Apr 30, 2020

அரசு ஊழியர்களுக்கு எதற்கு சம்பளம்?

அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பது மிகச் சிறந்த யோசனை என்று வாட்ஸப் குழுமம் ஒன்றில் ஒரு நபர் எழுதியிருந்தார். அதற்கு பெரிய ஆதரவில்லை. பேரிடர் காலத்தில் அரசு ஊழியர்களின் பணிகளை பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்? ஆனால் பலருக்கும் குழப்பம் நிலவுகிறது. ‘குறைக்கணுமா கூடாதா’ என்று குழம்புகிறார்கள். ‘அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அதிகம்’ என்று உருவேற்றி வைத்திருக்கிறோம் அல்லவா? அப்படித்தான் குழம்பத் தோன்றும். 

எந்த தனியார் மருத்துவமனையும் செயல்படாத போது அரசு மருத்துவர்கள்தான் தம் குடும்பம், குழந்தகளை எங்கோ விட்டுவிட்டு மருத்துவமனைகளில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். தூய்மைப்பணியாளர்கள் விடிவதற்கு முன்பாகவே கிருமிநாசினிகளை தூக்கி வந்துவிடுகிறார்கள். இரவு வரைக்கும் தெருக்களிலேயே அலை மோதுகிறார்கள். காவல்துறையினர் பற்றி கேட்கவே வேண்டியதில்லை. ‘சார், வொர்க் ப்ரம் ஹோம்..கரண்ட் இல்லை சார்’ என்றால் மின்வாரிய ஊழியர்கள் வந்துவிடுகிறார்கள். ரேஷன் கடை ஊழியர்கள் தொடங்கி களத்தில் நிற்கும் ஒவ்வொரு அரசு ஊழியரையும் கையெடுத்துக் கும்பிட வேண்டும். 

இவர்கள் யாராவது முகச்சுளிப்பை காட்டுகிறார்களா? சிலர் திரும்பத் திரும்பச் சொல்வார்களே- அரசு ஊழியர்கள் அசமஞ்சம், காசு கொடுக்காமல் வேலை நடக்காது என்றெல்லாம்  அப்படி யாராவது இந்த முப்பத்தைந்து நாட்களில் இருந்தார்களா? 

அப்படியென்றால் அரசு ஊழியர்கள் அத்தனை பேரும் யோக்கிய சிகாமணிகளா என்றால் இல்லை. இங்கே எல்லோருக்கும் சுயநலம் இருப்பது போலவே அவர்களுக்கும் இருக்கிறது. எல்லோரும் வாய்ப்பு கிடைத்தால் செய்யக் கூடிய பிழைகளை அவர்களிலும் பலரும் செய்வார்கள். எல்லோரும் நினைப்பதைப் போலவே தம் குடும்பத்துக்கும் வருமானம் பார்த்து சொத்து சேர்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அரசு ஊழியர்களிலும் உண்டு. ஆனால் இந்தத் தவறுகளையெல்லாம் அரசு ஊழியர்கள் மட்டுமே செய்வதாகவும் பிறர் அத்தனை பேரும் தம்மை உத்தமபுத்திரன்களாகவும் கருதிக் கொள்வதுதான் வேடிக்கை. அந்த உத்தமபுத்திரன்கள்தான் அரசு ஊழியர்கள் என்றாலே மோசம் என்பார்கள். மேற்சொன்ன பிரச்சினைகள் யாவும் அரசு ஊழியர்களுக்கு மட்டும் பொதுவானதில்லை. அது இந்த மனித சமூகத்தில் அத்தனை பேருக்கும் உண்டு. ஆனால் அரசு ஊழியர்கள் மீதுதான் நம் கண் முழுவதும் இருக்கிறது.

சமீபகாலமாக கவனித்துப் பார்த்தால் ஒன்றை உணர முடியும். சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மீது விஷத்தையும் வன்மத்தையும் தூவும் மிக மோசமான அரசியல் முன்னெடுக்கப்படுகிறது.  அந்த வன்மம் குறிப்பிட்ட மதத்தினர் மீது மட்டுமில்லை; குறிப்பிட்ட சாதியினர் மீது மட்டுமில்லை; குறிப்பிட்ட பணியினர் மீதும் கூட நிகழ்த்தப்படுகிறது. ஒரு பிரிவின் மீது வன்மத்தை விதைக்கும் போது அந்த வன்மத்தை ஆதரிக்கிறவர்கள் தம் பக்கம் நிற்பார்கள் என்கிற மோசமான polarization அரசியல்தான் இது. இந்த அரசியலில் அரசு ஊழியர்களும் சிக்கிக் கொண்டார்கள் என்பதுதான் வேதனை. துரதிர்ஷ்டவசமாக ஆளும் வர்க்கமே இதை பகடைக்காயாக பயன்படுத்தியது. ‘அரசு ஊழியர்களுக்கு சம்பளமாகவே பல்லாயிரம் கோடி ரூபாய் போகிறது’ என்று பேசி முதலமைச்சரே எண்ணெய் ஊற்றியது நினைவில் இருக்கிறதா?

