள். வருமானம் இல்லை, உணவுக்கும் பிரச்சினை வரக் கூடும் என்று தெரிகிறது, நோய் பற்றிய தகவல்கள், வாட்ஸப் வதந்திகள், குடும்பத்தினர் கொடுக்கும் அழுத்தம், Idle மனம் உருவாக்கிக் கொள்ளும் பயம் என எல்லாமுமாகக் கலந்து  சாரிசாரியாக கிளம்புவதற்கான மனநிலை உருவாகிவிட்டது. எப்பொழுது  போக்குவரத்து தொடங்கும், ரயில்களில் இடம் கிடைக்கும் என்றெல்லாம் புரிபடாத சூழலில் பயந்திருந்தவர்கள் எப்படியாவது இங்கேயிருந்து தப்பித்துவிடலாம் என்கிற மனநிலைக்கு வந்துவிட்டார்கள். மிக இயல்பான மனித மனநிலை அப்படியானதுதான். செத்தாலும் பரவாயில்லை- நம் ஊரில், நம் சொந்தங்களோடு இருந்து செத்துவிட வேண்டும் என்றுதான் எந்த மனிதனும் நினைப்பான். அப்படித்தான் இந்த ஒவ்வொரு மனிதனும் நினைக்கக் கூடும். 

மூன்றாம் ஊரடங்கின் மத்தியில் அல்லது நான்காம் ஊரடங்கின் போது ஊருக்குச் செல்ல விரும்புவதாக தங்களுடைய முதலாளிகளை நச்சரிக்கத் தொடங்கிவிட்டார்கள். சில இடங்களில் பிரச்சினையும் செய்திருக்கிறார்கள். இனி இவர்களை கட்டுப்படுத்தி வைத்திருக்க முடியாது என்கிற மனநிலைக்கு பெரும்பாலானவர்கள் வந்துவிட்டார்கள். எங்கள் உறவுக்காரர் ஒருவரிடம் பணியாற்றும் இருபது பேர்கள் ஆளுக்கு எட்டாயிரத்து ஐநூறு ரூபாய்- தங்களுடைய சேமிப்பிலிருந்து கொடுத்து வாகனம் ஒன்றை ஏற்பாடு பீகார் கிளம்பிவிட்டார்கள். தறி குடோன்கள், ஸ்பின்னிங் மில் மாதிரியான நிறுவனங்களில் பணியாற்றுகிறவர்கள் ஓரளவுக்கு சேமிப்பு வைத்திருக்கிறார்கள். அவர்களால் வாகனம் ஏற்பாடு செய்துவிட முடிகிறது. 

தெருக்களில் பொம்மை விற்பவர்கள், ஹோட்டலில் சொற்ப ஊதியத்தில் பணியாற்றுகிறவர்கள் என பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களிடம்- நாம் இவர்களை பெரும்பாலான சமயங்களில் ஏறெடுத்தும் பார்த்திருக்க மாட்டோம்- ஐந்தாயிரம் ரூபாய் கூட முழுமையாக இருக்காது. ஒருவேளை ஐந்தாயிரம் ரூபாய் கைவசம் இருந்தால் பழைய சைக்கிள் ஒன்றை வாங்கி மீதமிருப்பதை வழிச்செலவுக்கு என்று வைத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்கள். இரண்டாயிரம், மூன்றாயிரம் அல்லது எதுவுமே இல்லாதவர்கள் நடப்பதைத் தவிர வேறு வழியில்லாமல் நடக்கத் தொடங்கியிருக்கிறார்கள். சிலர் முசாபர்பூர் போன்ற ஊர்களில்- கிட்டத்தட்ட நேபாள எல்லையிலிருந்து கூட வந்திருக்கிறார்கள். திருப்பூரிலிருந்து கணக்குப் போட்டால் இரண்டாயிரத்து ஐநூறு கிலோமீட்டர் தொலைவு. தினசரி ஐம்பது கிலோமீட்டர் நடந்தாலும் ஐம்பது நாட்கள் நடக்க வேண்டும். ஐம்பது நாட்களுக்கான உணவு? கோடை உருவாக்கும் நோய்களை சமாளிக்கும் வழி? மாநில எல்லைகளில் தடுத்து நிறுத்தப்பட்டால் அடுத்து? செல்போன் சார்ஜ் போடக் கூட இடம் இருக்காது.  நினைத்துப் பார்க்கவே பகீரென்றிருக்கிறது. கால்கள் பொத்து, உயிர்கள் பிரியாமல் என்ன செய்யும்?

