‘நிசப்தம் சார்பில் அடுத்து என்ன உதவிகளைச் செய்யப் போகிறீர்கள்’ என்று சில நண்பர்கள் விசாரிக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் நன்கொடை தர விரும்புகிறவர்கள். தனிப்பட்ட முறையில் நன்கொடை அனுப்புகிறவர்கள் கேட்பதில்லை. அவர்கள் எதைப் பற்றியும் யோசிக்காமல் பணத்தை அனுப்பி வைத்துவிடுவார்கள். சிலர் குழுக்களாக, சங்கங்களாகச் செயல்படுகிறவர்கள் பணத்தை அனுப்பும் முன் விவரங்களைக் கேட்பார்கள். அந்தக்குழுவில் ஓரிருவருக்குத்தான் நிசப்தம் பற்றித் தெரியும். அவர் ‘நிசப்தம் கணக்குக்கு அனுப்பி வைத்துவிடலாம்’ என்று சொல்லியிருப்பார். ஆனால் மற்றவர்கள் விடுவார்களா? அவர்கள் கேட்கும் வினாக்களுக்கு எழுத்துப் பூர்வமாக பதில் கேட்பார்கள். சில நிறுவனங்களில் பணி புரிகிறவர்கள் பணத்தை வசூல் செய்துவிட்டு யாருக்கு அனுப்புவது என்கிற குழப்பம் நேரும் போது ‘உங்கள் பணிகளைப் பற்றி விவரமாகச் சொல்ல முடியுமா’ என்று கேட்பார்கள். தமிழில் கூட தட்டச்சு செய்துவிடலாம். ஆங்கிலத்தில் என்றால் வெகு நேரம் பிடிக்கும். முன்பு சில முறை இதைச் செய்திருக்கிறேன்.
பொதுக்காரியங்களைச் செய்யும் போது இத்தகைய செயல்களைச் செய்தே தீர வேண்டும். இவற்றை அவசியமில்லாத செயல்கள் என்று சொல்ல மாட்டேன். ஆனால் நம்முடைய செயலைப் பார்த்து, அவர்களாக முடிவுக்கு வந்து நிதியை அனுப்பினால் போதும் என்றுதான் இந்த மாதிரியான சமயங்களில் தோன்றும். நிசப்தம் தளத்தில் எழுதுவது வேறு. தனிப்பட்ட மின்னஞ்சல்களில் ‘இதையெல்லாம் செய்திருக்கிறோம்...இதெல்லாம் செய்யப் போகிறோம்’ என்று எழுத பல சமயங்களிலும் சங்கடமாகவே இருக்கிறது.
கொரோனா மாதிரியான பேரிடர் காலங்களில் இத்தைகைய இத்தகைய விசாரணைகள் மிக இயல்பானவை. புதியதாக நிறையப் பேருக்கு அறக்கட்டளை குறித்து தெரிய வரும். அப்படி தினசரி குறைந்தபட்சம் ஒருவராவது தொடர்பு கொண்டு கேட்கிறார்கள். அதனால் சற்று விரிவாகவே எழுதிவிடலாம் என நினைக்கிறேன்.
விளிம்புநிலை மக்களோடு ஏதாவதொரு வகையில் தொடர்பில் இருக்கிறேன். ஊரடங்கு காலகட்டத்தின் முதல் பதினைந்து இருபது நாட்களுக்கு எந்தப் பெரிய பிரச்சினையையும் காண முடியவில்லை. மக்களிடம் கையிருப்பு இருந்தது. பொருட்களும் வீட்டில் இருந்தன. சமாளித்துக் கொண்டார்கள். கொடுமையான காலகட்டம் என்றால் இரண்டாம் மற்றும் மூன்றாம்கட்ட ஊரடங்கு காலம்தான். வீட்டில் பொருட்கள் தீர்ந்து, வேலையும் இல்லாமல், பணமும் இல்லாமல் பசிப்பிணியை நேரடியாக அனுபவித்தார்கள். அந்தச் சமயத்தில் முக்கியமான தேவையாக உணவு இருந்தது. அப்பொழுதுதான் மளிகைப் பொருட்கள் வழங்குவது, சமூக சமையற்கூடம் அமைத்து உணவு தயாரிப்பு போன்றவற்றிற்கு தேவைகள் மிக அதிகமாக இருந்தன. அப்பொழுது சுமார் எந்நூறு குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்களைக் கொடுத்தோம்.
