ஜனவரி 30 ஆம் தேதியன்று இந்தியாவில் கொரொனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1. அதன் பிறகு பிப்ரவரி 3 ஆம் தேதி எண்ணிக்கை மூன்றானது என்றானது. அதோடு சரி. அடுத்த ஒரு மாதம்- அதாவது மார்ச் 2 ஆம் தேதி வரைக்கும் இந்தியாவில் புதிய நோய்த்தொற்று எதுவுமில்லை அல்லது நாம் கண்டுகொள்ளவில்லை. நடுவில் சுளையாக ஒரு மாதம் இருந்திருக்கிறது. புதிய நோயொன்று எப்படியோ இந்தியாவுக்குள் வந்துவிட்டது என்று மத்திய அரசு செய்திருக்க வேண்டிய பணிகள், அண்டை மாநிலமான கேரளாவுக்கு வந்துவிட்டதே என நம் மாநில அரசு செய்திருக்க வேண்டிய பணிகள் என்று பெரிய பட்டியலை சுட்டிக்காட்டலாம். அதையெல்லாம் ஏன் செய்யவில்லை என்று கேட்டால் ‘எல்லாமே முடிஞ்ச பிறகு நொட்டை சொல்வதற்குத்தானே வருவீர்கள்’ என்று சண்டைக்கு வந்துவிடுவார்கள். சரி ஆனது ஆகட்டும்; இனிமேலாவது இதையெல்லாம் செய்யலாம் என்று யாராவது சொல்லத் தொடங்கினால் ‘அரசாங்கத்துக்குத் தெரியாதது உனக்குத் தெரியுமா?’ என்று ரகளைக்கு வருவார்கள். இவர்களிடம் வம்பு எதுக்கு என்று பாதிப்பேர் எதையும் காட்டிக் கொள்வதில்லை.
இன்று காலையில் பால் வாங்கச் சென்றிருந்தேன். ஊரடங்குச் சமயத்தில் பகல் வேளையில் வெளியில் செல்லவேயில்லை. மாலை வேளைகளில் ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கும் என்பதால் மாத்திரை வாங்க, பால் வாங்கவ என அத்தியாவசியக் காரியங்களுக்கு சென்று வருவேன். நேற்று வாங்கிய பால் கெட்டுப்போனதால் இன்று காலையில் செல்ல வேண்டியதாக இருந்தது. எந்தக் கட்டுப்பாடுமில்லை. சாலைகளில் தெருவோரக் கடைகளில் காய்கறிகள் கொட்டப்பட்டு மக்கள் வாங்கிக் கொண்டிருந்தார்கள். பெரும்பாலான கடைகளில் நிறையப் பேர்கள் நின்றிருந்தார்கள். பால் கடையிலும் இரண்டொருவர் நின்றிருந்தார்கள். அவர்கள் வாங்கிச் செல்லட்டும் எனக் காத்திருந்தால் பின்னால் வருகிறவர்கள் சென்று அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொள்கிறார்களே தவிர்த்து ஒழுங்கு வரிசை என்றெல்லாம் எதுவுமில்லை. நாமும் முண்ட வேண்டியிருக்கிறது.
இரண்டு நாட்களுக்கு முன்பாகச் சென்றிருந்த போது ஒரு பெண்மணிக்கு வறட்டு இருமல். முகத்தில் கர்சீப் கட்டியிருந்தார். நான்கடி தூரம் இருக்கும். ஆனாலும் எனக்கு வெகு பயம் பீடித்துக் கொண்டது. வந்து குளித்து, மாற்று உடை உடுத்தி, உப்பு நீரை வாயில் ஊற்றிக் கொப்புளித்தாலும் ஏதோ பயம் தொண்டைக்குழியிலேயே அடைத்துக் கொண்டிருந்தது.
