அலிங்கியம், முத்துக்கவுண்டம்பாளையம் ஆகிய இரண்டு ஊர்களில் இருநூறு குடும்பங்களுக்கு பொருட்கள் வழங்கியதையும் சேர்த்தால் எழுநூற்றியெழுபது குடும்பங்களுக்கு உதவிகளை வழங்கியிருக்கிறோம்.
ஏற்கனவே உதவிய இடங்களைத் தொடர்பு கொண்டு அலைபேசி எண்ணை பெற்றுக் கொண்ட கவினும், அவரது நண்பர்களும் முத்துக்கவுண்டம்பாளையத்தில் டோக்கன் வழங்குதல், ஒருங்கிணைத்தல் ஆகிய பணிகளைச் செய்து வைத்திருந்தனர். பொருட்களை எடுத்துக் கொண்டு இரண்டு வாகனங்களில் கிளம்பினோம். இந்த முறை அரசு தாமஸ், கார்த்திகேயன், நிவாஸூடன், தரணி மில் சரவணன், ரமேஷ் ஆகியோரும் வந்திருந்தனர். ரமேஷ் தனிப்பட்ட முறையில் நிறையப் பேருக்கு உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறார்.
முதலில் முத்துக்கவுண்டம்பாளையத்திற்கு சென்றிருந்தோம்.
முதலில் முத்துக்கவுண்டம்பாளையத்திற்கு சென்றிருந்தோம்.
இரண்டு குடியிருப்புகள் அருகருகே இருக்கின்றன. பெரிய ஆலமரத்தினடியில் மக்கள் தள்ளித் தள்ளி நின்றார்கள். இரண்டு வண்டிகளில்- ஒன்றில் அரிசியும் இன்னொன்றில் மளிகையும் இருந்தன. இரண்டிலிருந்தும் பொருட்களை எடுத்து வழங்குவதில் எந்தச் சிரமமும் இல்லை. சில நிமிடங்கள் அவர்களிடம் ஆசுவாசமாக பேசுவதற்கும் வாய்ப்பு கிடைத்தது. அரிசியும் பருப்பும் எண்ணெயும் இந்தத் தருணத்தில் முக்கியமானதாக இருக்கலாம். ஆனால் அது மட்டுமே முக்கியமில்லை. அடுத்த தலைமுறை கல்வி கற்பதாகவும், கற்ற கல்விக்கு சரியான வேலை தேடுவதாகவும், சம்பாதித்த பணத்தை சேமித்து வாழ்வின் அடுத்த கட்டத்தை அடைவதாகவும் அமைய நாம் நிறைய பேச வேண்டியிருக்கிறது; பத்து நாட்கள் கழித்து வருகிறோம் என்றெல்லாம் பேசினோம்.
அடுத்ததாக அலிங்கியம் என்ற கிராமத்துக்குச் சென்றோம்.
இதுவரை பொருட்கள் வழங்கிய பகுதிகளிலேயே மிகச் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தார் அந்த ஊரில் ஒருங்கிணைத்த ரவிக்குமார். ஒவ்வொரு குடும்பத்துக்கும் டோக்கன் வழங்கி, அந்த எண்ணையும் குடும்பத்தினரின் பெயரை ஒரு நோட்டிலும் எழுதி, ஏழெட்டு இளைஞர்களை வைத்து மக்கள் வரிசையாக நிற்க தள்ளித் தள்ளி வட்டம் போட்டு அதில் மக்களை இடைவெளி விட்டு நிறுத்தி வைத்திருந்தார்கள். முக்கால் மணி நேரத்தில் கொடுத்து முடித்துவிட்டோம்.
நேற்று எழுதியிருந்தது போல கிராமப்புறங்களில் பொருட்களை விநியோகிப்பது மிக எளிதாக இருக்கிறது. மக்கள் சொன்னபடி கேட்கிறார்கள். கூட்டம் சேர்வதில்லை. ‘எல்லோருக்கும் கிடைக்கும்’ என்று சொன்னால் நம்புகிறார்கள். சிரமமே இல்லாமல் வழங்கிவிட்டோம். இந்த ஊர்களைப் போல ஏற்பாடுகளைச் செய்தால் எந்த பயமும் இல்லாமல் காரியங்களைச் செய்ய முடியும். நேற்றிரவு அவ்வளவு நிம்மதியாக இருந்தது.
நேற்று எழுதியிருந்தது போல கிராமப்புறங்களில் பொருட்களை விநியோகிப்பது மிக எளிதாக இருக்கிறது. மக்கள் சொன்னபடி கேட்கிறார்கள். கூட்டம் சேர்வதில்லை. ‘எல்லோருக்கும் கிடைக்கும்’ என்று சொன்னால் நம்புகிறார்கள். சிரமமே இல்லாமல் வழங்கிவிட்டோம். இந்த ஊர்களைப் போல ஏற்பாடுகளைச் செய்தால் எந்த பயமும் இல்லாமல் காரியங்களைச் செய்ய முடியும். நேற்றிரவு அவ்வளவு நிம்மதியாக இருந்தது.