பெருந்துறை அருகே பல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மிதிவண்டியில் பயணித்துக் கொண்டிருப்பதை நேரில் பார்த்தேன். நடந்து செல்வதற்கு மிதிவண்டியில் செல்வது பரவாயில்லை என்று ஒரு கணம் நினைத்துவிட்டு ‘மனம் எப்படி இறுகிக் கிடக்கிறது’ என்று யோசித்துக் கொண்டேன். இந்தக் காலம் எல்லாவற்றையும் மாற்றிவிடும் போலிருக்கிறது. தன்னார்வலர்களாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள் வாய்ப்பிருந்தால் தேசிய நெடுஞ்சாலையில் தினசரி ஐம்பது அல்லது நூறு பொட்டலங்கள் உணவை வைத்து போகிறவர்களுக்குக் கொடுக்கலாம். தைப்பூசத் திருவிழாவின் போது பழனி மலை வரைக்கும் வரிசையாக மோரும், தயிரும், உணவும் கொடுக்கிறவர்கள்தானே நாம்? இவர்களுக்கும் கொடுத்துவிடுவார்கள்தான். ஆனால் நாம் வெளியில் வந்து பார்க்காததால் ‘எங்கேயோ நடக்கிறார்கள்’ என்று நினைத்துக் கொண்டிருக்கக் கூடும். நம் ஊரிலும் நடக்கிறார்கள்!

உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இந்த கோடைகாலத்தில், கருந்தார் சாலையில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் இவ்வளவு சிரமப்பட்டுச் செல்கிறவர்கள், இனி என்னதான் வறுமை என்றாலும், என்னதான் பசி என்றாலும் உடனே திரும்ப வருவதற்கான வாய்ப்பெல்லாம் இப்போதைக்கு இல்லை. அப்படியே வருவதாக இருந்தாலும் வேலைக்காக இன்னொரு மாநிலம் செல்லலாம் என்கிற மனநிலை மாறவும், அவர்களின் குடும்பங்கள் அனுமதிக்கவும் பல மாதங்கள் தேவைப்படலாம். 

ஒரு பூ ஏற மிதித்துவிட்ட சொலவடைதான் நினைவுக்கு வருகிறது. நாமெல்லாம் ஒரு பூ ஏற மிதித்துவிட்டோம் என்று ஒரு நண்பரிடம் சொன்னேன். ‘ஆறு மாசம் முன்னாடி இந்தியாவை இரண்டு மாதங்களுக்கு முழுமையாக முடக்கி வைப்பார்கள்’ என்று யாராவது சொல்லியிருந்தால் ‘பைத்தியகாரன் என்று திட்டியிருக்கமாட்டோமா’ என்றார்.

ஆமாம் என்றேன்.

‘அப்படியான நிலையாமைதான் எல்லோருக்கும். இவர்களில் யாராவது ஒருத்தராவது நடந்தும் சைக்கிளிலும் சொந்த ஊர் திரும்புவோம் என்று எப்பொழுதாவது நினைத்திருப்பார்களா?’ என்றார்.

வாய்ப்பேயில்லை.

அதனால், ‘இப்பொழுது வரைக்கும் ஒரு பூ ஏற மிதித்திருக்கிறோம்’ என்று சொல்வதுதான் சரி’ என்றார்.

ஏனோ ‘இப்பொழுது வரை’ என்கிற அந்த இரண்டு சொற்களும் அவ்வளவு கனமாக இருக்கின்றன.

4 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//ஒரு பூ ஏற மிதித்திருக்கிறோம்//
புரியல யே

Mohamed Ibrahim said...

Yesterday I seen around 40 people walking in Madhuravoyal Ambattur bypass with their belonging.

Saravanan Sekar said...

//ஒரு பூ ஏற மிதித்திருக்கிறோம்//
புரியல யே

---
இது கொங்கு வட்டார வழக்கு - "ஏதோ நம்ம கொஞ்சம் கஷ்டத்தில இருந்து தப்பிச்சோம்" என்ற பொருள் இந்த இடத்தில

சேக்காளி said...

// "ஏதோ நம்ம கொஞ்சம் கஷ்டத்தில இருந்து தப்பிச்சோம்"//
நன்றி saravanan sekar