சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் என்று தமிழகத்தின் பிற நிலப்பகுதிகளுக்கு உறுதியான, வலுவான ஆட்சியாளர்கள் இருந்தது போல கொங்கு நிலப்பகுதிக்கு என வலுவான மன்னர்கள் எந்தக் காலத்திலாவது இருந்திருக்கிறார்களா என்று தேடிப் பார்த்தால் அப்படி யாரும் வாய்த்ததாகவே தெரியவில்லை.
ஒரு முறை மருத்துவர் சத்தியசுந்தரியிடம் பேசிக் கொண்டிருக்கும் போது- எண்பதுகளைத் தாண்டியவர் அவர்- அவருக்கும் சில தலைமுறைகளுக்கு, முன்பாக பெண்களை ஒளித்து வைப்பார்கள் என்று சொல்லியிருந்தார். அந்தக் காலத்தில் அடிக்கடி போர் நடைபெறும் இடமாக, படைகள் தாண்டிச் செல்லும் பாதையாக கொங்கு நாட்டின் பல பகுதிகள் இருந்திருக்கின்றன. மைசூரிலிருந்து கீழே இறங்கினால் சத்தியமங்கலம் வந்துவிடும். அதன் பிறகு கோவை வழியாக கேரளா, ஈரோடு, சங்ககிரி, பவானி என எல்லாமே படைகள் செல்லும் பாதைகள்தான். இப்படி பல இடங்களில் போர்கள் நடந்திருக்கின்றன. படைகள் செல்கிற வழியில் பெண்கள் கிடைத்தால் தூக்கிச் சென்றுவிடுவார்கள், பாலியல் வன்முறைகளுக்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்பதால் தானியங்கள் சேகரித்து வைக்கும் குதிருக்குள், பாதாள அறைகளுக்குள் என வித்தியாசமான இடங்களிலெல்லாம் இளம்பெண்களை சில நாட்களுக்கு ஒளித்து வைத்து, படை தாண்டிச் சென்ற பிறகு வெளியில் விடுவார்களாம்.
எங்கள் வீட்டில் கொத்தப்பட்ட, நன்கு உருண்டையான ஒரு கல் கிடக்கிறது. ஒரு கையளவுக்கு இருக்கக் கூடிய கல். ஒரு கிலோ எடை தேறும். சிறுவனாக இருக்கும் போது எங்கள் காசியம்மாயா ‘இது திப்புசுல்தானின் பீரங்கி குண்டு’ என்று சொல்லியிருக்கிறார். அப்பொழுது அதற்கு மேல் கேள்வி கேட்கத் தெரியாது. கேட்டிருந்தாலும் அவருக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. இன்றைக்கு வரைக்கும் அதை பீரங்கி குண்டு என்றுதான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
மேற்சொன்ன இரண்டுமே இட்டுக்கட்டப்பட்ட தகவல் இல்லை என்று உறுதியாக நம்பலாம்.
“கிபி 1800 இல் கொங்குநாடு” என்றொரு புத்தகம் கிடைத்தது. டாக்டர் பிரான்ஸிஸ் புக்கானன் என்றொருவரு 1800-1801 ஆம் ஆண்டுகளில் ஒரு வருடம் மூன்று மாத காலம் சுற்றியிருக்கிறார். மொத்த காலத்தையும் முழுமையாக கொங்குநாட்டிலேயே சுற்றவில்லை. மதராஸிலிருந்து புறப்பட்டு , மைசூர் சாம்ராஜ்யம், மலபார் எனப்படுகிற கேரளா ஆகிய பகுதிகளுக்கான பயணத்தின் போது கொங்குநாட்டின் ஊர்களைப் பார்வையிடுகிறார். ஆனால் அவர் ஏனோ சேலம் பற்றி பெரிய அளவில் குறிப்பிடவில்லை. ஆனால் கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் அன்றைய சேலம் ஜில்லாவின் ஆட்சியராக இருந்த அலெக்ஸாண்டர் ரீட் அந்த ஜில்லா குறித்து நிறைய பதிவு செய்து வைத்திருக்கிறார். இவர்கள் இரண்டு பேரின் பதிவுகளையும் இடைப்பாடி அமுதன், புலவர் ராசு ஆகிய இருவரும் தொகுத்து எழுதிய புத்தகம்தான் கிபி 1800இல் கொங்கு நாடு.
கொங்கு நாட்டின் எந்த வரலாறைத் தேடினாலும் கட்டுரையின் முதல் வரிதான் பொருந்துகிறது.
