Apr 24, 2020

குணம்

குடியிருப்புகளில் வழங்கிய பொருட்கள் தவிர பத்து குடும்பங்களுக்குத் தேவைப்படும் அரிசி, மளிகையை தனியாக எடுத்து வைத்திருந்தோம். ‘சிரமப்படுகிறவர்கள்’ என நன்கறிந்த சிலருக்குக் கொடுப்பதற்கான பொருட்கள் அவை. வயதான பெண்மணிகள் இருவரைத் தெரியும். இருவருமே அறுபத்தைந்து வயதைத் தாண்டியவர்கள். ஒரு மூதாட்டி தனியாக வசிக்கிறார். துணை யாருமில்லை. இன்னொரு மூதாட்டியும் அவரது கணவரும் வசிக்கிறார்கள். கணவரால் நடக்க முடியாது. படுத்த படுக்கை. இந்த பாட்டிதான் அந்த மனிதரை கவனித்துக் கொள்கிறார். இரு மூதாட்டிகளுக்கும் அருகருகே வீடு.  கட்டிடப் பணியாளர்கள். உழைத்துச் சம்பாதிக்கிறார்கள். சமீபமாக வருமானத்துக்கு வழியில்லை. அந்தப் பெண்மணிகளின் வீடு எங்கே இருக்கிறது எனத் தெரியாது. அவர்களுடன் பணிபுரியும் இன்னொரு கட்டிடத் தொழிலாளியை அழைத்தேன். அவருக்கும் மிகுந்த சிரமம்தான். பல நாட்களாக வேலை இல்லை. 

‘நீங்க ஒரு பையை எடுத்துக்குங்க; இன்னும் ரெண்டு பையைக் கொண்டு போய் அந்த பாட்டியிடம் கொடுத்துடுறீங்களா?’ என்றேன். 

அவர் ‘ரெண்டு பேருக்கும் ஒரு பை போதுங்க..மூணு பேர்தானே..பிரிச்சுக்குவாங்க’ என்றார். ஒருவேளை அவர் சொல்வது சரியாக இருந்தால் மிச்சமிருக்கும் பையை இன்னொருவருக்குக் கொடுக்கலாம். 

‘சரி, நீங்க ஒண்ணு எடுத்துட்டு அந்த பாட்டிகளுக்கு ஒண்ணு கொடுத்துடுங்க’ என்று சொல்லியிருந்தேன். 

மாலையில் அவரும், அவரோடு பணிபுரியும் இரண்டு ஆண்களையும் அழைத்து வந்தார். அவர்களுக்கும் சிரமம்தான் என்றாலும் அந்த பாட்டிகள் அளவுக்கு மோசமில்லை. ஆனாலும் அவர்களுக்கும் உதவுவதில் தவறில்லை. அவர்கள் மூவருக்கும் ஒரு பையை வாங்கிக் கொண்டார்கள். இதைக் கொண்டு வைத்துவிட்டு வந்து பாட்டிகளுக்கு கொண்டு போய்த் தருகிறோம் என்றார்கள். இரண்டு நாட்கள் கடந்துவிட்டன. ஆனால் சத்தமே இல்லை. இத்தனைக்கும் அவர்களை நன்கறிவேன். கேட்கலாமா என்று தோன்றுகிறது. ஏன் சங்கடப்படுத்த வேண்டும் என்று ஒரு தயக்கம். தங்களால் முடியாது என்றாவது சொல்லியிருக்கலாம்! மனிதர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று புரிபடுவதேயில்லை? எவ்வளவுதான் பஞ்சம் வந்தாலும், சூழல் சிக்கலானாலும் ‘தான் பிழைத்தால் போதும்’ என்றுதான் இருப்பார்களா? தம்மை விட தாழ்ந்திருக்கும் இரண்டு மூதாட்டிகளுக்கு பொருட்களைக் கொண்டு போய் தருவதில் என்ன ஆகிவிடும்?

சரி போகட்டும்.

மனிதர்கள் எல்லோரையும் நாம் ஒரே வகைமைக்குள் அடக்கிவிட முடிவதில்லை. அப்படி நாம் அடக்கிவிடுவதற்கான வாய்ப்பை காலமும் சூழலும் உருவாக்கித் தருவதேயில்லை. 

ரமேஷ் நல்ல நண்பர். அரசு மருத்துவமனையில் மனநல ஆலோசகராக இருக்கிறார். தற்காலிகப் பணியாளர்தான். பெரிய சம்பளமில்லை. ஆனால் மாஸ்க் வாங்கிக் கொடுக்கிறார், கையுறைகளை வாங்கிக் கொடுக்கிறார். எப்பொழுது பார்த்தாலும் வண்டிக்குள்ளிருந்து இவற்றை எடுத்து நீட்டுகிறார். தம் சக்திக்கு உதவிக் கொண்டிருக்கிறார். முதியவர்களைத் தேடித் தேடி பொருட்களை வாங்கித் தருகிறார். இரண்டு நாட்களுக்கு முன்பாக நடக்க முடியாத ஒரு முதிய பெண்மணியொருவர், ரமேஷை தடுத்து நிறுத்தி ‘ஏதாவது இருந்தா கொடுத்துட்டு போ கண்ணு’ என்று கேட்டிருக்கிறார். அப்பொழுது இவரிடம் கைவசம் எதுவுமில்லை.

