Apr 11, 2020

உயிர் முக்கியம்

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுவிடும் போலத் தெரிகிறது.  இதைப் பற்றிப் பேசினால் சில நண்பர்கள் ‘உயிர் முக்கியமில்லையா?’ என்று கேட்டார்கள்.  உயிர் மிக முக்கியம்- அதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஒரு சாமானியன் அதை மட்டுமே யோசிக்க வேண்டும். பெரும்பாலும் ‘எமோஷனலாக’மட்டுமே யோசிப்பதுதான் வெகுஜனம். உயிர் பற்றி யோசிப்பதும் உணர்வுப்பூர்வமான விஷயம்தான். அதில் தவறே இல்லை. ஆனால் ஊரடங்குக்குப் பிறகு வரக் கூடிய விளைவுகள் என்ன, தீர்வுகள் என்ன என்பது பற்றியெல்லாம் அதிகாரவர்க்கம், ஆள்கிறவர்கள், அரசு யோசிக்க வேண்டும். நீண்டகால விளைவுகளைக் கூட யோசிக்க வேண்டியதில்லை. மிகக் குறுகிய காலத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்று ஆலோசிக்க வேண்டியதில்லையா?

நகை அடகுக்கடையில் மேலாளராக பணியாற்றிக் கொண்டிருக்கும் நண்பர் அவர். இருபத்தைந்தாயிரம் சம்பளம் வாங்குகிறார். சிறு நகரங்களில் இது போதுமான தொகை. இந்த மாதம் பத்தாயிரம் ரூபாய்தான் தந்திருக்கிறார்கள். வாடகை நான்காயிரம். அதைக் கொடுக்காமல் தவிர்த்து வீட்டு உரிமையாளரை சங்கடப்படுத்த வேண்டியதில்லை எனக் கொடுத்துவிட்டார். ஆறாயிரம் ரூபாய் கைவசமிருக்கிறது. குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்கள். பால் வாங்க வேண்டும். காய்கறி விலை அதிகம். குறைந்தபட்ச அளவிலாவது தின்பண்டம் வாங்கித் தர வேண்டும். அப்படியே பழகிவிட்ட குழந்தைகள். சில கடன்களுக்கான வட்டித் தொகை உள்ளிட்ட எல்லாமும் சேர்த்து பணம் காலி. ‘பத்தாயிரம் ரூபாய் கிடைக்குமா? சம்பளம் வந்தவுடன் தருகிறேன்’ என்று கேட்டார். ஊரடங்கு நீட்டிக்கப்படுமானால் இத்தகையவர்களுக்கு அடுத்த மாதம் மொத்த சம்பளமும் நிறுத்தப்பட்டுவிடலாம். இப்படியான ஒரு வர்க்கம் இருக்கிறது- இதுவரை பெரிய சேமிப்பு இல்லாவிட்டாலும் ஓரளவு வசதியாக வாழ்ந்து வந்தவர்கள். அவர்களுக்கு அடி விழும். 

சிறு குறு தொழில் நடத்திக் கொண்டிருப்பவர்களில் தொண்ணூற்றொன்பது சதவீதம் பேர்கள் ‘ரொட்டேஷனில்’ காலம் ஓட்டுவார்கள். இன்னொருவரிடமிருந்து ஆயிரத்து இருநூறு ரூபாய் வர வேண்டியிருக்கும். அதைப் போராடி வாங்கி தாம் அடுத்தவர்களுக்கு கொடுக்க வேண்டிய தொகையை பத்து நாட்கள் அவகாசம் கேட்டு கொடுப்பார்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் மட்டுமே பணம் அவர்களுடையதாக இருக்கும். இதை வைத்துத்தான் தாம் வாங்கிய கடனில் ஒரு பகுதியை அடைப்பது, பணியாளர்கள் சம்பளம், நிறுவனத்துக்குத் தேவையான பொருட்கள் வாங்குவது என்று ஓட்டம் ஓடிக் கொண்டிருக்கும். இருபத்தியோரு நாட்கள் தடையில் மொத்தச் செயல்பாடும் தடைபட்டிருக்கிறது. 15 ஆம் தேதி மீண்டும் சுழல ஆரம்பித்தாலும் கூட தம் பிடிக்க இன்னமும் பல மாதங்கள் தேவைப்படும் என்கிறார்கள். தடை மேலும் நீட்டிக்கப்படுமானால் என்னவாகும்? இவர்களை நம்பி வாழும் தொழிலாளர்களின் பணி, சம்பளம் என்று எதுவுமே உறுதியில்லை.  இவர்கள் சறுக்குவார்கள்.

