Apr 2, 2020

இந்தியா தப்பித்துவிடும்...

ஒவ்வொரு நாளும் கொஞ்ச நேரமாவது ‘கோவிட்19 இந்தியா’ என்று கூகிளில் தேடுவது வழக்கம். கடந்த இரண்டு வாரங்களில் ‘இந்தியாதான் அடுத்த ஹாட் ஸ்பாட்’ ‘இந்தியாவில் கொரோனா பெருவெடிப்பு நிகழவிருக்கிறது’ என நிறையக் கட்டுரைகள் வெளியாகியிருந்தன. பெரும்பாலும் பயமூட்டக்கூடியவை. கடந்த ஒன்றிரண்டு நாட்களாக அந்த மிரட்டல் தொனி குறைந்து ‘இந்தியர்கள் அதிகம் பாதிக்கப்படாததன் காரணம்’ என்ன என்று அலசுகிற கட்டுரைகள் இணையத்தில் பரவலாக அதிகரித்திருக்கின்றன. இந்தியாவில் 2000 நோயாளிகள் என்பது வெளியிலிருந்து பார்க்கும் போது பெரிய எண்ணிக்கைதான். ஆனால் நூற்றி முப்பத்தைந்து கோடிகளில் இரண்டாயிரம் என்பது மிகக் குறைவு. ஏனெனில் மக்கட்தொகையின் நெரிசல் பிற எந்த நாட்டையும் விட இங்கேதான் அதிகம். ஒரு சதுரகிலோமீட்டருக்கு 405 பேர். அதுவே அமெரிக்காவில் வெறும் 40 பேர்கள்தான்.

தினசரி அதிகரிக்கும் நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கையை கவனத்தில் எடுத்துக் கொண்டால் வேகம் சற்றே அதிகமாகியிருக்கிறது. ஆரம்பத்தில் வேகம் சற்று மட்டுப்பட்டிருந்த எண்ணிக்கை கடந்த ஒன்றிரண்டு நாட்களில் 208, 288, 379 என்று அதிகமாகியிருக்கிறது. கடந்த வார இறுதியில் 987 என்ற எண்ணிக்கை இந்த வார மத்தியில் இரண்டாயிரத்தைத் தொட்டுவிட்டது. ஒருவேளை எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தினால்- தினசரி 200 முதல் 400 வரை புதிய நோய்த் தொற்றாளர்கள் என்கிற எண்ணிக்கையில் - அடுத்த வாரம்  ‘இந்தியா எப்படி தப்பித்தது’ என்கிற வகையறா கட்டுரைகளின் எண்ணிக்கை அதிகரித்துவிடும்.

இந்தியாவில் நோய்ப்பரவலுக்கான வேகம் குறைவாக இருக்கக் காரணம் என்ன என்று அலசும் கட்டுரைகளில் ‘தட்பவெப்பநிலை வைரஸ் பரவலைத் தடுக்கும் என்று உறுதிப்பூர்வமான தகவல்கள் இல்லை’ என்றாலும் கூட, இந்திய தட்பவெப்பநிலை வைரஸ்களுக்கு பாதகமாக இருக்கக் கூடும் என்று ‘இப்படியொரு குத்து அப்படியொரு குத்தாக’ ஆரம்பித்தார்கள். அதன் பிறகு இந்தியர்களுக்கு இயல்பிலேயே நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்கிற வாதம் பரவலாக முன்வைக்கப்பட்டது. அதற்கு காரணம் இங்கே நிலவுகிற மக்கள் நெரிசல், அசுத்தம் போன்ற காரணங்களால் மேற்கத்திய நாடுகளைவிடவும் நுண்ணுயிரிகளின் பரவலுக்கு வாய்ப்புகள் அதிகம். அதனால் ஒவ்வொரு இந்தியனும் தன் வாழ்நாளில் பல்வேறு நுண்ணுயிரிகளை எதிர்த்துப் போராடித்தான் வளர்கிறான். அதனால் இயல்பாகவே அதிகரித்திருக்கும் நோயெதிர்ப்புத்திறன் கொரோனாவிலிருந்து இந்தியர்களைக் காத்துவிடக் கூடும் என்று பேசினார்கள். கடந்த ஒன்றிரண்டு நாட்களாக பி.சி.ஜி தடுப்பூசி குறித்து விவாதங்களை அதிகரித்திருக்கிறார்கள். 

கடந்த தலைமுறை ஆட்களுக்கு இடது கையில் வட்டத் தழும்பு இருக்கும். அது பிசிஜி தடுப்பூசி போடப்பட்டதற்கான அடையாளம். அது காசநோயைத் தடுப்பதற்கான ஊசி. 1948 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் அது கட்டாயமாக்கப்பட்ட தடுப்பூசி. அதுவும் கொரோனா நோய்த்தடுப்பில் முக்கியப் பங்காற்றக்கூடும் என்கிறார்கள். அமெரிக்காவிலும், இத்தாலியிலும் இந்த தடுப்பூசி கட்டாயமில்லை. ஆனால் ஸ்பெயின் நாட்டில் கட்டாயம், பிரான்ஸ் நாட்டில் 2007 ஆம் ஆண்டு வரைக்கும் கட்டாயமாக இருந்தது. அப்படியானால் ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் பரவல் குறைவாகத்தானே இருக்க வேண்டும்? ஆனால் அங்கு பரவலின் வீரியம் அதிகம். 