போதாக்குறைக்கு ‘விழுப்புரத்தில் இறந்தவர் முந்தின நாள் வரைக்கும் எந்த அறிகுறியுமில்லாமல் இருந்துதான் இறந்தார்’ என்று மருத்துவ நண்பர் வாட்ஸாப்பில் அனுப்பியிருந்தார். காலையில் சாப்பிடும் போது அம்மா தொலைக்காட்சியில் செய்தி பார்த்துக் கொண்டிருந்தார். சென்னை மேற்கு மாம்பலத்தில் ‘மருத்துவருக்கு கொரோனா’ என்று செய்தி ஓடியது. உணவுத் தட்டை எடுத்துக் கொண்டு போய் வெளியில் அமர்ந்து கொண்டேன். உணவை முடித்துவிட்டு ஃபேஸ்புக்கைத் திறந்தால் ‘தமிழகத்தில் கொரோனா வெகு வேகமாக பரவுகிறது’ என்று அமைச்சர் விஜயபாஸ்கரின் செய்தி. அப்படியே மூடி வைத்துவிட்டு மதியம்தான் திறக்கிறேன். ‘அதிவிரை பரிசோதனை உபரகரணங்கள் வாங்கப்படும்’ என்று முதலமைச்சர் அறிவிக்கிறார். கடந்த மார்ச் 25 ஆம் தேதியிலிருந்து அது வாங்கப்படும், இது வாங்கப்படும், டெண்டர் விடப்பட்டிருக்கிறது என்று மாற்றி மாற்றி அறிவிப்புகள்தான் வருகின்றனவே தவிர கடந்த பத்து பதினைந்து நாட்களில் என்ன வாங்கியிருக்கிறோம், எப்படி கட்டுப்படுத்தியிருக்கிறோம் என்று எந்தச் செய்தியுமில்லை. ஒவ்வொரு நாளும் பயத்தினை அதிகரித்தபடியே இருக்கிறார்கள்.
இப்பொழுதும் கூட அரசு மருத்துவர்கள் யாரை வேண்டுமானாலும் கேட்டுப்பாருங்கள்- தேவையான உபகரணங்கள் வந்துவிட்டன என்று சொல்கிறார்களா என்று சொல்லுங்கள். அப்படி எந்த பாதுகாப்பு உபகரணமுமில்லாமல் எப்படி அவர்களால் தைரியமாகச் செயலாற்ற முடியும்? அரசாங்கம் தோற்றுப் போகும் இடமாக வேறு எதைச் சுட்டிக்காட்ட முடியும்?
‘மக்கள் ஒத்துழைப்பில்லையென்றால் நோயைக் கட்டுப்படுத்த முடியாது’ என்கிறார் முதல்வர். ஆனால் கடைகள் திறந்திருக்கும் நேரத்தில், போக்குவரத்தில், மக்கள் நடமாட்டத்தில் ‘இப்படித்தான் இருக்க வேண்டும்’ என்று எந்த தெளிவான அறிவிப்புகளும் நினைவில் இல்லை. மாற்றி மாற்றி குழப்பிக் கொண்டேயிருக்கிறார்கள். கறிக்கடை இருக்காது என்று செய்தி வருகிறது. இருக்கும் என்று வருகிறது. மறுபடியும் இருக்காது என்கிறார்கள். ‘எதுக்கும் போய் பார்த்துட்டு வருவோம்’ என்று வெளியே வர வைக்கிறார்கள். கிராமப்புற கடைகளில் பண்டங்கள் தீர்ந்துவிட்டன. பெரும்பாலான கடைகளில் வரத்து இல்லை. நகருக்கு வந்து போகக் கடைக்காரர்கள் தயாரில்லை. நிவாரணமாக வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் எந்த மூலைக்கு போதும் என்று தினக்கூலிகள் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.
வெறுமனே ஃபேஸ்புக்கும், ட்விட்டரும் மட்டுமே களமில்லை. ஆனால் அதை வைத்தே ஸ்கோர் செய்துவிடலாம் என்று நம்புகிறார்கள் ஆட்சியாளர்கள்.
மக்களை வீட்டிலேயே அடைத்து வைத்திருக்கிறது அரசு. முதல் சில நாட்களுக்கு வேண்டுமானால் நாட்கள் விடுமுறையாகத் தெரியலாம். இப்பொழுது அவரவர் தொழில், பொருளாதாரம், கடன் குறித்தெல்லாம் யோசிக்க ஆரம்பித்திருப்பார்கள். இதனால் உருவாகக் கூடிய மன அழுத்தம், மன உளைச்சல், அதன் விளைவுகள் என்பன பற்றியெல்லாம் கிஞ்சித்தும் யோசிக்காமல் இருப்பது எங்கே போய் விடியும் என்று புரியவில்லை.
ஒரு தரப்பினர் எதைப் பற்றிய கவலையுமில்லாமல் வெளியே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் இன்னொரு தரப்பு கடுமையான பயத்தில் இருக்கிறார்கள். பயப்படுகிறவர்கள்தான் பெரும்பான்மையினர். ஒரு தரப்பைக் கட்டுப்படுத்தாமல் இன்னொரு தரப்பை மேலும் மேலும் பயமூட்டி மிகப்பெரிய சமூகப்பிளவு ஒன்று உண்டாகிக் கொண்டிருப்பதாகத்தான் புரிந்து கொள்ள முடிகிறது. வெகுஜன மன நிலையில் இப்படி உண்டாகும் பிளவும் பயமும் என்றும் மாறாத வடுவாக அமையும். நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பும் போது இது சமூகத்தின் அடிப்படையான மனக்கட்டமைப்பே மாறிவிடுவதற்கான அத்தனை சாத்தியங்களும் இருக்கின்றன என்றுதான் தோன்றுகிறது. அரசானது இப்போதைக்கு விளையாட்டு வீரர்களையெல்லாம் விட்டுவிட்டு பொருளியல் நிபுணர்கள், சுகாதாரத்துறை வல்லுநர்கள் ஆகியோர்களுடன் சேர்த்து சமூகத்தின் மனநலம் குறித்தான வல்லுநர்களிடமும் ஆலோசனை பெற வேண்டும். சச்சினும், கோஹ்லியும், பி.வி.சிந்துவும் சற்று காத்திருக்கட்டும்.
