Apr 9, 2020

கொரோனாவும் பாய்மார்களும்

உள்ளூர் அரசியல்வாதி ஒருவரிடம் ஊர் நிலவரம் தெரிந்து கொள்வதற்காக இரண்டொரு நாட்களுக்கு முன்பாக பேசினேன். ‘பாய்ங்க மேல நம்மாளுங்க கோபமா இருக்காங்க’ என்றார். நம்மாளுங்க என்று அவர் சொன்னது மத அடிப்படையில். அவரை அதிகம் கிளறவில்லை. வேறு சில விவரங்களைப் பேசிவிட்டு துண்டித்துவிட்டேன்.  வேறொரு நண்பரும் கூட இன்று இதே போலத்தான் சொன்னார். ஒரு நண்பர் இல்லை இப்படி நிறையப்பேர் சொல்லிவிட்டார்கள். 

கடைசியாகப் பேசியவரிடம் மட்டும்  ‘அடுத்தவங்களுக்கு இருக்கட்டும்...உங்களுக்கு முஸ்லீம் மேல கோபமா?’ என்றேன். 

‘எனக்கு இல்லை..ஆனா மத்தவங்க கோபமா இருக்காங்க’ என்றார். 

குழப்பமாக இருக்கிறது. உண்மையிலேயே இங்கு கோபம் நிலவுகிறதா அல்லது அப்படியொரு பிம்பம் உருவாக்கப்படுகிறதா என்று புரியவில்லை. நம்மில் பெரும்பாலானவர்களுக்கு மத ரீதியிலான, சாதிய ரீதியிலான, இனக்குழு ரீதியிலான மனச்சாய்வு துளியாவது இருக்கும். ‘அப்படியெல்லாம் சுத்தமாக இல்லை’ என்று சொன்னால் அவன் பொய் சொல்கிறான் என்று அர்த்தம். ஆனால் அந்த மனச்சாய்வை நாம் வெளிப்படையாகக் காட்டிக் கொள்வதில்லை. அதைச் சொறிந்துவிடுகிற வாய்ப்புகளை நவீன தொழில்நுட்பம் வழங்கியிருக்கிறது. ‘அவங்களுக்கு கோபம்.....இவங்களுக்கு கோபம்’ எனத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தால் நமக்கும் தானாகவே கோபம் வரும். 

டெல்லி நிஜாமுதீனில் ஒரு இசுலாமிய மாநாடு நடைபெறுகிறது. அந்த மாநாட்டுக்கு இசுலாமியர்கள் கூட்டமாகச் சென்று வருகிறார்கள். உலகமே பயந்து நடுங்கிக் கொண்டிருக்கும் தருணமாகப் பார்த்து இவர்களுக்கும் நோய்த்தொற்று ஏற்பட்டுவிட்டது. எனக்கும் உங்களுக்கும் நோய்த்தொற்று ஏற்பட்டால் எவ்வளவு பதறுவோமோ அதே பதற்றம்தானே அவர்களுக்கும் இருந்திருக்கும்? நமக்கு இருக்கும் குடும்பம் குழந்தைகளைப் போலவேதானே அவர்களுக்கும் குடும்பம் இருக்கும்? 

மதரீதியிலான கூட்டங்கள் இந்தியாவில் நடைபெறுவது மிக இயல்பானது.  கிறித்துவர்கள் ஜெபக் கூட்டங்களுக்குச் செல்கிறார்கள்.  இந்துக்கள் பஜனை நடைபெறும் இடங்களுக்குச் செல்கிறார்கள். அப்படியே இசுலாமியர்கள் அவர்கள் மத ரீதியிலான ஒரு கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். அங்கு நோய்ப்பரவல் இருந்து தொற்றி விடுகிறது.  தமிழகத்தில் நோயாளர்கள் கண்டறியப்பட்டு அறிவிக்கப்படும் சமயத்தில் ‘மாநாட்டுக்குச் சென்று வந்த பலரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை’ என்று சுகாதாரத்துறைச் செயலாளர் அறிவிக்கிறார். அப்பொழுது நானும்தான் பயந்து நடுங்கினேன். ஆனால் அடுத்த நாளே அதே சுகாதாரத்துறைச் செயலாளர் ‘அவர்களாகவே முன்வந்து சோதனை செய்து கொண்டார்கள்’ என்றும் சொல்லிவிடுகிறார். அறிவிப்புக்குப் பிறகு வந்துவிட்ட பாய்மார்களை எந்தவிதத்தில் குறை சொல்வது?

