May 21, 2020

அயோக்கிய ராஸ்கல் கொரோனா!

நான்காம் ஊரடங்கு அறிவிக்கும் போது ஒரு வகையில் சலித்துப் போய்விட்டது. எத்தனை நாட்களுக்குத்தான் வீட்டிலேயே அடைந்து கிடப்பது? இயங்கிக் கொண்டே இருக்கும் வரைதான் மனம் நன்றாக இருக்கிறது. 

இரண்டொரு நாட்களுக்கு முன்பாக அலுவலகத்துக்குச் சென்று வரலாம் என்று தோன்றியது. ‘இ-பாஸ் விண்ணப்பித்து கிடைத்தால் கிளம்ப்விடலாம்’ என விண்ணப்பித்திருந்தேன்.

வீட்டிலும் சொல்லியிருந்தேன். பெரிய எதிர்ப்பு எதுவுமில்லை. பயப்படுவார்கள் என்று சந்தேகம் இருந்தது. கையைக் கழுவுங்க, மாஸ்க் போடுங்க என்று நான் அறுபது நாட்களாகச் செய்த அலம்பலைப் பார்த்தவர்கள் ‘இவனைப் பார்த்து கொரோனாவே டென்ஷன் ஆகிடும்’ என்று நினைத்து சரியென்றிருர்ப்பார்கள். கொரோனாவும் கடைசியில் சொங்கியாகிவிட்டது. யாருமே அதைப் பார்த்து பயப்படுவதில்லை. காய்ச்சல் இல்லையென்றால் மூன்று நாட்களில் வீட்டுக்கு அனுப்பிவிடலாம் என அரசு அறிவித்திருப்பதாகச் செய்தி வெளியாகியிருந்தது.

மரண விகிதம் குறைவு என்பதாலேயே என்னவோ அல்லது வந்தாலும் உடல் ரீதியாக பெரிய பாதிப்பில்லை என்பதாலேயே ‘வந்தால் பார்த்துக்கலாம்’ என்கிற மனநிலைக்கு பலரும் வந்துவிட்டார்கள். செய்திச் சேனல்களைப் பார்க்காத யாருக்கும் பெரிய அலட்டல் இல்லை. மனிதர்கள் வெளியுலகில் மிக இயல்பாக இயங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து ‘அவ்வளவுதான் கொரோனா பவுசு’ என்கிறார்கள். எந்நேரமும் சேனல்களையே பார்த்துக் கொண்டு வீட்டிலேயே இருப்பவர்கள்தான் கதறுகிறார்கள். 

நேற்று விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டுவிட்டது.  நூடுல்ஸ் பாக்கெட், வெங்காயம், தக்காளி உட்பட அனைத்தையும் கட்டி எடுத்துக் கொண்டு கோபியிலிருந்து கிளம்பி மாமனார் வீட்டில் மற்றவர்களை இறக்கிவிட்டுவிட்டு காரிலேயே தனியாகக் கிளம்பினேன். வழியில் பெரிய கெடுபிடிகள் இல்லை. ஆங்காங்கே நிறுத்தி ‘மாஸ்க் போட்டுக்குங்க’ என்றார்கள். தனியாகச் செல்கிறேன்; காரில் என்னைத் தவிர யாருமில்லை- எதற்கு மாஸ்க் என்று குழப்பமாகவே இருந்தது.

காவலர்களுக்கு வந்த அறிவுறுத்தல்- ‘எல்லோரும் மாஸ்க் போட்டிருக்க வேண்டும்’ என்பதாக இருக்கும். அவர்கள் இம்மி பிசகாமல் பின்பற்றுகிறார்கள். இடையில் ஒரே இடத்தில் நிறுத்தினேன். மன்னா மெஸ் ஜெயராஜை  சந்திப்பதற்காக. தொழில் முடங்கியிருக்கிறதே என்கிற வருத்தம் அவருக்கு. முப்பது நாட்களில் லாக்-டவுனை தளர்த்தியிருந்தால் பிரச்சினை எதுவும் இருந்திருக்காது; தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்த ஓர் எந்திரத்தின் சங்கிலியை கத்தரித்துவிட்டார்கள் என்றார். திருப்பூர், கோவை என தொழில் நடத்துகிறவர்களின் பெரும்பாலான வருத்தமும் இதுதான். அறுபது நாட்களுக்குப் பிறகும்-டாஸ்மாக் திறக்கப்படும் போது- பிறவற்றின் மீது மட்டும் ஏன் பாராமுகம் காட்டுகிறார்கள் என்பதுதான். 

