Apr 27, 2020

தீப்பிணி தீண்டல்

மூன்று நான்கு நாட்கள் ஓய்வுக்குப் பிறகு அடுத்த சில ஊர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இன்றோ அல்லது நாளையோ சுமார் எண்பது வீடுகள் உள்ள ஒரு குக்கிராமத்தில் பொருட்கள் விநியோகத்தை செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தோம். நேற்று வரை எல்லாம் சரியாகத்தான் இருந்தது. வாட்ஸப்பில் ஒரு வீடியோ வந்திருந்தது. மணிப்பூரில் நிவாரணப் பொருட்களை ஒரு மேசை மீது வைத்துவிடுகிறார்கள். மக்களாக வரிசையில் நின்று எடுத்துக் கொள்கிறார்கள். நாம் கூட அப்படியே செய்துவிடலாம் என்று பேசி வைத்திருந்தோம். 

பொதுவாக உள்ளூர் இளைஞர்கள் பத்து பேர்களைத் திரட்டிக் கொள்வதுதான் விநியோகத்தில் வசதியாக இருக்கிறது. அவர்களால்தான் கூட்டம் வராமல் கட்டுப்படுத்த முடியும், கூட்டம் வந்தாலும் ஒழுங்குபடுத்த முடியும். அதனால் யாராவது உதவி கோரி பேசும் போது- இதுவரை ‘எனக்கு உதவுங்க’ என்று ஒருவர் கூட அழைக்கவில்லை; ‘எங்க ஊருக்கு உதவுங்க’ என்றுதான் கேட்டார்கள். இப்பொழுது யோசித்தால் அது நெகிழ்ச்சியாக இருக்கிறது- அப்படி யாராவது அழைக்கும் போது  ‘யாராவது படிச்ச பையன் இருந்தா பேசச் சொல்லுங்க...என்னென்ன ஏற்பாடுகளைச் செய்யணும்ன்னு நாங்க பேசறோம்’ என்று சொல்லிவிடுவது வழக்கம். 

அந்த கிராமத்திலிருந்தும் அப்படியொரு இளைஞர் பேசினார். ‘நீங்க எந்தக் கட்சியும் இல்லையே’ என்றேன். இல்லை என்றார். தெளிவாகவே பேசினார். மக்களைக் கணக்கெடுப்பது எப்படி, பட்டியல் எப்படி இருக்க வேண்டும், பொருள் விநியோகத்திற்கென என்னவிதமான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றெல்லாம் சொல்லிவிட்டோம். கிட்டத்தட்ட அனைத்தும் முடிவு செய்யப்பட்டுவிட்டது.  கடைக்காரரிடமும் சொல்லியாகிவிட்டது. அநேகமாக இன்று மதியமோ அல்லது நாளை மதியமோ கொடுத்து முடித்திருக்கலாம்.

இன்று காலையில் அழைத்து ‘பொருள் கொடுக்கும் போது உள்ளூர் பிரெசிடெண்ட் பக்கத்தில் இருக்கணும்ன்னு சொல்லுறாருங்க’ என்றார்.  

இதுவரைக்கும் எந்த ஊரிலும் கட்சிக்காரர்களை வைத்துச் செய்யவில்லை. அப்படித்தான் செய்ய வேண்டும் என்றால் நாங்கள் வரவேயில்லை என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டேன். அரசு தாமஸ் அவர்களை அழைத்து நிலைமையை விளக்கிய போது ‘எதுக்கும் நீங்களே பிரெசிடெண்ட்கிட்ட பேசிப்பாருங்க’ என்றார். அதுவும் நல்ல ஐடியாவாகத் தெரிந்தது. அந்தப் பையனை அழைத்து  ‘பிரெசிடெண்ட் நெம்பர் தாங்க’ என்றால் ‘அதெல்லாம் தரக்கூடாதுன்னு சொல்லுறாங்க’ என்றான். கோபம் வந்துவிட்டது.

உள்ளூரில் ஒரு காரியம் செய்யலாம் என்று முன் வந்தால் நீங்கள்தான் எங்களுக்கு உதவ வேண்டும். எண்ணைக் கூட நீங்கள் தரவில்லையென்றால் நாங்கள் என்ன செய்ய முடியும் என்று கேட்டால் ‘என்ன கோபப்படுறீங்க’ என்று கேட்டான். அதன் பிறகு அந்த ஊரிலிருந்து ஆரம்பத்தில அழைத்த பெண்மணி இணைப்பில் வந்தார். அவர்தான் இந்த இளைஞரிடம் தொடர்பு ஏற்படுத்தித் தந்தவர். அவரும் ‘என்ன இருந்தாலும் உள்ளூர்காரங்க கூட இருக்கணும்ல’ என்றார்.