அந்தப் பக்கமாகச் சென்றிருந்தோம். ‘வாங்கண்ணா...அந்த பாட்டியை பார்த்துட்டு வரலாம்’ என்று அழைத்தார். பாட்டி தனியாக அமர்ந்திருந்தார். ஆள் துணை யாருமில்லை. ‘சிரமமா இருக்குதுங்களா?’ என்றதற்கு எந்த வழியுமில்லை என்று சொன்னார். இரண்டு நிமிடங்கள்தான் பேசியிருப்போம். ஆனால் அந்த இடைவெளியில் பொருட்களை ஏற்றிச் செல்லும் வண்டி கிளம்பிவிட்டது. அந்த வண்டிக்காரர் கன வேகம். ஓட்டுநரின் எண்ணும் கைவசமில்லை. இனி என்ன செய்வது? ‘ஒரு பை எடுத்து வைக்கிறேன் ரமேஷ்...நாளைக்கு கொடுத்துடலாம்’ என்றேன். ‘அதை ஏங்கண்ணா தள்ளிப் போடணும்?’ என்று வண்டியை முறுக்கிக் கிளம்பிவிட்டார். சில மாதங்களுக்கு முன்பாகத்தான் பைக்கிலிருந்து விழுந்து மருத்துவமனையில் அனுமதித்திருந்தார்கள். அவர் திரும்பி வரும் வரை திக் திக்கென்றிருந்தது. எவ்வளவு வேகத்தில் சென்றாரோ தெரியவில்லை- ஒரு பையை வாங்கி வந்து அந்த பாட்டிக்கு கொடுத்துவிட்டார்.

வீட்டிற்கு வந்தும் கூட இதை நினைத்துக் கொண்டிருந்தேன்.

உண்மையில் பேரிடர்களும், களப் பணிகளும் விதவிதமான மனிதர்களை அடையாளம் காட்டுகின்றன. சமூகத்தின் அடிமட்டத்தில், விளிம்புநிலை மனிதர்களையும் காண முடிகிறது, என்னால் செய்ய இயலவில்லை, என் சார்பில் நீங்கள் உதவ முடியுமா என்று கேட்டு வரும் மேல்தட்ட மனிதர்களையும் காண முடிகிறது. எந்தச் சமயத்தில் எந்த மனிதர் உடன் நிற்பார், யார் காலை வாருவார்கள், சுயநலமிகள் யார், அடுத்தவர்களுக்கு உதவ வேண்டுமானால் எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாதவர்கள் யாரென்றெல்லாம் புரிந்து கொள்ள முடிகிறது. 

மனிதர்களை வாசிப்பதைவிட, அவர்களைப் புரிந்து கொள்ளுதலைவிட எந்த புத்தகம் சிறந்த புத்தகமாக இருந்துவிடப் போகிறது? நேற்று புத்தக தினத்தில் ‘உங்களை மாற்றிய புத்தகம்’ எது என்பது மாதிரியான கேள்விகளை பலரும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். மனிதன் மகத்தான சல்லிப்பயல் என்று ஜி.நாகராஜன் எழுதியதை அனுபவத்தில்தான் புரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். புத்தகங்கள், சினிமாக்களைவிட மனிதர்களே மனிதர்களை மாற்றுகிறார்கள். மனிதர்களைச் சந்திக்க முடிந்தால், அவர்களோடு பழக முடிந்தால் அதுவே சிறந்த வாசிப்பு. மனிதர்களின் பல்வேறு குணங்களும், வஞ்சகமும், சூழ்ச்சியும், பரோபகாரமும்தான் என்னையும் உங்களையும் தட்டி நெகிழ்த்துகிறது. கால ஓட்டத்தில் சக மனிதனை புரிந்து கொள்கிறவன் அந்த மனிதனிடமிருந்து தப்பிவிடுகிறான். புரிந்து கொள்ள முடியாதவனும், தன்னைப் பிறர் புரிந்து கொள்ள அனுமதிக்காதவனும் சுரண்டலும் நசுங்குதலுமாகவே வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கிறார்கள்.

அரசு தாமஸூம், அருணும், சில நண்பர்களும் சேர்ந்து கொரோனாவில் நிசப்தம் செய்த பணிகளை, ஒரு சிறு தொகுப்பாக உருவாக்கி வாட்ஸப்பில் சுழல விட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. ஒரு கை தட்டி ஓசை எழுவதில்லை. இந்த எந்நூறு குடும்பங்களின் சிறு புன்னகைக்குப் பின்னால் எத்தனை மனிதர்களின் பங்களிப்பு இருக்கிறது என்பது நிசப்தம் வாசிக்கும் அனைவருக்குமே தெரிந்திருக்கும். துணை நிற்கும் அனைவருக்கும் நன்றி. 


