Apr 18, 2020

அற்றார் அழிபசி

நேற்று மதியம் மேலும் இருநூறு குடும்பங்களுக்கான உணவுப்பொருட்களை வழங்கிவிட்டோம். 

நேற்றைய முன் தினம் எம்.ஜி.ஆர் காலனி மக்களுக்கு உதவிகளைச் செய்துவிட்டு வந்த பிறகு இரவில் அழைத்து ‘எங்களுக்கு நிசப்தம் எவ்வளவோ செய்யுது..நிசப்தம் செய்யும் உதவிகளில் எங்களுடைய பங்களிப்பும் ஏதாவது வகையில் இருக்க வேண்டும்’ என்றார்கள். பொதுவாகவே யாராவது ‘நாங்களும் உதவ விரும்புகிறோம்’ என்று கேட்டால் மறுக்கக் கூடாது. மறுப்பதில்லை. உதவுகிற பலருக்கும் ‘தம்மால் எப்படி உதவ முடியும்’ என்றுதான் தெரிவதில்லையே தவிர தொண்ணூறு சதவீதம் பேருக்கும் ‘நாமும் உதவ வேண்டும்’ என்கிற எண்ணம் உள்ளே ஓடிக் கொண்டேதான் இருக்கும். அனுபவம் இருப்பவர்களால் ‘இவர்களால் அடுத்தவர்களுக்கு எப்படி உதவ முடியும்’ என்று பெரும்பாலும் கணித்துவிட முடியும். 

எம்.ஜி.ஆர் காலனி மக்கள் பெரும்பாலும் கட்டிடங்களுக்கு கான்க்ரீட் வேலைக்குச் செல்கிறவர்கள். அவர்களிடம் சிறு சரக்கு வாகனம் ஒன்றிருக்கிறது. அடுத்து உதவி செய்யப் போகும் இடங்களுக்கு ‘ஆட்டோவையும் பொருட்களை விநியோகிக்க நான்கைந்து இளைஞர்களையும் அனுப்பி வையுங்கள்’ என்று கேட்டுக் கொண்டேன். டீசலுக்கான பணத்தை கொடுத்துவிட்டேன். இளைஞர்கள் உற்சாகமாக வந்திருந்தார்கள். நேற்றைய முன் தினம் போலவே இரண்டு ஆட்டோக்கள் நிறைய உதவிப் பொருட்களை ஏற்றிக் கொண்டு கிளம்பினோம். முதலில் அளுக்குளி காலனி. விவசாயக் கூலிகளுக்கு வேலை இருக்கிறது என்று சில நாட்களுக்கு முன்பாக எழுதியிருந்தேன் அல்லவா? அது தவறான தகவல். தோட்டம் வைத்திருக்கும் விவசாயிகளும் கூட பல இடங்களில் ஆட்களை வேலைக்கு அழைப்பதில்லை என்றார்கள். ‘கைவசம் பணமில்லை. கூலி கொடுக்க வழியில்லை’ என்பதைத்தான் அம்மக்களில் பெரும்பாலானவர்கள் சொன்னார்கள். வரிசையாக நான்கைந்து தெருக்கள் இருந்தன. அவர்களிடம் முன்பே டோக்கன் கொடுத்து வைத்திருந்ததால் பெரிய சிரமமில்லை. வரிசையாக வந்து வாங்கிக் கொண்டார்கள்.

ஒரு குடியிருப்பை எடுத்துக் கொண்டால் அங்கேயிருக்கும் ஒரு வீடு பாக்கியில்லாமல் கொடுத்துவிட வேண்டும். பலருக்குக் கொடுத்து சிலருக்குக் கொடுக்கவில்லையென்றால்தான் சலசலப்புகள் உருவாகும். கடலூர் பகுதிகளில் இத்தகைய காரியங்களில் அதைப் பார்த்திருக்கிறேன். அரசு தாமஸ் மிகச் சரியான ஆட்களைப் பிடித்து அவர்களிடம் டோக்கன்களைக் கொடுத்து சரியான விநியோகம் செய்யச் சொல்லியிருந்தார். 