இசுலாமியர்கள்தான் கொரோனாவுக்குக் காரணம் என்பது மாதிரியான பிம்பம் உருவான ஆரம்பகட்டத்தில் சில செய்திகள் வெளியாகின. நோயாளிகள் அடுத்தவர்கள் மீது எச்சில் துப்புகிறார்கள் என்று கூட செய்திகள் வந்தன. அப்படியானவர்களை சுட்டுக் கூட கொன்றுவிடலாம். தவறே இல்லை. மருத்துவத்துக்கு ஒத்துழைக்க மறுக்கவில்லை என்றால் ஒரே அடியாக அடித்துத் தூக்கிச் செல்லலாம். அப்படியும் வரவில்லை என்றால் அங்கேயே கொன்றுவிடலாம். 

நோயாளிகள் அத்தனை பேருமா அப்படியான அயோக்கியத்தனங்களைச் செய்தார்கள்? அப்படியானதொரு இமேஜ் உருவாக்கப்பட்டுவிட்டதல்லவா? இன்று, நோய்த்தொற்று கொண்ட இசுலாமியர்கள் அத்தனை பேர்களையும் அல்லவா நாம் குற்றவாளியாக்கி வைத்திருக்கிறோம்? அவர்களை மட்டுமில்லாமல் அந்தச் சமூகத்தையேதான் அப்படி நிறுத்தியிருக்கிறோம்.

ஃபேஸ்புக் மாதிரியான சமூக வலைத்தளங்களில் ஒரு வகையில் Polarization நடைபெற்றுவிடுகிறது. நமக்கு உவப்பில்லாத கருத்துகளை எழுதுகிறவர் என்று தெரிந்தால் நாமாகவே விலகிக் கொள்கிறோம். அதனால் பெரும்பாலான உவப்பற்ற கருத்துகள் நம் கண்களில் படாமலேயே போய்விடுகிறது. பெரிய மன உளைச்சலும் நமக்கு இருப்பதில்லை. ஆனால் வாட்ஸப் குழுமங்கள் அப்படியில்லை. உறவுக்காரர்களின் குழுமங்கள், நண்பர்களின் குழுமங்கள் போன்றவற்றில் சிக்கிக் கொள்கிறோம். ஒவ்வொரு குழுவிலும் அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று பேர்கள்தான் வெறுப்பு விஷத்தைக் கக்குகிறவர்கள் இருப்பார்கள். ஆனால் அவர்கள்தான் ஓய்வில்லாமல் எதையாவது கக்கிக் கொண்டேயிருப்பார்கள். எதிர் கருத்து சொல்கிறவர்கள் இல்லாத போது அது குழுவிலிருக்கும் அத்தனை பேருக்குமே ‘ஓ அப்படி இருக்குமோ’ என்கிற மனநிலையை உருவாக்கிவிடுகிறது. 

கடந்த வாரத்தில் ஓர் இளைஞரிடம் பேசிய போது ‘மங்கலத்துல பாய்மாருங்க பயங்கரமா சேட்டை செய்யறாங்க’ என்றார். மங்கலம் இசுலாமியர்கள் நிறைந்த பகுதி. ‘என்ன செய்யறாங்க’ என்றால்  ‘வேணும்னே கொண்டு வந்து வண்டியில் இடிச்சுட்டு சண்டைக்கு வர்றாங்க’ என்றார். ‘உன் மேல எப்பவாச்சும் இடிச்சாங்களா?’ என்றால் ‘இல்லை’ என்று பதில் வருகிறது. இடிக்கிறார்களோ இல்லையோ- அப்படி யாரோ ஒன்றைக் கிளப்பிவிட அப்படியே சுற்றிக் கொண்டிருக்கிறது. பிற பகுதிகளைப் பற்றித் தெரியவில்லை. மேற்கு தமிழகத்தில் இந்த வெறுப்பு மிக அதிகம். 

‘சிங்கிள் சோர்ஸ்’  என்று டெல்லி மாநாடு காட்டப்பட்டிருக்கும் இச்சமயத்தில் இசுலாமியர்களுக்கு ஆதரவாகவோ, பரிந்தோ பேசினாலும் அல்லது எழுதினாலும் ‘இவன் எல்லாம் தெரிஞ்ச நடுநிலையாளன்..எழுதறானாம்’ என்பார்கள். ஆனால் இந்தச் சமயத்தில் இதையாவது எழுதிவிட வேண்டும் என்று தோன்றுகிறது. 