தொடர்ச்சியான இயக்கத்தின் போதும் பணம் புழங்கிக் கொண்டேயிருக்கும். நான் யாரோ சிலருக்கு ஒரு லட்ச ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கும். ஆனால் எனக்கு வர வேண்டிய தொகையும் கிட்டத்தட்ட அதே அளவுக்கு இருக்கும். முப்பதாயிரம் ரூபாய் எனக்கு வரும் போது கட்டாயம் கொடுக்க வேண்டிய ஒருவர் அல்லது இருவருக்கு இருபத்தைந்தாயிரத்தைக் கொடுத்துவிட்டு ஐந்தாயிரத்தை நான் வைத்துக் கொள்வேன். இப்படியான சுழற்சியில்தான் கிட்டத்தட்ட தொண்ணூற்றைந்து சதவீத சிறு-குறு-நடுத்தர தொழில்கள் நடந்து கொண்டிருந்தன. அத்தொழில்களின் வழியாக இலட்சக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைத்துக் கொண்டிருந்தது. இப்பொழுது அந்தச் சங்கிலி துண்டிக்கப்பட்டிருக்கிறது. இனி மீண்டும் தொழில்கள் இயங்கத் தொடங்கினாலும் பழையபடிக்கு வர எத்தனை மாதங்கள் தேவைப்படும் என்பதுதான் பெரிய கேள்விக்குறி.

ஜெயராஜ் ‘ஏதாச்சும் சாப்பாடு கொண்டு வரட்டுமா’ என்றார்.

‘அதெல்லாம் வேண்டாங்க....குடும்பம் நடத்துற அளவுக்கு காரிலேயே எல்லாம் இருக்கு....35 லிட்டர் தண்ணீர் கேன் கூட வெச்சிருக்கேன்..’ என்றேன்.

உறங்கி எழுந்துவிட்டு அதிகாலையில் கிளம்பச் சொன்னார். ‘எதையும் தொடுவதில்லை..மன்னிச்சுக்குங்க’ என்றேன்.

சலித்துப் போனவராக ‘அட யூரினாச்சும் போயிட்டு போங்க...’ என்றார்.

‘ஸாரிங்க...நான் திறந்தவெளியில் கழிப்பேனே தவிர அடுத்தவர்கள் பயன்படுத்திய இடத்தை பயன்படுத்த மாட்டேன்’ என்று சொல்லிவிட்டு வந்து சேர்ந்தேன்.

வேளச்சேரியில் குட்டி அறை வைத்திருக்கிறேன். எப்பொழுதாவது வந்தால் தங்குவதற்கான அறை. அதிகபட்சம் ஒரு நாள் கூட இருப்பதில்லை இருந்தாலும் குளிக்க, உறங்க ஓர் அறை வேண்டுமல்லவா? அதற்காக. கடந்த இரண்டு மாத வாடகையை வீட்டு ஓனரின் மனைவியிடம் கொடுத்துவிட்டு வந்து பார்த்தால் ஒரு விளக்கும் எரியவில்லை. ஏதோ கோளாறு. இந்த வெம்மையில் எப்படி உறங்குவது என்பதைவிட மறுநாள் காலையில் இண்டக்ஸன் அடுப்பில் எப்படி நூடுல்ஸ் தயாரிப்பது என்கிற பயம்தான்.  மறுபடி கதவைத்தட்டி ‘ஓனர் இல்லைங்களா’ என்றேன். ‘அவர் ரஷ்யா போயிருக்காரு...அங்கேயே மாட்டிக்கிட்டாரு’ என்றார். ‘நேரங்காலம் தெரியாமல்  அந்த ஆளு எதுக்குப் போனாரு? இப்ப பாருங்க எனக்கு கரண்ட் இல்லை’ என நினைத்துக் கொண்டு அதையும் இதையும் திறந்து பார்த்தால் வியர்த்துவிட்டது. கட்டையில் ப்யூஸ் போயிருந்தது. அப்பாடா! அந்தப் பெருங்கடலைத் தாண்டி வந்து லுங்கிக்கு மாறலாம் என்றால் இன்னொரு பேரிடி. துணிப்பையை மறந்து வந்திருந்தேன்.

நான் மறக்கவில்லை. மாமனார் வீட்டில் இறக்கிவிட்டவுடன் உற்சாகத்தில் என்னுடையதையும் அள்ளி எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள். கிராதகர்கள்! ராத்திரிக்குக் கூட ஜட்டியோடு உறங்கிவிடலாம். அடுத்த நாள் அலுவலகத்திற்கு என்ன செய்வது? நாளை மறுநாள் என்ன செய்வது? கைகால் நடுங்கத் தொடங்கிவிட்டது. 

ஜெயராஜை அழைத்து ‘இப்படி ஆகிடுச்சுங்க’ என்றேன். 

‘என்னமோ குடும்பமே நடத்துவேன்னு சொன்னீங்க’ என்று நக்கலடிக்கிறார்.

