May 26, 2020

தலை போகிற காரியமா?

தமிழகத்தில் மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வினை நடத்துவது குறித்தும் விவாதிக்கப் போகிறார்கள் என்று செய்தி பார்த்த போது அதிர்ச்சியாக இருக்கிறது. பத்தாம் வகுப்புத் தேர்வு அவ்வளவு முக்கியமான தேர்வா என்ன? ஆட்சியாளர்கள் பேசுவதற்கு முக்கியமான பல விவகாரங்கள் இருக்கின்றன. 

மக்கள் பஞ்சத்தில் அடிப்பட்டுக் கிடக்கிறார்கள்; தொழிற்துறை பெருமளவு முடங்கிவிட்டது; பலருக்கும் வேலை இழப்புகள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது; இன்று வரை நோய்ப்பரவல் குறைந்தபாடில்லை; மரண எண்ணிக்கையும் அதிகமாவதாகத் தெரிகிறது. இத்தனை பிரச்சினைகளை வைத்துக் கொண்டு பத்தாம் வகுப்புத் தேர்வுகளை நடத்துவதற்கான அழுத்தம் எங்கேயிருந்து வருகிறது? அப்படி என்ன தலை போகிற காரியம் அது? சிவில் சர்வீஸ் தேர்வுகளைக் கூட தள்ளி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் ஏன் பத்தாம் வகுப்புத் தேர்வுக்கு இந்தக் குதி குதிக்கிறார்கள்? இன்றைக்கு அமைச்சர்களாக இருப்பவர்களில் பத்தாம் வகுப்பு தேர்ச்சியடைந்தவர்கள் எத்தனை பேர்? கல்வியமைச்சர் என்ன படித்திருக்கிறார்?

ஜூலையில் தேர்வு என்று சொல்லிவிட்டு, ஜுனிலேயே தேர்வு நடத்தப்படும் என்று மாற்றி அறிவித்து, அதையும் தள்ளி வைப்பதாகச் சொல்லி, மீண்டும் தேர்வு நடத்த ஆலோசனை என்று எத்தனை அறிவிப்புகள்? எத்தனை குளறுபடிகள்? இன்னமும் பத்து அல்லது பதினைந்து நாட்களில் பொதுத்தேர்வு என்று அறிவிக்கும் ஒவ்வொரு முறையும் ஒரு மாணவன் என்னவிதமான மன அழுத்தத்திற்கு ஆளாவான் என்று அமைச்சருக்குத் தெரியுமா? தம் வாழ்க்கையில் ஏதேனும் பொதுத் தேர்வு எழுதியிருந்தால் தெரியும். குறைந்தபட்சம் அதிகாரிகளிடமாவது கேட்கலாம். அப்படியும் கேட்பதில்லை போலிருக்கிறது.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பதினைந்து வயது கூட பூர்த்தி ஆகியிருக்காது. பதினான்கு வயதுக் குழந்தைகளை ஏன் இவ்வளவு சித்ரவதை செய்கிறார்கள்? ஊரடங்கு காலத்தில் இவ்வளவு மன உளைச்சல்களை அந்தப் பிஞ்சுகளுக்குத் தர வேண்டிய அவசியம் என்ன? இதன் பின்னால் இருக்கும் அரசியல் என்ன? தனியார் பள்ளிகள் ஏதேனும் அழுத்தம் கொடுக்கின்றனவா? விரைவிலேயே சேர்க்கையை நடத்தி பணத்தை வசூல் செய்து கஜானாவை நிரப்ப வேண்டும் என்கிற பதற்றமா? வேறு ஏதேனும் விவகாரமா?  மாணவர்களை நசுக்க நசுக்க- அவர்களைப் பார்த்து இப்படியெல்லாம் கேட்க வேண்டியிருக்கிறது. 

பத்தாம் வகுப்புத் தேர்வு நடைபெறாவிட்டால் தமிழகத்தின் மொத்தக் கல்வித்தரமும் குழியில் விழுந்துவிடுமா என்ன? தனியார் பயிற்சி மையங்களுக்குத் தீனி போடுவதில் தொடங்கி தனியார் பள்ளிகளுக்கு ரத்தினக் கம்பளம் விரிப்பது, அரசுப்பள்ளிகளைக் குறைப்பது, நூலகங்களாக மாற்றுகிறோம் என்று விதவிதமான ஜிகினா அறிவிப்புகளாலும், வஞ்சகமான திட்டங்களினாலும் தமிழகத்தின் கல்வித்தரத்தை தூக்கி நிறுத்துவதைப் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்.