ஒரு நிறுவனம் இயங்கும் போது அதனை இயக்க ஊழியர்கள் அவசியம். ‘நீ இவ்வளவு படிச்சிருக்க; உனக்கு இவ்வளவு சம்பளம் தர்றேன்; இவையெல்லாம் உனக்கு அளிக்கப்படும் சலுகைகள்..எனக்காக வந்து வேலை பார்’ என்று பணியில் அமர்த்தும் போது உறுதி வார்த்தைகளை வழங்கி நியமன ஆணை வழங்குவதுதானே உலக நடைமுறை? அப்படி தம்மை நம்பி வந்தவனிடம், தாம் வழங்குவதாக உறுதியளித்த நிதியை வைத்து பல்வேறு வாழ்நாள் திட்டங்களை வகுத்துக் கொண்டவனிடம் ‘உனக்கு நான் நிறையப் பணம் கொடுக்க வேண்டியிருக்கிறது’ என்று சலித்துப் பேசுவது எவ்வளவு மோசமான முன்னுதாரணம்? ஆனால் அதைச் செய்தார்கள். 

இன்று பேரிடர் வரும் போது யாருக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது என்று குற்றம் சாட்டினார்களோ அவர்கள்தான் முன்கள வீரர்களாக நிற்கிறார்கள். சுகாதாரம், நகராட்சி, உள்ளாட்சி, காவல்துறை என்று பெரும்பாலான பணியாளர்கள் தமக்கு நோய் வந்துவிடும் என்ற பயத்தை மறைத்து உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை நம் குடும்பத்துக்கு தொற்று ஏற்பட்டுவிட்டால் என்ன செய்வது என்ற பதற்றமிருந்தாலும் ஒவ்வொரு நாளும் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறவர்கள் அவர்கள்தான். அன்று அவதூறு வீசியவர்களில் யாராவது ஒருவர் இன்று இதை மறுத்துப் பேச இயலுமா?

நீங்களும் நானும் வீட்டில் பாதுகாப்பாகத்தானே இருக்கிறோம்? பால் வாங்கச் சென்றாலும் கூட பதறுகிறோம். ஆனால் அரசு ஊழியர்கள்தான் ஒரு நாளைக்கு பத்து மணி நேரத்துக்கும் மேலாக தெருவில் நிற்கிறார்கள். ‘எங்களுக்கு சம்பளம் சேர்த்துக் கொடுங்கள்’ எங்கேயாவது ஒரு முணுமுணுப்பு கேட்கிறதா? ஆனால் இந்தப் புரிதல் இல்லாமல் நம்மில் எத்தனை பேர் அன்றைய தினம் ‘ஆமா...அவர்களுக்கு சம்பளம் கொடுப்பது அவசியமில்லை’ என்று முதல்வரின் பேச்சுக்கு ஒத்து ஊதினோம்? எவ்வளவு ஊடகங்களில் அரசு ஊழியர்களின் சம்பளம் குறித்து வன்மத்தோடு விவாதித்தார்கள்? 

மிகச் சமீபத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்திய மருத்துவர்களை பொதுவெளியில் கொச்சைப்படுத்தி, துறை ரீதியிலான நடவடிக்கை எடுத்தது நினைவில் இருக்கிறதா? அப்பொழுதெல்லாம் அரசு மருத்துவர்களுக்கு எதிராக சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ‘இவர்களுக்கு எதுக்கு இவ்வளவு சம்பளம்’ என்று வாய்க்கு வந்ததையெல்லாம் பேசினார்கள். இன்றைக்கு நாற்பது நாட்களாக தம் குழந்தைகளை பெற்றோரிடம் விட்டுவிட்டு அவர்களை பார்க்கக் கூடச் செல்லாத அரசு மருத்துவர்கள் எத்தனை பேர்கள் இருக்கிறார்கள் என்றாவது யோசிக்கிறோமா? எத்தனை மருத்துவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கிறது? எத்தனை சுகாதாரப் பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்? ஏன் அவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டது? சம்பளம் கேட்ட போது வக்கனையாக பேசிய ஆட்சியாளர்கள் இப்பொழுது மருத்துவர்களின் பாதுகாப்புக்கு என்ன உதவிகளைச் செய்தார்கள்? இப்படி எதையாவது நாம் யோசிக்கிறோமா? 