‘அதெல்லாம் இல்லைங்க...இந்தியாவில் டெஸ்ட் செய்யறது ரொம்ப குறைவான ஆளுங்களுக்கு..இன்னமும் நிறையப் பேருக்கு பரிசோதனை செய்தால்தான் உண்மையான கணக்கு வெளியில் வரும்’ என்று ஒரு தரப்பு சொல்லுகிறது. நோய் பரவியிருந்தால் இந்நேரம் மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பத் தொடங்கியிருக்கும். அவனவன் உயிர் பயத்தில் மருத்துவமனைகளில் கால் வைக்க இடமில்லாமல் கூட்டமாகச் சேர்ந்திருப்பார்கள் என்று இன்னொரு தரப்பு சொல்லிக் கொண்டிருக்கிறது. இரண்டுமே தர்க்கரீதியாக சரியான வாதமாகத்தான் தெரிகிறது. 

கொரோனா வைரஸின் இன்குபேஷன் பீரியட் பதினான்கு நாட்கள் என்பதால் நோய்த் தொற்று வந்தவுடன் உடல்நிலை பாதிப்படைவதில்லை. அதனால் இன்னமும் சில நாட்களில் நிலைமை தெரியும் என்கிறார்கள். அதனால் நகங்களைக் கடித்துக் கொண்டு வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டியதுதான். 

இந்தியாவில் அடுத்த சில வாரங்களுக்கும் நோய்பரவல் கட்டுக்குள் இருக்குமானால் ஏதோ ஒரு காரணம் மட்டும் இருக்காது என்று மட்டும் புரிகிறது. தட்பவெப்பம், நோய் எதிர்ப்புத்திறன், பிசிஜி தடுப்பூசி, போல இன்னமும் கண்டறியப்படாத எதுவோ என பல்வேறு காரணங்கள் ஒன்றிணைந்திருக்கக் கூடும். ஒவ்வொரு வாரமும் எல்லோரும் சொல்வது போலவே ‘இந்த வாரமும் மிக முக்கியமானதுதான்’.

கடந்த இரண்டு வாரங்களில் இருந்ததைக் காட்டிலும் சற்றே பயம் குறைந்தது போல இருந்தாலும் எந்த முடிவுக்கும் உடனடியாக வந்துவிட வேண்டியதில்லை. பல்வேறு காரணிகளையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. நோயின் வீரியம் அதிகரிக்காமல், தமக்கு நோய் இருப்பதே தெரியாமல் தொற்றாளர்கள் இயல்பாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அப்படியெல்லாம் நோய்த்தொற்று எதுவுமில்லாமல் இன்னமும் ஐந்து முதல் பத்து நாட்களில்- ஏப்ரல் 7 முதல் 10 ஆம் தேதி வரையிலும் நிலைமை இப்படியே சீராக இருந்துவிட்டால் தப்பிவிடுவோம் என்றுதான் தோன்றுகிறது. 

பொதுவாகவே பல பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் அதிகரித்திருக்கிறது. அரசும் மெல்ல கண்டு கொள்ளாமல் ‘மக்கள் அச்சத்தை உணரவேயில்லை’ என்றெல்லாம் கை கழுவ முயற்சிப்பதைப் போல பேசுவதைப் பார்க்கும் போது பயமாகவும் இருக்கிறது. 

இனி ஊரடங்கு நீக்கப்பட்டாலும் கூட நோய்ப்பரவல் இருந்து கொண்டேதான் இருக்கும். கொரோனாவுக்கான தடுப்பூசி அல்லது முழுமையான சிகிச்சைக்கான மருந்து கண்டறியப்படும் வரையிலும் பம்மிக் கொண்டேதான் இருக்க வேண்டும் என்பதுதான் கடியாக இருக்கிறது. தள்ளி நின்று பேச வேண்டும்; கையைக் கழுவிக் கொண்டேயிருக்க வேண்டும்; திருமணம், துக்ககாரியம் என்று எங்கேயும் தலை காட்டவே தயக்கமாக இருக்கு. பேருந்து, ரயில் கூட பயம்தான். யார் இருமினாலும் பயமாக இருக்கும்; நமக்கு இருமல் வந்தால் நடுக்கமும் கூடவே வரும்.  முந்தாநாள் பாலுக்கு போய்விட்டு வந்தவுடன் தும்மல் வந்துவிட்டது.  ‘எதுக்குடா வம்பு’ என்று தனியறையில் படுத்துக் கொண்டேன். விடிந்து பார்த்தால் ஒன்றையும் காணோம். நம்மைக் காலம் முழுக்கவும் பயத்தில் வைத்திருப்பதற்கென்றே உருவெடுத்து வந்திருக்கிறது கொரொனா!

3 எதிர் சப்தங்கள்:

கரந்தை ஜெயக்குமார் said...

இதுவும் கடந்து போகும்

NAGARATHAN said...

நிச்சயமாக இதுவும் கடந்து போகும். ஆனா போறதுக்குள்ள ஆட்டம் காட்டுமோன்ற பயம்தான் நம்மையெல்லாம் ஒரு தும்மலுக்கே பதுங்க சொல்லுது. மொத்தத்துல இந்தியாவுல பெரிய விழிப்புணர்வு இல்லைங்கிறதும், அரசு எந்திரம் (வழக்கம் போல) சொதப்புறதும் உண்மை.

Paramasivam said...

தப்பித்து விடும் என்று சிறிது மகிழ்வுடன் படிக்க ஆரம்பித்தால் பயமுறுத்தலுடன் (குறைவான) எழுதி உள்ளீர்கள்.
பயத்திடனே இன்னும் 2 வாரம் தள்ளுவோம். என்ன செய்வது.