ஆயிரத்தெட்டு பிரச்சினைகளை வைத்துக் கொண்டு- தமிழகம் இப்போதைக்கு இயல்பு நிலைக்குத் திரும்ப சாத்தியம் மிகக் குறைவு என்கிற சூழலில் திரும்பத் திரும்ப ‘பத்தாம் வகுப்புத் தேர்வுகள்’ என்று துள்ளுவதன் பின்னால் ஏதோ உள் அரசியல் இருக்கிறது என உறுதியாக நம்ப வேண்டியிருக்கிறது.  அரசியல் இருந்துவிட்டுப் போகட்டும். அதைப் பற்றி பேசாமல் விட்டுத் தொலையலாம். தேர்வுகளை நடத்துவதிலேயே எவ்வளவு நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன?

எங்கள் ஊரில் இருக்கும் பள்ளியில் கொல்லிமலையைச் சார்ந்த மாணவன் ஒருவன் பத்தாம் வகுப்பு படிக்கிறான். அவனுக்கு கடுமையான உடல்நலக் குறைபாடு உண்டு. நாமக்கல் கொல்லிமலையிலிருந்து கோபிச்செட்டிபாளையம் வந்து விடுதியில் தங்கி பத்தாம் வகுப்புத் தேர்வு எழுத வேண்டும். அவன் அங்கேயிருந்து வருவதே மிகப்பெரிய அச்சம். வந்து இங்கே பிற மாணவர்களுடன் தங்கி- அவனுக்கு ஏதேனும் பாதிப்பு என்றால் யார் பொறுப்பு? இந்த மாணவனையும் விட்டுவிடலாம். அவன் விதி. 

இன்றைக்கு தமிழகம் முழுவதும் எத்தனை பத்தாம் வகுப்பு மாணவர்கள் விடுதியில் தங்கிப் படிக்கிறார்கள் என்கிற தகவல் அரசாங்கத்திடம் இருக்குமல்லவா? அந்தத் தகவலை புரட்டியாவது பார்த்தார்களா? குறைந்தது ஒரு லட்சம் பேர்களாவது இருக்கமாட்டார்களா? அவர்கள் விடுதிக்கு வந்துதானே தேர்வு எழுத வேண்டும்? அந்த மாணவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாது என்பதில் என்ன உத்தரவாதம் இருக்கிறது? அப்படி தொற்று ஏற்பட்டால் அந்தக் குழந்தைகளுக்கும் அவர்தம் பெற்றோருக்கும் யார் ஆறுதல் சொல்வார்கள்?

சரி, விடுதியில் இருக்கும் மாணவர்களையும் விட்டுவிடலாம்.  ‘பக்கத்தில் பள்ளிக்கூடமே இல்லையா? உன்னை யார் விடுதியில் தங்கச் சொன்னது’ என்று கேட்டாலும் கேட்பார்கள். தேர்வுக்கு வரும் மாணவர்களை எடுத்துக் கொள்ளலாம். தேர்வு அறைகளில் எல்லாவிதமான தனிமனித விலகலையும் நூறு சதவீதம் பின்பற்றிவிடுவார்களா? தேர்வு எழுதுகிற அழுத்தத்தில் வருகிற மாணவனிடம் ‘இதைத் தொடாதே, அதைத் தொடாதே’ என்று மேலும் மேலும் ஏன் அழுத்தத்தை உருவாக்க வேண்டும்?

இந்த அறுபது நாட்கள் சிறைவாழ்க்கையில் பெரியவர்களே மன அழுத்தத்தில் வெந்து தணிகிறார்கள். மன உளைச்சலில் கடும் கோபத்தை அடுத்தவர்களிடம் காட்டுகிறார்கள். இதில் குழந்தைகள் கடந்த அறுபது நாட்களாக என்னவிதமான அழுத்தங்களை எதிர்கொண்டிருப்பார்கள் என்று அரசு யோசிக்க வேண்டியதில்லையா?

அறுபது நாட்களாக பாடங்களை மறந்துவிட்ட மாணவர்களை அழைத்து வந்து, மேலோட்டமாகக் கூட திருப்புதல் செய்யாமல் தேர்வினை நடத்தினால் கடுமையாகத் திணறுவார்கள். குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

கல்கி இதழில் என்னுடைய கவிதை ஒன்று பிரசுரமாகியிருக்கிறது. அதற்காக அந்த இதழை அனுப்பி வைத்திருந்தார்கள். பக்கத்திலேயே கே.ஏ.பத்மஜா என்னும் அம்மையார் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தை வாசியுங்கள். அவர் முன்வைக்கும் வாதம் மிகச் சரியானது. 