யாரோ கிளப்பிவிடும் ஜோதிகா பேசியதுதான் முக்கியம். அதுதான் பேசுபொருள். மற்றபடி, கொரானா தொற்று எண்ணிக்கை நமக்கு தொலைக்காட்சியில் வெறும் எண்ணாக மட்டுமே ஓடிக் கொண்டிருக்கிறது. இல்லையா? அரசு ஊழியர்கள் தமக்கான சலுகைகளையும் ஊதிய உயர்வினையும் பெற காலங்காலமாக நடத்திய போராட்டங்கள் எத்தனை? கைதுகள் எத்தனை? சிறை சென்றவர்கள், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள், துறை ரீதியிலான நடவடிக்கைகளுக்கு ஆளானவர்கள்- இதைப் பற்றியெல்லாம் எதுவுமே யோசிக்காமல் என்னவோ நேற்று ஆட்சிக்கு வந்தவர்கள்தான் பணி நியமன ஆணை வழங்கி மொத்த அரசு எந்திரத்தையும் சுழலச் செய்தார்கள் என நினைப்பது எவ்வளவு அபத்தம்? ஒவ்வொரு ஆரமாகச் சேர்க்கப்பட்டு, மாற்றப்பட்டு அந்தச் சக்கரம் காலங்காலமாக சுற்றிக் கொண்டிருக்கிறது. திடீரென்று ‘அவர்களுக்கு சம்பளம் அதிகம்’ என்று பேசுவது அற்பமான எண்ணமில்லாமல் வேறு என்ன?

கடவுள், மதம், அரசு ஊழியர்கள், வல்லரசுகள், வளர்ச்சி இன்னபிற இத்யாதிகள் என்று சமீபமாக ஊதிப்பெருக்கப்பட்ட கட்டுக்கதைகள், பிம்பங்கள், அவநம்பிக்கைகளை உடைத்து நொறுக்கவே கொரோனா உருவெடுத்து வந்ததோ எனத் தோன்றுகிறது. ‘யாரோ சொல்வதை, சுயபுத்தி துளியுமில்லாமல் பைத்தியகாரன் மாதிரி உளறிட்டு இருந்தீங்களே...பாருங்கடா’ என்று காட்டிக் கொண்டிருக்கிறது என்றே நினைக்க வேண்டியிருக்கிறது. 

அன்றைக்கு அரசு ஊழியர்கள் குறித்தும், அவர்களது ஊதியம் குறித்தும் அவதூறுகளைப் பரப்பிய ஆட்சியாளர்கள்தான் இன்றைக்கு அரசு ஊழியர்களை முழுமையாக நம்பியிருக்கிறார்கள். அவர்கள் இல்லையெனில் மொத்த அரசு இயந்திரமும் முடங்கிப் போய்விடும் என்றுணர்ந்த அவர்களது ஆதரவாளர்களில் சிலரும், இன்னும் வேறு சிலரும் நேர்மையாகப் பேசுவதாக நினைத்து ‘களத்தில் நிற்பவர்களுக்கு மட்டும் ஊதியப்பிடித்தம் செய்ய வேண்டாம்; பிற துறை பிடிக்கலாமே’ என்று பேசத் தொடங்கியிருக்கிறார்கள். ஆசிரியர் உட்பட வேறு சில துறை ஊழியர்கள் வீட்டில்தான் இருக்கிறார்கள். அதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் ஒருவேளை நிலைமை கைமீறி போனால், இப்பொழுது இருக்கும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை போதாமல் போனால் முதலில் யார் களமிறக்கப்படுவார்கள்? அரசு தனது ஊழியர்களுக்குத்தான் முதல் உத்தரவை போடும். நீங்களும் நானும் வீட்டிலேயே இருந்து கொள்ளலாம். ஆனால் அரசு ஊழியர்கள் எந்த மறுப்பையும் சொல்லாமல் களமிறங்க வேண்டும். ஆசிரியர்கள்தான் நோட்டுப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு வீதி வீதியாகக் கணக்கெடுக்கச் செல்வார்கள். 

ஒரு பணியாளரை வேலைக்கு அமர்த்துவதன் அடிப்படை தாரக மந்திரமே - ‘உனக்கு நான் ஒவ்வொரு மாதமும் சம்பளம் தருகிறேன்; ஒருவேளை நிலைமை மோசமானால் நீ என்னோடு துணை நிற்க வேண்டும்’ என்பதுதான். அரசுக்கு மட்டுமில்லை; தனியார் நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். நூறு தற்காலிகப் பணியாளர்கள் இருந்தாலும் ஏன் நாற்பது பேர்களாவது நிரந்தரப் பணியாளர்களாக இருக்கிறார்கள்? அவர்களுக்கு ஏன் வருடாவருடம் சம்பள உயர்வு அளிக்கிறார்கள்? ஏன் ஊக்கத் தொகை வழங்குகிறார்கள்? ஏன் தம்மைவிட்டுப் போகாமல் இழுத்துப் பிடித்துக் கொள்கிறார்கள்? மேலே சொன்ன மந்திரம்தான் காரணம்.