கடன் கொட்டுத்து கச்சாப்பொருட்களை வாங்கி வைத்துக் கொண்டு தொழில் நடத்த முடியாதவர்கள், ஆனால் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் மெல்ல மெல்ல நிதி கையிருப்பை இழந்துவிட்டு இயல்பு நிலைக்குத் திரும்ப சில வருடங்கள் தேவைப்படும் என மன உளைச்சலில் இருப்பவர்கள்  ஒரு கூட்டம் தேறும். பொருளாதார ஓட்டத்தில் முதுகெலும்பு அவர்கள்தான். இவர்களும் திணறப் போகிறார்கள்.

ஒவ்வொரு நாளும் சம்பளம் வந்தவுடன் அன்றைய தினத்துக்கான பொருட்களை வாங்கும் தினசரி பொருட்கள் வாங்குகிறவர்கள் அதுவும் கிராமப்புறங்களில் வாழும் அத்தகையவர்கள் சிக்கிக் கொண்டார்கள். கிராமப்புற கடைகளில் பொருட்கள் தீர்ந்துவிட்டன. இதுவரை வாங்கி வைத்திருந்ததையெல்லாம் கடைக்காரர்கள் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஊரடங்கு நீட்டிக்கப்படுமானால் இனி கடைகளில் இவர்களால் எதையும் வாங்க முடியாது. ‘அதுதான் அரசு ஐநூறு ரூபாய்க்கு ரேஷன் கடையிலேயே மளிகை தருகிறதே’ என்று சிலர் கேள்வி கேட்கலாம். அன்றாடங்காய்ச்சிகள் சம்பாத்தியம் மொத்தமும் தடைபட்டு அரசு தரும் ஆயிரம் ரூபாயில்தான் - மொத்தக் குடும்பத்துக்கும் ஆயிரம் ரூபாய்தான் - அதிகபட்சம் இரண்டு முறை பொருட்களை வாங்கலாம். ஆனால் கைவசம் சுத்தமாக காலியாகிவிடும். வேறு சிறு செலவுக்கும் கூட வழியில்லாது போகும். ‘அப்படியென்ன செலவு’ என்று எலைட் சமூகம் கேள்வி கேட்கலாம். கை கழுவத் தேவையான சோப்பு கூட முப்பது ரூபாய் என்பதை மறந்துவிடக் கூடாது. இவர்களுக்கு என்ன பதில்?

ஊரடங்கு மாதக் கணக்கில் நீட்டிக்கப்படுமானால் வீட்டில் போதுமான அளவுக்கு கையிருப்பாக பொருட்களை வாங்கி வைத்திருப்பவர்களும் திணறத் தொடங்குவார்கள். பொருட்கள் தீரும். கடைகளில் தேவை அதிகரிக்கும். ஆனால் பொருட்களின் வரத்துக்கு போக்குவரத்து இல்லை. போக்குவரத்து இருந்தாலும் கூட அனுப்பி வைக்கும் நிறுவனங்கள் செயல்படத் தொடங்க வேண்டியிருக்கும். இதெல்லாம் பஞ்சம் போன்ற ஒரு சூழலை உருவாக்கக் கூடும். இதெற்கெல்லாம் என்ன பதில் வைத்திருக்கிறோம்? இவைதான் உடனடியாக உருவாகப் போகும் மிகப்பெரிய பின்விளைவு. 

எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்ளலாம். ‘உயிர் முக்கியம்’. 

