Apr 16, 2020

புதிய வெளிச்சம்

கடந்த இருபது நாட்களாகப் பேசிய வரையில் வேலைக்குச் செல்லும் பல நண்பர்களும் வேலை குறித்தே கவலைப்படுகிறார்கள்.  தொழில் செய்கிறவர்கள் இனிமேல் பொருளாதாரச் சூழல் எப்படி இருக்கும் என்றே யோசிக்கிறார்கள். நோய் குறித்தான பயமிருந்தாலும் பொருளியல் சார்ந்த யோசனைகள்தான் பலருக்கும்.  தொடர்ந்து இருபது நாட்கள் வீடு அடைவு என்பது பலரையும் குழப்பியிருக்கிறது. ஒருவிதமான பய உணர்வுதான். பேசுகிற நண்பர்களிடமெல்லாம் ‘பழைய நண்பர்கள் யாரிடமாவது பல நாட்களாக பேசாம இருந்தீங்கன்னா அவங்க கூட பேசுங்க’ என்று சொல்கிறேன். 

நம்மைச் சுற்றி எல்லாமே நெருக்கடியாக இருக்கும் போது பேச்சு மட்டுமே மனதை இலகுவாக்கும். ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரங்களைக் கூட ஃபோனில் பேசலாம். பேச்சுதான் குழப்பங்களை வடியச் செய்யும். அவசியமற்ற மன உளைச்சல்களையெல்லாம் அண்ட விடாமல் செய்கிற ஆற்றல் பேச்சுக்கு உண்டு என முழுமையாக நம்புகிறேன். சமீபமாக பெரும்பாலானவர்கள் ஆத்மார்த்தமாக பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.  ‘யார்கிட்டவாவது கொட்டணும்ன்னு இருந்தேன்’ என்று பேச்சுவாக்கில் வந்து விழுந்துவிடுகிறது.

பேச்சு ஒரு பக்கம் இருக்கட்டும். ஏன் பயப்படுகிறார்கள்? எந்தத் துறையாக இருந்தாலும் ஸ்திரத்தன்மையை அடைய ஒன்றரை முதல் இரண்டு வருடங்கள் தேவை என்று எதிர்பார்க்கிறார்கள். அதுவரைக்கும் எப்படித் தாக்குப் பிடிப்பது என்று பலரும் பயப்படுவதே காரணம். பல நிறுவனங்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களை அனுப்பிவிட்டார்கள். இன்னும் பல நிறுவனங்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்திருக்கின்றன. பல்வேறு நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது உண்மை. அவர்களுக்கு வேறு வழியே இல்லை.  அதே சமயத்தில் சிலர் ‘இதுதான் வாய்ப்பு’ என்று கை வைக்கிறவர்களும் இருக்கிறார்கள். 

உதாரணமாக தனியார் கல்வி நிறுவனங்கள். அவர்கள் 2019-20 ஆண்டுக்கான கட்டணத்தை ஏற்கனவே மாணவர்களிடமிருந்து வசூலித்துவிட்டார்கள். அடுத்த ஆண்டுக்கான கட்டணத்தை ஜூன் மாதம்தான் வசூலிப்பார்கள். இப்பொழுது விடுமுறை விடுவதால் பேருந்துகளை இயக்க வேண்டியதில்லை, மின்சாரச் செலவு இல்லை, தண்ணீர் செலவு இல்லை. அவர்களுக்கு இலாபம்தான். ஆனால் பலரும் பாதிச் சம்பளத்தை பிடித்துக் கொண்டு கொடுத்திருக்கிறார்கள். எரிகிற வீட்டில் பிடுங்கிய மட்டும் இலாபம்!

சூழல் இப்படி இருக்கும் போது பொருளியல் பிரச்சினைகள் பற்றிய கவலை இருக்கும்தான். ஆனால் அது நம்மை ஆக்கிரமிக்கவிடக் கூடாது. 