நீங்கள் நினைத்தால் வேலைக்கு வைத்துக் கொள்வதும், நினைத்தால் சம்பளத்தை பறிப்பதற்கும் என்ன பெயர் வைப்பது? இவ்வளவு பேரிடரின் போதும், களத்தில் நிற்கும் அரசு ஊழியர்களின் ஊதியத்தில் கை வைப்பதை வழிப்பறியாகத்தான் கருத வேண்டும். எவ்வளவு பேரிடர் வரினும் பணியாற்ற வேண்டியது எப்படி அவர்களின் கடமையோ அதே போலத்தான் ஊதியம் என்பது அவர்களது உரிமை. இரவு பகல் பாராது உழைத்துக் கொண்டிருக்கும் அவர்களின் ஊதியத்தில் கை வைப்பது எந்தவிதத்தில் நியாயம்? அரசு தமக்கான மாற்று வழிகளை யோசிக்க வேண்டும். பினரயி விஜயன் பிடித்தம் செய்கிறார்; ஜெகன் மோகன் ரெட்டி பிடித்தம் செய்கிறார் என்றால்- ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கும். பினரயி விஜயனுக்கும் மத்திய அரசுக்கும் ஏழாம் பொருத்தம். ஜெகன் மோகனின் மாநிலம் புதியது. வருமான வாய்ப்புகள் இல்லை என்று ஒவ்வொன்றையும் சொல்வார்கள். அப்படியொரு காரணத்தை சொல்ல வேண்டியதில்லையா? மத்திய அரசோடு இணக்கம் காட்டுகிறோம் என்று சாதித்தது என்ன மக்களுக்கு விளக்க வேண்டியதில்லையா?

பேரிடரின் போது அரசு வருமானம் திரட்டும் காரியங்களைப் பார்க்க வேண்டும். என்ன வாய்ப்புகள் இருக்கின்றன என ஆலோசிக்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் எவ்வளவு வரி வசூலிக்கிறார்கள்? அதில் நம் பங்கு வந்து சேர்ந்ததா? மத்திய அரசின் நிதி உதவி கிடைத்ததா? திருடிக் கொண்டு ஓடு தொழிலதிபர்களை ஏன் விட்டுவைக்கிறார்கள் என்பதையெல்லாம் பார்த்துவிட்டு எந்த வழியுமே இல்லாத சூழலில், நிலைமையை விளக்கிவிட்டு அரசு ஊழியர்களிடம் கேட்கலாம்- பறிக்கக் கூடாது- கேட்க வேண்டும்.

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் கை வைப்பது என்பது தம்மை நம்பியிருப்பவருக்கு அரசு செய்யும் மாபெரும் துரோகம்- அது நிறுத்தி வைப்பாக இருந்தாலும் சரி; ரத்தாக இருந்தாலும் சரி; பிடித்தமாக இருந்தாலும் சரி. ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் மகனாக, பெற்றோருக்கு அரசு கொடுத்த ஊதியத்தில் உண்டு உடல் வளர்த்து, படித்து அறிவை வளர்த்து மேலே வந்த ஒருவனாக அப்படித்தான் இதைச் சொல்வேன்.

15 எதிர் சப்தங்கள்:

YogAnand said...

நெஞ்சார்ந்த நன்றி. நீங்கள் குறிப்பிட்ட ஒரு சில துறைகள் மட்டும் அல்லாமல் வேறு பல துறைகளும் பின் புலத்தில் இயங்கி க் கொண்டு தான் இருக்கின்றோம்.

viswa said...

அருமையான அலசி எழுதப்பட்ட கருத்துக்கள் தொடரட்டும்உங்கள் பணி

விஸ்வநாதன்

Unknown said...

மிகச்சரியான வார்த்தைகள், மணிகண்டன்.

களத்தில் நின்று பணியாற்றுபவர்களுக்கும், பின்னின்று உதவுபர்களுக்கும் ஊக்கத்தொகை கொடுக்கவேண்டுமே தவிர, இருப்பதை பறிக்கக்கூடாது

sundararajan c said...

காலம் காலமாக சுமார் 30 வருடங்கள் ஆக 20 80கதையை தான் அரசியல்வாதிகளும் மீடியாக்களும் செய்கின்றனர்

Unknown said...

Vallga govt servernt.oliga innattu mannarkal.

Bala said...

வங்கி ஊழியர்களையும் ேர்த்து ெ எள்ளவும்
மே தின வாழ்த்துக்கள

நரசிம்மன் said...

உதாரணத்திற்கு இந்து சமய அறநிலையத் துறையில் இந்த வருடம் முழுக்க எந்த கோவில்களிலும் திருவிழா கிடையாது எந்த ஒரு வருமானமும் இல்லை ஆனால் அதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு எண்பதாயிரம் வாங்குபவர்களுக்கு ஒரு 10,000 15,000 அடிப்படை ஊதியம் மட்டும் கொடுத்தால் போதுமானது என்பதே என் எண்ணம்

M.Selvaraj said...

