Apr 23, 2020

மறுபடியுமா?

மீண்டும் ஒருமுறை ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்று விவாதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அப்படியொரு அறிவிப்பு வருமானால் நிலைமை மிக மோசமாகிவிடும். கிராமங்களில், விளிம்பு நிலை மனிதர்களை மட்டும் கணக்கில் வைத்துக் கொண்டு சொல்லவில்லை. இருபது பணியாளர்களை வைத்துக் கொண்டு தினசரி இரண்டாயிரம் ரூபாயை பணியாளர்களின் உணவுக்கு செலவு செய்து கொண்டிருக்கும் தறி குடோன்காரர்களையும் கூட கவனத்தில் எடுத்துக் கொண்டுதான் சொல்கிறேன். சிறு பட்டறை, சைக்கிள் கடை, கடிகார ரிப்பேர் செய்கிறவர்கள் என சகலரையும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். தம்மிடம் பணியாற்றும் பணியாளர்களில் யாராவது ‘நாங்க கிளம்பறோம்’ என்று சொன்னால் சரி என்று சொல்லிவிடும் உரிமையாளர்கள் அதிகமாகிக் கொண்டிருக்கிறார்கள். நேற்றுக் கூட இங்கேயிருந்து ஒடிசாவுக்கு மிதிவண்டியிலேயே கிளம்பிச் செல்லும் சில பணியாளர்களின் வீடியோவை நண்பர் ரமேஷ் அனுப்பியிருந்தார். அவரே எடுத்த வீடியோ அது. 

இதற்கான மனநிலை, சூழல் என்ன என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். இவ்வளவு நாட்களாக திடீரென்று அரசாங்கம் ஊரடங்கை விலக்கிக் கொண்டால் பணியாளர்கள் கிடைக்கமாட்டார்கள் என்றுதான் உரிமையாளர்கள் கருதிக் கொண்டிருந்தார்கள். அதனால்தான் பணியாளர்களுக்கான உணவுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தார்கள். ஊரடங்கு நீட்டிப்பு, நீட்டிப்பு என்று தொடர்வது பெரும்பாலான சிறு குறு முதலாளிகளிடையே குழப்பத்தையும் அச்சத்தையும் உண்டாக்கியிருக்கிறது. எந்த வருமானமும் இல்லாமல் இருபது, முப்பது பேர்களுக்கு தினசரி இரண்டு மூன்றாயிரம் ரூபாய் செலவு செய்வது எந்தவிதத்திலும் அவசியமானதில்லை என்று நினைக்கிறார்கள். அதுவுமில்லாமல் இருபது பேர்களை ஓரிடத்தில் தங்க வைத்து வேலை எதுவுமில்லாத போது அவர்களுக்குள்ளாக சண்டை வருகிறது. இருக்கிற பிரச்சினைகளில் இதுவொரு புதிய பிரச்சினை. அப்படியே ஒருவேளை மே 3 ஆம் தேதியன்று ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கூட தேவைகள் உருவாகாமல் பொருட்களை உற்பத்தி செய்து வைத்தால் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துவிடும் என அஞ்சுகிறார்கள். எனவே சூழல் ஓரளவுக்கு சரியாகும் வரைக்கும், தேவைகள் அதிகரிக்கும் வரைக்கும் முழுவேகத்தில் உற்பத்தியைச் செய்வதற்கான மனநிலை முதலாளிகளிடமில்லை. அதனால் பணியாளர்கள் கிளம்புவதாகச் சொன்னால் கையில் ஐநூறு அல்லது ஆயிரம் ரூபாயைக் கொடுத்து அனுப்பி வைத்துவிடுகிறார்கள்.

முதலாளிகள் அப்படி நினைத்தால் வேலை இல்லாமல் வெறுமனே சோற்றைத் தின்றுவிட்டு தொழிற்சாலைக்குள்ளேயே அடங்கிக் கிடப்பதை சிறைச்சாலை போலக் கருதுகிறார்கள் பணியாளர்கள். தமது குடும்பத்தை நோக்கி, தம் ஊரை நோக்கிக் கிளம்பிச் சென்றுவிடுவதையே பலரும் விரும்புகிறார்கள் என்கிறார்கள்.

தினக்கூலிகள் பிரச்சினை, சிறு குறு தொழிலதிபர்கள் பிரச்சினை, வாங்கும் திறன் அதிகரிப்பு, அதற்கான பணப்புழக்கம்- இவற்றையெல்லாம் கணக்கிட்டால் இப்பொழுதே கூட ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கூட நிலைமை சீரடைய பல மாதங்கள் வரைக்கும் தேவைப்படும் என்றுதான் தெரிகிறது. வாகன உற்பத்தி, மென்பொருள், கால்-சென்ட்டர் மாதிரியான கார்போரேட் துறைகளைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. அது தனிக்கணக்கு. உள்ளூரை நம்பி, சிறு வணிகத்தை  நம்பி வாழும் ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமான மக்களின் நிலைமைதான் இது.