ஆனால் இன்னமும் முப்பது நாட்கள் நீட்டிக்கப்பட்டாலும் கூட நோய் முழுமையாக நீக்கப்பட்டுவிடும் என்பதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை என்பதுதான் பயமே. அரசியல் கலவாமல் யோசிக்கலாம். தூத்துக்குடியில் நேற்று இறந்து போன மூதாட்டிக்கு எப்படி நோய்த் தொற்று ஏற்பட்டது? அவருடைய வீட்டில் இருப்பவர்கள் மருத்துவப் பணியாளர்கள். மருத்துவமனைக்கு வந்து போன யாருக்கோ நோய் நோய்த் தொற்றினைக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கலாம். பக்கத்து வீட்டிலேயோ எங்கேயோ தொற்றாளர்கள் இருந்திருக்கக் கூடும். இப்பொழுதும் கூட மொத்த நோயாளிகளில் மிக மிகக் குறைவானவர்கள்தான் அறிகுறிகளுடன் இருக்கிறார்களாம். ஆக, இங்கு பெரும்பாலானவர்களுக்கு அறிகுறியே இருக்காது என்றுதான் மருத்துவர்கள் நம்புகிறார்கள். அப்படி அறிகுறியில்லாமல் சமூகத்தில் பலர் இருந்தால் அவர்களை எப்படி கண்டறியப் போகிறார்கள்? மொத்தமே ஏழாயிரம் பேருக்குத்தான் பரிசோதனை செய்திருக்கிறார்கள். “ரேபிட் டெஸ்ட் கிட்” இன்னமும் வந்து சேரவில்லை. இலட்சக்கணக்கானவர்களுக்கு பரிசோதனை செய்து பார்க்கும் போது சமூகப்பரவல் இருப்பது உறுதியாகியிருந்தால் மருந்தோ அல்லது தடுப்பூசியோ இல்லாமல் எப்படி நோய் கட்டுக்குள் வரும்? அல்லது ஊரடங்கு நீட்டிக்கப்படும் அடுத்த சில நாட்களில் இவையெல்லாம் நடந்துவிடுமா?

ஊரடங்கை நீட்டிப்பதில் எல்லோருமே ஒத்துழைக்க வேண்டும். அதில் துளி கூட சந்தேகம் வேண்டியதில்லை. ஆனால் துருத்திக் கொண்டேயிருக்கும் வினாக்களுக்கு யார் பதில் சொல்லப் போகிறார்கள்? என்ன பதிலைச் சொல்லப் போகிறார்கள்?

நீண்டகால விளைவாகவும் ஒன்றைக் கருதுகிறேன். இந்தியாவின் பலமே ‘இளைஞர் கூட்டம்தான்’. அந்தக் கூட்டத்தைக் காட்டித்தான் இந்தியா வல்லரசாகிவிடும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். என்ன காரணமென்றால் ஒரு முரட்டு தைரியம் கொண்ட கூட்டம் அது. இன்றைக்கு பத்து லட்ச ரூபாய் கடன் வாங்கி தொழில் ஆரம்பித்தாலும் சம்பாதித்து கடனை அடைத்துவிடலாம் என்கிற தைரியமும் திறனும் கொண்ட கூட்டம் அது. பயமில்லாமல் புதிது புதிதாக யோசித்துக் கொண்டிருந்தார்கள்.  கடைகள், சிறு நிறுவனங்கள், வித்தியாசமான வர்த்தகம் என்று கலந்து கட்டி அடித்தவர்கள் அவர்கள்தான். இன்றைக்கு அந்தக் கூட்டத்தை பயமூட்டியிருக்கிறோம். இரண்டு லட்ச ரூபாய் கடன் வாங்க வேண்டுமென்றாலும் கூட ஆயிரம் தடவை யோசிப்பார்கள்.  ‘என்ன ஆனாலும் அரசு கை நீட்டும்’ என்ற நம்பிக்கை தவிடு பொடியாகியிருக்கும். விழுந்தாலும் நீயாகவேதான் எழ வேண்டும் என்று உணர்த்தியாகிவிட்டது. இந்த பயம் நீங்கவே பல வருடங்கள் பிடிக்கக் கூடும். ஆக ஒரு தலைமுறையையே கொஞ்சம் கீழே இழுத்துவிட்டது போலத்தான். துணிச்சல் குறைந்த சமூகத்தில் வேகம் குறையும். எதையும் மிகைப்படுத்தவில்லை. யாரையும் குற்றம் சொல்வதும் நோக்கமில்லை. இத்தகைய பேரிடர் காலங்களில் ‘நாங்க இருக்கிறோம்’ என்கிற மனநிலையை உருவாக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை. அதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்கிறோம் என்று நம் கண்களில் தெரியும்படியாகக் காட்ட வேண்டியது அவசியம். 