தேர்வு எழுதாமலேயே அனைவருக்கும் தேர்ச்சி என்று சான்றிதழ் கொடுத்தால் என்ன குறைந்துவிடும்?  ‘அய்யோ பதினோராம் வகுப்புக்கு எப்படி சேர்க்கை நடத்துவது’ என்று கேட்பார்கள். அந்தந்த பள்ளிகளே நுழைவுத் தேர்வையோ அல்லது வாய்மொழித் தேர்வையோ நடத்தட்டும். தேர்வு கூட அவசியமில்லை- நேர்காணல் நடத்தலாம். ‘கல்லூரிக்குச் செல்லும் என்ன படிக்க விரும்புகிறாய்?’ ‘ஏன் அதைப் படிக்க விரும்புகிறாய்’ என்று ஆசிரியர் குழு கேள்விகளைக் கேட்டு அந்த மாணவனின் ஆர்வத்துக்கு ஏற்ப ‘நீ இந்த க்ரூப் படிக்கலாம்’ என்று ஆலோசனையைச் சொல்வதற்கான வாய்ப்பாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். இன்றைக்கு 99% மாணவர்கள் - நம் மதிப்பெண்ணுக்கு இந்த க்ரூப்தான் கிடைக்கும் என்றுதான் சேர்கிறார்களே தவிர, பிற்காலத்தில் என்ன படிக்க விரும்புகிறோம் அதற்கான குரூப் எது என்றெல்லாம் சேர்வதில்லை.

அம்மையாரின் வாதத்தை முழுமையாக ஆதரிக்கலாம். 

சூழல் இயல்பாக இருக்கும் போது தேர்வு நடத்தினால் யாரும் எதுவும் சொல்லப் போவதில்லை. சூழலின் காரணமாக பல்வேறு மன அழுத்தங்கள் உருவாகியிருக்கும் தருணத்தில் மேலும் அழுத்தம் தரும்படியாக பத்தாம் வகுப்புத் தேர்வை ஏன் நடத்துகிறீர்கள் என்பதுதான் கேள்வியே. தேர்வையே ரத்து செய்துவிடலாம். தேர்வு நடத்த ஆகும் மொத்தச் செலவையும் முதலமைச்சர் நிவாரண நிதிக்குத் திருப்பி கொரோனா ஒழிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். 

அதெல்லாம் முடியாது; தேர்வு நடத்தியே தீருவோம் என்று ஒற்றைக் காலில் நின்றால் பொறுத்திருங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஊரடங்கு முழுமையாக விலக்கப்பட்டு, ஒன்றிரண்டு மாதங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பும் வரைக்கும் காத்திருக்க வேண்டும். நெரிசல் மிகும் காலங்களில் நோய்ப்பரவல் எப்படி இருக்கிறது என்பதைக் கணித்துவிட்டு பிறகு அதற்கு ஏற்றபடி அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பதைத் திட்டமிட்டுவிட்டு பிறகு தேர்வை நடத்துங்கள். ஆகஸ்ட்-செப்டெம்பர் வரைக்கும் அப்படியொரு சூழல் உருவாகும் வாய்ப்பில்லை. அதற்கு முன்பாக அவசரமெனில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்துவிட்டு அனைவருக்கும் தேர்ச்சிச் சான்றிதழை வழங்குங்கள்.

4 எதிர் சப்தங்கள்:

Karthik R said...

Seems you dont have any 10th standard kids in vicinity.

அவரவர் கஷ்டம் அவரவர்க்கு.

சேக்காளி said...

//தனியார் பயிற்சி மையங்களுக்குத் தீனி போடுவதில் தொடங்கி தனியார் பள்ளிகளுக்கு ரத்தினக் கம்பளம் விரிப்பது, அரசுப்பள்ளிகளைக் குறைப்பது, நூலகங்களாக மாற்றுகிறோம் என்று விதவிதமான ஜிகினா அறிவிப்புகளாலும், வஞ்சகமான திட்டங்களினாலும் தமிழகத்தின் கல்வித்தரத்தை தூக்கி நிறுத்துவதைப் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்//
பாத்தாச்சுல்ல.
அப்புறம் என்ன.
போயி கவர்ச்சியா படுத்து தூங்குங்க

Anba said...

இதென்ன பிரமாதம்.... ஜூலை இல்ல ஆகஸ்ட்ல LKG-லிருந்து பள்ளிக்கூடமே திறக்க போறோமே...
ஜூனுக்கு ஆன்லைன் வகுப்பு இருக்கு... எனவே பீஸ் கட்டித்தான் ஆகணும்.

Naveen Hari said...

நல்ல கருத்து சார்..