ஒருவேளை மே 3 ஆம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கை நீட்டிப்பார்களேயானால் அதன் விபரீதம் மிக மோசமாக இருக்கும். 

சரி, ஊரடங்கை விலக்கி, பழையபடிக்கு எல்லாவற்றையும் திறந்துவிட்டுவிடலாம்தான். ‘நோய்’ பற்றிய குழப்பமும் அச்சமும் என்னவாகும்? நோய் அடங்கிவிடுமா என்று கேட்கக் கூடும். சோறு முக்கியமா? உயிர் முக்கியமா என்பார்கள். அவர்களிடம் திருப்பிக் கேட்பதெல்லாம் இன்னும் நாற்பது நாட்களுக்கு அடைத்து வைத்திருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். நாற்பது நாட்களில் எண்ணிக்கை பூஜ்யம் ஆகிவிடுமா? நாற்பது நாட்களுக்குப் பிறகு தைரியமாக வெளியேறுவோமா? 

அரசு மருத்துவமனைகளிலிருந்து நோயாளிகள் குணமடைந்து வெளியேறுகிறார்கள் என்ற அரசு தரப்பின் எண்ணிக்கையை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது. புதிய நோய்த்தொற்றார்கள் யார், அவர்களுக்கு எப்படி தொற்று ஏற்பட்டது என்றெல்லாம் கவனித்தால் இன்னமும் பல மாதங்களுக்கு கொரோனா நமக்குள்ளேயேதான் சுற்றிக் கொண்டிருக்கும் என்று புரிந்து கொள்ளலாம். சூழல் இப்படி இருக்கும் போது எத்தனை நாட்கள் கழித்துத் திறந்துவிட்டாலும் திறந்துவிட்டவுடன் எண்ணிக்கை பெருகியே தீரும்.

மருந்தும், தடுப்பூசியும் தயாராகி வரும் வரைக்கும் இந்த எண்ணிக்கை பூஜ்யத்தை அடைய வாய்ப்பே இருக்கப் போவதில்லை. பிறகு அடைத்து அடைத்து எத்தனை நாட்களுக்கு காலத்தை ஓட்டப் போகிறோம்? பிற நாடுகளை ஒப்பிடும் போது இங்கு பரவலின் வேகம் குறைவு, இறப்பின் எண்ணிக்கை குறைவு என்றெல்லாம் உலாத்திக் கொண்டிருக்கும் செய்திகளின் உண்மைத்தன்மையை அரசு ஆய்வுப்பூர்வமாக உறுதி செய்ய வேண்டும் அல்லது மறுக்க வேண்டும். நோய்ப்பரவலே இல்லை என்று முரட்டுவாக்கிலான நம்பிக்கையூட்டலாக இல்லாமல், நோய்ப்பரவலின் வேகம் குறைவு, இந்தியர்கள் எளிதில் மீண்டுவிடலாம் என்பது மாதிரியான ‘பாஸிட்டிவான’ நம்பிக்கைச் செய்திகள் இருப்பின் அதைப் பரவச் செய்ய வேண்டும். ஆபத்துகள் இருப்பின் அதைப் பற்றி மெல்ல மெல்ல மனதில் பதிய வைக்க வேண்டும். அப்படித்தான் நோயின் வீரியத்தைவிடவும் மக்களின் பயத்தையும் நடுக்கத்தையும் குறைக்க முடியும். அதுதான் தொழிற்துறையும், பொருளாதாரமும், மக்களின் மனநிலையும் சீரடைவதற்கு ஏதுவாக இருக்கும்.

நோயாளிகள், மரணங்கள் ஆகியவை குறித்து துல்லியமான எண்ணிக்கையை அரசு வெளியிட வேண்டும். இந்தியாவில் இதுவரையிலும் கொரோனா பாதிப்பினால் 682 பேர்கள் இறந்திருக்கிறார்கள். 130 கோடி மக்கட்தொகையில் இது மிகச் சொற்பம். அப்படியே இறந்தவர்களில் வயது, பிற நோய்க்காரணிகள் குறித்தெல்லாம் அறிவியல் பூர்வமான ஆய்வு அவசியம். ஒருவேளை கொரானா தாக்காமல் இருந்திருந்தால் இவர்களின் வாழ்நாள் எதிர்பார்ப்பு என்பது உள்ளிட்ட விவரங்களும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். நோய் தாக்கப்பட்டு மீண்டவர்களின் எண்ணிக்கை, அவர்கள் எப்படி மீண்டார்கள், அவர்களுக்கான உடல் பாதிப்பு என்ன போன்ற தரவுகளை வைத்து பல ஆய்வுகளைச் செய்து முடிவுக்கு வர முடியும். இத்தகைய ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் மெல்ல மெல்ல ஊரடங்கினைத் தளர்த்தி என்னவிதமான பாதிப்புகள் உண்டாகின்றன என ஆய்ந்து அதற்கேற்றவாறு இயல்பு நிலையைத் திருப்ப வேண்டும்.

