இயக்குநர் அழகம்பெருமாள் அவர்களுடன் இரண்டொரு நாட்களுக்கு முன்பாக பேசினேன். நிறையப் பேசினோம். நிசப்தம் கட்டுரைகளை வாசித்துக் கொண்டிருப்பதாகவும் இயலுமெனில் அழைக்கச் சொல்லி முந்தின நாள் இரவு செய்தி அனுப்பியிருந்தார். மகி பிரச்சினையில்லை. ஆனால் சிறு அசைவு இருந்தாலும் திரு எழுந்துவிடுவான். ஃபோனில் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் ‘நீங்களே தொட்டிலை ஆட்டுங்க’ என்று சொல்லிவிட்டு வேணி தூங்கிவிடுவாள் என்பதால் ‘நாளைக்கு கூப்பிடுறேன் சார்’ என்று பதில் அனுப்பிவிட்டு மறுநாள் அழைத்தேன்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசினோம். ‘பாவம் அவர் காதுல ரத்தம் வந்துடுமே’ என்று நான் நினைக்குமளவுக்கு பேசினோம். ஆனாலும் நிவாரண உதவிகள் தொடங்கி சினிமா வரைக்கும் எவ்வளவோ பேச இருக்கிறது. அவரைப் போன்ற க்ரியேட்டிவான, மனிதநேயமிக்கவர்களுடன் பேசுவது உற்சாக டானிக். ‘டும் டும் டும்’ படம் வந்த போது நான் கல்லூரி மாணவன். இன்னும் இரண்டு படங்களை இயக்கச் சொன்னால் அவர் தொடர்ந்து நடித்து மீம் கண்டெண்ட் வழங்கிக் கொண்டிருக்கிறார்.
அவரைப் பற்றி தமிழ் இந்துவில் ஒரு செய்தி வெளிவந்திருந்தது. அவரது உதவும் குணம் தெரியும். பேசினால் அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளமாட்டார். தன்னால் முடிந்தளவுக்கு உதவுவதாகவும் ஆனால் யாருக்குமே எதிர்காலத்தைப் பற்றி எந்த உறுதியுமில்லை என்றார். நூறு கோடி ரூபாய் சொத்துள்ள பணக்காரனும் கூட என்ன ஆவான் என்றே கணிக்க முடியவில்லை என்று அவர் சொன்னது வாஸ்தவமான பேச்சு.
தினக்கூலிகள் அடிபட்டுவிட்டார்கள். அடுத்து சிறு கடைக்காரர்கள், அதன் பிறகு சிறு தொழில் நடத்துகிறவர்கள் என வரிசையாக சிக்கினார்கள். அடுத்தடுத்து குறு, நடுத்தரத் தொழில், பெருந்தொழில் என வரிசையாக அடிவாங்கத் தொடங்கியிருக்கிறார்கள். முன்பெல்லாம் நிவாரண உதவிகள் செய்யுமிடத்தில் பணம் குவியும். ஆனால் இப்பொழுது எல்லோருக்குமே பயம் பரவியிருக்கிறது. ‘மூன்று மாதம் கழித்து நமக்கு என்ன ஆகுமெனத் தெரியவில்லை’ என்பதுதான் பலரின் மனநிலையும். எனக்கும் அதே பயம்தான். கடந்த ஐம்பதாண்டு காலத்தில் இவ்வளவு பெரிய ஸ்திரமின்மையை இப்பொழுதுதான் நாம் சந்திக்கிறோம் என நினைக்கிறேன். இவ்வளவு மோசமான சூழலிலும் கைக்காசை போட்டு அடுத்தவர்களுக்கு உதவுகிற ஒவ்வொரு மனிதனுமே தெய்வத்தையும் விட உயர்ந்தவன்தான்.
இதையெல்லாம்தான் பேசிக் கொண்டிருந்தோம். ‘இங்க கொஞ்ச நாள் கழிச்சு வேலையை ஆரம்பிக்கலாம்ன்னு இருக்கோம் சார்’ என்றேன். இப்பொழுது மெல்ல பணிகளைத் தொடங்கியிருக்கிறார்கள். ஆங்காங்கே வேலைக்குச் செல்கிறார்கள். அப்படி வேலைக்குச் செல்கிறவர்களுக்கு பிரச்சினை இருக்காது. ஆனால் எந்தவிதத்திலும் வேலைக்குச் செல்ல முடியாத மனிதர்களுக்குத்தான் அடுத்தகட்டமாக உதவ வேண்டியிருக்கும் என நினைக்கிறேன்.