காலங்காலமாக வேறொரு மன்னர்களால் ஆளப்பட்டு, அவர்களுக்கு கொங்குப் பகுதியைச் சார்ந்தவர்கள் வசூல் செய்து கொடுப்பவர்களாக, மன்னரின் பெயரைச் சொல்லி மிரட்டுகிறவர்களாக, கட்டுப்படுத்துகிறவர்களாக மட்டுமே இருந்திருக்கிறார்கள். அதுவும் கிபி 1700க்குப் பிறகு நிலைமை படு மோசம். ஹைதராபாத் நிஜாம், ஆங்கிலேயேர்கள், மைசூர் சாம்ராஜ்யத்தைச் சார்ந்த தொட்ட தேவராயன் அவரது மகன் சிக்க தேவராயன், மைசூர் தளபதிகள், பின்னர் ஹைதர் அலி, திப்பு சுல்தான், ஆங்கிலேயர்கள் என வகை வகையான ஆட்சியாளர்கள்- இப்படி கொங்கு நிலத்துக்குச் சம்பந்தமேயில்லாத ஆட்கள்தான் இந்த மண்ணில் சண்டை புரிந்திருக்கிறார்கள். அவனவன் நாடாக இருந்தால் தன் நாட்டையும் மக்களையும் பகையாளிகளிடமிருந்து காப்பான். ஆனால் கொங்கு நாட்டில் வலுவான மன்னர் இல்லாததால் வலுவில்லாத ஒருவன் கட்டுப்பாட்டில் இருக்கும் போது இந்த வழியாகச் செல்கிறவர்கள் எல்லாம் அழிச்சாட்டியம் செய்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.
பாண்டிய, சோழ நாடுகளில் இருப்பது போன்று மிகப்பெரிய கோட்டைகள், கலைநயம் மிக்க கோவில்கள், கட்டிடக்கலைகள் என பெரிய அளவில் சொல்லிக் கொள்ளும்படியாக கொங்குநாட்டில் இல்லை. கோட்டைகள் இருந்திருக்கின்றன. புக்கானன் கூட சத்தியமங்கலத்தில் கோட்டை ஒன்றை பார்த்திருக்கிறார். ஆனால் பெயருக்குத்தான் கோட்டை. வேலூர் கோட்டையைப் போன்றோ, நாயக்கர் மகால் போன்றோ அதைக் கருதிக் கொள்ள முடியாது.
கோயமுத்தூரில் ராஜ வீதி இன்னமும் இருக்கிறது. திப்புசுல்தான், ஹைதர் அலி காலத்தில் அந்த தெருவுக்குப் பெயர் ‘மாதே ராஜ வீதி மகால்’. அந்தக் காலத்தில் மைசூரின் கட்டுப்பாட்டில் கோவை இருந்த போது மன்னர்களுக்கு வரி வசூல் செய்து கொடுத்தவர்களுக்கு குரிகாரர்கள் என்று பெயர். சங்கரய்யா, மாதையன் என்ற பிராமணர்கள்தான் குரிகாரர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்களது அரண்மனை இந்த தெருவில்தான் இருந்திருக்கிறது. ஐதர் அலி அந்த அரண்மனையில் சில காலம் தங்கியிருக்கிறார். அப்பொழுது அவர் சுமார் அறுபதாயிரம் படை வீரர்களுக்கு பயிற்சியளிக்கும் காட்சியைப் பார்வையிடுவதற்காக கோயமுத்தூரில் ஒரு லட்சம் பொதுமக்கள் கூடினார்களாம்.
ஒரு வரலாறு மறைவதற்குள்ளாகவே அல்லது நேரடி சாட்சியங்கள் மறப்பதற்குள்ளாகவே ‘ஒரு சார்புத்தன்மை’ இல்லாமல் பதிவு செய்துவிடுவது மிக முக்கியம். புக்கானன் எழுதுகிற குறிப்புகளில் ‘பலருக்கும் மன்னரின் பெயர் தெரியவில்லை’என்று எழுதுகிறார்கள். இன்றைக்கும் கூட அந்நியப் பெயர்களை நினைவில் வைத்துக் கொள்வது சாத்தியமில்லை. அந்தக் காலத்து மக்கள், எவன் போருக்கு வந்தான் எவன் அழித்தான் என்று ஆங்கிலேயேப் பெயர்களையும், இசுலாமியப் பெயர்களையும், கன்னடப் பெயர்களையும் நினைவில் வைத்துக் கொண்டிருப்பது எப்படி சாத்தியமாகும்? நல்லவேளையாக புக்கானன் அந்தக் காலத்திலேயே பதிவு செய்து வைத்திருக்கிறார்.