புலி படுத்துவிட்டால் பூனை மேலே ஏறி ஜங்கு ஜங்குன்னு குதிக்கும் கதையாகிவிட்டது. ‘ஒண்ணும் பிரச்சினை இல்லைங்க...போட்டிருக்கிற சட்டையையே அயர்ன் பண்ணக் கொடுங்க’ என்றார். தேய்க்கக் கொண்டு போனால் ஒன்று ஜட்டியோடு செல்ல வேண்டும் அல்லது பேண்ட் சர்ட் அணிந்து சென்று கடைக்காரர் முன்பாக கழற்றிக் கொடுக்க வேண்டும். ‘இரண்டுமே முடியாதே?’ என்றேன்.

ஜீவகரிகாலன் இன்னொரு ஆபத்பாந்தவர். அழைத்துப் பேசினேன். பேசி மட்டும் என்ன செய்ய முடியும்? அவரது சட்டையில் என்னை மாதிரி இரண்டரை ஆள் புகுந்து கொள்ளலாம். ஆனால் அவர் ‘கடை எல்லாம் திறந்திருக்குங்க’ என்றார்.  ‘புதுசு எடுத்துக்கலாம்’ என்றார். அப்பொழுதுதான் உயிர் வந்தது.

வேறு வழியே இல்லை. ஊரிலிருந்து அணிந்து வந்திருந்த சட்டையையே நாளை ஒரு நாள் போட்டுக் கொள்ளலாம் என்று கழற்றி வைத்துவிட்டு ‘நினைத்தமாதிரியே’ கவர்ச்சிகரமாக படுத்து உறங்கிவிட்டேன். அணிந்திருந்த சட்டையையே அலுவலகத்துக்கு அணிந்து சென்றால் வியர்வை வாடை அடிக்குமோ என்று சந்தேகமாக இருந்தது. ஆனால் எப்படியும் எல்லோரும் மாஸ்க் அணிந்திருப்பார்கள். அவர்களது மூச்சுக்காற்று நாற்றம்தான் அவர்களுக்குத் தெரியுமே தவிர நம் சட்டை நாற்றமா தெரியப் போகிறது? எப்படியும் தப்பித்துக் கொள்ளலாம் என்கிற நம்பிக்கைதான்.

காலையில் எழுந்து நூடுல்ஸ் செய்து மூன்று முறை சோப் தேய்த்துக் குளித்துவிட்டு அந்தச் சட்டையும் பேண்ட்டையுமே அணிந்து வந்து பார்த்தால் வேளச்சேரி முழுக்க ஒரு துணிக்கடை இல்லை. ஊராய்யா இது?

ஜெயராஜ்  ‘வண்டி எடுத்துட்டு இங்க வாங்க கடை இருக்கு’ என்றார். அங்கே சென்றால் நக்கலடிப்பார். வேண்டாம். கரிகாலன் வேறு கடை இருக்கிறதா என்று தேடிச் சொல்வதாகச் சொல்லியிருக்கிறார். நான் இன்னொரு ஏரியாவில் சுற்றலாம் என்றிருக்கிறேன். பன்னாடை கொரோனாவுக்கு பயந்து நூடுல்ஸ் உட்பட எல்லாம் எடுத்து வந்திருந்தால் அது நம்மை ஷாப்பிங் செய்ய வைக்கிறது! அயோக்கிய ராஸ்கல் கொரோனா!

6 எதிர் சப்தங்கள்:

Saravanan Sekar said...

வணக்கங்கண்ணா, கோவையில் இருந்து சென்னை போய்ட்டிங்களா.. இல்லை தற்காலிக பணிக்காக சென்னை வாசமா?

Siva said...

சிரித்து மாலவில்லை....

Vaa.Manikandan said...

//கோவையில் இருந்து சென்னை போய்ட்டிங்களா.. இல்லை தற்காலிக பணிக்காக சென்னை வாசமா?//

கோவைதாங்க..சனி அல்லது ஞாயிறு ஊருக்குச் சென்றுவிடுவேன்.

thiru said...

வேளச்சேரி - தண்டீஸ்வரம் மார்க்கெட் தெருவில் - ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் என்ற துணிக்கடை திறந்து இருந்தது.. அங்கு சென்றீர்களா ?

Avargal Unmaigal said...

ஊரடங்கு என்று மட்டும்தானே சொன்னாங்க பதிவி ஏதும் எழுதகூடாது என்று சொன்னாங்களா? இப்போது எல்லாம் அதிகம் வருவதில்லியை ஏன்?

Anba said...


//‘நினைத்தமாதிரியே’ கவர்ச்சிகரமாக படுத்து உறங்கிவிட்டேன்//

நீங்களே உங்கள ரொம்ப ரசிப்பீங்க போல :-)