மதம் சார்ந்த வெறுப்பும் வன்மமும் எங்கேயிருந்து கொப்புளிக்கிறது? 

‘இசுலாமியர்கள்தான் மோசம், அவர்கள்தான் பிரச்சினைகளுக்கு காரணம்’ என்று இந்து மத நண்பர்கள் காரணங்களைக் காட்டுவார்கள். இசுலாமியர்களை புனிதர்கள் என்று சொல்லவில்லை. அங்கே தவறுகளே இல்லை என்று மறுக்கவுமில்லை. ஆனால் ‘அவன் மேல தப்பு’ என்று இவனும், ‘இவன் மேல தப்பு’ என்று அவனும் மாற்றி மாற்றி பேசியபடியே நம் தலைமுறை வெறுப்புகளால் விளைந்து கொண்டிருக்கிறது என்பதுதான் நிதர்சனம். சாதிக் என்றொரு நண்பன் இருக்கிறான். ‘எது பேசினாலும் தப்பாகிடுதுடா’ என்றான். அபிபுல்லா என்றொரு அப்பாவின் நண்பர் இருக்கிறார். அவரிடம் தொடக்கத்திலேயே பேசியிருக்க வேண்டும். பேசத் தோன்றவில்லை. ஒருவகையில் பாய்மார்களையெல்லாம் உள்ளுக்குள் புழுங்க வைக்கிறோம். எல்லாவிதத்திலும் அவர்களை கார்னர் செய்துவிட்டோம். ஒரு தேசமாக, நம் வளர்ச்சிக்கும், பிணைப்புக்கும் இத்தகைய வெறுப்பு அரசியல் உகந்தது இல்லை.

கொரானாவில் கணக்கு காட்டப்படும் இசுலாமியர்களைத் தவிர பிற மதத்தினர் எத்தனை பேர்களிடம் பரிசோதனைகளைச் செய்தீர்கள்? நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கும் பிற மதத்தினருக்கு எங்கேயிருந்து தொற்று ஏற்பட்டது? என ஆரம்பித்து கேள்விகளைக் கேட்கலாம். ஆனால் அது எதுவும் அவசியமில்லை என நினைக்கிறேன். அது நான் பேச முற்படும் பிரச்சினைக்கு எந்தவிதத்திலும் உதவாது. 

நோய் வாங்கி வந்த இசுலாமியன் யாரும் என்னையும் உங்களையும் கொல்வதற்காக அனுப்பி வைக்கப்பட்ட தீவிரவாதி இல்லை என்பதை மட்டும் உறுதியாக நம்பலாம். அவரவருக்கு குடும்பம் இருக்கிறது. குழந்தைகள் இருக்கிறார்கள். யாரேனும் தெரிந்தே நோய் வாங்கி வந்திருப்பார்களா? ‘துலுக்கனுக வேணும்னே செய்வானுக’ என்கிற வெறுப்பு மனநிலை விதைக்கப்பட்டிருந்தால் மட்டுமே அப்படி நினைக்கத் தோன்றும். எங்கள் ஊரான கரட்டடிபாளையத்தில் இசுலாமியர் ஒருவருக்கு கொரோனா உறுதியாகியிருக்கிறது. அவருக்கு குழந்தைகள் இருக்கின்றன. அவரை நம்பி வயது முதிர்ந்த தந்தை இருக்கிறார். அவர் குணமாகி வெளியே வராவிட்டால் மொத்த குடும்பமும் நடுத்தெருவில் நிற்க வேண்டியிருக்கும். அந்த பாய்க்கும், குடும்பத்துக்கும் ஆதரவாக இல்லாவிட்டாலும் வெறுப்பை உமிழ்வது எந்தவிதத்தில் நியாயம்? 

இதுவரை தமிழகம் இப்படி இருந்ததில்லை. இது இடையில் வந்த வன்மம். சமீபமாக உருவாக்கி வளர்க்கப்பட்ட வெறுப்பு. வெறுப்பும் கசப்பும் நமக்கு அவசியமற்றது. பழையபடிக்கு இசுலாமியன் தோள் மீது கை போடாவிட்டாலும் வெறுப்பு கண்டு முறைக்க வேண்டியதில்லை. என்னைத் திட்டினாலும் சரி. வசைபாடினாலும் சரி. சொல்ல வேண்டும் எனத் தோன்றுகிறது.

11 எதிர் சப்தங்கள்:

Saravanan Sekar said...