உண்மையிலேயே அது நல்ல தொடக்கமாக அமைந்தது. மூன்றாம் கட்ட ஊரடங்கின் போது அரசியல் கட்சிகள், தன்னார்வலர்கள் என உதவி செய்தவர்களின் எண்ணிக்கையும் பரவலாக அதிகரித்தது. நாம் உதவிய சில இடங்களில் திரும்பத் திரும்ப மற்றவர்களும் பொருட்களைத் தருகிறார்கள் என்று உணர்ந்த போது இனி சற்று வேகத்தைக் குறைத்துக் கொள்ளலாம் என்று முடிவுக்கு வர வேண்டியதானது.
நான்காம்கட்ட ஊரடங்கின் போது பெயருக்குத்தான் ஊரடங்கு என்பது அமலில் இருந்தது. ஓரளவுக்கு நிறுவனங்கள் செயல்படத் தொடங்கின. அப்பொழுது மக்களும் வேலைக்குச் செல்லத் தொடங்கினார்கள். கொரோனாவுக்கு முந்தைய காலகட்டத்தைப் போல செழிப்பான வருமானம் இல்லையென்றாலும் பசியைத் தீர்த்துக் கொள்ளுமளவுக்கு வருமானம் கிடைக்கிறது என்ற சூழல் உருவானது. நாம் எதையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றுதான் நினைத்தேன். ஆனால் கொரோனா ஊரடங்கு, தொழில் முடக்கம் போன்றவற்றின் விளைவான பொருளாதார ரீதியிலான பாதிப்புகளினால் ‘வயசானவங்களை வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்க’ என்பது மாதிரியான தகவல்கள் கிடைத்தன. அதாவது முப்பது சதவீதம், ஐம்பது சதவீதம் ஊழியர்களைக் கொண்டும் இயங்கும் நிறுவனங்கள் எல்லோரையும் பணிக்கு அழைக்கத் தயாரில்லை. இருப்பதில் வலு, திறன் கொண்டவர்களை மட்டுமே அழைக்கின்றன. மற்றவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இந்தச் சூழல் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரியவில்லை. நிறுவனங்களில் தொடர்புள்ளவர்களைக் கேட்டால் ‘இனி பழையபடி டிமாண்ட், பணப்புழக்கம் வரும் வரைக்கும் ஆட்களுக்கான தேவை குறைவாகவே இருக்கும்’ என்கிறார்கள். இப்படியான இக்கட்டில் பாதிக்கப்படும் குடும்பங்களைக் கண்டறிவதுதான் முக்கியமான- சவாலான பணியாக இருக்கிறது. அத்தகைய குடும்பங்களில் சிலவற்றுக்கு உதவுவதே அடுத்த கட்டப் பணியாக இருக்க முடியும் எனத் தோன்றியது.
இன்று ஒரு கூட்டத்தை நடத்தினோம். நிசப்தம் நண்பர்களும், நாம் உதவிய குடியிருப்புகளிலிருந்து 2-3 பேர்களை வரச் செய்து நடத்தப்பட்ட கூட்டம் இது. வழக்கமான நலவிசாரிப்புகளுக்குப் பிறகு அடுத்த செயல்திட்டம் பற்றி விரிவாகப் பேசினோம். இந்தக் குழுவினர் தங்களது குடியிருப்பில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களை அடையாளம் காண்பார்கள். அவர்களுக்கான தேவை என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். விதவைத் தாயார், ஒரே மகள்- அம்மாவுக்கு வேலை இல்லை இனி கல்லூரிக்கட்டணம் கட்ட வேண்டும் என்றால் அதைப் பட்டியலிடச் சொல்லியிருக்கிறோம். ‘எனக்கு ஒரு அயர்ன் பாக்ஸ் கொடுத்தால் தேய்த்து பிழைத்துக் கொள்வேன்’ என்று ஏதேனும் பெண்மணியோ அல்லது முதியவரோ சொன்னால் அதையும் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். இப்படி பாதிக்கப்பட்ட குடும்பங்கள்- அவர்களின் உடனடித் தேவை என முழுமையான பட்டியலை ஒரு வாரம் அல்லது பத்து நாட்களில் தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறோம். இனி வரும் வாரம் முழுக்கவும் தினசரி குடியிருப்புகளுக்குச் சென்று அந்தக் குடும்பங்களைச் சந்தித்து, குழுவினரோடு ஆலோசிக்க வேண்டியிருக்கிறது.