‘உங்களுக்கு உதவி வேணும்ன்னா கேளுங்கம்மா...அதை எப்படி செய்யணும், யாரை வெச்சு செய்யணும்ன்னு எல்லாம் பாடம் நடத்தாதீங்க’ என்றேன். இவர்கள் சொல்கிறார்கள் என்று ஒரு கட்சிக்காரனை அழைத்து வைத்து பொருட்களை வழங்கினால் இன்னொரு ஊருக்குச் சென்றால் அங்கேயும் இதே மாதிரி அழுத்தம் வரும். ஒரு முறை சமரசம் செய்து கொண்டால் மறுக்கவே முடியாது. ‘அவங்களை மட்டும் கூப்பிட்டீங்க?’ என்பார்கள். முடியாது என்று முழுமையாக மறுத்துவிட்டேன். இடைப்பட்ட நேரத்தில் அரசு தாமஸ் எப்படியோ அவர்கள் ஊர் தலைவரை அழைத்து பேசிவிட்டார். அந்த மனிதருக்கு இதெல்லாம் ஒன்றுமே தெரியவில்லை போலிருக்கிறது. பிறகு ஏன் இவர் பெயரை வைத்து ஒன்றிய கவுன்சிலர், பஞ்சாயத்து கவுன்சிலரையெல்லாம் உள்ளே அழைத்தார்கள் என்று புரியவில்லை. 

மொத்தம் எண்பத்தைந்து வீடுகள் இருக்கின்றன. அத்தனை பேர்களிடமும் நம்மால் பேச முடியாது. இப்படி யாராவது முன் வருகிறவர்கள் உள்ளரசியல் செய்தால் விலகிக் கொள்வதுதான் நல்லது. வேறு யார் மூலமாக செல்லலாம்தான். ஆனால் இத்தகைய ஆட்கள் குடைச்சல் தரத் தொடங்குவார்கள். இருக்கும் பிரச்சினைகளில் இதையெல்லாம் சமாளித்துக் கொண்டிருக்க வேண்டும். விலகிக் கொள்வதுதான் நல்லது.

எல்லாமே நமக்கு அனுபவம்தானே?

காலையில் அமெரிக்க வாழ் நண்பரொருவர் அழைத்திருந்தார். அவருடைய கல்லூரி நண்பர்கள் பணம் திரட்டியிருக்கிறார்கள். தமிழகத்தில் இருக்கும் அவர்களின் நண்பரிடம் ஒப்படைத்து உதவி செய்யச் சொல்லியிருக்கிறார்கள். அவரால் பெரிய அளவில் செலவு செய்ய இயலவில்லை என்றார்கள். கடினமான காரியம்தான். ஊரடங்கு காலத்தில் பொருட்களை வாங்கி, மூட்டை கட்டி, வாகனம் ஏற்பாடு செய்து, இடத்தை அடையாளம் கண்டறிந்து, அங்கிருக்கும் மக்களின் பட்டியல் தயாரித்து, டோக்கன் வழங்கி, நெரிசல் இல்லாமல் வழங்கிவிட்டு வர வேண்டுமென்றால் நிறைய திட்டமிடலும் கொஞ்சம் அனுபவமும் அவசியம். 

‘பணத்தை நிசப்தத்துக்கு அனுப்பி வைக்கட்டுமா?’ என்றார். 

‘ஒவ்வொரு ஊரிலும் மனிதர்கள் பஞ்சத்தில் இருக்கிறார்கள். ஆங்காங்கே உதவுவதுதான் சரியாக இருக்கும். ஒருவேளை உங்களால் செலவே செய்ய முடியவில்லை என்கிற நிலை வந்தால் மட்டும் அடுத்தவர்களுக்கு அனுப்பி உதவச் சொல்வது குறித்து யோசியுங்கள்’ என்றேன். இது எல்லோருக்குமே பொருந்தும். நம்மில் யாருமே ஓர் சிறு எல்லையைத் தாண்டிச் சென்று உதவ முடியாத சூழலில் இருக்கிறோம். அதனால் அக்கம்பக்கத்தில் இருக்கும் இயலாதவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்வதுதான் இப்பொழுது காலத்தின் அவசியம்.

பெரும்பாலானவர்கள் வீடுகளை விட்டு வெளியில் வராததால் எளிய மனிதர்களின் பிரச்சினைகள் குறித்து அநேகமாக யோசிப்பதில்லை. தெரிவதுமில்லை. சில நாட்களுக்குப் பிறகோ அல்லது மாதங்களுக்குப் பிறகோ மக்கள் வெளியில் வருவதற்கான சூழல் அமையும் போது தங்களின் கண்ணீர் கதைகளை நம்மிடம் பகிர்ந்து கொள்ளக் கூடும். எல்லோரும் நம்மிடம் அழப்போவதில்லை. நம்மை அறிந்தவர்கள்தான் அப்படி அழுது சொல்வார்கள். அப்படியானவர்களை யோசித்து அவர்கள் அழுவதற்கான வாய்ப்பில்லாமல் இப்பொழுதே உதவிட முடியுமென்றால் அது நம் காலத்தில் நாம் செய்யும் மிகப்பெரும் உதவியாக இருக்கும். 

4 எதிர் சப்தங்கள்:

Paramasivam said...

சரியாகக் கூறினீர்கள். அவரவர் அருகே இருக்கும் உண்மையாகவே கஷ்டப் படும் குடும்பங்களுக்கு உதவ முயற்சிப்பது நல்லது. அதுபோலவே நிவாரணப் பணிகளில் அரசியல் கலக்காமல் உதவுவதும் நல்லதே. நல்ல அனுபவங்கள்.

Anba said...

How do you get permission (curfew pass) to visit the nearby places to distribute the items? Who is supposed to approve it?

mukund said...

very good decision not to allow any politician. Best wishes for ur efforts

GurujiMaSi said...

உங்கள் உறுதி பாராட்டுக்குரியது
நன்றி அய்யா