Mani Anna,
I also felt the same. I spoke to couple of people in our (erode) area. All of them, have this opinion, which is dangerous to our society in long run. wrote this, as a reply to some of whatsapp groups.. but, still they keep forwarding one or two messages polarising this issue...
-----------------------------------------------------------
நோய்த்தொற்றைக் குறைக்க ஊரடங்கி கிடக்கும் இந்த நாட்களில், தொற்றின் வேகம் எப்படி இருக்கிறது என்பதை உள்ளூற படபடப்போடு பார்த்துக் கொண்டு இருக்கிற வேளையில், பரவலுக்கான மொத்த பழியையும் டெல்லி தப்லீக் ஜமாத் கூட்டத்திற்கு சென்று வந்தவர்கள் மேல் போடுவதில் ஊடகங்கள் பேருதவி புரிந்து வருகின்றன.  குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்கள் மீது குற்றம் சுமத்துவதில் கட்டுகிற முனைப்பு அதிகம். இங்கே, டெல்லி ஜமாத் சென்று வந்தவர்களினால் நோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை கூடியது உண்மைதான். அதை யாரும் மறுக்கவில்லை.  ஆனால், இஸ்லாமியர்கள் இதனை வேண்டுமென்ற செய்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டையும் சேர்த்து  சந்தடி சாக்கில் வைக்கிறார்கள். என்னவொரு அபத்தமான வாதம் இது. எந்த ஒரு சராசரி மனிதனும் தன்னைக் கூட நோய்ப் பாதிப்புக்கு உட்படுத்திக் கொள்ளத்துணிவான். ஆனால், அவனது குழந்தைகளையும் குடும்பத்தாரையும் நோய்த் தொற்ற அனுமதிப்பானா? இந்த எளிமையான கேள்வியை கூட கேட்காமல் நம்மைத் தடுப்பது எது?  ஒருவேளை கேட்டாலும், "அவங்க அதனையும் செய்தாலும் செய்வார்கள்" என்று அபாண்டமாக பதில் சொல்லும் குரூரத்தை எப்படி புரிந்து கொள்வது?
இந்தியாவின் எந்த மூலையில் நடக்கிற தீவிரவாதிகள் பங்கேற்ற வன்முறையாக இருந்தாலும் நம் உள்ளூர் இஸ்லாமியர்களையும் ஏதெனும் ஒரு வகையில் அதில் தொடர்புபடுத்தி பார்க்கும் பொதுபுத்தியை இந்துத்துவ சக்திகள் மற்றும் அதனை நம்பும் தனி மனிதர்கள் கட்டமைக்கிறார்கள். இந்த பொதுப்புத்தியை கட்டமைக்கும் உத்தி கொங்கு மண்டலம் உட்பட தமிழகம் முழுக்க கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெற்று வருகிறது. அதன் சமீபத்திய வெளிப்பாடுதான் இந்த அபாண்டமான குற்றச்சாட்டு.

சேக்காளி said...

//இசுலாமியன் தோள் மீது கை போடாவிட்டாலும் வெறுப்பு கண்டு முறைக்க வேண்டியதில்லை//

kaniB said...

அண்ணா, மிகவும் வருந்தத்தக்க விஷயம்.

வெளியில் மட்டுமில்லை வீட்டிலிருப்பவர்களும் அவ்வாறே பேசுகிறார்கள். வெறும் வாட்ஸாப் மட்டுமே பார்த்து பேசுகிறார்கள். ஏற்கனவே CAA விஷயத்தில் போராடும் இடங்களிலெல்லாம் முஸ்லீம்கள் மீது தவறான அபிப்ராயம் கொண்டிருக்கிறார்கள். இத்தனைக்கும் இவர்களுக்கு நண்பர்கள், தெரிந்தவர்களிலும் முஸ்லீம்கள் உண்டு. ஆனாலும் எல்லாம் மாறிக்கொண்டு வருகிறது. வெகுஜன மக்களிடம் இவ்வாறு ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டு, அதை கோபமாக அல்லது வெறுப்பாக மாற்ற நினைக்கிறார்கள்.

டெல்லி மாநாடு போய்விட்டு வந்தவர்களை நிஜமாகவே ஒரு மனித வெடிகுண்டு அளவிலேயே பார்க்கிறார்கள். வேண்டுமென்றே நோய் பரப்புகிறார்கள் என்று. வெளி மாநிலங்களில் எத்தனை அரசு அதிகாரிகள் (பெரும்பாலும் இந்துக்கள்) தங்கள் பிள்ளைகள் வெளிநாட்டில் இருந்து வந்ததை மறைத்து இருக்கிறார்கள். இதுவரை பெங்களூரிலுள்ள ஒரு ரயில்வே பெண் அதிகாரி மீது மட்டுமே பணியிடைநீக்கம் செய்த தகவல் வந்தது. ஆனால் மற்றவர்கள் ?