என்னதான் ஆனாலும் எப்படியும் நாம் அத்தனை பேரும் மேலேறித்தான் வரப் போகிறோம். மீண்டும் உழைக்கப் போகிறோம். பிழைக்கவும் போகிறோம். அதில் எந்த அபிப்பிராய பேதமுமில்லை. ஆனால் பழைய ஆளாக, அதே வேகத்திலேயே ஓடுவோமா, ஓடுவதற்கான சூழல் நிலவுமா என்கிற சந்தேகம்தான் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இருபத்தியொரு நாட்களில் ‘இதையெல்லாம் செய்யப் போகிறோம்’ என்று பெருந்தலைகள் முடிவுக்கு வந்துவிடுவார்கள் என்று நம்பியவர்கள் அநேகம். ஆனால் எதுவுமே இல்லாமல் கண்ணைக் கட்டி காட்டில் விடுவது போல எந்த க்ளூவும் இல்லாமல் அடுத்த பல நாட்களுக்கும் வீட்டிலேயே அடக்கி வைப்பது என்பதை புரிந்து கொள்ளவே முடியவில்லை. 

5 எதிர் சப்தங்கள்:

Alad said...

விவசாயத்தை மறந்து விட்டீர்கள். மூன்று மாதகாலம் விவசாயம் தடைபட்டால் , அதனுடைய பாதிப்பு சில ஆண்டுகாலம் இருக்கும். Backlogs cannot be rectified untill considerable popular die. வளர்ந்த நாடுகள் பணம் கொடுத்து அதன் மக்களை காப்பாற்றி விடும். ஏழை நாடுகளில் இது பிரச்சனை இல்லை. நம் நாட்டில் இது மிகப்பெரிய பிரச்சனை. அரசாங்கத்தின் பதில், "130 கோடி பேரில் 30 கோடி பேர் பொருட்டல்ல". புரியும்னு நினைக்கிறேன்.

M.Selvaraj said...

'இதெல்லாம் பஞ்சம் போன்ற ஒரு சூழலை உருவாக்கக் கூடும். இதெற்கெல்லாம் என்ன பதில் வைத்திருக்கிறோம்?'

ஹைட்ராக்ஸின்குளோரோகுயின் மருந்தை நாமதான் வளர்ந்த நாடுகளுக்கு அனுப்புறோம். அந்த நாட்டின் அதிபர்கள் இந்திய பிரதமரை பாராட்டுகிறார்கள் என்ற செய்தியை மட்டும் ஊடகங்களில் தொடர்ந்து வரச்செய்தால் போதுமென்று நினைக்கிறார்கள் போல. பிரதமர் மற்றும் எம்பிக்களுக்கான புதிய குடியிருப்பு கட்ட ஒதுக்கிய இருபதாயிரம் கோடி நிதியைக்கூட கொரோனா நிவாரண நிதிக்கு திருப்பி விட மனம் வரவில்லை மத்திய அரசுக்கு ஆனால் உடனடித்தேவையான ரேபிட் டெஸ்ட் கிட்டை திருப்பி விடுகிறார்கள்.