அரசு ஊழியர்களின் மேல் பொதுமக்களுக்கு பொறாமை வருவதற்கான காரணம் மிக எளிது, எந்த பெருந்தொற்று அல்லது பொருளாதார நெருக்கடி வந்தாலும் அரசு ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை அவர்களுக்கான பணி பாதுகாப்பு அவர்களின் வேலையை உறுதி செய்கிறது மாதம் தவறாமல் ஊதியம் கிடைத்து விடும்  ஆனால் மற்ற தனியார் துறை பணியாளர்கள் வேலையிழப்பு, சம்பளம் குறைப்பு, ஊதியமில்லாமல் விடுமுறை  என்று கடுமையான பொருளாதார சிக்கல்களுக்கு உள்ளாவார்கள். சிறுதொழில் புரிவோர் மற்றும் அதைசார்ந்து இருப்பவர்கள் இனி என்ன செய்வது என்று கையை பிசைந்து கொள்வார்கள்.BE, ME முடித்துவிட்டு தனியார் கல்லூரியில்  மாதம் ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் வரை மாத ஊதியமாக வாங்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வாழும் நாடு இது. மாதம் ஆயிரம் ரூபாய் முதியோர் உதவித்தொகையை மட்டும் நம்பியிருக்கும் இலட்சக்கணக்கான எளிய மனிதர்களை கொண்ட நாடு.
அடகு கடையில் மேலாளராக மாதம் இருபதாயிரம் ஊதியம் வாங்கி கொண்டிருந்தவருக்கு போனமாதம் பத்தாயிரம்தான் ஊதியமாக கிடைத்தது அதில் வீட்டு வாடகை நான்காயிரம் கொடுத்துவிட்டு லோன் மற்றும் இதர வீட்டுச்செலவுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் சமீபத்தில் உங்களை தொடர்பு கொண்ட உங்கள் நண்பரை போன்றவர்கள் ஆயிரக்கணக்கில் வாழும் ஒரு நாடு  அப்படி பட்ட நாட்டில் , (மாநிலத்தில்) அரசு வேலையில் மாதம் இருபதாயிரத்தைவிட அதிகமாக ஊதியம் வாங்கும் அரசு ஊழியர்களின் சம்பளம் அதிகமாகவே தெரியும். இது இயல்பானதுதான்.
சென்னையில் வெள்ளம் சூழ்ந்த நேரத்தில் பெரும்பாலான இளைஞர்களும், சமூக ஆர்வலர்களும், தங்களின் படகுகளை கொண்டு வந்து மீனவர்களும் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் மீட்பு பணியில் இறங்கினர், நாற்றமெடுக்கும் சாக்கடை நீரில் மூழ்கி வடிகால் அடைப்பை ஊழியர்கள் சரி செய்தனர்,  ஓகி புயல் வந்த நேரத்தில் ரோட்டில் சாய்ந்த மரங்களை அந்தந்த ஊரைச்சார்ந்த இளைஞர்களே கடும் உடலுழைப்பை கொடுத்து வெட்டி அகற்றினர். யாரும் அதற்கான Credit கேட்கவில்லை. இந்தமுறை மருத்துவ பணியாளர்களின் பங்களிப்பு. இது அவர்களின் முறை, மருத்துவ பணியாளர்கள்தான் நோய் குறித்தும் நோய்த்தொற்றுக்குறித்தும் படித்தவர்கள் அந்த துறையில்தான் பயிற்சியும் திறமையும் பெற்றிருக்கிறார்கள், அதுதான் அவர்களின் வேலை, அரசு மருத்துவகல்லூரியில் மருத்துவம் பயிலும் போது ஏழை நோயாளிகளின் உடல் நோயின்  மூலம் நேரடி மருத்துவ பயிற்சியை பெற்றவர்கள் தாங்கள் என்பதையும் மறந்துவிடக்கூடாது. நாங்கள் தெய்வீக தொழில் செய்கிறோம் என்றும் நோய் தடுப்புக்கான ஒட்டுமொத்த பயனையும் தாங்களே அறுவடை செய்ய  வேண்டும் என்று மருத்துவ பணியாளர்கள் செயல்பட தொடங்கியிருக்கிறார்கள்.அதிக பங்களிப்பை வழங்குபவர்கள் மருத்துவ பணியாளர்களானாலும் இது ஒரு கூட்டு முயற்சி.
அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தை குறைப்பதோ, பிடித்தம் செய்வதோ நிச்சயம் கூடாது அது அறமும் அல்ல. ஆனால் பெருந்தொற்று நேரத்தில் நாங்கள் தான் முன்னின்று  மக்களுக்கு சேவை  செய்கின்றோம் என்று இந்த நேரத்தை பயன்படுத்தி தங்களின் ஊதிய உயர்வுக்காக அரசாங்கத்திற்கு மறைமுக அழுத்தம் கொடுப்பதும் அறமல்ல.