இந்த நாடு, அந்த நாடு என்றில்லாமல் எந்த வெளிநாட்டிலிருந்து வந்தாலும் அவர்கள் தனிமை படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டிருக்கலாம். அரசு அதை செய்யாமல் கோட்டைவிட்டுவிட்டது. சுகாதாரத்தில் சிங்கப்பூர் எப்படி என்று நமக்கு தெரியும். அங்கேயும் எண்ணிக்கை உயர்கின்ற காரணத்தினால் அவர்களும் லாக்டவுன் ஏப்ரல் 7 முதல் செய்தார்கள். ஆனால் 2 ,3 நாட்களுக்கு முன்பே அரசு சொல்லிவிட்டு செய்தது.

இந்த துவேஷத்தினை மத்திய அரசு நிறுத்திருக்க வேண்டும். ஒரு வேளை அவர்கள் இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள் என்றே தோணுகிறது. இந்தியாவில் எல்லா பிரச்சனைகளையும் இதை வைத்து திசை திருப்பி விடுவார்கள். லாக்டவுன் அறிவித்த பிறகு எத்தனை அரசு நிகழ்ச்சிகள் நடந்தது. அயோத்தியில், கோவில் கட்டுமான பணிகள் துவங்குவதை முன்னிட்டு, ராமர் சிலை இடமாற்றம் செய்யப்பட்டது. இதில் 26ம் தேதி யோகி ஆதித்யநாத் பங்கேற்றார். இது லாக்டவுன் அறிவித்த மறுநாள் காலை நடந்தது. இதைப்பற்றி யாருமே பேசவில்லையே.

பிரதமர் எப்பொழுது தொலைகாட்சியில் பேசினாலும் மிகவும் செயற்கையாக பேசுகிறார். எழுதிக்கொடுத்ததைத்தான் பேசுகிறார் என்றாலும் சினிமாவில் பேசுவது போல் இருக்கிறது. தேர்ந்தெடுத்த நடிகராக பேசுகிறார். கை/பாத்திரம் தட்டுவது, விளக்கேற்றுவது என்றெல்லாம் சொல்லும்போது அவருக்கு சிரிப்பு வராவிட்டாலும் மனசாட்சியும் இருந்திருக்குமோ என்று தெரியவில்லை. சாரை சாரையாக மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்தார்கள். அவர்களைப்பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. நாட்டில் பற்றியெரிகிற விஷயங்களைப்பற்றி பெரும்பாலான நேரங்களில் பிரதமர் வாயயையே திறப்பதில்லை. நாட்டில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.

Unknown said...

மிக அருமையான கட்டுரை.. ! நம் மக்களின் மனசாட்சியின் குரலாக இக்கட்டுரை உள்ளது...
வெறுப்பு திட்டமிட்டு கட்டமைக்கப் படும் இவ்வேளையில், அதற்கு மருந்தாக இக்குரல் ஒலிக்கின்றது.. மனம் நிறைந்த வாழ்த்துகள். அன்புடன் யோகராஜன்

Saro said...

விஷத்தை விதைத்து பல நாட்கள் ஆகிவிட்டன. ரங்கராஜ பாண்டே, மாரிதாஸ் , பத்திரிகையாளர் போர்வையில் பாஜக விஷங்கள் மற்றும் வெளிப்படையாகவே பாஜக இதை பலநாட்கள் செய்துகொண்டு இருக்கின்றன. இதன் பலனையும் அவர்கள் அனுபவிப்பார்கள். இவர்களின் கடவுள்கள்தான் இந்த நாட்டை காப்பாற்ற வேண்டும்.

மதன் said...

வாட்சாப் மட்டுமே இந்த வெறுப்பு வர காரணமல்ல.

சிஏஏ விற்கு எதிராக போராடும்படி மசூதிகளிலில் ஒலி பெருக்கியில் அழைக்கும்போது வருத்தம் வரத்தான் செய்யும்.

இந்துத்துவா தவறு என நீங்களோ மற்றவரகளோ சொல்லும்போது அதை எதிர்க்கவில்லை, வாதிடுவதுமில்லை. ஏனால் அது தவறு என புரிகிறது. ஆனால் மற்ற மதத்தினர் அவ்வாறு செய்வதில்லை. அவரகளது மதத்தினரின் தவறுகளை கண்டித்து யாரும் எழுதுவதில்லை.