தொழிற்துறை, வேலை வாய்ப்புகளில் பாதிப்பே இருக்காதா என்று கேட்டால் நிச்சயமாக இருக்கும். தொடர்ச்சியாக இயங்கி வந்த மிகப்பெரிய உலகச்சக்கரம் வலுக்கட்டாயமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. மீண்டும் பழையபடிக்குச் சுற்றுவதற்கு காலம் பிடிக்கும். சாதாரண மின்விசிறி கூட ஓட்டமெடுக்க சில வினாடிகள் தேவைப்படுகிறது. பெரும் சக்கரம் எட்ப்படி பழைய வேகத்திலேயே ஓடும்? ஒவ்வொரு துறை ஆட்களாக கேட்டுக் கொண்டிருக்கிறேன். பின்னலாடை துறைச் சார்ந்தவர்களிடம் பேசினால் ‘இப்பொழுது ஒரு சீசனுக்கான துணிகளை உற்பத்தி செய்து கொண்டிருந்தோம், உற்பத்தி செய்து ஏற்றுமதிக்காக தயாராகிக் கொண்டிருந்தோம் இனி அவற்றை என்ன செய்வோம் எனத் தெளிவில்லை’ என்கிறார்கள். நிலைமை சீரடையும் போது சீசன் மாறியிருக்கும். வேறொரு பருவத்திற்கான துணிகளைத் தயார் செய்ய வேண்டும். அப்படியானால் உற்பத்தி செய்யப்பட்ட ஆடைக்கான நஷ்டத்தை யாரோ ஒருவர் சுமந்துதானே தீர வேண்டும்? அப்படி சுமை இறங்குகிறவர் முடங்கிப் போவார். இப்படி கணிசமானவர்கள் பாதிப்படையும் போது தொழில் முடக்கம் தவிர்க்க முடியாதது என்றார்கள்.

பின்னலாடை தொழிலில் மட்டுமில்லை- வெவ்வேறு துறைகளில் வேறு மாதிரியான பிரச்சினைகள் இருக்கும். ஆக, அந்தச் சக்கரம் மெல்லத்தான் வேகம் எடுக்கும். அப்படி அசமஞ்சமாக ஓடிக் கொண்டிருக்கும் போது பணப்புழக்கம் குறைவாக இருக்கும், நிறுவனங்கள் மெல்ல நடை வைப்பார்கள், அவசியமற்ற செலவுகளைக் குறைக்கிறோம் என்கிற பெயரில் ஆட்களைக் குறைக்கப்படுவார்கள், புதிதாக ஆட்களை எடுப்பதில் தயக்கம் இருக்கும். எனவே வேலைச் சந்தையும் அசமஞ்சமாகத்தான் இருக்கும். 

சில கட்டுரைகளை வாசித்துக் கொண்டிருந்தேன். ஒரு சிறிய நம்பிக்கைக் கீற்று இருக்கிறது. 

பொதுவாக பொருளாதார நெருக்கடிகள் உலகின் ஒரு பகுதியைத் தாக்கும் போது இன்னொரு பகுதி பெரிய பாதிப்பில்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும். உதாரணமாக அமெரிக்காவில் வீடுகளின் மதிப்பு குறைந்து பொருளாதார மந்த நிலை ஏற்பட்ட போது அமெரிக்காவை நம்பி தொழில் நடத்திக் கொண்டிருந்த இந்திய நிறுவனங்கள் திணறின. அதே சமயம், ஐரோப்பிய நாடுகல், ஜப்பான் போன்ற பிற பகுதிகளில் நம் நாட்டு நிறுவனங்கள் ப்ராஜக்ட்களைத் தேடத் தொடங்கின. திணறிக் கொண்டிருக்கும் நாடுகளின் அரசாங்கங்கள் பணத்தை உள்ளே தள்ளிக் கொண்டிருப்பார்கள் பிற நாடுகள் அதை தமக்கான வாய்ப்பாக மாற்றிக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் கொரோனாவின் பாதிப்பு அப்படியானதில்லை. உலகத்தையே ஒரே சமயத்தில் முடக்கியிருக்கிறது. கிட்டத்தட்ட எல்லாமே standstill மாதிரியான நிலைதான். நிலைமை ஓரளவுக்கு ஒழுங்காகும் போதும்- சில மாதங்கள் கழித்து- எல்லோருமே பழைய வேகத்தை அடைய விரும்புவார்கள். அத்தனை பேரும் ஒன்று சேர்ந்து உழைப்பது மாதிரிதான். பெரும்பாலான நாடுகள் பெருமளவு நிதியை அள்ளிக் கொட்டக் கூடும். எனவே ஆரம்பகட்ட மந்தநிலைக்குப் பிறகு வேகம் மிக அதிகமானதாகவே இருக்கும்.