தகவல் பரவலாகச் சென்று சேர்ந்துவிட்டது என நினைக்கிறேன். தொடர்ச்சியாக அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஊரடங்கு தளர்வாகிவிடும் என்றுதான் பலரும் நம்பிக் கொண்டிருந்தார்கள். இன்று ஆட்டோவில் மைக் செட் கட்டி அறிவித்துவிட்டார்கள். ‘ஊரடங்கில் எந்தத் தளர்வுமில்லை எனவும், மறு அறிவிப்பு வரும் வரைக்கும் எந்தப் பணியும் நடக்கக் கூடாது’ என்று அறிவித்தபடியே செல்கிறார்கள். கட்டிடப்பணியாளர்களில் சிலரிடம் நேற்று பேசிய போது ‘ரொம்ப கஷ்டம் சார்...இன்னையிலிருந்து வேலைக்கு வரலாம்ன்னு சொல்லியிருக்காங்க...இனி சமாளிச்சுக்கலாம்’ என்றார்கள். ஆனால் மறுபடியும் அவர்களின் வருமானத்திற்கு தடை விழுந்திருக்கிறது.
வெவ்வேறு கிராமங்களிலிருந்து அழைப்புகள் வருகின்றன. எல்லோரிடமும் ஒரே பதிலைத்தான் சொல்கிறேன். ‘இப்போதைக்கு இரண்டு நாட்கள் இடைவெளி எடுத்துக் கொள்கிறோம்’ என்று சொல்லியிருக்கிறேன். இன்றும் நாளையும் எங்கும் செல்வதாக இல்லை. இரண்டு நாட்கள் கழித்து நிலைமை எப்படி இருக்கிறது என்று இப்பொழுது பொருட்கள் வழங்கிய ஊர்களில் உள்ள மக்கள் வழியாக விசாரிக்க வேண்டும்.
முத்துக்கவுண்டம்பாளையம் கவின் ஒரு விஷயம் சொன்னார். வெகு சிலருக்கு மட்டுமே தோட்ட வேலைகள் கிடைக்கின்றன என்றும், ஆறு பேர்கள் உள்ள தங்கள் வீட்டில் அப்பா மட்டும் வேலைக்குச் செல்வதாகவும் அவருக்கும் ஒரு நாள் கூலி வெறும் இருநூறு ரூபாய்தான் என்றார். முன்பு ஐநூறு அல்லது அறுநூறு ரூபாய் கூலியாகக் கிடைத்த வேலை அது. ஒருவேளை அவரது அப்பா மறுத்தால் அந்தப் பணி வேறொருவருக்குச் சென்றுவிடக் கூடும். அதைச் செய்து தர ஆட்கள் தயாராக இருப்பார்கள். பசி மனிதர்களை கீழே பிடித்து இழுக்கத் தொடங்கியிருக்கிறது. நோயைத் தடுக்கும் அதே வேகத்தை வேலையிழப்பினைத் தடுத்தல், தனிநபர் வருமானத்தை உறுதி செய்தல் போன்றவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும் என நினைக்கிறேன்.
தோட்ட வேலைக்கு இதுதான் நிலைமை என்றால் பிற தொழில்களைப் பற்றியெல்லாம் கேட்கவே வேண்டியதில்லை. தமிழக கிராமங்கள் திணறத் தொடங்கியிருக்கின்றன. ஆங்காங்கே அடுத்தவர்கள் உதவ வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகியிருக்கிறது. ‘சமூகத் தொற்று இல்லை’ என்பது மட்டும் உறுதியான தகவல் என்றால் துணிந்து இறங்கிவிடலாம். அந்த நம்பிக்கை வரவேயில்லை. உள்ளூர் அரசு மருத்துவரிடம் விசாரிக்கும் போது ‘ஆறேழு சந்தேகக் கேஸ் அனுப்பியிருந்தோம். எல்லாமே நெகடிவ்தான்’ என்றார். அந்த தைரியத்தில்தான் சுற்றிக் கொண்டிருக்கிறோம். ஆனால் சென்னையில் பத்திரிக்கையாளர்கள், மருத்துவர்களுக்கு பாஸிடிவ் என்கிற செய்தி வரும் போது திக்கென்றிருக்கிறது. ஓரடி பின்னால் வைக்கத் தோன்றுகிறது. இரண்டு நாட்கள் போகட்டும். மீண்டும் களமிறங்குவோம்.
1 எதிர் சப்தங்கள்:
Mani, Arasu, Karthikeyan and Team,
Great to know about all your initiatives. The way you plan and execute would shed some light to folks doing similar things. Kudos to you; Kudos to your families as well - for letting you do these wonderful initiatives. Would like to meet you all soon.
Regards,
Radha Bala
Post a Comment