நோயின் தாக்கமாக மருத்துவர்கள் உயிரிழப்பது வேதனைக்குரியது. மருத்துவர்கள் பயன்படுத்த தரமான பாதுகாப்பு சாதனங்கள் தேவைகேற்ப தட்டுபாடில்லாமல் அரசு வழங்க வேண்டும். கடுமையான உழைப்பையும் சிறந்த கல்வி அறிவையும் கோரும் படிப்பான மருத்துவம் படித்த டாக்டர்களுக்கு அதிக பட்ச ஊதியத்தை கொடுப்பதில் அரசு தயக்கம் காட்டக் கூடாது.

Anonymous said...

Registrar office la oru small approval ku 50000 lanjam ketanga. Illana thara mattenu meraturanga. RTO office la pakatha lanjama. Avanagala yar sir control panradhu. Thats why public avanga mela kovama irukanga.

RAJA said...

மிக அருமை, செல்வராஜ். மணிகண்டனின் இந்த பதிவை படித்ததும் ஏதோ அரசு ஊழியர் சங்க போராட்டத்தில் மாட்டி கொண்டேனோ என்று நினைத்து விட்டேன் :) மக்களுக்காகவே வாழும் பெரிய தியாகிகள்  போன்ற இவ்வளவு சிரமமான அரசு வேலைக்கா  சிபாரிசு, லட்சக்கணக்கில் லஞ்சம், தேர்வுகளில் தில்லுமுல்லு என்று மக்கள் அலைகிறார்கள்!! அடடடா!

இந்த நாட்டில் நடக்கும் அத்தனை சீரழிவுகளுக்கும் அரசியல்வாதிகள் காரணம் என்றால் அதில் முக்கிய பங்கு அரசு ஊழியர்களுக்கும் இருக்கிறது. அரசு ஊழியர்கள் துணை இல்லாமலா இவ்வளவு லஞ்சமும், நிர்வாக சீரழிவும் நடக்கிறது? ஒரு அரசு அலுவலகம் செல்ல வேண்டுமென்றாலே சாதாரண மக்கள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பதை நாம் காணலாம். அந்த அளவுக்கு மக்களை படுத்தி இருக்கிறார்கள். அப்பாவி மக்களை பிழிந்து பிழிந்து அலைய விட்டு அலட்சியமாக பதில் அளித்து அவர்களின் வேலையை,நேரத்தை பற்றி கொஞ்சமும் அக்கறை இல்லாமல்....எழுத ஆரம்பித்தால் முடிவு இல்லை.
 
அரசு ஊழியர்கள் போராட்டம் மக்கள் ஆதரவை சுத்தமாக இழந்து விட்டது. இனி எவ்வளவு முயற்சி செய்தாலும் மக்களின் எண்ணத்தை மாற்ற இயலாது. இதுதான் நிதர்சனம். இதற்கு அரசையும் மீடியாவையும் குறை சொல்லி, அவர்கள்தான் காரணம் என்று அரசு ஊழியர்கள் நினைக்கலாம். குற்றமும் சாட்டலாம். 

இல்லை, உங்களில் இருக்கும் கருப்பு ஆடுகள்தான் அதற்கு காரணம். அரசு பணியை ஏதோ ஆண்டான் அடிமை போல் நினைத்ததும் ஒரு காரணம். அன்றும் இன்றும் சாமான்ய மக்களுக்கு எதிராக தீட்டப்படும் ஒவ்வொரு ஆணைக்கும் பின்னால் அரசு மட்டுமில்லை, அரசு அதிகாரிகளும் இருக்கிறார்கள். பணம் இருந்தால் எப்படிப்பட்ட குற்றத்தையும் செய்து விட்டு தப்பிக்கலாம் என்ற நிலைக்கு பக்கபலமாக இருப்பது காவல் துறைதானே. இந்த பேரிடர் காலத்தில்தான் டாஸ்மாக் சரக்குகள் கொள்ளை விலையில் கிடைக்கிறதே, அதன் ஆக்கமும் முடிவும் அரசு ஊழியர்களே. ஒரு துளி நஞ்சு என்றாலும் நஞ்சு நஞ்சுதான்.

அரசு ஊழியர்கள் தான் இந்த சக்கரத்தை சுழல செய்கிறார்கள் என்ற கருத்தை ஏற்று கொள்ள வேண்டுமென்றால்...இதையும் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டியுள்ளது!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