முதற்கட்ட ஊரடங்கின் முடிவிலேயே இதைச் செய்திருக்க வேண்டும். ஆனால் மீண்டும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பைத்தான் செய்தார்கள். இரண்டாம் கட்ட ஊரடங்கிலாவது இது போன்ற தளர்வுகள் நடக்கும் என எதிர்பார்த்தால் பத்து நாட்களாகியும் அப்படியான நடவடிக்கைகள் எதுவுமில்லை என்பது அலறச் செய்கிறது. இன்னமும் பத்து நாட்களில் இரண்டாம் கட்ட  ஊரடங்கும் முடிவுக்கு வரப் போகிறது. ஒருவேளை மீண்டும் நீட்டிப்பை செய்தாலும் மூன்றாம் கட்ட ஊரடங்கின் முடிவிலும் இப்படியேதான் இருப்போம். சில மாநிலங்களில் வேண்டுமானால் எண்ணிக்கை குறைந்திருக்கலாம். ஆனால் இந்தியாவின் பிற மாநிலங்களில் நோயாளிகள் இருக்கக் கூடும். அங்கேயிருந்து மனிதர்கள் இங்கே வர மாட்டார்களா அல்லது இங்கேயிருந்து அங்கே செல்ல மாட்டார்களா? அதற்கான தீர்வுகள் என்னவாக இருக்கும் என்பதையெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கிறது.

‘நீயே இவ்வளவு யோசிக்கிறியே, அரசாங்கம் யோசிக்காதா?’ என்று கேட்பார்கள். அரசாங்கம் அப்படி யோசித்திருந்தால் கடந்த ஒரு மாத காலத்தில் சிறு சிறு மாறுதல்களையாவது கொண்டு வந்திருக்குமே என்று யோசிக்க வேண்டியதில்லையா?

இன்னமும் எத்தனை நாட்களுக்குத்தான் பூட்டியே வைத்திருக்கப் போகிறோம்? ஓரளவு பொருளாதார ரீதியில் வலுவான ஆட்கள், சம்பளம் வந்துவிடும் என்கிற தைரியமுள்ளவர்கள் வேண்டுமானால் பேசிக் கொண்டிருக்கலாம். ஆனால் தினக் கூலிகள், அன்றாடங்காய்ச்சிகள், சிறுதொழில் முனைவோரின் நிலைமை எல்லாம் பரிதாபமாக இருக்கிறது. ஆனால் மீண்டும் ஊரடங்கை நீட்டித்தால் பட்டினிச்சாவு தவிர்க்க இயலாததாகிவிடும். அதைச் சொல்லியே தீர வேண்டும். இதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் எதைச் செய்தாலும் அது அர்த்தமற்றதுதான்.

4 எதிர் சப்தங்கள்:

NAGARATHAN said...

நீங்க எதிர்பார்க்கிறதெல்லாம் மிகச்சிறந்த திட்டமிடலும், மக்கள் உயிர் மற்றும் வாழ்வாதாரம் பத்தியெல்லாம் அக்கறை இருக்கிற ஆட்சியாளர்கள் இருந்தா நடக்கும் சாரே. நமக்கு வாய்த்ததெல்லாம் (நாம தேர்ந்தெடுத்ததுன்னு சொல்லிக்கலாமா) ...........

சேக்காளி said...

//நாற்பது நாட்களில் எண்ணிக்கை பூஜ்யம் ஆகிவிடுமா? நாற்பது நாட்களுக்குப் பிறகு தைரியமாக வெளியேறுவோமா? //
ரயில், பேரூந்து,விமானம் போன்ற பொது போக்குவரத்தை அனுமதிக்காமல் உற்பத்திக்கு பயன் படும் லாரி டெம்போ போன்றவற்றை அனுமதிக்கலாம்.
பின்பு ஓரிரு வாரங்கள் கழித்து கொரோனா பரவலின் வேகம் கட்டுப்பாட்டிற்குள் இருந்தால் பொது போக்குவரத்தை அனுமதிக்கலாம்.

RajalakshmiParamasivam said...

Covid-19 medicine will be available in September, 2020 only. Human trial started in UK on 22.4.2020. So we can expect that the lock down cannot be extended till that time, which is too long a period.

sasi said...

Sweden strategy could be good for India.