அடுத்த இருநூறு அல்லது முந்நூறு வீடுகளுக்கு உதவுவதற்கான பணிகளைத் தொடங்க வேண்டும் என நினைக்கிறேன். தினசரி அழைப்புகள் வருகின்றன. பசி வருத்துவதாகச் சொல்கிறார்கள். இன்னமும் சில நூறு வீடுகளின் பசியாற்றிவிடலாம் என்றுதான் நினைக்கிறேன்.

5 எதிர் சப்தங்கள்:

ரா.சிவானந்தம் said...

///தங்களால் முடியாது என்றாவது சொல்லியிருக்கலாம்! மனிதர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று புரிபடுவதேயில்லை? எவ்வளவுதான் பஞ்சம் வந்தாலும், சூழல் சிக்கலானாலும் ‘தான் பிழைத்தால் போதும்’ என்றுதான் இருப்பார்களா?///

பிரச்சினை அவர்களிடம் இல்லை..நம்மிடம்தான். நல்லவர்களை பாராட்டுகிறோம், ஆனால் தவறு செய்ப்பவர்களை நாம் தண்டிப்பதில்லை. அந்த துணிச்சல் பெரும்பாலானோருக்கு இல்லை. அதன் விளைவுதான் இப்படிப்பட்ட மனிதர்கள்.

நானும் நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருக்கிறேன், அதாவது நான் முதலில் கரை சேர்ந்த பிறகு. அப்படி ஒரு நாள் எனக்கும் வருமேயானால், அவர்களை செவிலில் நாலு அறை கொடுத்து கொடுத்த பொருட்களை திரும்பி வாங்கிவிடுவேன். பொருட்கள் வீணாக போனாலும் பரவாயில்லை, இரக்கம் என்ற பெயரில் தவறான நபர்களுக்கு அது ஒரு போதும் போய் சேரக்கூடாது.

Paramasivam said...

கடின காலத்தில் தான் மனிதனின் உண்மை சொரூபம் வெளிப்படும் போலும். சக தொழிலாளியையே வஞ்சிக்க நினைப்பவர்கள் எதில் சேர்ப்பது? போகட்டும். அவர்களை மறந்து நாம் நமது செயலை தொடர்வதை தான் சிறந்தது.

செ. அன்புச்செல்வன் said...

உங்களின் முயற்சிகளுக்கும் கடுமையான இந்த நேரத்தில் பசிக்கொடுமைக்கு வழி செய்த நிசப்தம் அறக்கட்டளைக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்!! ஏனோ அந்த மூதாட்டிகளைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். கரோனாத்தொற்றைவிட பசிப்பிணிதான் கொடிது. எத்தனை மக்கள் பசியால் வாடி உயிரிழப்பரோ...

Gobi said...


//“ஸ்டாலின்கிட்ட இருந்து கேட்ட உதவி வந்துச்சா?”

“நான் எங்கே கேட்டேன். அவங்களா கொண்டுவந்து கொடுத்தாங்க. இருபத்தி அஞ்சு கிலோ அரிசி மூட்டையைக் கொண்டுவந்து ஒருத்தர் போட்டாரு. அப்புறம் உளுந்து, பருப்புன்னு கொஞ்சம் கொண்டு வந்தாங்க. ஏதோ பொழப்பு ஓடுது…”

“ஏன் பாட்டி…நாலஞ்சு மாசம் வர்ற மாதிரி பத்து மூட்டை அரிசி, ரெண்டு மூட்டை உளுந்து இப்படி கேட்டிருக்கலாம்ல. ஸ்டாலின் பெரிய கட்சித் தலைவரு. வசதியானவரு. கொடுத்திருப்பார்ல?”

“ஏன் சாமி, அப்படி கேட்டா நல்லாயிருக்குமா? நமக்கே அடுக்குமா? ஊர் சனமே சோறில்லாம கிடக்குதுக. ரோடு வழி, தடம் வழியெல்லாம் வேலை வெட்டியில்லாம எத்தனை ஆயிரம் பேர் கிடக்கிறாங்க. நம்ம மட்டும் வாங்கிட்டா ஆச்சா? அவங்களுக்கெல்லாம் யாரு கொடுப்பாங்க. அவங்க பாவத்தை நாம சம்பாதிக்கலாமா... எல்லோருக்கும் அவரு கொடுக்கணும்ல. கொடுக்கட்டும் சாமி. அதுதானே நமக்கு நல்லது. அதுதானே தர்மம்?”

அதற்கு மேல் பாட்டியிடம் பேசுவதற்கு ஒன்றுமில்லை. விடைபெறுகிறேன். கை கூப்புகிறார்.//

https://www.hindutamil.in/news/blogs/551691-stalin-hepls-1-rs-idly-patti.html

அந்த பாட்டி மனச பாருங்க... இப்படியும் சிலர்.

MallurSiddhar said...

வாழ்த்துக்கள் அய்யா