முதலில் அரசு ஊழியர்கள் மேல் கோபம் பொறாமை காழ்ப்புணர்வு இருந்து வந்தது. ஐ டி துறை வளர்ச்சி ஏற்பட்டவுடன் அவர்கள் மீது கோபம் திரும்பியது. அது கொஞ்சம் வீழ்ச்சி அடைந்ததும் மீண்டும் அரசு ஊழியர்கள் மீது திரும்பி உள்ளது. தற்போது அகவிலைப்படி ஈட்டியவிடுப்பு பறிக்கப் பட்டுள்ளதன் மூலமும் ஒன்றரை மாத ஊதியமும்(நடுத்தர நிலை பளியாளர்களுக்கு) ஏற்கனவே வருமான வரி மூலமாக ஒருமாத ஊதியமும் அரசுக்குத்தான் சேரப் போகிறது. கடந்த பிப்ரவரியில் வருமனவரி பிடித்தம் ஊதியத்தை விட பலருக்கு அதிகமாக இருந்தது. பெர்சனல் லோன் வாங்கி வரி செலுத்தியவர்களும் உண்டும் ஒரு ஊழியரின் பங்களிப்பு சராசரியாக 2 லட்சம். 10லட்சம் உழியர்கள் இருக்கிறார்கள்.கண்ககிட்டுக் கொள்ளுங்கள். தற்போதைய நிலையில் இதனை யாரும் எதிர்க்க வில்லை. உண்மையில் மனமுவந்தே ஏற்றுக் கொள்கிறார்கள். பிற சலுகைகள் ஏதேனும் இருப்பின் அதனையும் நிறுத்தலாம். அரசு ஊழியர்களின் சம்பளம் நிறுத்தப் பட்டால் ஏற்கனவே குறைந்துள்ள பணப்புழக்கம் மேலும் குறைந்து விடும். அரசு ஊழியர்களின் தாராள செலவினங்கள் வீடு வாங்குதல் வாகனம் வாங்குதல் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குதல் பயணங்கள் உள்ளிட்ட ஏராளமான செலவினங்கள் குறைந்து விடும். இதன் பயன்கள் மக்களை நேரடியாக சென்றடைபவை. வேலை வாய்ப்பை உருவாக்குபவௌஇ. ஆனால் பிடித்தம் செய்யப்படுபவை திட்டங்கள் என்ற பெயரில்செலவு செய்யப்படும் இதில் உண்மையாக எந்த அளவுக்கு மக்களைச் சென்றடையும் எனச் சொல்லமுடியாது
டி.ஏ +சரண்டர் நிறுத்தம் என்றதும் ஒரு சிலரிடத்தே குரூரமான மகிழ்ச்சி நிலவுவதைக் காணமுடிந்தது. மாதம் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் என்றால் பரவயில்லை. 30% போல் இருந்தால் வீட்டுக் கடன் போக கையில் சொற்பத் தொகையே என்னைப் போன்றவர்களுக்கு மிஞ்சும்.

AP said...

Manikandan, I could see your article is one sided and written for the sake of filling
Up the blog space. The govt is taking this action because it does not have enough money in the budget to carry out the relief work- free rice, cash, medical work and other activities. No private or an individual can do this. What is your basic understanding of running the govt and where do you think the money comes from?? We did not do any transaction for the last 2 months, TASMAC too, bus transport or tax or other sources did not generate money. Moreover, the govt is cutting down a percentage of salary so they can continue running.

Let's us be logical sometimes and not just blame the govt like the opposition does. This is an unprecedented situation and no one has experience dealing with it.

அன்புடன் அருண் said...

பதிவுக்கு ஓரளவு சம்பந்தம் இல்லாதது!

அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் தான் சேர்க்க வேண்டும், தங்கள் சிகிச்சைகளை அரசு மருத்துவனைகளில் தான் மேற்கொள்ள வேண்டும் - என்ற ஒப்பந்தத்திற்கு தாமாகவோ அல்லது அரசு நிர்பந்தம் செய்தாலோ வருவார்களா - இது மிகப்பெரிய கேள்விக்குறி?

இது நடந்தால் so called "system" கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்யப்படும்!

இது நடக்காததால் தான் (வேலையை மட்டும் செய்ய) "லஞ்சத் தேவை" நாளுக்கு நாள் அதிகரிக்கிறது .

மற்றபடி, தனியார் நிறுவனங்களில் deadline மற்றும் delivery - க்காக அதன் ஊழியர்கள் அதிகப்படி வேலை செய்வது போலத் தான், தற்போது (மட்டும்) ஒரு பகுதி அரசு ஊழியர்கள் வேலை செய்கிறார்கள் !! ஆனால் அந்த தனியார் ஊழியர்களுக்கு இல்லாத பணிப் பாதுகாப்பும் , ஓய்வூதியமும் இவர்களுக்கு இப்போதும் (எப்போதும்) உண்டு!!

நான் ஒரு விவசாயியின் மகன்!!! இது என் பார்வை மட்டுமே!

Saravanan Sekar said...

குழப்பமே இல்லை. இப்போதைய சூழ்நிலையில் அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பது முறையற்ற செயல் தான்.  அதேசமயம், இன்னொரு விஷயத்தையும் அட்சர சுத்தமாக குறிப்பிடமுடியும், அது சாமானிய மக்களுக்கு  அரசுத்துறை ஊழியர்கள் மேல் இருக்கும் ஓர் ஒவ்வாமை. இந்த ஒவ்வாமைக்கு காரணம், அரசு ஊழியர்களின் ஒரு பகுதியினர் ஊறிப்போயிருக்கும் லஞ்சப் பணம் மட்டுமல்ல.  அது பெரும்பாலான அரசுத் துறை ஊழியர்கள் காட்டுகின்ற - அதிகார தோரணை ..