அங்கே ஐம்பது குடும்பங்களுக்கு பொருட்களைக் கொடுத்துவிட்டு அடுத்து குருமந்தூர் மேடு சென்றோம். அதுவும் அருந்ததியர் இன மக்கள் வாழும் குடியிருப்பு. அங்கே தொண்ணூறு குடும்பங்கள் இருந்தன. மூன்று தெருக்கள். மூன்று தெருக்களிலும் எந்தப் பிரச்சினையுமில்லாமல் கொடுத்துவிட முடிந்தது. நம்பியூரில் குடியிருப்பாக இல்லாமல் மிகச் சிரமப்படும் மாணவர்கள் குடும்பங்களைத் தனித்தனியாக தலைமை ஆசிரியர் இளங்கோ அழைத்து பள்ளியில் இருக்கச் சொல்லியிருந்தார். அவர்களது குடும்பங்களுக்கு வழங்கிவிட்டு ஒழலக்கோவில் பஞ்சாயத்தில் வசிக்கும் வெளியூரைச் சார்ந்த ரேஷன் அட்டை உட்பட எந்த வழியுமில்லாத பத்து குடும்பங்களுக்கும் வழங்கிவிட்டு அம்பேத்கர் நகருக்கு வந்தோம்.

இந்தக் காலனி மக்கள் குறித்துச் சொல்லியாக வேண்டும். 

இருபது வருடங்களுக்கு முன்பாக பாம்பே டைப் கக்கூஸ்கள் எங்கள் ஊர் தெருக்களில் இருந்தன. செப்டிக் டேங்க் இல்லாமல் நேரடியாக தரையில் விழும் படியான அமைப்பு. தெருவிலிருந்தபடியே ஒரு தகரத்தை தூக்கி வழித்துக் கொள்ளும்படியாக இருக்கும். யாரோ ஒரு பாவப்பட்ட மனிதன் வாளி ஒன்றை எடுத்து வந்து அந்தத் தகரத்தைத் தூக்கி வழித்துச் செல்வான். அவர்களை எங்கள் ஊரில் பன்னியாண்டிகள் என்பார்கள். ஒரு சாக்கடைப் பள்ளத்தில் மூன்றடி உயரத்தில் சிறு குடிசையில் வாழ்ந்து வந்தார்கள். பன்றிகள் நிறையச் சுற்றிக் கொண்டிருக்கும். இப்பொழுதெல்லாம் அவர்கள் அங்கு இல்லை. முன்னேறியிருக்கக் கூடும் என நம்பியிருந்தேன். உள்ளூர் நண்பன் மோகன் அழைத்து ‘மணி, உனக்கு விசு தெரியும்ன்னு நினைக்கிறேன்..நம்மூர்ல இருந்தாங்க...இப்போ அம்பேத்கர் நகரில் இருக்காங்க’ என்று சொன்ன போதுதான் பழைய நினைவுகள் மெல்ல மெல்ல மேலேறி வந்தன.

இன்னமும் அவர்கள் இருக்கிறார்கள். மலம் அள்ளுவதில்லையே தவிர பெரிய மேம்பாடு இல்லை. தெருக்களில் குப்பைகளில் உதிர்ந்த ரோமங்களை பொறுக்கி அவற்றிலிருந்து சவுரி செய்து விற்கிறார்கள். நேற்று பார்த்த போது இவர்களை எப்படி இவ்வளவு நாட்கள் தெரியாமல் விட்டு வைத்திருந்தோம் என்று அங்கலாய்ப்பாக இருந்தது. எழுதப் படிக்கக் கூடத் தெரியவில்லை. சமூகத்தின் விளிம்பு என்னவென்றால் இவர்களைக் காட்டலாம். அரிசி மூட்டையை வாங்கிக் கொண்ட ஒரு மூதாட்டி ‘உம்பேரைச் சொல்லி சாப்பிட்டுக்கிறேன் சாமீ’ என்று சொன்னார். 

நிசப்தம் நண்பர்கள் அத்தனை பேருக்கும் இந்த வாழ்த்தும் அன்பும் அர்ப்பணம். நம் ஒவ்வொரு பேரின் பெயரையும் சொல்லி அந்தப் பாட்டி பசியாறுவார்.

நேற்றைய விநியோகத்தில் உதவ நிவாஸ், மோகன் உள்ளிட்ட பல நண்பர்கள் கலந்து கொண்டார்கள். அவர்களுக்கும் நன்றி.

