Apr 16, 2020

துளி

இன்று இருநூறு குடும்பங்களுக்கு பொருட்களை வழங்கிவிட்டோம். 165 குடும்பங்கள் எம்.ஜி.ஆர் காலனியில் வசிப்பவர்கள். அவர்கள் தரப்பிலிருந்தே இளைஞர்கள் கடைக்கு வந்திருந்தார்கள். அனைவருக்கும் நிசப்தம் அறிமுகம் உண்டு. நிசப்தம் வழியாக படிக்கிறவர்களும் இருந்தார்கள். ‘நம்ம சார்’ என்பார்கள். ஒவ்வொரு குடும்பத்துக்கும் இரண்டு மூட்டைகள்- ஒன்றில் அரிசி 10 கிலோ; இன்னொன்றில் மளிகைப் பொருட்கள் என வண்டியில் ஏற்றிக் கொண்டு முன்னே சென்றார்கள். நான் பைக்கில் பின்னால் சென்றேன். அரசு தாமஸூம், கார்த்திகேயனும் காரில் வந்தார்கள். மூவருக்கு மேல் அனுமதியுமில்லை; நாங்கள் அழைக்கவுமில்லை. 

பொருட்கள் வந்து சேர்வதற்கு முன்பாகவே காலனிக்குச் சென்றுவிட்டோம். சரியாக அதே நேரத்தில் அலுவலகத்திலிருந்து அழைத்துவிட்டார்கள். கவனம் முழுக்கவும் அலுவலகம் பக்கம் திரும்பிவிட்டது. சில நிமிடங்களில் வண்டி வந்து சேர்ந்தது. அவர்கள் ஒரு கோவில் கட்டி வைத்திருக்கிறார்கள். அவர்களின் காவல் தெய்வம். அந்தக் கோவிலுக்கு முன்பாக மக்கள் சேர்ந்திருந்தார்கள். இளைஞர்கள் படு சுட்டி. தனிமனித இடைவெளி விட்டு நிற்க வைத்திருந்தார்கள். அதற்கு முன்பு ஓர் ஆச்சரியத்தைச் சொல்ல வேண்டும். தமது குடியிருப்புக்கு முன்பாக தடுப்பு கட்டி, ‘வெளியாட்களுக்கு அனுமதி இல்லை’ என்று எழுதி வைத்திருக்கிறார்கள். அது செக்போஸ்ட் மாதிரி. இளைஞர்கள் அவர்களுக்குள்ளாகவே காவல் காக்கிறார்கள். வெளியே யாரையும் விடுவதில்லை. ஏதாவது கடைக்குச் செல்ல வேண்டுமென்றால் நோட்டில் நேரம் குறித்து வைத்துக் கொள்கிறார்கள். உள்ளே நுழையும் போது வந்தாலும் கை கழுவிக் கொண்டுதான் வர வேண்டும். வெளியாட்கள் யாரையும் அனுமதிப்பதில்லை. எப்பொழுதுமே கட்டுப்பாடான மக்கள் அவர்கள். கொரோனாவிலும் அதே கட்டுப்பாடு.

மக்களிடம் பேச ஒன்றுமில்லை. ‘உங்களுக்கு கஷ்டம் என்றார்கள். எல்லோருக்குமே இது கஷ்டமான காலம்தான். எங்களால் இயன்ற சிறு உதவி இது. இதை வைத்து அடுத்த பதினைந்து நாட்களைச் சமாளியுங்கள். வேலைக்குச் செல்லும் வாய்ப்பு உருவாகும் என நம்புவோம். ஒருவேளை தேவைப்பட்டால் மீண்டும் செய்கிறோம்’ என்று சொன்னேன். அடையாளமாக சிலருக்காவது கொடுங்கள் என்றார்கள். அவர்கள் ஒருவகையில் உடைந்து போயிருப்பதாகவே உணர முடிந்தது.

மேலும் முப்பத்தைந்து பேருக்கான உணவுப் பொருட்களை பஞ்சாயத்து தூய்மைப் பணியாளர்களுக்குக் கொடுத்திருக்கிறோம். மொத்தம் முப்பத்து நான்கு பணியாளர்கள். ராத்திரியும் பகலுமாக வேலை செய்கிறார்கள். உண்மையிலேயே இவர்கள் இல்லையென்றால் நாறிப் போய்விடுவோம். எதைப் பற்றியும் கவலைப்படாமல் பணியாற்றுகிறார்கள். உடல் களைத்து நோவெடுக்கும் அந்தி வேளையில் கொடுத்தனுப்பினோம். அவர்களுக்கு நாம் செலுத்து சிறு நன்றி அது.

இன்னமும் இரு நூறு குடும்பங்கள் பாக்கியிருக்கின்றன. முந்நூறு குடும்பங்கள்தான் முதலில் திட்டமிட்டோம். ஆனால் இன்னும் நூறு குடும்பங்கள் குறித்து தகவல் வந்தது. தெருக்களில் முடி பொறுக்கி சவுரி செய்து விற்பவர்கள், கூடை முடைந்து ஊருக்குள் விற்பவர்கள் என விளிம்பு நிலை மக்கள் வாழும் குடியிருப்பு அது. அவர்களையும் பட்டியலில் சேர்த்திருக்கிறோம். நாளைக்கு அவர்களுக்கான பொருட்களை வழங்கிவிட்டு விவரங்களை எழுதுகிறேன்.