ரேபிட் டெஸ்ட் கிட்:
தமிழ்நாட்டிற்காக நாம ஆர்டர் செய்த ரேபிட் டெஸ்ட் கிட் (நேற்று 11.04.2020) அமெரிக்காவுக்கு திருப்பி விடப்பட்டிருக்கிறது என்ற ஒரு பதிலை தலைமைச்செயலாளர் சொல்கிறார். மீண்டும் ஆர்டர் பண்ணிட்டோம் விரைவில்  கிட் வந்து சேர்ந்துவிடும் என்ற தகவலையும் சேர்த்து பதிவு செய்கிறார். (எப்போது வரும் என்ற தகவல் இல்லை.)
முதல் முறை ரேபிட் கிட் ஆர்டர் பண்ணீட்டோங்கிறத முதல்வரும் & சுகாதாரத்துறை செயலாளரும் பெருமையா சொல்வாங்க, அமெரிக்காவுக்கு திருப்பி விடப்பட்டதை மட்டும் தலைமைச் செயலாளர்  சொல்வார். திருப்பி விட்டது யார் மத்திய அரசா ? மாநில அரசா ? அல்லது வேறு அரசியல் காரணங்களா? இதற்கு சரியான பதில் இல்லை. திரும்ப இதைப்பற்றிக் கேட்டால் 'மருத்துவ பணியாளர்களின் தியாகத்தை பாருங்கள்' என்று நாம கேட்டக் கேள்விக்கு சம்பந்தமே இல்லாத ஒரு பதிலை சொல்லி நம்மை குழப்பிவிடுவார்கள்.(உங்கள் மீது கோபமாக இருக்கிறோம் ஆனால் உங்கள் பக்கம் இருக்குறோம்னு நடிகர் கமலஹாசன் சொன்னது அடிக்கடி நியாபகத்துல வந்து போகுது).

அடுத்த வருடம் நடக்க போகின்ற சட்டசபை தேர்தலுக்கு கொரோனாவால் தங்களுக்கு ஏதாவது ஆதாயம் கிடைக்குமா என்றுதான் இந்நேரம் ஆளுங்கட்சியினரும் எதிர்கட்சியினரும் கணக்குகளைப் போட்டுக்கொண்டிருப்பார்கள். நாம்தான் அடுத்த வாரம் உணவிற்கும் இதர செலவினங்களுக்கும் என்ன செய்வதென்ற கணக்குகளைப் போட்டுக்கொண்டிருக்கிறோம்.

M.Selvaraj said...

தமிழகத்திற்கு வர வேண்டிய ரேபிட் டெஸ்ட் கிட்களை மத்திய அரசு எடுத்துக்கொண்டதாக இன்று ஒரு செய்தி - இந்த செய்தி உண்மையென்றால் எடப்பாடி பழனிச்சாமி தன் பதவி வெறிக்காக மத்திய அரசிடம் தொடர்ந்து மண்டியிட்டுக்கொண்டே தன்னை முழுமையாக நம்பியிருக்கும் தமிழக மக்களுக்கு இந்த பெரிய நோய் தொற்று நேரத்திலும் துரோகமிழைக்கிறார் என்றே பொருள். அடிமையாய் இருப்பதற்கும் ஒரு எல்லை உண்டு என்பதை அவர் புரிந்துக்கொள்ளவேண்டும்.

Kumaran said...

தனியார் பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள். சில ஊர்களில் ஏற்கனவே இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே சம்பளம் தரப்படுகிறது. தற்போதைய நிலையில் அவர்களுக்கு சம்பளம் கிடைக்க வாய்ப்பில்லை.

NAGARATHAN said...

இப்போது மேலும் - மே 3 வரை - ஊரடங்கு நீடிக்கப்பட்டு விட்டது. இவர்கள் தும்பை விட்டு வாலை மட்டுமல்ல, பிடித்த வாலையும் நழுவ விடுகிறார்கள். தனியார் உணவளிக்கக் கூடாது என்றொரு உத்தரவு; எதிர்ப்பு வந்தவுடன் அதற்கொரு விளக்கம். பக்கத்து மாநிலத்தை மநீம பாராட்டி விட்டதற்கான கண்டனம் தெரிவிப்பதில் காட்டுகின்ற வேகத்தை, வாழ்வாதாரம் இழந்து பசித்த வயிரோடு கையேந்தி நிற்பவனுக்கு உணவளிப்பதில் காட்டினால் போதும். இந்த அவசர காலத்திலாவது சுயலாபத்தை மறந்து பொது நலத்தில் அக்கறை காட்டுவீர்களா 'நியாயமாரே'.