ஆப்பக்கூடலில் ஒரு மணியகாரரைப் பார்க்கிறார் புக்கானன். அப்பொழுது அது நூறு வீடுகள் கொண்ட ஊர். கடைகள் கூட கிடையாது. கடைவீதியும் இல்லை. சந்தை கூடும். அங்கே வாங்கிக் கொள்கிறார்கள். ஐதர் அலி ஒரு சேட்டுவிடம்- அந்த சேட்டுவின் பெயர் வால்மன்தாஸ் 60,000 பகோடாக்களைப் பெற்றுக் கொண்டு ‘நீ நிர்வாகம் செஞ்சுக்க’ என்று கொடுத்துவிட்டார். அதன் பிறகு முப்பது அல்லது முப்பத்தைந்து வருடங்கள் கழித்து மராத்தியர் படை வந்து அழித்துவிட்டதாகச் சொன்னாராம் மணியகாரர். அதன் பிறகு புக்கானன் சென்று பார்த்த காலகட்டம் வரைக்கும் அந்த ஊரில் பெரிய வளர்ச்சி எதுவுமில்லை. ஆனால் ஆப்பக்கூடலை நாசம் செய்தது மராத்தி படையாக இருக்க வாய்ப்பில்லை எனவும் ஆங்கிலேயத் தளபதி மெடோஸ் ஆகத்தான் இருக்க வேண்டும் என்று புக்கானன் குறிப்பிடுகிறார். 1790களில் திப்புசுல்தானுக்கும், ஆங்கிலேயப்படைகளுக்கும் இந்தப் பகுதியில் கடுமையான சண்டைகள் நடைபெற்றிருக்கின்றன. அதைத்தான் மணியகாரர் குறிப்பிட்டிருக்கிறார். இவர்களுக்கு வரலாற்று பற்றிய குழப்பம் எப்பவும் இருக்கிறது என்றும் எழுதி வைத்துவிட்டார் புக்கானன்.
அந்தக்காலத்தில் நிலங்களை ஆக்கிரமிப்பது, அடுத்தவனுக்கு விற்பது, வலுவானவன் சண்டைக்கு வரும் போது கையில் காசு இருந்தால் கொடுத்து சமாளிப்பது என்பதெல்லாம் சாதாரணம். சிக்க தேவராயன்தான் மைசூர் மன்னர்களிலேயே கொழுத்த சேமிப்பினைச் செய்துவிட்டுச் சென்றவன். கஜானாவில் சுமார் ஒன்பது கோடி பகோடா இருந்ததாம். (ஒரு கோடி பகோடா என்பது கிட்டத்தட்ட மூன்று கோடி ரூபாய். ஆக, 27 கோடி ரூபாய்) கிபி 1700களில் 27 கோடி ரூபாய் என்றால் கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். அவனது மகன் வாய் பேச முடியாத, காது கேட்காதவன் இருந்தாலும் தன் மகனை ராஜாவாக்க தேவராயன் விரும்பினான். தளபதிகள் மன்னனின் ஆசையை நிறைவேற்றினார்கள். மன்னன் பெயரளவுக்கு என்றாலும் நிர்வாகத்தை மற்றவர்கள் செய்தார்கள். மிகக் குறைவான காலத்திற்கு பிறகு சிக்க தேவராயனின் பேரன் ஆட்சிக்கு வந்தான். அவன் ஊதாரி போலிருக்கிறது. இப்படி நாடு வலு குறையத் தொடங்கிய போது சுற்றிலுமிருந்த மன்னர்கள் விடுவார்களா? அடிக்கடி போர் நடக்கும். இலட்சக்கணக்கான பகோடாக்களை கப்பமாகக் கட்டி நாட்டைக் காப்பாற்றிக் கொள்வார்களாம்.
பகோடா என்பது தங்கம் அல்லது பாதி தங்கம் கலந்த நாணயம். அந்தக் காலத்து பிரிட்டன், பிரெஞ்சு மற்றும் உள்நாட்டு மன்னர்களும் கூட தயாரித்தார்கள்.
கோபிச்செட்டிபாளையம் பற்றி குறிப்பு கிடைக்கும் என்றுதான் ஆரம்பித்தேன். அந்த மனுஷன் எங்கள் ஊருக்கு மட்டும் வராமலே பிற ஊர்களைச் சுற்றியிருக்கிறார். கிராதகன்.
வரலாறு வாசிக்க வாசிக்க சுவாரசியமானது. ஏதோ பாடம் படிப்பது போல இல்லாமல் புள்ளிகள் வைத்து அதை நாம் தெரிந்து கொள்ளும் தகவல்களால் கோடு வரைந்து அழகு பார்க்க வேண்டும். கொங்குநாட்டு வரலாறு, தமிழர் வரலாறு, சேர, சோழ, பாண்டியர் வரலாறு என சில தரமான புத்தகங்களை எடுத்து வைத்திருக்கிறேன். 21 நாள் முடிந்தாலும் கூட இவற்றையெல்லாம் வாசித்து முடித்துவிட்டுத்தான் எடுத்து மேலே வைக்க வேண்டும்.
4 எதிர் சப்தங்கள்:
//பாடம் படிப்பது போல இல்லாமல் புள்ளிகள் வைத்து அதை நாம் தெரிந்து கொள்ளும் தகவல்களால் கோடு வரைந்து அழகு பார்க்க வேண்டும்.//
இது போன்ற யுக்திகளை ஆசிரியர்கள் பின்பற்றினால் மாணவர்களுக்கு ஆர்வம் ஏற்படும்.
சிறந்த வழிகாட்டல்
வரவேற்கிறேன்
அந்த புத்தக தலைப்புகளை பதிவிடும்படி கேட்டுக் கொள்கிறேன்.
antha puthagangal e-book irupin pathividavum.
Post a Comment