அபரிமிதமான வேகம் ஏற்படுமானால் அதற்கேற்பவே வேலை வாய்ப்புகளிலும் புத்தம் புதிய திறமைகளுக்கு அவசியமிருக்கும். ஒவ்வொரு மந்த நிலைக்குப் பிறகும் புதியதான தொழில்நுட்பங்களுக்கான தேவை மிக அதிகளவில் உருவாவதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த முறையும் அதுதான் நடக்கும். மருத்துவத்துறை தொடங்கி தொழில்நுட்பம் வரைக்கும் சகல இடங்களிலும் புதிய நுட்பங்கள் நுழையும். நிறைய மாற்றங்கள் ஏற்படும். புதிய மாற்றங்கள்தான் சவால்களை உருவாக்கும். அந்தச் சவால்களை சரிக்கட்ட நிறைய மூளைகள் தேவை. ஆட்களுக்கான தேவை இருக்கும். பணம் புழங்கத் தொடங்கும். அதற்கு சற்று காலம் தேவைப்படக் கூடும். ஆனால் நிலைமை இப்படியே இருந்துவிடப் போவதில்லை. இடைப்பட்ட காலத்தில் சறுக்கினாலும் கூட எழுந்துவிடுவதற்கான வாய்ப்புகளும் தருணங்களும் நிறைய உருவாகும். அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதற்கான மனதைரியத்தையும், உந்துதலையும் பெற்றிருப்பதுதான் அவசியம். பயமும், கவலையும் நம் ஆற்றலையெல்லாம் தின்றுவிட அனுமதிக்காமல் இருப்பதே நாம் இப்பொழுது செய்ய வேண்டிய மிகப்பெரிய காரியம். 

கொரோனாவினால் எல்லாமே சரிந்துவிடப் போவதில்லை. இது தற்காலிகமான மன உளைச்சல். தற்காலிக பின்னடைவு. அதைத்தாண்டி பெரிய அளவில் அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. ஆரம்பத்திலிருந்தே சொல்லிக் கொண்டிருப்பது போல கால இடைவெளியில் கிடைப்பதைப் பற்றிக் கொண்டு, புதியதாக கற்றுக் கொண்டு, நண்பர்களிடம் பேசிக் கொண்டும் இருப்போம். மனம் இலகுவாகவே இருக்கட்டும். வெளிச்சம் நிச்சயம் வரும்!

2 எதிர் சப்தங்கள்:

NAGARATHAN said...

மாதா மாதம் கட்டணம் வசூலிக்கும் கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. எனக்கென்னவோ நீங்கள் கணிப்பது போல் அதி வேக ஓட்டமிருக்க வாய்ப்பிருப்பதாக தோன்றவில்லை. மேலும், அடுத்த மாதத்திற்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை அரசு (மத்திய மற்றும் மாநில அரசுகள்) எப்படி கொடுக்கப் போகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். ஏற்கனவே சில மாநில அரசாங்கங்கள் ஓய்வூதியத்தில் கை வைத்து விட்டார்கள்.

Avargal Unmaigal said...


நம்பிக்கை ஊட்டும் எழுத்து. பாராட்டுக்கள்