நடுநிலையாக நானும் இன்னும் பல காரணங்கள் எழுதலாம், ஆனால் கடைசியில் சங்கி என அழைக்கப்படுவேன் எப்படியிருந்தாலும்.

இந்து மைனாரிட்டியாக இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியில் ஒரு மாதமாவது குடியிருந்து பாருங்கள். அப்போது புரியும்.



Unknown said...

When you moderate and approve the comments, how can you expect a negative reply to be uploaded???

Ram said...

அறிவுகெட்டத்தனமாக இப்படி பண்ணீட்டானுங்களே என்று நினைத்திருந்தேன். தமிமுன் அன்சாரியின் இந்த விளக்கம் படித்தபிறகு என் பார்வை மாறியது: https://www.nakkheeran.in/24-by-7-news/politics/corona-virus-issue-delhi-travel-thamimun-ansari-mla-statement

Rajagopalan said...

Yes, it's true blaming a group is leashed out. But, practically personal benefits would override such thoughts in the lower middle and poor. The affordable is holding this stigma flag high.

How we will relate this . In Kerala, retired bank officers was cremated by govt authorities as his son, also a high profile Pvt bank officer didn't attend his father's funeral due to virus fear.

Humanity needs more people like you to resurrect itself.

Unknown said...

This is a well written article. It speaks the conscience of many Indians.
Virus doesn't discriminate religion, race, caste, social status, gender.
We started thinking with emotions and that is why religious merchants are exploiting us.

raja said...

"நம்மில் பெரும்பாலானவர்களுக்கு மத ரீதியிலான, சாதிய ரீதியிலான, இனக்குழு ரீதியிலான மனச்சாய்வு துளியாவது இருக்கும். ‘அப்படியெல்லாம் சுத்தமாக இல்லை’ என்று சொன்னால் அவன் பொய் சொல்கிறான் என்று அர்த்தம்" -

பதிவில் உங்களின் இந்த கருத்து சரியாக படவில்லை. உங்களின் பார்வையில் இருந்து பார்ப்பதால் அவ்வாறு தோன்றி இருக்கலாம். எத்தனையோ மனிதர்கள் இந்த மூன்றையும் கடந்து இயல்பான வாழ்க்கை வாழ கூடியவர்களாக இருக்கிறார்கள். எவ்வளவு முயன்றாலும் மனிதர்களை மேலே குறிப்பிட்ட மூன்றை வைத்து ஒரு வரையறை அல்லது முன்முடிவு செய்வது எங்கேனும் தவறாகவே போய் முடியும். ஒவ்வொருவர் கண்ணில் இருந்தும் மனிதர்கள் வேறுபட்டு கொண்டே இருக்கிறார்கள். அது அந்தந்த மனிதர்களின் எல்லையை பொறுத்தது. அவ்வளவே.உண்மையில் சாதி, மத, இன இவை மூன்றும்  ஒரு சுமைதான். நிர்மலமான குழந்தைகள் முகங்களில் இந்த சுமை அற்ற தெளிவை காணலாம். சிறிது காலம் வாழ்ந்து சுவடு அற்று மறைய போகும் நாம் ஏன் நிறைய விஷயங்களை இப்படி சுமந்து கொண்டே வாழ்க்கையை முடிக்க வேண்டும்!!! மனித வாழ்வு மிக மிக குறுகியது. மனித வாழ்விற்கு பிறகு ஏதாவது இருக்கிறதா என்று இதுவரை இறந்த எந்த மனிதரும் வந்து சொல்ல வில்லை. இருப்பதற்கும் வாய்ப்பு இல்லை. சுதந்திரம் என்பதே களைந்து எறிவதில் தான் இருக்கிறது. சராசரி ஆயுள் 70 என்று கொண்டாலும் அதில் இளமையுடன் இருக்கும் வரைதான் வாழ்க்கை அதன் பிறகு என்ன இருக்கிறது!! இரு பக்கமும் தவறுகள் இருக்கலாம், அதற்காக ஒட்டு மொத்தமாக இரு பக்கமும் சரியோ தவறோ என்று முடிவு எடுக்க வேண்டியதில்லை. இந்த நாட்டில் 300 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்களும் இருக்கிறார்கள். போனது போகட்டும். ஒரே ஒரு நாள் ஆவது எதையும் சார்ந்து இருக்காமல் வாழ்ந்து பார்ப்போம். நன்றி.