கீழ் மட்ட ஊழியர்கள் தவிர்த்து, பெரும்பான்மை அரசு ஊழியர்களிடம் காணமுடிகிற இந்த அதிகார மனோபாவம் - தான் சாதாரண மக்களை, (ஒருசில விதிவிலக்குகள் மற்றும் பேரிடர் காலம் தவிர்த்து) அரசூழியர்களை தங்களில் ஒருவராக ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலைக்குத் தள்ளுகிறது.

ஒரு ஜவுளித்தொழிலாளியின் மகனாக, என் சொந்த அனுபவத்தின் அடிப்படையிலும் தான் இதைக் கூறுகிறேன். 

முழுக்க முழுக்க அரசு பள்ளி மற்றும் அரசு பொறியியல் கல்லூரி - என மாணவப் பருவம் முழுக்க அரசின் உதவியோடு படித்து, ஓரளவு கடைத்தேறியவன் என்ற வகையில் அரசாங்க ஆசிரியர்களின் பங்கினை எப்போதும் குறைத்துக் கூற மாட்டேன்.  பள்ளியில் எப்போதும் TOP-3 ranking இல் வருவதற்கு, எனது பள்ளி ஆசிரியர்கள் சிலரின் பங்களிப்பை எப்போதும் நன்றியோடு நினைவில் வைத்திருக்கிறேன்.

அதே சமயம், ஊதியக்குறைப்பு, பணிப்பலன்கள் - இவற்றை தவர்த்து பிற விசயங்களில் அவர்கள் பக்கம் முழு மனதோடு நிற்கவிடாமல்  என் போன்றவர்களையும் தடுப்பது - அரசூழியர்கள் காட்டுகிற மெத்தனமும் ,  அதிகாரப்போக்கும். இத்தோடு பலதுறைகளில் தலைவிரித்தாடும் லஞ்சம் பற்றி தனியாக சொல்ல வேண்டியதில்லை.

அதிகாரத் தோரணை, லஞ்சம், முறைகேடுகள் என்று வருகையில் தனியார் துறைக்கும் அரசுத் துறைக்கும் ஒரு முக்கியமான வேறுபாடு உண்டு. ஒரு வாடிக்கையாளர் தன்னை ஒரு தனியார் நிறுவனம் சரியாக மதிக்காத போது, அதே சேவையை பெற வேறு தனியார் நிறுவனத்திற்கு போவதற்கு வாய்ப்புள்ளது. ஆனால் அரசு துறைகள் அப்படியல்ல. எந்த சான்றிதழ் வேண்டுமானாலும், எந்த ஒரு அனுமதி பெறவேண்டும் என்றாலும் அதே அரசாங்க அலுவலகம் தான், அதே அரசாங்க ஊழியர்கள் தான், மக்களுக்கு வேறு போக்கிடம் இல்லை.

உளவியல் ரீதியாக, இந்த அதிகாரத்தின் சுவைதான், எப்பாடுபட்டாவது அரசாங்க வேலையைப் பெற பெரும்பான்மை மக்களை ஈர்க்கிறது. அதே, அதிகாரம் தான், அந்த வேலையைப் பெற்றவர்களை மக்களிடமிருந்து விலக்கி வைக்கிறது. ஒரு சில விதிவிலக்குகள் இருக்கக்கூடும். மறுப்பதற்கில்லை. ஆனால் பெரும்பான்மையினர் நிலை உணர்வதும்/ உணர்த்துவதும் இதுவே.

அன்புடன்,
சரவணன் சேகர்

சேக்காளி said...

அரசு ஊழியர்கள் சம்பளத்துல கை வைக்குறது ல சம்மதம் இல்லை.
அதுக்காக
//இங்கே எல்லோருக்கும் சுயநலம் இருப்பது போலவே அவர்களுக்கும் இருக்கிறது. எல்லோரும் வாய்ப்பு கிடைத்தால் செய்யக் கூடிய பிழைகளை அவர்களிலும் பலரும் செய்வார்கள். எல்லோரும் நினைப்பதைப் போலவே தம் குடும்பத்துக்கும் வருமானம் பார்த்து சொத்து சேர்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அரசு ஊழியர்களிலும் உண்டு. ஆனால் இந்தத் தவறுகளையெல்லாம் அரசு ஊழியர்கள் மட்டுமே செய்வதாகவும் பிறர் அத்தனை பேரும் தம்மை உத்தமபுத்திரன்களாகவும் கருதிக் கொள்வதுதான் வேடிக்கை.//
ன்னு சொல்லுறதுக்கெல்லாம் ஆதரவு குடுக்க முடியாது.