மனப்பூர்வமாகச் சொல்கிறேன் - இதுவரையிலும் இத்தனை அலைபேசி அழைப்புகளை என் வாழ்நாளில் எதிர்கொண்டதில்லை. நேற்று மட்டும் குறைந்தது இருநூறு பேர்களாவது பேசியிருப்பார்கள். அத்தனையும் நன்றி சொல்லும் அழைப்புகள். மிகைப்படுத்திச் சொல்லவில்லை. ஒருவர் அழைப்பார். அவர் நன்றி சொல்லி வாழ்த்திவிட்டு அலைபேசியை அருகில் நிற்பவருக்குக் கொடுப்பார். இப்படியே வரிசையாக ஒவ்வொரு அழைப்பிலும் குறைந்தது பத்து பேர்களாவது பேசினார்கள். எந்த அழைப்பையும் தவிர்க்கவில்லை. எவ்வளவு வருத்தமும் துன்பமும் இருந்திருந்தால் இப்படியெல்லாம் அழைத்துப் பேசுவார்கள் என்று நினைத்துக் கொள்கிறேன். பெரும்பாலானவர்கள் பெண்கள். மகிழ்ந்தும் நெகிழ்ந்தும் வாழ்த்துகிற அந்த நன்றி என்னையும் உடையச் செய்துவிட்டது. எந்த உதவியையும் விட பசி தீர்ப்பதே பெரும்பணி என்று அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன். பொருட்களை வழங்கிய ஒவ்வொரு பகுதியிலிருந்தும் அழைத்துப் பேசினார்கள். பேசிக் கொண்டிருக்கிறார்கள். வாட்ஸப்பில் செய்திகளை அனுப்புகிறார்கள். இதைவிட ஒரு ஆத்மதிருப்தியை அடைய முடியுமா என்று தெரியவில்லை. கனவு முழுவதும் மக்களை தள்ளித் தள்ளி நிற்கச் சொல்வது போலவும் பொருட்களை வழங்குவது போலவுமே இருந்தது. 

எம்.ஜி.ஆர் காலனி மக்களைப் போலவே இந்த மக்களும் நிசப்தம் பணியில் தொடர்ந்து பங்கெடுப்பார்கள். அதற்கான திட்டங்கள் மனதில் ஓடத் தொடங்கியிருக்கின்றன. 

‘மீன் கொடுப்பதைவிட மீன் பிடிக்கக் கற்றுக் கொடுக்கலாமே’ என்று ஒருவர் கடந்த பதிவின் பின்னூட்டத்தில் கேட்டிருந்தார். நீருமில்லாத மீனுமில்லாத குட்டையில் எப்படி மீன் பிடித்துக் கற்றுக் கொடுப்பது என்று தெரியவில்லை. 

பல குடியிருப்புகள் இப்படியான பசித்துன்பத்தில் இருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இன்னமும் நானூறு முதல் ஐநூறு குடும்பங்களுக்கு உதவலாம் என்று தோன்றுகிறது. கருத்துகள் இருப்பின் தெரியப்படுத்துங்கள். நிச்சயமாக பரிசீலிக்கலாம்.

சில நிழற்படங்கள்...





உங்கள் ஒவ்வொருவருக்கும் என் உணர்வுப்பூர்வமான நன்றி.

3 எதிர் சப்தங்கள்:

NAGARATHAN said...

எங்கோ கண் காணாத. தூரத்திலிருக்கிறேன். கடல் கடந்து இருக்கிறேன்; ஆனாலும் என் மனம் என் தாய் நாட்டிலிருக்கிறது. நான் வாழும் நாட்டின் அரசாங்கத்தின் துல்லியமான திட்டமிடலும், செயலும் கச்சிதமாக இருக்கிறது. ஒப்பீட்டளவில் தாய் நாட்டின் நிலை குறித்தும், மக்களின் அழிந்துவரும் (அழிக்கப்பட்ட) வாழ்வாதாரம் குறித்தும் ஒவ்வொரு நாளும் மனவேதனை என்னை வாட்டுகிறது. உங்களைப் போன்றவர்களின் உதவிக்கரம் மட்டுமே நம்பிக்கையின் அடிநாதம். மிக்க நன்றி மணிகண்டன்; உங்களுக்கும், பக்கபலமாய் இருப்பவர்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும், பெரிதுவக்கும் தாய் மனத்துக்கும் என் நன்றியை தெரிவிக்கவும். உதவி பெற்றவர் மட்டும்தான் நன்றி தெரிவிக்க வேண்டுமா என்ன?

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

பாராட்டுக்கள் மணிகண்டன். அடுத்து உங்கள் இலக்கு மீன்பிடிகக் கற்றுத் தருவது. அது உங்களால் முடியும் வாழ்த்துகள்

தமிழ்ப்பூ said...

A fruitful venture