நேற்றிரவு தீபம் ஏற்றிய போது மாடியில் நின்று பார்த்தால் ஊரே ஜெகஜோதியாகத் தெரிந்தது. இப்படி தீபம் ஏற்றுவது நல்ல வடிகாலாக இருக்குமோ என்றுதான் நம்பினேன். இன்று விசாரித்தால் ‘நம்ம வீட்டில் மட்டும் தீபம் வைக்காம ஏதாச்சும் வந்துட்டா என்ன பண்ணுறது’ என்கிற பயமே பெரும்பாலானவர்களை விளக்கு ஏற்றச் செய்திருக்கிறது. வடிகால் என்பதைவிடவும் எவ்வளவு பயம் பெரும்பாலான மக்களுக்கு இருக்கிறது என்பதை நினைத்தால் திக்கென்றிருக்கிறது. ‘எப்பொழுது விலகும்’ என்பதே தெரியாத பயம் மிகப்பெரிய பேராபத்து.
இப்படியெல்லாம் குளறுபடிகளுக்கு மத்தியில் நோயினைக் கட்டுபடுத்தும் வேகத்தையும் மெல்ல மெல்ல இழந்து கொண்டிருக்கிறோமோ என்னவோ என்று பயமாக இருக்கிறது. ஆரம்பத்திலிருந்து தினசரி அதிகரிக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையை கவனித்துப் பார்க்கலாம். கடைசி ஆறேழு நாட்களிலும்- 190, 306, 424,486, 560, 579, 605 ஒவ்வொரு நாளும் புதிய நோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. என்றாவது ஒரு நாள் முந்தைய நாளினைக் காட்டிலும் எண்ணிக்கை குறைந்துவிடும் என்ற நம்பிக்கை பொய்த்துக் கொண்டேயிருக்கிறது. நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்காமல் உள்நாட்டில் எதுவும் சாத்தியமில்லை.
இன்னமும் எட்டு நாட்களில் ஊரடங்கு முடிவுக்கு வரப் போகிறது. ஒருவேளை நோய்த்தொற்று கட்டுக்குள் வரவில்லையென்றால் இவர்கள் மீண்டும் ஊரடங்கினை அமல்படுத்துவார்கள். அமல்படுத்தாவிட்டால் எப்படி நோயைக் கட்டுப்படுத்துவார்கள் என்று தெரியவில்லை. இப்பொழுதே பல நிறுவனங்கள் ஆட்களைக் குறைத்துவிட்டன. பாதிச்சம்பளம் என்று அறிவித்துவிட்டன. ஊரடங்கு நீட்டிக்கப்படுமாயின் உருவாக்கப்படும் இது சம்பந்தமாக உருவாகும் மன அழுத்தம் பல்வேறு பாதிப்புகளை உண்டாக்கக் கூடும்.
இப்பொழுது கூட இரண்டு ஆண்டுகளுக்கு எம்.பிக்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி கிடையாது, அவர்களுக்கு 30 சதவீத சம்பளப்பிடித்தம் என்று ஏதேதோ செய்கிறார்கள். எந்தத் தொகுதியிலும் இரண்டாண்டுகளுக்கு எந்தப் பணியுமில்லை என்பதை எப்படி புரிந்து கொள்வது? அரசு இவற்றையெல்லாம் ஏதோ பதற்றத்தில் செய்வதைப் போலவே தெரிகிறது. தும்பைவிட்டு வாலை....
1 எதிர் சப்தங்கள்:
நீங்கள் பட்டியலிட்டுள்ளது தவறவிட்ட தருணங்களின் தொகுப்பு. ஆறு மாதக் காலம் கழித்து, இந்தியா என்றொரு நாடு பொருளாதார அரங்கில் இருந்தால், அது நாம் செய்த புண்ணியம். We last this war very early. In coming months we can expect masive you riot against minorities. According to Government they spread corono to India. Instead of doing economic reform and social stabilization government is trying to emotionally bind the people. May God bless India.
Post a Comment