உணவுப்பொருட்களை வழங்குவதைப் போன்ற எளிதான காரியமில்லை இது. ஒரு குடியிருப்பில் ஐந்து குடும்பங்களைத் தேர்ந்தெடுக்கும் போது ‘ஆமாம்..அவங்க தகுதியானவங்கதான்..அவங்களுக்கு உதவலாம்’ என்று மீதமிருக்கும் அத்தனை குடும்பங்களும் மனப்பூர்வமாகக் கருத வேண்டும். அத்தகைய குடும்பங்களைக் கண்டறியும் போது தேர்ந்தெடுக்கும் குழுவினர் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைத் தவிர்த்து தேர்ந்தெடுக்க வேண்டும். அதைத்தான் அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறோம். எனக்கு முழுமையாக நம்பிக்கையிருக்கிறது. அத்தகையவர்களைத்தான் அழைத்திருந்தோம்.
தயாரிக்கப்பட்ட பட்டியலிலிருந்து முன்னுரிமைப்படி வகைப்படுத்தி அதற்கேற்ற நிதியை ஒதுக்கீடு செய்து அந்தக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்பதுதான் அடுத்தகட்ட நடவடிக்கையாக இருக்கும். வெவ்வேறு பொருட்களுக்கு சரியான கிடைக்குமிடங்களைத் தேட வேண்டும். நிறையப் பணிகள் இருக்கின்றன. இப்போதைக்கு ‘என்ன செய்யப் போகிறோம்’ என்பது மட்டுமே தெரிகிறது. யாருக்குச் செய்யப் போகிறோம், எந்தவிதமான உதவி என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. யாருக்குமே தெரியாது. முழுமையான கள ஆய்வுக்குப் பிறகே தெளிவாகத் தெரியும். அதற்கு இன்னமும் சில நாட்கள் தேவைப்படக் கூடும். இதைத்தான் ‘அடுத்து என்ன’ என்று கேட்கிற யாருக்குமே தெரிவிக்க விரும்புகிறேன்.
நிசப்தம் வழக்கம் போலவே சப்தமின்றியே இயங்கும். அறக்கட்டளையின் விவரங்கள், வரவு செலவுக் கணக்கு என அனைத்துமே பொதுவில் இருக்கிறது. ஒளிவு மறைவான திட்டங்கள், வரவு செலவு என்று எதுவுமில்லை. எப்பொழுது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் சரி பார்த்துக் கொள்ளலாம். சந்தேகங்கள் இருப்பின் கேட்கலாம். எப்பொழுதும் போலவே நிசப்தம் அறக்கட்டளை ‘க்ரவுட் ஃபண்டிங்’முறைதான். இந்த நிதியை இதற்குத்தான் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை அமல்படுத்துவது சிரமமான காரியம். ஏற்கனவே இருக்கும் தொகையில் நன்கொடையாளர்கள் அளிக்கும் தொகை சேர்ந்து கொள்கிறது. அடுத்தடுத்த பணிகளின் போது பயனாளிகளுக்குத் தேவைக்கு ஏற்ப ஒதுக்கப்படுகிறது. அந்த விவரங்களும் தளத்தில் முழுமையாக இருக்கிறது. எப்பொழுதும் சொல்வது போலவே- எந்தவிதத்திலும் பத்து பைசா கூட வீணாகப் போய்விடாது என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம், விரிவாக ஆராய்ந்து பார்த்துக் கொள்ளலாம்.
தொடர்ந்து செயல்படுவோம். நன்றி!
4 எதிர் சப்தங்கள்:
இந்த உதவிகள் திருவள்ளூர் மாவட்டம் வரை வருமா
இப்போதிருக்கும் நடைமுறைச் சிக்கல்களைத் தாண்டி பரவலாகச் செய்திட தற்சமயம் வாய்ப்பில்லை. இதனையும் கூட சோதனை முயற்சியாகவே கருத வேண்டியிருக்கிறது.
//தொடர்ந்து செயல்படுவோம்//
√
சார் தங்களது மகத்தான பணிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
Post a Comment