நம்மவர்களுக்கு ‘அது எப்படி வேலைக்கே போக முடியாது’ என்று குழப்பம் வரும். இப்படியான மேம்போக்கான கேள்விகளைக் கேட்கிறவர்கள் அதிகம். ‘நாற்பது நாளா வேலை இல்லை; பணமே இல்லைன்னு சொல்லுறாங்க ஆனா மதுபாட்டில் வாங்கும் கூட்டம் வரிசையாக நிற்கிறது. அது எப்படி?’ என்றொரு கேள்வியை ஃபேஸ்புக்கில் பார்த்தேன். பாட்டில் வாங்க காசு வைத்திருக்கும் கூட்டம் வேறு; ‘ரேஷன் அரிசி கூட கள்ளமார்கெட்டில் 10 ரூபா சார்...வாங்க காசு இல்லை’ என்று தவிக்கும் கூட்டம் வேறு. இரண்டுமே எண்ணிக்கையில் அதிகம். நாம் இரண்டையும் ஒன்றாக நினைத்துக் குழப்பிக் கொள்கிறோம்.
‘கூலிக்காரங்கதான் தினமும் சம்பாதிச்சாங்க இல்ல? சேர்த்து வெச்சிருக்கலாம்ல’ என்று கேட்டார் வயது முதிர்ந்த அனுபவஸ்தர். அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. நாம் இந்தக் கேள்வியை யாரைப் பார்த்துக் கேட்கிறோமோ அந்தக் கூலிக்காரர்கள் பலரும் கடந்த தலைமுறை வரைக்கும் ஒழுகும் கூரையின் அடியில் வசித்தவர்கள். வாய்ப்பு கிடைத்து சம்பாதித்த பணத்தை ஒழுகாத கூரையுடன் கூடிய சிறு வீட்டுக்குச் செலவு செய்திருக்க வேண்டுமா அல்லது சேமித்து வைத்திருக்க வேண்டுமா? கடந்த இருபதாண்டுகளுக்கு முன்பு வரைக்கும் காலில் செருப்பில்லாமல் நடந்தவர்கள்- சம்பாதிக்கத் தொடங்கிய பிறகு வண்டி ஒன்றை வாங்கி அதில் குடும்பத்தோடு பயணித்திருக்க வேண்டுமா அல்லது சேமித்து வைத்திருக்க வேண்டுமா? கடந்த காலம் வரைக்கும் பணக்காரர்கள் வீடுகளில் சட்டி எடுத்துச் சென்று பழையது வாங்கி வந்து குடித்தவர்கள். இப்பொழுது கையில் வரும் பணத்தில் நல்ல சோறு உண்டு பார்த்திருக்க வேண்டுமா? அல்லது சேமித்து வைத்திருக்க வேண்டுமா? இதுகாலம் வரைக்கும் பழைய சட்டையை யாரிடமாவது இருந்து வாங்கி அணிந்து கொண்டவர்கள். பணம் கிடைக்கும் போது நல்ல சட்டை அணிய வேண்டுமா? சேமித்து வைத்திருக்க வேண்டுமா?
இதில் சாதி வேறுபாடுகள் பார்க்க வேண்டியதில்லை. இப்படியான குடும்பங்கள் எல்லா சாதியிலும் உண்டு.
வாழ்வின் வண்ணங்களை ஒரு தரப்பு மட்டுமே பார்க்க வேண்டும் என நாம் நினைப்பது எந்தவிதத்தில் நியாயம்? அப்படித்தான் உழைத்து கையில் கொஞ்சம் காசு சேரும் போது சிறு வீடு கட்டி, வண்டி வாகனம் வாங்கி, நல்ல உடை அணிந்து, ருசியறிந்து வாழ்வின் வண்ணங்களை தம் குடும்பத்துக்குக் காட்டத் துவங்கிய போது கொரோனா வந்து முடக்கிப் போட்டிருக்கிறது. உணவுக்கும் பஞ்சம் வந்துவிட்டது. குழந்தைகள் தவிக்கிறார்கள். விளிம்புநிலை மக்களின் வாழ்வை புரிந்து கொள்ளாமல் நம்மைப் போலவே அவர்களையும் கருதி கேள்வி கேட்பது அபத்தம்.