எம்.ஜி.ஆர் காலனிக்கு இதற்கு முன்பு பல முறை சென்றிருக்கிறேன். அங்கு பெண்கள் பேசுவது அரிது. இன்று பொருட்களைக் கொடுத்துவிட்டு ஒரு கணம் அமைதியான போது பெண்கள் பேசத் தொடங்கினார்கள். ‘எங்களை நீங்கள் தத்து எடுத்த மாதிரி’ என்றெல்லாம் சொல்லத் தொடங்கினார்கள். என்னுடைய அனுபவத்திலிருந்து சொல்கிறேன்- நம்மால் உதவி பெறும் ஒருவர் நெகிழும் போது பேசவிடாமல் தடுத்துவிடுவதுதான் நல்லது. சிரித்துவிட்டு பேச்சை மடை மாற்றிவிட வேண்டும்.

எனக்கு அலுவலக வேலை இருக்கிறது என்று சொல்லிவிட்டு கிளம்ப எத்தனித்தேன். அவர்களில் சில பெரியவர்கள் பின்னாலேயே வந்தார்கள். ‘மன்னிச்சுக்குங்க...வேலை இருக்கிறது. அவசரமாகச் செல்ல வேண்டும். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பி வந்தேன். 

வீடு வந்து சேர்ந்த பிறகு தாமஸ் சாரிடம் பேசினேன். ‘இன்னும் சில நிமிடங்கள் இருந்திருந்தால் பெண்கள் பேசியிருப்பார்கள்’ என்றார். கார்த்திகேயனை அழைத்த போது ‘அங்க பேசறதுக்கு எதுவுமில்லை’ என்றார். அவர் சொன்னது சரி.

இன்னும் சில கணங்கள் அவர்கள் முகங்களைப் பார்த்திருந்தாலும் கூட அந்தப் பெண்கள் பேசியிருப்பார்கள். வீட்டில் வறுமை சூழும் போது, உணவுக்கு தட்டுப்பாடு ஏற்படும் போது, அடுத்த இரண்டொரு நாளில் என்ன செய்யப் போகிறோம் என்று நினைத்து வருந்தும் போது, வீட்டில் பசி வந்துவிடுமோ என்று பதறும் தருணத்தில் யாரோ ஒருவர் ‘இந்தா’ என்று உதவிக்கரம் நீட்டும் போது பேசுவார்கள். யாராக இருந்தாலும் பேச்சு வந்துவிடும். ஆனால் பேசவே வேண்டியதில்லை. அனைத்தும் உள்ளுக்குள்ளேயே வைத்திருக்கட்டும். அந்த அன்பும் நெகிழ்வும் காலத்திற்கும் அவர்களுக்குள்ளேயே இருக்கட்டும். பேச விட்டு புளகாங்கிதம் அடைந்து என்ன செய்யப் போகிறோம்? 

இன்னும் சில நாட்கள் கழித்து நலம் விசாரிப்புக்காகச் சென்று பார்க்கும் போது அவர்கள் ஏதேனும் சொல்ல நினைத்தால் கேட்டுக் கொள்ளலாம். இந்தத் தருணத்தில் பேச்சும் வேண்டாம்; உடைந்து வழியும் கண்ணீரும் வேண்டாம்.

எம்.ஜி.ஆர் காலனி மக்களின் அடுத்த பதினைந்து நாட்களுக்கான பசியை நீக்கியிருக்கிறோம். நம் அனைவருக்கும் இதில் பங்கிருக்கிறது.  இப்படியான லட்சக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள்தான். இந்த உதவியானது பெருங்கடலில் கரைக்கப்பட்ட சிறு சந்தனவில்லை. ஏற்கனவே குறிப்பிட்டது போல மீச்சிறு உதவி. 

பயனாளிகளின் முகங்கள் தெரியும்படியான நிழற்படங்கள் அவசியமில்லை என நினைக்கிறேன். அடையாளத்திற்காக மட்டும் சில படங்கள்.


எப்பொழுதும் உடனிருக்கும் அனைத்து நிசப்தம் நண்பர்களுக்கும், நன்கொடையாளர்களுக்கும் மனப்பூர்வமான நன்றி. 

5 எதிர் சப்தங்கள்:

ரமாராணி, கோபி. said...

எவ்வளவு கட்டுப்பாடான கிராமம்... வியக்க வைக்கிறார்கள்.... தவறே இல்லை, மணிகண்டன் சார்... அறக்கட்டளையின் தொகை, அருமையான பணியையே செய்திருக்கிறது.... மனம் நிறைய மகிழ்வும், நிறைவும் ஏற்படுகிறது பதிவைப் படிக்கும்போது....

15 நாட்களுக்கான பிரச்சினை முடிந்த நிம்மதியில், இன்றிரவு நிம்மதியாக தூங்கட்டும் அவர்கள்....

🙏🙏🙏🙏🙏

சேக்காளி said...

// நம்மால் உதவி பெறும் ஒருவர் நெகிழும் போது பேசவிடாமல் தடுத்துவிடுவதுதான் நல்லது//
ஆமாம் இல்லையென்றால் உடைந்து வழிய விடாமல் கண்ணீரை கட்டுப்படுத்துவது பெரும் பாடாகி விடும்.

ரா.சிவானந்தம் said...

உதவிய செய்வதில் திட்டமிடல் தேவை என்பதை நான் எனது பதிவுகளில் வலியுறுத்துவேன். உங்களிடம் அது இருக்கிறது, வாழ்த்துக்கள்.

அதைவிட முக்கியமாக கொரோனா விஷயத்தில் மிகவும் பாதுகாப்பாக சுகாதாரமாக அவர்கள் இருப்பதை பார்க்கும்போது, வழிகாட்டுபவர் (வா.மணிகண்டன்) சரியாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும் என்பதும் புரிகிறது.

vijay said...

வாழ்க வளமுடன் நலமுடன்

Pratheesh said...

சிறு துளிகள்....பெரு வெள்ளம்....