இப்பொழுது முதல் கேள்விக்கு வரலாம் -‘அது எப்படி வேலைக்கு போகாம இருக்க முடியும்?’. இயல்பு நிலையின் போது திருப்பூரிலிருந்து வாகனங்கள் வந்து பனியன் கம்பெனிகளுக்கு வேலைக்குச் செல்கிறவர்களை அழைத்துச் செல்லும். திருப்பூர் சிவப்பு மண்டலம். வாகனப் போக்குவரத்து இல்லை. அங்கே நிறுவனங்கள் இயங்குவதில்லை. அப்படியே இயங்கினாலும் அங்கே சென்று வர வழியுமில்லை. அதனால் வேலை இல்லை. இது ஒரு வகை. குறைவான எண்ணிக்கையிலான ஆட்களை வைத்துத்தான் நிறுவனங்கள் இயங்க வேண்டும் என்பது உத்தரவு. முப்பது சதவீதம், நாற்பது சதவீதம் என்றிருக்கும் போது ‘அவசியமான ஆட்களை’ மட்டுமே பணிக்கு எடுப்பார்களே தவிர சற்று வயது முதிர்ந்தவர்கள், அவசியமில்லாத வேலைகளைச் செய்யக் கூடியவர்களைத் தவிர்த்துவிடுவார்கள். அவர்களுக்கு வேலை இருக்காது. உணவு விடுதிகள், டீக்கடை பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு வேலை இல்லை. இப்படி வரிசையாக அடுக்க முடியும்.
கேள்வி கேட்கும் இன்னொரு எலைட் வகையறா உண்டு. ‘விவசாயப் பணி நடக்கிறதே....அதற்கு போலாமே’ என்று கேட்கிறவர்கள். பழக்கமில்லாதவர்கள் கடப்பாரை, மண்வெட்டி எடுத்து ஒரு மணி நேரம் வேலை செய்துவிட்டு இதைப் பேசலாம். ஒவ்வொருவரின் உடலும் ஒவ்வொரு விதமான பணிக்கு பழகியிருக்கிறது. திடீரென்று புதிய வேலையைச் செய்வது சாத்தியமேயில்லை. அப்படியே பழக வேண்டுமானால் வெகு காலம் பிடிக்கும். ஐநூறு கூலி கொடுக்க வேண்டிய இடத்தில் முந்நூறும் இருநூறும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். வேலை தெரிந்தவர்களுக்கே இதுதான் கதி. வேலை தெரியாத புது ஆள் வந்தால் நிலத்திலேயே கால் வைக்க விடமாட்டார்கள்.
களம் வேறு; உண்மை நிலவரம் வேறு; நம் அறிவின் மட்டம் வேறு. நாம் எல்லாவற்றையும் குழப்பிக் கொள்கிறோமோ என்று தோன்றுகிறது.
4 எதிர் சப்தங்கள்:
This too shall pass. Have Hope. This virus is teaching all of us some lessons no matter who you are. Those who haven't learnt will learn soon.
இயக்குநர் அழகம்பெருமாள் குறித்து தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி.
// ‘மூன்று மாதம் கழித்து நமக்கு என்ன ஆகுமெனத் தெரியவில்லை’ என்பதுதான் பலரின் மனநிலையும். எனக்கும் அதே பயம்தான். கடந்த ஐம்பதாண்டு காலத்தில் இவ்வளவு பெரிய ஸ்திரமின்மையை இப்பொழுதுதான் நாம் சந்திக்கிறோம் என நினைக்கிறேன். //
எல்லோருக்கும் இந்த பீதி இருக்கிறது. WFH லாம் இருப்பவர்களுக்கு கூட, இதுவே, எவ்ளோ நாளைக்கு கஞ்சி ஊற்றும் என்பது உறுதியாக தெரியவில்லை.
ஆனால், இன்னும் 3 மாதங்களில் நிலைமை சீராகிடும் என்கிற நம்பிக்கை அவசியம் இப்போது. அப்படியே வேலை போனாலும், வேறு வேலையை ஒன்றிரண்டு மாதங்களில் பிடித்து கொள்ள முடியும் -னு நினைப்போம் பாஸ். நாம் நினைப்பதை விட "உலகம் மிகப்பெரியது" என்பதை நான் அடிக்கடி நினைத்துக் கொள்வேன். அது தான், பெரும் பலம் எனக்கு.
- சரவணன் சேகர்
மூன்று மாதம் கழித்து என்ன நடக்குமோ என்று வருத்தப்படுவதை விட கிடைத்த நேரத்தை எப்படி மேன்மை படுத்தி கொள்ளலாம் என்று உணரும் நேரம் இது.
அருமை
Post a Comment